Saturday 21 June 2014

ஒரு பாடம்


ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குப்பாடத்தை அரிச்சுவடியிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். அதிலும் ஆங்கிலவழி மாணவர்கள் அர்த்தநாரிகள்- ஆங்கிலமும் தமிழும் அப்படி,இப்படி.
எழுத்துக்களை அறிமுகம் செய்யுமுன் கதைகளைச்சொல்லி என்மீது ஈர்ப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
வழக்கம்போல தெனாலிராமனில் தொடங்கி வகுப்பறைச்சூழலைக்கலகலப்பாக்கிவிட்டு 'சடகோ' கதைக்கு வந்தேன்.
சடகோவின் வரலாறு, உலகப்போர்,அணுகுண்டு வீச்சு சார்ந்து சில ஒளிப்படத்தொகுப்புகள் என்னிடம் உண்டு. அவற்றை மாணவர்களுக்குக்காட்டலாம் என ஒலி_ஒளி அறைக்கு அழைத்துச்செல்ல முடிவு செய்தேன்.
"வகுப்பறையை விட்டு வெளியே செல்கிறோம்,வரிசையாக ஒருவர்மீது ஒருவர் இடித்துக்கொள்ளாமல்,முந்தாமல் வரவேண்டும்." என்றேன்.
சிறுவர்கள்,கத்திக்கொண்டும்,முந்திக்கொண்டும் இடித்துத்தள்ளிக்கொண்டும் வந்தனர்.
மைதானத்தின் மத்தியில் நிறுத்தினேன்.முகத்தைக்கடுமையாக வைத்துக்கொண்டேன்.
" என்னசொன்னேன்? ஒருத்தர ஒருத்தர் இடிக்காம,முந்தாம,சத்தம் போடாம வரணும்னு சொன்னேன்ல....ஏன்,இப்படி....அப்படியே வரிசையா ஒரு நிமிடம் நில்லுங்க."
மதிய வெயில். லேசாக வியர்க்க ஆரம்பித்தது.
" நீங்க ஒழுக்கம் தவறியதால நல்ல படங்கள் பார்க்கிற வாய்ப்ப இழந்திட்டீங்க,அப்படியே திரும்பி வகுப்பிற்குப்போங்க"
மாணவர்கள் அமைதியாக வகுப்பிற்குச் சென்றனர்.
அனைவரும் மிகவும் அமைதியாக இருந்தனர்.
பல சிறுவர்களின் முகங்கள் வியர்வை பூத்திருந்தன.
எனக்கு மனதிற்குள் வருத்தம்.
வெயில் ரெம்ப சூடா இருந்துச்சா?
மெதுவாக,'ஆமா'
எத்தனை டிகிரி இருக்கும்தெரியுமா?
ஆளுக்கொரு பதில் சொல்ல.....
(முதல் நாளே எங்களுக்குள் ஒப்பந்தம். என் கேள்விகளுக்குப்பதில் சொல்லவேண்டும். சரி,தவறு என்று அவசியமில்லை)
30_32 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
" இதிலேயே நம்மால் ஒரு நிமிடம் நிற்க முடியலையே ஏறத்தாழ 6௦௦௦ டிகிரி வெப்பம் இருந்தா எப்படி இருக்கும் நெனச்சுப்பாரு?"
அவ்ளவு சூடு இருந்தது இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசியபோது.
என்று தொடங்கிய பாடம், 

சடகோவின் கதை, உலகப்போர்,அணுகுண்டு வீச்சு என விரிந்து
மறுநாள் பல்வேறு ஒளிப்படங்களைப்பார்த்த பின்பு
நாங்கள் அனைவரும் 1௦௦௦ காகிதக்கொக்குகளைச்செய்து உலக சமாதானத்திற்காக சடகோவின் நினைவாலயத்திற்கு அனுப்பிவைப்போம் என்ற மாணவர்களின் மனமொத்த விருப்பத்தோடு நிறைவுற்றது.

No comments:

Post a Comment