Sunday, 18 November 2012

துடைத்துக்கொண்டு போய்ச் சேர்

சமயம், தத்துவத்தில் தேடல் உள்ளவர்கள் ஜென்னை நன்கு அறிவார்கள். உண்மை எளிமையானது. விளக்கங்கள் கடுமையானவை. ஜென் கவிதைகள், எளிமைக்குள் பிரபஞ்ச,மானுட ரகசியங்களை உள்ளடக்கியவை.
தமிழில் ஜென் கவிதைகள் குறித்த புத்தகங்களில் சிறந்தது  2003 ஆம் ஆண்டு உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட 'பெயரற்ற யாத்ரீகன்'. ஆகச் சிறந்த ஜென் கவிதைகளை மொழிபெயர்த்து ஆங்கில மூலத்துடனும் வழங்கியிருப்பவர் யுவன் சந்திரசேகர்.
அத்தனை கவிதைகளும் எண்ணங்களைத் துளியிலிருந்து கடலாக விரிப்பவை. எனக்கு மிகவும் பிடித்த பலவற்றுள் ஜென் முழுமையையும் எளிமையாய் விளக்கியது 'க்கோ உன்' எழுதிய கவிதை. இவரைப் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை. கவிதையை உணர்வோம்.

சாமியார் ஜாங் க்கு - ஸோங் சுறுசுறுப்பாய்
மலங்கழிப்பதில்
ஈடுபட்டிருந்தபோது, தவளைகளின் சப்தத்தைக்
கேட்டார். உந்துதலுற்று,
இசைக்கத் தொடங்கினார்.

வசந்தத்தின் தொடக்கத்தில், நிலவெரியும் இரவுகளில்
தவளைகளின் சப்தம் உலகத்தைத்
துளைக்கிறது.
ஒரு துருவத்திலிருந்து மறு துருவம் வரை.
நம் அனைவரையும்
ஒரே குடும்பமென உணரவைக்கிறது.

இதோ பார்,
மலம் கழித்து முடித்துவிட்டால்
துடைத்துக்கொண்டு
போய்ச் சேர்.


எவ்வளவு எளிமையான வரிகள். சாமியார் மலம் கழிக்கும்போது கூட இயற்கையை ரசித்துப் பாடுகிறார்.
தவளையின் சப்தம் உலகையே ஒரே குடும்பமாக உணர வைப்பதாக ஆச்சரியப்படுகிறார். உண்மையான துறவிகளுக்கு அனைத்தும் ஒன்று. காக்கை, குருவி, கடல், மலை அனைத்தையும் ஒன்றாகப் பார்த்த பாரதி போல.
இப்படி எண்ணி எண்ணி வியக்கும் வேளையில் தொடரும் வரிகளே ஜென்னை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்கின்றன. பார்வையின் புதிய பரிமாணத்தையும்.
நீ எதற்காக வந்தாய்? மலம் கழிக்க. அதை முடித்துவிட்டால் கழுவிக்கொண்டு போய்ச் சேர்.
வந்த வேலையை மறந்துவிட்டுத் தத்துவம் பேசினாலும் பயனில்லை. இப்போது என்ன செய்கிறாயோ அதில் மட்டுமே முழு கவனத்தையும் வை  என்பதே  ஜென். எளிமையாகத் தோன்றினாலும் ஒரு வேலையைச் செய்யத் தொடங்கியவுடனேயே மனம் அலைபாய்வதை உணரவோ, நிறுத்தவோ முடிவதில்லை. அப்போது அதில் மட்டுமே இருப்பதே தியானம். வாழ்வின் தரிசனம்.
எனது கழிப்பறைக் கதவில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறது இந்தக் கவிதை. தினமும் வாசிக்கிறேன். எண்ணங்கள் கவிதையில், மற்றதில் அலைபாயும்போது முகத்தில் அறைகிறது,
 துடைத்துக்கொண்டு போய்ச் சேர்,
தினமும்.

