Tuesday, 23 October 2012

தமிழா! தமிழா!

கடந்தவாரம் செய்தித் தாளில் வந்த செய்தி.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அரசு பள்ளி பெண் தமிழாசிரியரை தாக்கிய மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த இரு தினங்களுக்கு முன், இப்பள்ளியில் பணிபுரியும் பெண் தமிழாசிரியை ஒருவரை, அங்கு படிக்கும் சில மாணவர்கள் கேலி செய்துள்ளனர். தட்டிக்கேட்டபோது, ஒரு மாணவர் அந்த ஆசிரியையை கீழே தள்ளி, கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவரை, 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து, தலைமையாசிரியை அங்கையற்கண்ணி உத்தரவிட்டார்.

பெண் தமிழாசிரியை தாக்கப்பட்டதை கண்டித்து தமிழாசிரியர் கழகம் சார்பில், நேற்று சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகம் முன், மாநில துணைத் தலைவர் இளங்கோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன்பின், மாவட்ட கல்வி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். இளங்கோ கூறுகையில்,""பல இடங்களில் ஆசிரியர்களை மாணவர்கள் கேலி,கிண்டல் செய்கிற போக்கு தொடர்கிறது. தமிழாசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை.இலவச கட்டாய கல்வி திட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் பாடம் கடைசி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் நிலைக்கு வரவேண்டும்,'' என்றார்.


இதை வாசித்தவுடன் என்ன தோன்றுகிறது? ஒருவழியாக மாணவனுக்கு தண்டனை தரப்பட்டுவிட்டது.ஆனால் பத்து நாட்களுக்குப் பின் அந்த ஆசிரியையின் நிலை?
இதைவிட தமிழாசிரியர் கழகத்தினரின் கூற்று-  எதெற்கெடுத்தாலும் அரசு,அல்லது கல்வித்திட்டத்தைப்  பழி கூறும் போக்கைக் காட்டுகிறது.


யார் குற்றவாளி?

'செய்முறைத் தேர்விற்கு 50 மதிப்பெண்கள் என்னிடம்தான்' என்று பாயும் காட்டியே வகுப்பெடுக்கும் அறிவியல் ஆசிரியர்கள்.
எவ்வளவுதான் சேட்டை செய்தாலும் செய்முறையில் 47 மதிப்பெண்ணுக்குக் கீழ் குறைக்க மாட்டார்கள் என்று தெரிந்தே பயப்படும்(? ) மாணவர்கள்.
உயர் படிப்புகளுக்கு மொழிப்பாடம் தேவையில்லை - என்று அடிக்கடி கூறும் ஆசிரியர்கள்.
G.O க்களைத் தேடுவது, பணிமாற்றம்,போராட்டம் என்று மட்டுமே இயங்கும் சங்கங்கள்.
சம்பளம் பைசா குறைந்தாலும் கணக்குப்பார்த்து, மாணவனின் மதிப்பெண் ஏன் குறைகிறது? என்று கணக்குப் பார்க்காமல்,ஓரளவு உண்மையிருந்தாலும்- சமூகம்,குடும்பம்,கலாச்சாரச் சீரழிவு என்றெல்லாம் பேசித் தப்பித்துக்கொள்ளும் ஆசிரியர்கள்.
ரௌடியாகத் திரிந்தாலும் அழகிய பணக்காரப்பெண் காதலிப்பாள் என்று திரைப்பாடம் கற்ற மாணவர்கள்.

இப்படியே மாற்றி மாற்றி அடுத்தவரை மட்டுமே குற்றம் கூறிக்கொண்டே இருந்தால் என்னதான் தீர்வு?

            பல ஆசிரியர்கள் மொழிப்பாடம்தானே என்று வகுப்பறையில் கூறுகிறார்கள்.  மொழிப்பாட ஆசிரியர்களும் இலக்கணம்,இலக்கியம் என்று மரபான முறையில் கடினமாகக் கற்பிக்கின்றார்கள்.மாணவரின் பங்கேற்பு என்பதே இல்லாத போதனா முறைகளை மாற்றிப் புதிய முறைகளை மேற்கொள்ள ஆர்வமில்லாத ஆசிரியர்களே அதிகம்.
அதிக சம்பளம் வாங்கிக்கொண்டு தூங்குகிறார்கள் என்று பொதுமக்கள் பேசுவதற்கு யார் காரணம்?
வெறும் அரட்டல்களும் கண்டிப்பும் -காலாவதியாகிவிட்ட செயல்பாடுகள்.
வகுப்பறைச்  சூழலை இனிமையாக்கும் வழிகளை ஆசிரியர்கள்தாம் கண்டறிய வேண்டும்.
நம் பிள்ளைகளின் எதிகாலத்தில் வைக்கும் அக்கரையில் சிறிதளவேணும்  மாணவர்கள் நலனில் காட்டினால் எதிர்காலத் தலைமுறை வளம் பெறும்.

மற்ற குறைகள் இருந்தாலும் முதலில் தம்மை மாற்றிக்கொள்ள முன் வராத ஆசிரியர்களை வரலாறு என்றுமே மன்னிக்காது.


மக்கள் கலைஞன்இசை என்றவகையில் என் மனதில் பல்வேறு உணர்வுகளை கர்நாடக இசை ஏற்படுத்துகிறது.ராகங்களை பற்றிய அறிவு சிறிதும் எனக்கில்லாவிட்டாலும் நவீன இசை போலவே கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கும் செல்வதுண்டு.
மகாராஜபுரம் சந்தானம்,பாலமுரளி கிருஷ்ணா,M .S.சுப்புலட்சுமி,அருணா சாய்ராம்,சுதா ரகுநாதன்,நித்யஸ்ரீ மகாதேவன் எனப் பலரின் பாடல்களுக்கு,குறிப்பாக தமிழில் பாடியவற்றிற்கு நான் அடிமை.

இசைக்கருவி இசையில் என்றென்றும் என் உள்ளம் கவர் கள்வன் குன்னக்குடி வைத்யநாதன்.பல கச்சேரிகளை நேரில் ரசித்திருக்கிறேன் .
பல முறைகள் அவரிடம் பேசியுமிருக்கிறேன் .
சில ஆண்டுகளுக்குமுன் டெல்லியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்குபெற தமிழக அரசின் கிராமியக் கலைக் குழுவினருடன் நானும் கரகம் ஆடச் சென்றிருந்தேன்.தமிழ்நாடு விடுதியில் தங்கியிருந்தோம்.அங்கே குன்னக்குடியும் இருப்பதாக அறிந்து அனைவரும் அவர் அறைக்குச் சென்றிருந்தோம்.அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
ஒருவர் கதவைத் திறக்க,வந்தவர் ஏதோ  கூறினார்.
என்ன?என்று கேட்டார் குன்னக்குடி.
கதவைத் திறந்தவர் கூறினார்,"பக்கத்து அறையில போலிஸ் IG இருக்காராம்.சத்தம் ரொம்ப வருதாம்.அமைதியா இருக்கச் சொல்றாராம் "
வந்தவரை உள்ளே அழைத்து குன்னக்குடி சொன்னார்,
" அவன்கிட்டப் போய்ச் சொல்லு,பக்கத்துல இருக்கறது குன்னக்குடின்னு"

எந்தத் தொந்தரவும் இல்லாமல் வெகுநேரம் பேசியபின் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பினோம்.

மற்ற கர்னாடக இசைக்கலைஞர்களைப் போலின்றி மக்கள் விரும்பியதையும் தந்தவர் குன்னக்குடி.
அவரது கச்சேரி மூன்று பிரிவுகளாக இருக்கும்.முதலில் கர்னாடக இசையை வாசிப்பார்.அதன் பின் திரைப்படப் பாடல்கள்.பழைய பாடல்கள் முதல் அப்போது வெளியான பாடல்கள் வரை அனைத்தும் வாசித்தபின் பக்திப்பாடல்கள் தொடர்ந்து வாசிக்கப்படும்.ரசிகர்களும் கூடவே பாடிக்கொண்டே கேட்பது கண்கொள்ளாக் காட்சி.

இசையோடு அவர் முகம் காட்டும் பாவங்களும் தனித்தன்மையானவை.
கர்நாடக இசையை மேற்கத்திய இசைக் கருவியான வயலினில் வாசித்ததோடு மட்டுமில்லாமல் வயலினை,பக்க வாத்தியத்திலிருந்து மையத்திற்குக் கொணர்ந்தவர் குன்னக்குடி.
இந்த இணைப்பிலுள்ள பாடலைக் கேளுங்கள், அந்த மகத்தான கலைஞன் மக்களை மயக்கிய விதம் புரியும்....

Monday, 22 October 2012

சூப்பர் மேன் வருவாரா?

அமெரிக்கக் கல்வி பற்றிய ஆவணப் படமான Waiting for Superman பார்த்தேன்.2010 ஆம் ஆண்டு வெளியான இப்படம் அமெரிக்கக் கல்விமுறையின் சீரழிவுகளையும் எதிர்காலத்தேவைகளையும் அலசும் ஆகச்சிறந்த படம்.

"சூப்பர் மேன் -உண்மையில்லை என்று அம்மா சொன்ன நாளில்தான் நிறைய அழுதேன்.கிறிஸ்மஸ் தாத்தா வரமாட்டார் என்பதைவிட சூப்பர்  மேன் வரமாட்டார் என்பதுதான் என்னை அதிகம் பாதித்தது.ஏனெனில் சூப்பர் மேன், கெட்டவங்களை அழித்து நல்லவங்களை காப்பாற்றுவார்." என்று ஒரு ஆசிரியர் கூறுவதுடன் படம் தொடங்குகிறது.

ஒவ்வொருநாளும் அதே சடங்குகள்.....காலை உணவு,புத்தகப் பை, பள்ளிக்குச் செல்லுதல்.எதற்காக?

சில குழந்தைகளிடம் அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் ? என்ற கேள்வி கேட்கப்படும்போது ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு துறையைக் கூறுகின்றனர்.குழந்தைகள் தம் எதிர்காலம் குறித்த கனவுகளை, நண்பர்கள்,பெற்றோர்,மற்றும் ஆசிரியரிடமிருந்து பெறுகிறார்கள்.

4 ஆம் வகுப்பில் முதலிடம் பெறும்  மாணவர்கள் 5,6,7,8 என மேலே செல்லச்செல்ல பின்னடைகிறார்கள்.குறை யாரிடம் உள்ளது?
மாணவர்? ஆசிரியர்? கல்வித்திட்டம்?
 எனப் பல கேள்விகளுடன் தொடங்கும் படம் அமெரிக்கக் கல்விமுறை மற்றும் ஆசிரியர்களின் நிறை குறைகளை அலசுகிறது.

அமெரிக்காவில் அருகமைப் பள்ளிகளில்தான் குழந்தைகள் கல்வி பயில வேண்டும்.கிராமம் மற்றும் நகரத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் வாழும் பகுதியிலுள்ள பள்ளிகள் தரத்தில் குறைந்ததாக உள்ளன.பல பள்ளிகள் 'இடைநிற்றல் தொழிற்சாலை'களாக ( dropout factories) இயங்குகின்றன.எட்டாம் வகுப்புவரை தள்ளப்பட்டு வருபவர்கள் 9,10 ஆம் வகுப்புகளில் பள்ளிப் படிப்பை பெரும்பாலும் கைவிடுகின்றனர்.

40 ஆண்டுகள் பழமையான ஒரு பள்ளியில் இதுவரை பயின்றவர்கள் 60,000 பேர்.அதில் கல்லூரிக்கல்வி முடிக்காதவர்கள் 40,000 பேர்.

அரசுப்பள்ளிகளில் குறைந்த இடங்கள்,ஆசிரியர்களின் ஆர்வக்குறைவு ஆகிய காரணங்களால் பெரும்பாலான பள்ளிகள் தரம் குறைந்ததாக உள்ளன.ஒரு சில பள்ளிகளே தரமானதாக உள்ளன.

இங்கே நான் சில செய்திகளைச்  சொல்ல வேண்டும்.
மேலே கூறப்பட்ட செய்திகளைப் படிக்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?
 "அமெரிக்க பள்ளிகளும் இந்தியா போலத்தான்" என்றுதானே? அதுதான் இல்லை.மேலே சொல்லப்பட்ட செய்திகள் அமெரிக்க கல்விமுறையின் அவலத்தைக் காட்டினாலும் பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நம் நாட்டின் ஆகச்சிறந்த பள்ளிகளைப்போல் உள்ளது. விசாலமான வகுப்பறைகள்,சிறந்த கட்டிடங்கள்,உபகரணங்கள்,
வகுப்பிற்கு 20 மாணவர்கள் என வசதிகளில் எந்தக்குறையும் இல்லை.

இப்போது ஆவணப்படத்தைத் தொடருவோம்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதிகளில் கல்வியைத் தொடர இயலாதவர்களே அதிகம் உள்ளனர்.அவர்களில் பெரும்பாலானோர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.அவரவர் குற்றங்களைப் பொறுத்து பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.ஒருவர் குறைந்தபட்ச தண்டனையாக 4 ஆண்டுகள் சிறைவாசம் பெறுகிறார் எனக்கொண்டால் ,
குறைந்தபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெரும் 1   சிறைவாசிக்கு ஆகும் செலவு
33,000 X 4= 1,32,000 டாலர்கள்.
ஒரு மாணவனுக்கு கல்லூரிக் கல்வி வரை ( 13 ஆண்டுகள்) ஆகும் செலவு
8,300 X 13 = 1,07,900 டாலர்கள்.
கல்வியைவிட சிறை பலமடங்கு மக்களின் பணத்தைச் செலவாக்குகிறது.
எனவே கல்வித்தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.

2020 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் பெரும் உயர் பணிகளுக்கு 12 கோடியே 10 இலட்சம் பேர் தேவை.ஆனால்,5 கோடி அமெரிக்கர்கள் மட்டுமே இதற்குத் தகுதியுடன் இருப்பார்கள்.மீதிப் பணியிடங்களை வெளிநாட்டினர் பெறுவார்கள்.இது அமெரிக்காவைப் பெரிதும் பாதிக்குமென பில் கேட்ஸ் கூறுகிறார்.

தற்காலக் குழந்தைகள் கற்பதில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள் என்ற கூற்று உண்மையல்ல.பல புதிய செயல்முறைகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்ற ஆசிரியர்களின்  கூற்றுப்படி,
 'சரியான வழிமுறைகள் கல்வியின் தரத்தை அதிகரிக்கும்'.

சுருக்கமாகக் கூறினால்,
தரமான ஆசிரியர்கள்
அதிகக் கற்றல் நேரம்
உலகத்தரமான கல்வி
உயர்ந்த எதிர்பார்ப்பு ,செயல்முறைகள்
பொறுப்பு உணர்ந்து செயல்படுதல்

ஆகியவை கல்வித்தரத்தை உயர்த்துவதாக கண்டறியப் பெற்றுள்ளன.எனவே சூப்பர் மேனைப் போன்ற ஆசிரியர்கள்தாம் இப்போதைய தேவை.என ஆவணப்படம் நிறைகிறது.

இந்த ஆவணப்படம் என்னுள் பல எண்ணங்களை எழுப்பியது.


அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளே இல்லாத பள்ளிகள்,தொலைநோக்கு திட்டங்கள் ஏதும் இல்லாமல் இலவசங்களில் இயங்கும் அரசுகள்,பிள்ளைகளை ஏதும் செய்ய இயலாத பெற்றோர்,பணி பெறும்வரை போராடி அதன் பின் ஓய்வு வரை ஓய்வெடுக்கும் ஆசிரியர்கள்,மாற்றிமாற்றிக் குறை கூறியே கழியும் கல்வித் திட்டங்கள் இன்னும் பலப் பல தடைகளைத் தாண்டியும் சிறந்த சில  மாணவர்கள் -அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் உருவாக்கப்படுகிறார்கள் என்றால் அதற்குக் காரணமான சூப்பர் மேன்களைக் கண்டறிந்து அவர்களின் வழிமுறைகளை ஆய்ந்து அனைவரும் பின்பற்ற முயல வேண்டும்.

ஆசிரியர்கள் தம் கடமையை உணர்ந்து தாமாகவே தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.கேட்பாரில்லாத இன்றைய சூ ழல், ஆசிரியர்களுக்கு எதிரான மக்களின் மனப்புலம்பலின் இறுதியில் பெருவெடிப்பாக மாறக்கூடும்.
ஆசிரியர்,பெற்றோர் கலந்துரையாடி புதிய செயல்முறைகளைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.
விருப்பு வெறுப்பு இன்றி விவாதம் செய்வோமா?

Saturday, 20 October 2012

கற்பிக்க, கசடற!

   Youtube இல் School of life என்ற படம் பார்த்தேன்.
பால்புரூக் நடுநிலைப்பள்ளியில் கடைசி வேலைநாள்.ஆசிரியர்,மாணவர் கூட்டம்.மாணவர் அனுபவப் பகிர்விற்குப்பின் அந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது அறிவிக்கப்படுகிறது.பலத்த ஆரவாரங்களுக்கிடையே நார்மன் வார்னர் பரிசைப் பெறுகிறார். கடந்த 43 ஆண்டுகளும் அவரே தொடர்ந்து சிறந்த ஆசிரியர் பரிசைப் பெற்றுவருகிறார்.அவர் மகன் மேட் ,அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியர்.தந்தையின் நிழலில் வளரும் அவருக்கும் சிறந்த ஆசிரியர் பரிசுபெற்ற ஆவலாக இருக்கிறது.பரிசு பெற்ற மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையிலேயே நார்மன் வார்னர் உயிர் பிரிகிறது.
இந்த ஆண்டின் சிறந்த ஆசிரியர் விருது பெரும் ஆவலுடன் புதிய கல்வியாண்டில் பள்ளிக்குச் செல்கிறார் மேட் .ஆசிரியர்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார் முதல்வர்.வார்னரின் பாடமான சமூக அறிவியலுக்கு புதிய ஆசிரியராக மைக்கேல் டி ஆஞ்சலோ பொறுப்பேற்கிறார்.மைக்கேல் அதே பள்ளியில் பயின்ற மாணவர்.
மைக்கேலின் அறிமுக உரையே மாணவரிடம் ஆரவாரத்தையும் மிஸ்டர்- டி என்ற செல்லப் பெயரையும் பெற்றுத்தருகிறது.
மேட்டின் அறிவியல் வகுப்பு தொடங்குகிறது.குதர்க்கமாகக் கேள்வி கேட்கும் மாணவர் வெளியேற்றப்படுகிறார்.வகுப்பறை ஒழுங்குடன்(?) பாடம் நடைபெறுகிறது.
மைக்கேல், மாணவர் இருக்கைகளை வட்டமாக மாற்றியமைக்கிறார்.அன்பாகப் பேசுகிறார்.அமெரிக்க சுதந்திரப் போர் நாடகமாகவே மைதானத்தில் நடத்தப்படுகிறது.பள்ளி முழுவதும் அனைவர் வாயிலும் மிஸ்டர்-டி .
மிஸ்டர் -டி , புகழடைவது மேட்டிற்கு எரிச்சலைத் தருகிறது.இரவு நேரங்களில் அப்பா பெற்ற விருதைப் பார்த்தபடி இருக்கிறார்.
இரவில் மிஸ்டர்-டி யின் வகுப்பறையுள் தேடுவது,மாணவர்களிடம் நெருங்க முயல்வது என மேட்டின் செயல்கள் அனைத்தும் நகைச்சுவையுடன் படமாக்கப்பட்டுள்ளன.
இரு நாட்கள் மிஸ்டர்-டி யைப் பின்தொடர்ந்து ,அவருக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார் மேட் .டி-யின் மீது இறக்கம் வருகிறது.தனது தந்தையின் வழியையே மிஸ்டர்-டி பின்பற்றுவதை அறிகிறார்.
மறுநாள் தனது மாணவர்களுடன் டி -யின் வகுப்பறைக்குச் சென்று அவரது செயல்முறைகளை அறிகிறார்.
மிஸ்டர் -டி  யின் உடல் நலம் குறைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.புதிய சமூக அறிவியல் ஆசிரியை மீண்டும் வகுப்பறையை பாரம்பரிய(?) முறைக்கு மாற்றுகிறார்.
மேட்டின் வகுப்பறை செயல்பாடுகளின் களமாகிறது .இரண்டாண்டுகள் கழித்து வகுப்பறை காட்டப்படுகிறது.புகைப்படத்தில் மிஸ்டர்-டி யுடன் மேட்  மற்றும் மாணவர்கள்.அதன் கீழ் மிஸ்டர்-டி  யின் பிறந்த,இறந்த ஆண்டுகள்.அருகில் மேட்  கடந்த இரு ஆண்டுகளாகப் பெற்ற சிறந்த ஆசிரியர் விருதுகள்.
நல்லாசிரியர் விருது பெற ஆசைப்படுவது,மாதிரிகளை வைத்துப் பாடம் நடத்த முயல்வது,மாணவர்களுடன் நெருக்கமாக இருக்க முயல்வது,மிஸ்டர் டி மீதான பொறாமை,அதனால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள்,மிஸ்டர்-டி  யின் வழிமுறைகளைக் கற்க முயல்வது என நகைச்சுவையுடன் நடிப்பிலும் முதலிடம் பிடிக்கிறார் மேட்டாக வரும் டேவிட் பெமர்.
மிஸ்டர் -டி ஆக வரும் ரைன் ரெனல்ட்ஸ் எளிமையான நடிப்பால் எளிதில் கவருகிறார்.

பாடம் பார்த்து முடித்தவுடன் மனது கனமாகவும் இலகுவாகவும் இருந்தது. அந்த இருவரில் நான் யார்?
கல்வியாண்டின் தொடக்கத்திலேயே  என் வகுப்பில் இருக்கை முறைகளை மாற்றிவிட்டேன்.ஆனாலும் மாணவர்களுக்கும் எனக்கும் சிறிது இடைவெளி இருப்பதாகவே படுகிறது.வெறுமனே பாடம் நடத்துவதை விடுத்து பல்வேறு செயல்முறைகளில் ஈடுபட்டாலும் ஏதோ குறைகிறது.

எனது பாடமான தமிழில் அனைத்து மாணவரும் எழுதவும்,வாசிக்கவும்,பேசவும் திறமை பெறவேண்டும்.
வகுப்பறைச் சிறையிலிருந்து மாணவரை விடுவித்துக் கற்றலை இனிமையாக்கவேண்டும்.செயல்திட்டங்களை வகுத்து,செயல்படுத்திய பின் குறை நிறைகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.
ஒவ்வொரு நாளும் கற்க வேண்டியவர்கள்-ஆசிரியர்களும்,மாணவர்களும்.


Friday, 19 October 2012

பொன்னியின் செல்வன்மதுரை புத்தகத்திருவிழாவில் வாங்கிய புத்தகங்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள அற்புதம் 'அஞ்ஞாடி '.
பூமணி - மன்னராட்சிகளைப் புகழ்ந்து,மங்கையரை வர்ணித்துக் கொண்டிருந்த வரலாற்றுப் புதினங்களுக்கிடையே 
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்.
மற்ற வரலாற்று  நாவல்களைப் போல ஒரே மூச்சில் வாசிக்க முடியாமல் கண்கள் அவ்வப்போது திரையிட்டுக் கொள்கின்றன .
   அஞ்ஞாடியை பாதி வாசித்துக் கொண்டிருந்தபோதே மனதுள் தோன்றியது, சில வரலாற்றுப் புதினங்களை வாசித்துவிட்டு இதை வாசித்தலென்ன?.
   நீண்ட காலத்திற்குப்பின் பொன்னியின் செல்வனை வாசிக்கத் தொடங்கினேன். வந்தியத்தேவன், தன குதிரையில் என்னையும் ஏற்றிக்கொண்டு ஒரே மூச்சில் ஏரி ,ஆறு,காடு,மலை,அரண்மனைகள்,சிறைச்சாலை,சோளம்,ஈழம் எனப் பல்வேறு இடங்கள் சுற்றி -குந்தவை,வானதி,சுந்தரச் சோழர்,ஆதித்ய கரிகாலர்,அருண்மொழி என்ற ராஜராஜ சோழன் ..........
போன்ற பலருடன் பழக வைத்து ஆயிரக்கணக்கான பக்கங்கள் தாண்டி இறக்கிவிட்டான்.
      பாண்டியர் குறித்த இழிவுகள்(?) பாண்டிய நாட்டுக்காரனான என் மனதில் சிறிது வருத்தம் தந்தாலும் தமிழன் என்ற பெருமிதத்துடன் அடுத்த மூச்சில் பாலகுமாரனின் உடையாரில் ராஜராஜ சோழனுடன்  தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயக் கட்டுமானத்தில் சில ஆயிரம் பக்கங்கள் இணைந்தேன்.
     வரலாற்றுப் புனைவு என்றாலும் பெருவுடையார் ஆலயம் உறுவாவதைப் படிக்கும் போது பெருமிதமாக இருக்கிறது.ராஜராஜ சோழன், மகத்தான சாதனையில் தன்னுடன் ஆலயப் பணியில் ஈடுபட்ட அனைவரின் பெயர்களையும் கல்வெட்டில் பதித்திருப்பதே அவனை வரலாற்று நாயகனாகக் காட்டுகிறது.
ஏறத்தாழ பத்து நாட்கள் மகத்தான சோழப் பேரரசில் வாழ்ந்து திரும்பியபோது ரஜினி படம் பார்த்த விறுவிறுப்பு.
இணையத்தில் ராஜராஜ சோழன் பற்றிய பல்வேறு பதிவுகள்,தஞ்சை பெருவுடையார் ஆலயம் குறித்த ஒளிப்பதிவுகளைப்  பார்த்து மகிழ்ந்தேன்.
மனதில் தீரா வருத்தமும் வாழ்க்கை பற்றிய சிந்தனையையும் ஒருங்கே ஏற்படுத்தியது ராஜராஜ சோழனின் பள்ளிப்படை குறித்த மக்கள் தொலைக்காட்சி செய்தி.
மீண்டும்  அஞ்ஞாடியை வாசிக்கத் தொடங்கிவிட்டேன்.
மாமன்னன்,மக்கள்- யாராக இருந்தாலும் வாழ்க்கை அவரவர் தளத்தில் விளையாடிக்கொண்டே இருக்கிறது,
புரிந்தும் புரியாத புதிராய்.... 

Thursday, 4 October 2012

சாட்டை


கல்வி பற்றிய ஆங்கிலப் படங்களான 
    Dead Poets Society, Stand and Deliver,  Mr. Holland’s Opus,   Lean on Me ,                        To Sir, with Love
போன்றவற்றைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் தோன்றும்...
தமிழில் எப்போது இது போன்ற படங்களை எடுப்பார்கள்?.

நம் வருங்காலச் சமுதாயத்தை வடிவமைக்கும் கல்விக்கூடங்கள் அதிலும் குறிப்பாகப் பள்ளியைச் சரியாகக் காட்டிய படங்களே இல்லையென நினைக்கிறேன்.

இன்றைய கல்விமுறை, கல்வி உரிமைச் சட்டம் 2009 க்குப் பின் பல்வேறு மாற்றங்களை அடைந்து வருகிறது.ஆசிரியரை விடுத்து மாணவரை மையப்படுத்தி புதிய அவதாரம் எடுத்து வருகிறது.
எதுவாக இருந்தாலும் மாற்றம் ஆசிரியர் மனங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

சென்ற ஆண்டு பார்த்த  'மாணிக்கக்  கல்லு' என்ற மலையாளப்படம்  அரசுப்பள்ளியை மாற்றிக்காட்டும் ஆசிரியரை ஆரவாரமின்றி இயல்பாகக் காட்டியது.
யாருக்கும் அடங்காத மாணவர்கள், பகுதி நேர (?) ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஆசிரியர், பொதுவுடைமை பேசும் ஆசிரியர், தூங்கும் ஆசிரியர், நாடகம்,கலை நிகழ்வுகளில் ஈடுபட்ட நேரம் போக பள்ளிவரும் ஆசிரியர்,கோழி முட்டை வியாபாரம் செய்யும் உடற்கல்வி ஆசிரியை ,கைத்தொலைபேசியில்  நேரம் செலவழிக்கும் ஆசிரியை, உர வியாபாரம் செய்யும் தலைமை ஆசிரியர் என மாணவர்கள் எக்கேடு கெட்டாலென்ன? கல்விமுறை, அரசு,கலாச்சாரச் சீர்கேடு ,என்றெல்லாம் பல்வேறு காரணங்களைக்  காட்டித் தப்பிக்கும் ஆசிரியர்கள் மத்தியில் மாணவர் நலனை நினைக்கும் ஒரு ஆசிரியர் எப்படி  அனைவரையும்  மாற்றுகிறார்?
ரசித்து ரசித்துப் பார்த்தேன்.

என் தமிழரும் படம் செய்தார்...சாட்டை.

பள்ளியை மையக்கருவாக வைத்து தமிழில் படம் எடுத்த தைரியத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.
கொலைவெறியுடன் மடியில் கத்தியை மறைத்து வைத்திருக்கும் வில்லன்...உதவித் தலைமை ஆசிரியரைத் தவிர மற்ற அனைத்துக் குறைகளையும் மன்னித்து விடலாம்.
படம் பார்க்கும் அனைவரின் மனதிலும் அவர்கள் வாழ்வில் சந்தித்த நல்ல,கெட்ட(?) ஆசிரியர்களின் நினைவுகள் மலரும்.இதுவே படத்தின் வெற்றி.
ஆசிரியர்கள், இந்தப் படத்தைப் பார்க்கும்போது  நான் இப்படியெல்லாம் இல்லை.கதாநாயகனைப் போல பல மாற்றங்களை என் வகுப்பறையில் செய்திருக்கிறேன் அல்லது செய்வேன் என்ற எண்ணம் தோன்றினால் மாற்றங்களை வரவேற்கத் தொடங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

எல்லாம் சரி.அசகாய சூரர்களான இன்றைய  மாணவர்கள் படுத்தும் பாட்டை எப்படிச் சமாளிப்பது?
ஆசிரியர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்.