Thursday 26 June 2014

பொன்னியின் செல்வன்


பலமுறை வாசித்த வரலாற்று நாவல். வாசிப்போரை மயங்கவைக்கும் வசீகரம்.
இரு வாரங்களுக்கு முன் நண்பர் சுரேஷ்,செல்பேசியில் அழைத்தார். மதுரையில் பொன்னியின் செல்வன் நாடகம் நடக்கப்போகிறதாமே, தெரியுமா?
ஆமா,சுரேஷ்,இந்த மாசக்கடைசில.
என்னங்க இது கொடுமை,டிக்கெட் தீந்துபோச்சுன்னு சொல்றாங்க.
என்ன, தீந்திருச்சா! நேத்துதான் விளம்பரம் கண்ணுல பட்டுச்சு,குடும்பத்தோட போலாம்னு நெனச்சேன்.
அட, இப்பதாங்க போன் பண்ணினேன்.எல்லா டிக்கெட்டும் தீந்திருச்சு.நீங்க வாகித்தரமுடியுமா?

சென்னையில் நாடகம் சிறப்பாக இருந்ததென வாசித்திருந்ததால் இம்மாதக்கடைசியில் மதுரை நிகழ்விற்காகக் காத்திருந்தேன்.நண்பரின் செய்தி அதிர்ச்சியாக இருந்தது. இணையத்தில் பார்த்தால் அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்து போய் 100 ரூபாய் டிக்கெட் மட்டுமே இருந்தது. அதுவும் இணையவழியே பதிவுசெய்ய முடியாதபடி அந்தத்தளங்கள் சரியாக இயங்கவில்லை.
பல நண்பர்களிடம் விசாரித்தேன். அரங்கு சிறியது. இரு காட்சிகள் மட்டுமே.என்று பல பதில்கள், டிக்கெட்டுக்குப்பதிலாக.

உடன் பணிபுரியும் வெங்கட், அரங்க மேலாளர் மூலம் 29 ஆம் தேதிக்கு டிக்கெட் வாங்கிவிட்டார். மகிழ்ந்த நேரத்தில் மாணவர் தங்கப்பாண்டி தனது கிராமியக்கலை மாணவர்களைவைத்து ஓர் அரங்கேற்றவிழா வைத்திருப்பதாகவும் கண்டிப்பாக வரவேண்டுமென அழைக்க, அதே தேதி.
மாணவருக்காக பொன்னியின் செல்வனை வேண்டாமென்று சொன்னேன். வேறு யாருக்காவது அந்த டிக்கெட்டைக்கொடுக்கலாமென்றால் அதற்குள் வெங்கட் அங்கு, வேண்டாமெனச்சொல்லிவிட்டார்.
நண்பர் பாலா  மூலம் முயன்றதில் நாடக நிகழ்வுக்கு முன்தின இரவு நடைபெறும் முழு ஒத்திகையைப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
நேற்று காலை நண்பர் ரவி  செல்பேசியில் அழைத்து நாடகம் 3 நாட்கள் நடக்கவிருக்கிறது,டிக்கெட் இல்லையாம்,வாங்கித்தரமுடியுமா? என்றார்.
அப்போதுதான் 3 நாட்கள் நாடக நிகழ்வு எனத்தெரிந்தது.
அனைத்தையும் சொன்னேன். ஒத்திகைக்கு அழைத்துச்செல்ல முடியுமா? என்றார். நான் செல்வதே சற்று நெருங்கிய விண்ணப்பத்தில்,மன்னித்துக்கொள்ளுங்கள்.என்றேன்.

நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் லட்சுமி சுந்தரம் ஹாலில் நாடக ஒத்திகை தொடங்கியது.
கோட்டைச்சுவர் போன்ற அரங்க அமைப்பு. ஒப்பனை இல்லாத கலைஞர்கள். மூன்று மணிநேரத்திற்கு மேல் போனதே தெரியவில்லை.
வாசிப்போரின் மனதில் தோன்றிய முகங்களே நேரிலும்.இயல்பான நடை. சிறுவர்முதல் பெரியவர் வரை அற்புதமான நடிகர் பட்டாளம்.

ஒப்பனை இடையே வந்து மயக்காமல் நடிகர்களுடன் மிகக்கொஞ்சம்
பார்வையாளர்கள்.மற்றும் கல்கி.
அனைவரும் சோழர்காலக்கனவுலகில்.
நானும் கலைஞன் என இறுமாந்தேன்.
குறிப்பு.
அழைத்துச்செல்ல இயலவில்லை,சுரேஷ்,ரவி இருவரும்

மன்னித்துவிடுங்கள் நண்பர்களே.

No comments:

Post a Comment