Sunday 29 July 2012

முன்னேற்றத்திற்கான தண்டனைகள் ?

          எப்போதாவது என்ற நிலை மாறி அன்றாடம்  வெளிவரும் கொலை,கொள்ளை,கற்பழிப்பு வரிசையில் இணைந்துவிட்டது ஆசிரியர் தரும் தண்டனைகள் பற்றிய செய்திகள்.

அடித்தல்
கடுமையாகத் திட்டுதல்
மறைமுகமாக பழித்தல்
மதிப்பெண்களைக் குறைத்தல்
வெளியே நிற்க வைத்தல்
கைகளை உயர்த்தியபடி நிற்க வைத்தல்
முட்டிக்கால் போடவைத்தல்
பிற மாணவர்கள் மூலம் தலையில் குத்துதல்
அபராதம் விதித்தல்
காதில் கிள்ளுதல்
சிறுநீரை  குடிக்க வைத்தல்.
இவை தவிர பாலியல் அத்து மீறல்கள்.
இப்படித் தனியே ஒரு அகராதி போடுமளவு நீளும் தண்டனைகள் புதிது புதிதாக ஒவ்வொரு நாளும் கண்டுபிடித்து  செயல்படுத்தப்படுகின்றன.

               வகுப்பறையில் அதிக அளவில் மாணவர்கள் , அவர்கள்  செய்யும் சேட்டைகள் ,வன்முறைச் செயல்கள், போதைப் பழக்கம் ஆகியன அதிக அளவில் இருப்பதால் அவர்களை  என்ன தான்  செய்வது எப்படி நெறிப்படுத்துவது  என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர் தண்டனைகள் தர விரும்பாத ஆசிரியர்கள்.
              பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களால் விரும்பப் படாமைக்குக் காரணம் என்ன?
              உங்கள்  மாணவன் தேர்வில் தோல்வி அடையக் காரணம் என்ன?
என்ற ஒரு கேள்விக்கு அவனின் குடும்பச்சூழல்  முதல்  தகாத நண்பர்கள்,ஒழுங்கீனம் எனப்பல்வேறு   காரணங்களை  பதிலாக  அடுக்குகிறோம்.
         ஏன்  படித்து வரவில்லை? என்ற நமது கேள்விக்கு ஒரு பதிலை மாணவன் சொல்லும் முன்பே நமது அடியோ அல்லது திட்டுக்களோ அவனை அடைந்துவிடுகிறது.மீறிப் பதில் சொன்னால் எதிர்த்தா பேசுகிறாய்? என அதிக தண்டனை கிடைக்கிறது.சரி, உங்களால் முடிந்த அளவு அடித்துக்கொள்ளுங்கள்  என மாணவர்கள் விட்டு விடுகிறார்கள்.
      தண்டிக்கும் ஆசிரியரிடம் காட்டும் அதே முரட்டுத்தனத்தை எல்லா ஆசிரியர்களிடமும் வெளிப்படுத்துகிறார்கள்.

       பள்ளிகளுக்குள்ளும் வெளியிலும் ஆசிரியர்களிடையே விருப்பு வெறுப்பற்ற விவாதங்கள் நடைபெற வேண்டும். மன நல மருத்துவர்கள் ,
பெற்றோர்கள்  ஆகியோருடன்  கலந்துரையாடல்கள் நடைபெற வேண்டும்.
       உடனடித் தீர்வுகளை எதிர்பார்க்காமல் படிப்படியான செயல் முறைகளைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.

       மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு பல்வேறு புறச் சூழல் காரணிகள் இருந்தாலும் பள்ளி, ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது.
     ஆசிரியர்- குற்றம் களைபவர்.பிறர் குற்றம் மட்டுமல்ல,
தம் குற்றமும். 

1 comment: