Saturday 21 June 2014

மரபுப்பிழை


நீயா நானா? போன்ற விவாத நிகழ்சிகளை எப்போதாவதுதான் பார்ப்பேன். நேற்று திருநங்கைகள் குறித்த நிகழ்ச்சி. அபூர்வமாகவே தொகுப்பாளரும் அதிகம் பேசாத இதுபோன்ற நிகழ்வு அமைந்துவிடுகிறது.
திருநங்கையரின் உலகம் அற்புதமாகப்பதிவு செய்யப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் இருவர் சொன்னவையே நான் குறிப்பிட விரும்புபவை.
ஒருவர், பத்தாம் வகுப்பில் நாமக்கல் மாவட்டத்திலேயே முதல் மாணவனாகத்தேறியவர். 11 ஆம் வகுப்பில் ஆசிரியர் கேலி செய்ததால் படிப்பை நிறுத்திவிட்டு,மும்பைக்கு ஓடி, வழக்கமான எல்லாவற்றிற்குப்பின் இப்போது செயற்பாட்டாளர்.
மற்றவர், ஆசிரியராலேயே இளம்வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன் என்று சொன்ன எழுத்தாளர், செயற்பாட்டாளர், ப்ரியாபாபு.
ஆசிரியப்பணிக்கு முன் ஒரு சமூக சேவை நிறுவனத்தில் பணியாற்றினேன்.மதுரை, முனிச்சாலை பகுதி மையம் எனது பொறுப்பில் இருந்தது.அப்பகுதியில் கரகம் ஆடும் திருநங்கைகள் இருந்தனர்.
பெண் தன்மையுடனிருந்த ஒரு சிறுவனை சமூகப்பணிக்கல்லூரி பேராசிரியர்களிடம் அழைத்துச்சென்று கவுன்செலிங் செய்தோம்.அவன் அதிகம் பெண் தன்மையுடன் இருந்தான்.பெண்களுடனேயே பழகுவான். நன்றாக நடனம் ஆடுவான்.கரகம் சொல்லிக்கொடுத்தேன். எவ்வளவு முயன்றும் ஒருநாள் காணாமல் போய்விட்டான்.சிலவருடங்கள் கழித்துச்சாலையில் அவனைப்போலவே ஒரு பெண்ணைப்பார்த்தேன். எனக்கு சந்தேகம். நானோ, இளம் வயது, மீண்டும் பார்த்தேன். அந்தப்பெண் வேகமாச்சென்றுவிட்டாள்.
மாலை எங்கள் மையத்திற்கு சிறுவர் சிறுமியர் புடைசூழ அவள் வந்தாள்.
எப்படி இருக்கே?
கண்களில் திரண்ட கண்ணீர்.
திடீர்னு காணாம போயிட்டே?
நீயும் எவ்வளவோ முயற்சி பண்ணின, எனக்குள்ள என்னன்னு எனக்குதாண்ணே தெரியும்!
சரி,விடு.
ரோட்ல பாத்து ஏன் பேசல?
இல்லண்ணே? பாக்கிறவங்க உன்ன...தப்பா....
லூசு...எங்க பாத்தாலும் பேசு.எப்ப வேணாலும் இங்க வா.இது உன் வீடு மாதிரி.
அவள் சிலகாலம் கரகம் ஆடிக்கொண்டிருந்தாள்.பிறகு எங்கு சென்றால் என்று தெரியவில்லை.பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இப்போதும் பள்ளியில், சில ஆசிரிய நண்பர்கள் தமது வகுப்பில் யாரேனும் மாணவர்கள் சற்றே பெண்தன்மையுடன் இருந்தால்,. அவர்களைக்கவனித்துப்பார்க்கிறோம்.
மற்றவர்களிடமிருந்து தொல்லைகள் இருக்கிறதா என்று,
அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியாமலேயே.

No comments:

Post a Comment