மரணக் கவிஞர் குழு

பள்ளிப் பருவம் வாழ்வின் நாற்றாங்கால்.
  ஆடம்பர வாழ்க்கைக்கான பணம் சம்பாதிக்கும் வேலைகளை அடையவே கல்வி என்று இன்றைய மாணவர்கள் பல வழிகளில் பெற்றோரால் அறிவுறுத்தப் படுகின்றனர்.டாக்டர்,பொறியாளர்,கணிப்பொறி வல்லுநர் எனப் பெற்றோரின் ஆசை விளக்கில் தோன்றும் பூதங்களாகவே பிள்ளைகள் நடத்தப்படுகின்றனர்.பணமே வாழ்க்கை என அனைவரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
அறிவு வளர்ச்சி,மானுடப் பண்புகள் போன்றவை எழுத்தில் கூட இல்லாமல் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கூடங்களும் மாணவர்களை மனிதர்களாக நடத்தாமல் மதிப்பெண்களால் அளவிடுகின்றன. கல்விக்கூடங்களில் மானுடத்தைப் போதிக்கும் ஆசிரியர்கள் அருகி வருகின்றனர்.
 அதிக அளவு மதிப்பெண் பெறும்  மாணவர்களை உருவாக்கும் பள்ளியே சிறந்த பள்ளியாகப் போற்றப்படுகிறது.
தம் பிள்ளைகள் மதிப்பெண்களைக் குவிக்க என்ன விலை வேண்டுமானாலும் தரப் பெற்றோர்கள் தயாராக உள்ளனர். அதிக லாபம் தரும் வியாபாரமாகவே பெரும்பாலான கல்விநிலையங்கள் 
நடத்தப்படுகின்றன. புரிந்தாலும் புரியாவிட்டாலும் மனப்பாடம் செய்தே தீரவேண்டுமென ஆசிரியர்கள் சொல்லித்தருகின்றனர். பாடத்தை வாசித்து விடும் இயந்திரமாகவே பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கின்றனர். மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யாருமே கவலைப்படுவதில்லை.
அடக்குமுறை பள்ளிகளின் கல்விமுறை பற்றிய உலகப் படங்களில் முதன்மையானதாகக் கொண்டாடப் படுவது Dead Poets Society. Tom Schulman தனது பள்ளி வாழ்விலிருந்து எழுதிய கதையை Peter Weir இயக்கியுள்ளார்.1989 இல் எடுக்கப்பட்ட இப்படத்தில் Robin Williams ஆசிரியராக நடித்துள்ளார்.
 அமெரிக்காவின் புகழ்பெற்ற பள்ளிகளுள் ஒன்றான வெல்டன் அகாடமியின் கல்வியாண்டுத்தொடக்கம். 17 வயது வரையான மாணவர்கள் பயிலும் பள்ளி அது.
அறிவிற்கான ஒளி என்று பள்ளி முதல்வர் நீட்டும் மெழுகுவர்த்தியிலிருந்து மாணவர்கள் தங்களுடைய மெழுவர்த்தியை ஒளிஏற்றிக் கொள்கின்றனர்.பள்ளியின் பழம் பெருமை,கண்டிப்பு,சட்ட திட்டங்கள்,நடைமுறைகள் குறித்து முதல்வர் உரையாற்றுகிறார். புதிய ஆங்கில ஆசிரியராக நமது பள்ளியின் முந்நாள் மாணவரான
ஜான் கீட்டிங் பணியாற்றுவார் என அறிமுகம் செய்து வைக்கிறார். கூட்ட முடிவில் பெற்றோர்கள் தம்  முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு பிள்ளைகளை   விட்டுச்செல்கின்றனர்.
மாணவர் விடுதியில் நீல் பெர்ரியும் டோட் ஆண்டர்சனும் ஒரே அறையைப் பகிர்ந்துகொள்கின்றனர்.நீல் துடிப்பானவன்.டாக்டர் ஆகவேண்டும் என அப்பாவால் கண்டிப்புடன் வளர்க்கப்படுபவன்.டோட்,கூச்ச சுபாவம் உள்ளவன். அவனது அண்ணனைப் போல உயர் பதவி பெறவேண்டுமென அதே பள்ளியில் சேர்க்கப்பட்டவன்.
நீல்  அறையில் மற்ற நண்பர்களும் கூடுகின்றனர்.முதல்வரின் உரையைக் கிண்டல் செய்கின்றனர்.பள்ளியின் பெயரை Hell-ton எனக் கேலி செய்துமகிழ்கின்றனர்.
மறுநாள் பள்ளி தொடங்குகிறது.ஆங்கில வகுப்பு.கீட்டிங் விசிலடித்தபடி வகுப்பினுள் நுழைந்து மானவர்களைக்கடந்து வெளியேறுகிறார்.அனைவரும் ஆச்சரியமாக பார்த்தபடி இருக்க,வகுப்பினுள் எட்டிப்பார்த்து அனைவரையும் வெளியே அழைக்கிறார். வரவேற்பறை. அனைவரையும் நிற்கவைத்து,தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். நீங்கள் என்னை மிஸ்டர் கீட்டிங் அல்லது 'ஓ கேப்டன் மை கேப்டன்' என அழைக்கலாம் என்கிறார்.அந்த வரியிலிருந்து கவிதை வகுப்பு தொடங்குகிறது. இந்த நாளைக் கைப்பற்றுங்கள். இந்தப் பள்ளியில் எத்தனையோ மாணவர்கள் பயின்றுள்ளனர்.அனைவருக்கும் ஒரே கனவுதான். இந்த நாளைக் கைப்பற்றுங்கள்.
கீட்டிங்கின் முதல் வகுப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.கோமாளித்தனம் என்றும் வித்தியாசமானது என்றும் பலவாறு அனைவரும் பேசிக்கொள்கின்றனர்.
மறுநாள் புத்தகத்தில் உள்ள 'கவிதையைப் புரிந்து கொள்வது எப்படி?' என்ற பாடத்தை வாசிக்கச் சொல்கிறார் கீட்டிங். கவிதையைக் அறிவியல்பூர்வமாக பலவிதமாக அளவிடுகிறது பாடம். முடிவில் கவிதையை அறிவியல்பூர்வமாக எப்படி அளவிட முடியும்? கவிதை என்பது உணர்வுப்பூர்வமானது.எனவே,தவறான பாடத்தை அனைவரும் கிழித்து விடுங்கள் என்கிறார்.மாணவர்கள் மகிழ்ச்சியாக புத்தகத்தைக் கிழிக்கின்றனர்.
' ஏன் நாம் கவிதையை எழுதவும்,படிக்கவும் வேண்டும்?
ஏனெனில்,நாம் மனிதர்கள். மருத்துவம்,சட்டம், பொறியியல்,போன்றவை வாழ்வதற்கான   பணத்தைத் தருபவை.
கவிதை, அன்பு, காதல் போன்றவை நம்மை உயிர்ப்புடன் வைப்பவை.'
என்று அரிய வகுப்பு நிறைவடைகிறது. மாணவர்கள் கீட்டிங்கை விரும்பத்தொடங்குகின்றனர்.
நீல், பழைய பள்ளி மலரிலிருந்து கஈட்டிங்கைப் பற்றிய குறிப்புகளை அறிகிறான்.'மரணக் கவிஞர் குழு' அமைத்தவர் என்பதைப் பற்றி அறியும் ஆவலுடன் நண்பர்கள் அனிவரும் ஆசிரியரிடம் கேட்கின்றனர்,
"பள்ளிக்கு அருகிலுள்ள ஏரிக்கு அப்பாலுள்ள குகையில் யாருக்கும் தெரியாமல் இரவுகளில் நண்பர்களுடன் சென்று கவிதைகள் வாசிப்போம். இது பள்ளி விதிகளுக்கு முரணானது.இருந்தாலும் கவிதைமேல் கொண்ட காதலால் அப்படிச் செய்தோம். இதை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்." என்று கீட்டிங் கூறுகிறார்.

நீல், தனது நண்பர்களுடன் அன்றைய இரவே குகைக்குச் சென்று கவிதை வாசித்துத் திரும்புகிறான்.அவ்வப்போது இது தொடர்கிறது.

மைதானத்தில் கால் பந்து உதைத்தபடி கவிதை சொல்வது, ஓசையுடன் நடந்து கொண்டே கவிதை சொல்வது, வகுப்பறையில் மேசைமேல் ஏறி  நின்று வித்தியாசமான கோணத்தில் பார்ப்பது என கீட்டிங்கின் புதிய அணுகுமுறைகள் மாணவரிடையே ஆர்வத்தையும் மற்றவரிடையே பொறாமையையும் ஏற்படுத்துகின்றன.

மிட் சம்மர் நைட் டிரீம் என்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு நீலுக்கு கிடைக்கிறது.அப்பாவிடம் கேட்டால் அனுமதி கிடைக்காது என்று,அவரின் கையெழுத்தை தானே போட்டு அனுமதிக்கடிதம் கொடுத்து நாடக ஒத்திகையில் ஈடுபடுகிறான். நாடகத்தில் மகன் நடிப்பதை எதிர்பாராத விதமாக அறிந்த தந்தை பள்ளிக்கு வந்து நீலைக் கண்டிக்கிறார்.மருத்துவர் ஆவதே அவனது குறிக்கோளாக இருக்கவேண்டும்.நாடகத்திலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்துகிறார். நீல் வழக்கம் போலத் தந்தையின் சொல்படிக் கேட்பதாகக் கூறுகிறான்.
ஆனாலும் மனம் பொறுக்காமல் இரவில் கீட்டிங்கின் அறைக்குச் சென்று அவரது கருத்தைக் கேட்கிறான்.
அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவது மகனின் கடமை. உனது ஆசைகளையும் அவரிடம் அன்பாக எடுத்துக் கூறி நடிக்க அனுமதி பெறுமாறு ஆசிரியர் கூறுகிறார்.
அப்பாவிடம் பேசினாலும் அனுமதிகிடைக்காது என முடிவுசெய்து,அவருக்குத் தெரியாமல் நாடகத்தில் நடிக்கிறான் நீல். நாடக முடிவில் அனைவரும் அவன் நடிப்பைப் பாராட்டுகின்றனர்.அவன் அப்பாவும் அரங்கிற்கு வந்திருக்கிறார்.கோபமுடன் நீலைத் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். தனது வார்த்திகளை அவன் மீறிவிட்டதாகவும் அவனை ராணுவப் பள்ளியொன்றில் சேர்க்கவிருப்பதாகவும் கூறுகிறார்.மனம் உடைந்த நீல்,இரவில் அப்பாவின் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொள்கிறான்.
நீலின் பெற்றோரின் வேண்டுகோளின்படி வெல்டன் பள்ளி முதல்வர் நோலன், நீலின் நண்பர்களையும் பெற்றோரையும்  அழைத்து மிரட்டி நீலின் தற்கொலைக்குக் காரணம் கீட்டிங்கின் தவறான போதனா முறைகள்தான் என எழுதி வாங்குகிறார்.டோட், மறுத்தாலும் அனைவரின் வற்புறுத்தலின் பேரில் கையொப்பமிடுகிறான். கீட்டிங் பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறார்.

மறுநாள் ஆங்கில வகுப்பு.பள்ளி முதல்வர் நோலன்,மாணவர்களின் புத்தகத்தை எடுத்து 'கவிதையைப் புரிந்து கொள்வது எப்படி?' என்ற பாடத்தை வாசிக்கச் சொல்கிறார். கீட்டிங்கின் சொற்படி அந்தப்பாடத்தைக் கிழித்து விட்டதாக அனைவரும் கூறுகின்றனர்.

" அது மிகச்சிறந்த அறிவியல் பூர்வமான அணுகுமுறை.இவ்வளவு நாள் நீங்கள் தவறாக வழி நடத்தப்பட்டு இருக்கிறீர்கள்.இனி நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன்." என்று தனது புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொல்கிறார் நோலன்.
அப்போது தனது உடைமைகளை எடுக்கவேண்டி அங்கு வருகிறார் கீட்டிங். அவரைப் பார்த்ததும் குற்ற உணர்வுடன் அனைவரும் தலை குனிய, பிறரின் வற்புறுத்தலின் பேரிலேயே தானும் கைஎழுத்திட்டதாக கதறுகிறான் டோட்.நோலன் அவனைக் கண்டித்து, விரைவில் வெளியேறுமாறு கீட்டிங்கிடம்  கூறுகிறார். முதல்வரின் சொல்லையும் மீறி தனது மேசைமேல் ஏறி நின்று  'ஓ கேப்டன் மை கேப்டன்' என்று கண்ணீருடன் அழைக்கிறான் டோட் . முதல்வர் கடுமையாகக் கண்டித்துச் சத்தமிட மற்ற சில மாணவர்களும் அதையே செய்கின்றனர்.அமைதியாக வெளியேறுகிறார் கீட்டிங்.

மாற்றங்களை விரும்புபவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்கத்தயாராகவும் இருக்கவேண்டும். எவ்வளவுதான் அடக்குமுறைகள் இருந்தாலும் கற்பித்தலில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தம் பணியைத் தொடருவார்கள். அவர்களிடமே மானுடத்தின் எதிர்காலம் ஆக்கம் பெறுகிறது.
பல்வேறு விருதுகளைக் குவித்த இப்படம் இன்றளவும் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் ஒரு பாடமாகவே விளங்கி வருகிறது.
Saturday, 3 November 2012

கிணற்றுத் தவளைகள்

முதன்முதலாக நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் எதுவும் எழுதாமல் அமைதியாக இருந்தேன்.ஆசிரியர்கள் சொன்ன காரணங்களில் நேரம் போதாமை, ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று என்பதால்.
மறுதேர்வு பல்வேறு மாற்றங்களுடன் நடைபெற்றது.
அதிகரிக்கப்பட்ட  நேரம்,வினாத்தாளையும் விடைத்தாள் நகலையும் தேர்வர்கள் எடுத்துச் செல்லலாம்.விடைக்குறிப்புகளும் இணையத்தில் வெளியிடப்பட்டன.நானும் ஒரு தேர்வறைக்  கண்காணிப்பாளராகப் பணியாற்றினேன்.கேள்விகள் மாணவர்களின் பாடப் புத்தகங்களில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன.

தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன.
வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே தேறியுள்ளனர்.ஏறத்தாழ 6 இலட்சம் பேரில் தேறியவர்கள்  ஏறத்தாழ 8000 பேர்.

என்ன ஆனது வருங்கால ஆசிரியர்களுக்கு?

ஆசிரியர் பணி -ஆசிரியர் வேலையானதால் வந்த வினை.கைநிறையச் சம்பளம்.வேலை பார்க்க வேண்டியதில்லை என்ற எண்ணம்.தாங்கள் கேட்டதோடு மட்டுமில்லாமல் பல தலைமுறைகளைக் கெடுக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் பணமே பிரதானமாய்.
மாணவர்களின் எதிர்காலம் குறித்து உண்மையிலேயே கவலைப்படும் ஆசிரியர்கள் அத்திப்பூக்கள்.

அறிவற்ற ஆசிரியரிடம் நம் பிள்ளைகளைப் படிக்க வைக்க விரும்புவோமா?நம் பிள்ளைகள் மட்டும்  உயர்தர (?) கொள்ளைக் கல்வி நிறுவனங்களில் படித்து 100 சதவீத மதிப்பெண் பெற்று லட்சலட்சமாய் சம்பாதிக்க வேண்டும்.நாம் காசு கொடுத்து வேலை வாங்கி, மாணவர்களை அடித்து,திட்டி,எக்கேடும் கெட்டுப்போ எனச் சாபங்களும்  தந்துவிட்டு,
"எவனுக்குமே படிக்கறதுல அக்கறையில்ல, ஒழுக்கமில்ல,பெத்தவங்க சரியில்ல,கல்வித்திட்டம் சரியில்ல,அரசு எல்லோரையும் பாசாக்கி விட்டுருது"
என்றெல்லாம் புலம்பி நடித்து  நம்மைத்தவிர அனைவரையும் பழி சொல்லுகிறோம்.
மாணவர்கள் இருப்பதால் தான் நமக்குச் சம்பளம் என்பதை மறந்து போனோம்.வேலை வாங்கிவிட்டால் 58 வயதுவரை,அதன்பின் வாழும் வரை,அதன்பின் குடும்பத்திற்கும் என பண வரவுகள் இருக்குபோது நமக்கென்ன கவலை.
இப்போது பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வுகள் வைக்கவேண்டும்.குறிப்பிட்ட கால இடைவெளியில் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.தோல்வி அடைபவர்களுக்கு ஊதிய உயர்வுத் தடை, பணி  நீக்கம் என்று தகுதிக்கேற்ற தண்டனைகள் தரவேண்டும்.

எனக்கு வயதாகிவிட்டது முன்பு படித்ததை எப்படி நினைவுகூற  முடியுமென ஒரு வயதான மருத்துவர் அறுவை சிகிச்சையின் இடையே கூறுவாரா? மற்ற அனைத்து பணியிலும் அன்றைய புதுமை வரை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.ஆசிரியர்களாகிய நாம் மட்டுமே புதியன கற்காமல் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு,கிணற்றுத் தவளைகளாய்  இருப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவரைக் குறை கூறிப் பிழைக்கிறோம்.

சட்டங்கள் கடுமையானதாக வரும்.மாணவர்கள் கேள்வி கேட்பார்கள்- அவமானத்திற்குமுன் நாம் கற்போம்.தவறினால் வலியுடன் கற்பிக்கப்படுவோம்.

Friday, 2 November 2012

ஆயிரம் பக்க அற்புதம்

   " அஞ்ஞாடி" என்று தோன்றியது,வாசித்து முடித்தவுடன்.
மனமெங்கும் மகிழ்ச்சியும் துக்கமும் எல்லாமும் கலந்த கலவையாய் நிறைந்தது.
வரலாற்று நாவல்களே நம்மை அதிகம் கனவுலகில் சஞ்சாரிக்க வைப்பவை.என் இனத்தின்,தமிழனின் பெருமை என மார்தட்ட வைப்பவை.
வந்தியத் தேவனையும் வானதியையும் மறக்க முடியாமல் பிள்ளைகளின் பெயர்களாக்கி மகிழ்ந்திருக்கிறோம்.
அரசிளங்குமரிகள் ,அரண்மனைகள், போர்கள்,எனப் பல்வேறு விவரணைகளில் மயங்கியிருக்கிறோம்.

வாழ்க்கை என்பதுதான் என்ன?
காலம் காலமாக விடை தேடப்படும் கேள்வி.

பூமணியின் தேடலின் விளைவே " அஞ்ஞாடி".
கந்தக பூமி என்றழைக்கப்படும் கோவில்பட்டி பகுதியிலிருந்து ரத்தமும் சதையுமாய் வாழ்க்கையை அறுவடை செய்திருக்கிறார்.ஒருவன் வாழ்ந்த கதை -ஒரு இனத்தின் பெருமையாக மார்தட்டி மீசை முறுக்கப்படும் இக்காலத்தில் மூத்த குடிகளின் வாழ்க்கையை ஆவணப் படுத்தியிருக்கிறார்.
வளமான வட்டார வழக்கு
சொலவடைகள்
நாட்டார் பாடல்கள்
தொன்மக் கதைகள்
அரசு ஆவணங்கள்
மதங்கள்
இனக்குழுக்கள் 
என ஆய்வு செய்ய வேண்டிய பல செய்திகளை அற்புதக் கலவையாகப் படைத்து தமிழ் நாவல்களிடையே அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார் பூமணி.

வட்டார வழக்கும்,இயல்பும் நவீனமும் கலந்த மொழிநடையுடன் புத்தனைப் போல வாழ்வை உணரச் செய்கிறது
 " அஞ்ஞாடி".
 ஏறத்தாழ சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமாக 300 ஆண்டுகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கும்    " அஞ்ஞாடி" நம் முன்னோர்களின் எளிய வாழ்வு,பழக்க வழக்கங்கள், உணவு, கலை, கலாச்சாரம் என எல்லாவற்றையும் மீட்டுக் காட்டுகிறது.
நிறைய இழந்திருக்கிறோம்  என்ற கவலையையும் இயற்கையோடு இணைந்த வாழ்வின் சுகத்தையும் நம் மனத்துள் எழுப்புகிறது. எல்லாவற்றையும் தாண்டி வாழ்க்கையை அறிமுகம் செய்து வைக்கிறது.

வெறும் பெயர்களும் ஊரையும் தவிர என் முன்னோர்களைப்பற்றி ,அவர்கள் வாழ்வைப்பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறேன்?.என் ஆச்சி,தாத்தாவிடம் அவர்களின்,முன்னோர்களின் வாழ்க்கைக் கதைகளைக் கேட்காமல் விட்டுவிட்டோமே?என்ற வருத்தம்  எழுகிறது. இதுதான் " அஞ்ஞாடி"யின் வெற்றி என எண்ணுகிறேன்.

" அஞ்ஞாடி" நம் முகம் தேட வைக்கும் கண்ணாடி.