Sunday 18 November 2012

துடைத்துக்கொண்டு போய்ச் சேர்

சமயம், தத்துவத்தில் தேடல் உள்ளவர்கள் ஜென்னை நன்கு அறிவார்கள். உண்மை எளிமையானது. விளக்கங்கள் கடுமையானவை. ஜென் கவிதைகள், எளிமைக்குள் பிரபஞ்ச,மானுட ரகசியங்களை உள்ளடக்கியவை.
தமிழில் ஜென் கவிதைகள் குறித்த புத்தகங்களில் சிறந்தது  2003 ஆம் ஆண்டு உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட 'பெயரற்ற யாத்ரீகன்'. ஆகச் சிறந்த ஜென் கவிதைகளை மொழிபெயர்த்து ஆங்கில மூலத்துடனும் வழங்கியிருப்பவர் யுவன் சந்திரசேகர்.
அத்தனை கவிதைகளும் எண்ணங்களைத் துளியிலிருந்து கடலாக விரிப்பவை. எனக்கு மிகவும் பிடித்த பலவற்றுள் ஜென் முழுமையையும் எளிமையாய் விளக்கியது 'க்கோ உன்' எழுதிய கவிதை. இவரைப் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை. கவிதையை உணர்வோம்.

சாமியார் ஜாங் க்கு - ஸோங் சுறுசுறுப்பாய்
மலங்கழிப்பதில்
ஈடுபட்டிருந்தபோது, தவளைகளின் சப்தத்தைக்
கேட்டார். உந்துதலுற்று,
இசைக்கத் தொடங்கினார்.

வசந்தத்தின் தொடக்கத்தில், நிலவெரியும் இரவுகளில்
தவளைகளின் சப்தம் உலகத்தைத்
துளைக்கிறது.
ஒரு துருவத்திலிருந்து மறு துருவம் வரை.
நம் அனைவரையும்
ஒரே குடும்பமென உணரவைக்கிறது.

இதோ பார்,
மலம் கழித்து முடித்துவிட்டால்
துடைத்துக்கொண்டு
போய்ச் சேர்.


எவ்வளவு எளிமையான வரிகள். சாமியார் மலம் கழிக்கும்போது கூட இயற்கையை ரசித்துப் பாடுகிறார்.
தவளையின் சப்தம் உலகையே ஒரே குடும்பமாக உணர வைப்பதாக ஆச்சரியப்படுகிறார். உண்மையான துறவிகளுக்கு அனைத்தும் ஒன்று. காக்கை, குருவி, கடல், மலை அனைத்தையும் ஒன்றாகப் பார்த்த பாரதி போல.
இப்படி எண்ணி எண்ணி வியக்கும் வேளையில் தொடரும் வரிகளே ஜென்னை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்கின்றன. பார்வையின் புதிய பரிமாணத்தையும்.
நீ எதற்காக வந்தாய்? மலம் கழிக்க. அதை முடித்துவிட்டால் கழுவிக்கொண்டு போய்ச் சேர்.
வந்த வேலையை மறந்துவிட்டுத் தத்துவம் பேசினாலும் பயனில்லை. இப்போது என்ன செய்கிறாயோ அதில் மட்டுமே முழு கவனத்தையும் வை  என்பதே  ஜென். எளிமையாகத் தோன்றினாலும் ஒரு வேலையைச் செய்யத் தொடங்கியவுடனேயே மனம் அலைபாய்வதை உணரவோ, நிறுத்தவோ முடிவதில்லை. அப்போது அதில் மட்டுமே இருப்பதே தியானம். வாழ்வின் தரிசனம்.
எனது கழிப்பறைக் கதவில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறது இந்தக் கவிதை. தினமும் வாசிக்கிறேன். எண்ணங்கள் கவிதையில், மற்றதில் அலைபாயும்போது முகத்தில் அறைகிறது,
 துடைத்துக்கொண்டு போய்ச் சேர்,
தினமும்.

மரணக் கவிஞர் குழு

பள்ளிப் பருவம் வாழ்வின் நாற்றாங்கால்.
  ஆடம்பர வாழ்க்கைக்கான பணம் சம்பாதிக்கும் வேலைகளை அடையவே கல்வி என்று இன்றைய மாணவர்கள் பல வழிகளில் பெற்றோரால் அறிவுறுத்தப் படுகின்றனர்.டாக்டர்,பொறியாளர்,கணிப்பொறி வல்லுநர் எனப் பெற்றோரின் ஆசை விளக்கில் தோன்றும் பூதங்களாகவே பிள்ளைகள் நடத்தப்படுகின்றனர்.பணமே வாழ்க்கை என அனைவரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
அறிவு வளர்ச்சி,மானுடப் பண்புகள் போன்றவை எழுத்தில் கூட இல்லாமல் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கூடங்களும் மாணவர்களை மனிதர்களாக நடத்தாமல் மதிப்பெண்களால் அளவிடுகின்றன. கல்விக்கூடங்களில் மானுடத்தைப் போதிக்கும் ஆசிரியர்கள் அருகி வருகின்றனர்.
 அதிக அளவு மதிப்பெண் பெறும்  மாணவர்களை உருவாக்கும் பள்ளியே சிறந்த பள்ளியாகப் போற்றப்படுகிறது.
தம் பிள்ளைகள் மதிப்பெண்களைக் குவிக்க என்ன விலை வேண்டுமானாலும் தரப் பெற்றோர்கள் தயாராக உள்ளனர். அதிக லாபம் தரும் வியாபாரமாகவே பெரும்பாலான கல்விநிலையங்கள் 
நடத்தப்படுகின்றன. புரிந்தாலும் புரியாவிட்டாலும் மனப்பாடம் செய்தே தீரவேண்டுமென ஆசிரியர்கள் சொல்லித்தருகின்றனர். பாடத்தை வாசித்து விடும் இயந்திரமாகவே பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கின்றனர். மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யாருமே கவலைப்படுவதில்லை.
அடக்குமுறை பள்ளிகளின் கல்விமுறை பற்றிய உலகப் படங்களில் முதன்மையானதாகக் கொண்டாடப் படுவது Dead Poets Society. Tom Schulman தனது பள்ளி வாழ்விலிருந்து எழுதிய கதையை Peter Weir இயக்கியுள்ளார்.1989 இல் எடுக்கப்பட்ட இப்படத்தில் Robin Williams ஆசிரியராக நடித்துள்ளார்.
 அமெரிக்காவின் புகழ்பெற்ற பள்ளிகளுள் ஒன்றான வெல்டன் அகாடமியின் கல்வியாண்டுத்தொடக்கம். 17 வயது வரையான மாணவர்கள் பயிலும் பள்ளி அது.
அறிவிற்கான ஒளி என்று பள்ளி முதல்வர் நீட்டும் மெழுகுவர்த்தியிலிருந்து மாணவர்கள் தங்களுடைய மெழுவர்த்தியை ஒளிஏற்றிக் கொள்கின்றனர்.பள்ளியின் பழம் பெருமை,கண்டிப்பு,சட்ட திட்டங்கள்,நடைமுறைகள் குறித்து முதல்வர் உரையாற்றுகிறார். புதிய ஆங்கில ஆசிரியராக நமது பள்ளியின் முந்நாள் மாணவரான
ஜான் கீட்டிங் பணியாற்றுவார் என அறிமுகம் செய்து வைக்கிறார். கூட்ட முடிவில் பெற்றோர்கள் தம்  முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு பிள்ளைகளை   விட்டுச்செல்கின்றனர்.
மாணவர் விடுதியில் நீல் பெர்ரியும் டோட் ஆண்டர்சனும் ஒரே அறையைப் பகிர்ந்துகொள்கின்றனர்.நீல் துடிப்பானவன்.டாக்டர் ஆகவேண்டும் என அப்பாவால் கண்டிப்புடன் வளர்க்கப்படுபவன்.டோட்,கூச்ச சுபாவம் உள்ளவன். அவனது அண்ணனைப் போல உயர் பதவி பெறவேண்டுமென அதே பள்ளியில் சேர்க்கப்பட்டவன்.
நீல்  அறையில் மற்ற நண்பர்களும் கூடுகின்றனர்.முதல்வரின் உரையைக் கிண்டல் செய்கின்றனர்.பள்ளியின் பெயரை Hell-ton எனக் கேலி செய்துமகிழ்கின்றனர்.
மறுநாள் பள்ளி தொடங்குகிறது.ஆங்கில வகுப்பு.கீட்டிங் விசிலடித்தபடி வகுப்பினுள் நுழைந்து மானவர்களைக்கடந்து வெளியேறுகிறார்.அனைவரும் ஆச்சரியமாக பார்த்தபடி இருக்க,வகுப்பினுள் எட்டிப்பார்த்து அனைவரையும் வெளியே அழைக்கிறார். வரவேற்பறை. அனைவரையும் நிற்கவைத்து,தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். நீங்கள் என்னை மிஸ்டர் கீட்டிங் அல்லது 'ஓ கேப்டன் மை கேப்டன்' என அழைக்கலாம் என்கிறார்.அந்த வரியிலிருந்து கவிதை வகுப்பு தொடங்குகிறது. இந்த நாளைக் கைப்பற்றுங்கள். இந்தப் பள்ளியில் எத்தனையோ மாணவர்கள் பயின்றுள்ளனர்.அனைவருக்கும் ஒரே கனவுதான். இந்த நாளைக் கைப்பற்றுங்கள்.
கீட்டிங்கின் முதல் வகுப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.கோமாளித்தனம் என்றும் வித்தியாசமானது என்றும் பலவாறு அனைவரும் பேசிக்கொள்கின்றனர்.
மறுநாள் புத்தகத்தில் உள்ள 'கவிதையைப் புரிந்து கொள்வது எப்படி?' என்ற பாடத்தை வாசிக்கச் சொல்கிறார் கீட்டிங். கவிதையைக் அறிவியல்பூர்வமாக பலவிதமாக அளவிடுகிறது பாடம். முடிவில் கவிதையை அறிவியல்பூர்வமாக எப்படி அளவிட முடியும்? கவிதை என்பது உணர்வுப்பூர்வமானது.எனவே,தவறான பாடத்தை அனைவரும் கிழித்து விடுங்கள் என்கிறார்.மாணவர்கள் மகிழ்ச்சியாக புத்தகத்தைக் கிழிக்கின்றனர்.
' ஏன் நாம் கவிதையை எழுதவும்,படிக்கவும் வேண்டும்?
ஏனெனில்,நாம் மனிதர்கள். மருத்துவம்,சட்டம், பொறியியல்,போன்றவை வாழ்வதற்கான   பணத்தைத் தருபவை.
கவிதை, அன்பு, காதல் போன்றவை நம்மை உயிர்ப்புடன் வைப்பவை.'
என்று அரிய வகுப்பு நிறைவடைகிறது. மாணவர்கள் கீட்டிங்கை விரும்பத்தொடங்குகின்றனர்.
நீல், பழைய பள்ளி மலரிலிருந்து கஈட்டிங்கைப் பற்றிய குறிப்புகளை அறிகிறான்.'மரணக் கவிஞர் குழு' அமைத்தவர் என்பதைப் பற்றி அறியும் ஆவலுடன் நண்பர்கள் அனிவரும் ஆசிரியரிடம் கேட்கின்றனர்,
"பள்ளிக்கு அருகிலுள்ள ஏரிக்கு அப்பாலுள்ள குகையில் யாருக்கும் தெரியாமல் இரவுகளில் நண்பர்களுடன் சென்று கவிதைகள் வாசிப்போம். இது பள்ளி விதிகளுக்கு முரணானது.இருந்தாலும் கவிதைமேல் கொண்ட காதலால் அப்படிச் செய்தோம். இதை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்." என்று கீட்டிங் கூறுகிறார்.

நீல், தனது நண்பர்களுடன் அன்றைய இரவே குகைக்குச் சென்று கவிதை வாசித்துத் திரும்புகிறான்.அவ்வப்போது இது தொடர்கிறது.

மைதானத்தில் கால் பந்து உதைத்தபடி கவிதை சொல்வது, ஓசையுடன் நடந்து கொண்டே கவிதை சொல்வது, வகுப்பறையில் மேசைமேல் ஏறி  நின்று வித்தியாசமான கோணத்தில் பார்ப்பது என கீட்டிங்கின் புதிய அணுகுமுறைகள் மாணவரிடையே ஆர்வத்தையும் மற்றவரிடையே பொறாமையையும் ஏற்படுத்துகின்றன.

மிட் சம்மர் நைட் டிரீம் என்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு நீலுக்கு கிடைக்கிறது.அப்பாவிடம் கேட்டால் அனுமதி கிடைக்காது என்று,அவரின் கையெழுத்தை தானே போட்டு அனுமதிக்கடிதம் கொடுத்து நாடக ஒத்திகையில் ஈடுபடுகிறான். நாடகத்தில் மகன் நடிப்பதை எதிர்பாராத விதமாக அறிந்த தந்தை பள்ளிக்கு வந்து நீலைக் கண்டிக்கிறார்.மருத்துவர் ஆவதே அவனது குறிக்கோளாக இருக்கவேண்டும்.நாடகத்திலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்துகிறார். நீல் வழக்கம் போலத் தந்தையின் சொல்படிக் கேட்பதாகக் கூறுகிறான்.
ஆனாலும் மனம் பொறுக்காமல் இரவில் கீட்டிங்கின் அறைக்குச் சென்று அவரது கருத்தைக் கேட்கிறான்.
அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவது மகனின் கடமை. உனது ஆசைகளையும் அவரிடம் அன்பாக எடுத்துக் கூறி நடிக்க அனுமதி பெறுமாறு ஆசிரியர் கூறுகிறார்.
அப்பாவிடம் பேசினாலும் அனுமதிகிடைக்காது என முடிவுசெய்து,அவருக்குத் தெரியாமல் நாடகத்தில் நடிக்கிறான் நீல். நாடக முடிவில் அனைவரும் அவன் நடிப்பைப் பாராட்டுகின்றனர்.அவன் அப்பாவும் அரங்கிற்கு வந்திருக்கிறார்.கோபமுடன் நீலைத் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். தனது வார்த்திகளை அவன் மீறிவிட்டதாகவும் அவனை ராணுவப் பள்ளியொன்றில் சேர்க்கவிருப்பதாகவும் கூறுகிறார்.மனம் உடைந்த நீல்,இரவில் அப்பாவின் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொள்கிறான்.
நீலின் பெற்றோரின் வேண்டுகோளின்படி வெல்டன் பள்ளி முதல்வர் நோலன், நீலின் நண்பர்களையும் பெற்றோரையும்  அழைத்து மிரட்டி நீலின் தற்கொலைக்குக் காரணம் கீட்டிங்கின் தவறான போதனா முறைகள்தான் என எழுதி வாங்குகிறார்.டோட், மறுத்தாலும் அனைவரின் வற்புறுத்தலின் பேரில் கையொப்பமிடுகிறான். கீட்டிங் பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறார்.

மறுநாள் ஆங்கில வகுப்பு.பள்ளி முதல்வர் நோலன்,மாணவர்களின் புத்தகத்தை எடுத்து 'கவிதையைப் புரிந்து கொள்வது எப்படி?' என்ற பாடத்தை வாசிக்கச் சொல்கிறார். கீட்டிங்கின் சொற்படி அந்தப்பாடத்தைக் கிழித்து விட்டதாக அனைவரும் கூறுகின்றனர்.

" அது மிகச்சிறந்த அறிவியல் பூர்வமான அணுகுமுறை.இவ்வளவு நாள் நீங்கள் தவறாக வழி நடத்தப்பட்டு இருக்கிறீர்கள்.இனி நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன்." என்று தனது புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொல்கிறார் நோலன்.
அப்போது தனது உடைமைகளை எடுக்கவேண்டி அங்கு வருகிறார் கீட்டிங். அவரைப் பார்த்ததும் குற்ற உணர்வுடன் அனைவரும் தலை குனிய, பிறரின் வற்புறுத்தலின் பேரிலேயே தானும் கைஎழுத்திட்டதாக கதறுகிறான் டோட்.நோலன் அவனைக் கண்டித்து, விரைவில் வெளியேறுமாறு கீட்டிங்கிடம்  கூறுகிறார். முதல்வரின் சொல்லையும் மீறி தனது மேசைமேல் ஏறி நின்று  'ஓ கேப்டன் மை கேப்டன்' என்று கண்ணீருடன் அழைக்கிறான் டோட் . முதல்வர் கடுமையாகக் கண்டித்துச் சத்தமிட மற்ற சில மாணவர்களும் அதையே செய்கின்றனர்.அமைதியாக வெளியேறுகிறார் கீட்டிங்.

மாற்றங்களை விரும்புபவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்கத்தயாராகவும் இருக்கவேண்டும். எவ்வளவுதான் அடக்குமுறைகள் இருந்தாலும் கற்பித்தலில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தம் பணியைத் தொடருவார்கள். அவர்களிடமே மானுடத்தின் எதிர்காலம் ஆக்கம் பெறுகிறது.
பல்வேறு விருதுகளைக் குவித்த இப்படம் இன்றளவும் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் ஒரு பாடமாகவே விளங்கி வருகிறது.




Saturday 3 November 2012

கிணற்றுத் தவளைகள்

முதன்முதலாக நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் எதுவும் எழுதாமல் அமைதியாக இருந்தேன்.ஆசிரியர்கள் சொன்ன காரணங்களில் நேரம் போதாமை, ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று என்பதால்.
மறுதேர்வு பல்வேறு மாற்றங்களுடன் நடைபெற்றது.
அதிகரிக்கப்பட்ட  நேரம்,வினாத்தாளையும் விடைத்தாள் நகலையும் தேர்வர்கள் எடுத்துச் செல்லலாம்.விடைக்குறிப்புகளும் இணையத்தில் வெளியிடப்பட்டன.நானும் ஒரு தேர்வறைக்  கண்காணிப்பாளராகப் பணியாற்றினேன்.கேள்விகள் மாணவர்களின் பாடப் புத்தகங்களில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன.

தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன.
வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே தேறியுள்ளனர்.ஏறத்தாழ 6 இலட்சம் பேரில் தேறியவர்கள்  ஏறத்தாழ 8000 பேர்.

என்ன ஆனது வருங்கால ஆசிரியர்களுக்கு?

ஆசிரியர் பணி -ஆசிரியர் வேலையானதால் வந்த வினை.கைநிறையச் சம்பளம்.வேலை பார்க்க வேண்டியதில்லை என்ற எண்ணம்.தாங்கள் கேட்டதோடு மட்டுமில்லாமல் பல தலைமுறைகளைக் கெடுக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் பணமே பிரதானமாய்.
மாணவர்களின் எதிர்காலம் குறித்து உண்மையிலேயே கவலைப்படும் ஆசிரியர்கள் அத்திப்பூக்கள்.

அறிவற்ற ஆசிரியரிடம் நம் பிள்ளைகளைப் படிக்க வைக்க விரும்புவோமா?நம் பிள்ளைகள் மட்டும்  உயர்தர (?) கொள்ளைக் கல்வி நிறுவனங்களில் படித்து 100 சதவீத மதிப்பெண் பெற்று லட்சலட்சமாய் சம்பாதிக்க வேண்டும்.நாம் காசு கொடுத்து வேலை வாங்கி, மாணவர்களை அடித்து,திட்டி,எக்கேடும் கெட்டுப்போ எனச் சாபங்களும்  தந்துவிட்டு,
"எவனுக்குமே படிக்கறதுல அக்கறையில்ல, ஒழுக்கமில்ல,பெத்தவங்க சரியில்ல,கல்வித்திட்டம் சரியில்ல,அரசு எல்லோரையும் பாசாக்கி விட்டுருது"
என்றெல்லாம் புலம்பி நடித்து  நம்மைத்தவிர அனைவரையும் பழி சொல்லுகிறோம்.
மாணவர்கள் இருப்பதால் தான் நமக்குச் சம்பளம் என்பதை மறந்து போனோம்.வேலை வாங்கிவிட்டால் 58 வயதுவரை,அதன்பின் வாழும் வரை,அதன்பின் குடும்பத்திற்கும் என பண வரவுகள் இருக்குபோது நமக்கென்ன கவலை.
இப்போது பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வுகள் வைக்கவேண்டும்.குறிப்பிட்ட கால இடைவெளியில் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.தோல்வி அடைபவர்களுக்கு ஊதிய உயர்வுத் தடை, பணி  நீக்கம் என்று தகுதிக்கேற்ற தண்டனைகள் தரவேண்டும்.

எனக்கு வயதாகிவிட்டது முன்பு படித்ததை எப்படி நினைவுகூற  முடியுமென ஒரு வயதான மருத்துவர் அறுவை சிகிச்சையின் இடையே கூறுவாரா? மற்ற அனைத்து பணியிலும் அன்றைய புதுமை வரை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.ஆசிரியர்களாகிய நாம் மட்டுமே புதியன கற்காமல் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு,கிணற்றுத் தவளைகளாய்  இருப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவரைக் குறை கூறிப் பிழைக்கிறோம்.

சட்டங்கள் கடுமையானதாக வரும்.மாணவர்கள் கேள்வி கேட்பார்கள்- அவமானத்திற்குமுன் நாம் கற்போம்.தவறினால் வலியுடன் கற்பிக்கப்படுவோம்.

Friday 2 November 2012

ஆயிரம் பக்க அற்புதம்

   " அஞ்ஞாடி" என்று தோன்றியது,வாசித்து முடித்தவுடன்.
மனமெங்கும் மகிழ்ச்சியும் துக்கமும் எல்லாமும் கலந்த கலவையாய் நிறைந்தது.
வரலாற்று நாவல்களே நம்மை அதிகம் கனவுலகில் சஞ்சாரிக்க வைப்பவை.என் இனத்தின்,தமிழனின் பெருமை என மார்தட்ட வைப்பவை.
வந்தியத் தேவனையும் வானதியையும் மறக்க முடியாமல் பிள்ளைகளின் பெயர்களாக்கி மகிழ்ந்திருக்கிறோம்.
அரசிளங்குமரிகள் ,அரண்மனைகள், போர்கள்,எனப் பல்வேறு விவரணைகளில் மயங்கியிருக்கிறோம்.

வாழ்க்கை என்பதுதான் என்ன?
காலம் காலமாக விடை தேடப்படும் கேள்வி.

பூமணியின் தேடலின் விளைவே " அஞ்ஞாடி".
கந்தக பூமி என்றழைக்கப்படும் கோவில்பட்டி பகுதியிலிருந்து ரத்தமும் சதையுமாய் வாழ்க்கையை அறுவடை செய்திருக்கிறார்.ஒருவன் வாழ்ந்த கதை -ஒரு இனத்தின் பெருமையாக மார்தட்டி மீசை முறுக்கப்படும் இக்காலத்தில் மூத்த குடிகளின் வாழ்க்கையை ஆவணப் படுத்தியிருக்கிறார்.
வளமான வட்டார வழக்கு
சொலவடைகள்
நாட்டார் பாடல்கள்
தொன்மக் கதைகள்
அரசு ஆவணங்கள்
மதங்கள்
இனக்குழுக்கள் 
என ஆய்வு செய்ய வேண்டிய பல செய்திகளை அற்புதக் கலவையாகப் படைத்து தமிழ் நாவல்களிடையே அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார் பூமணி.

வட்டார வழக்கும்,இயல்பும் நவீனமும் கலந்த மொழிநடையுடன் புத்தனைப் போல வாழ்வை உணரச் செய்கிறது
 " அஞ்ஞாடி".
 ஏறத்தாழ சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமாக 300 ஆண்டுகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கும்    " அஞ்ஞாடி" நம் முன்னோர்களின் எளிய வாழ்வு,பழக்க வழக்கங்கள், உணவு, கலை, கலாச்சாரம் என எல்லாவற்றையும் மீட்டுக் காட்டுகிறது.
நிறைய இழந்திருக்கிறோம்  என்ற கவலையையும் இயற்கையோடு இணைந்த வாழ்வின் சுகத்தையும் நம் மனத்துள் எழுப்புகிறது. எல்லாவற்றையும் தாண்டி வாழ்க்கையை அறிமுகம் செய்து வைக்கிறது.

வெறும் பெயர்களும் ஊரையும் தவிர என் முன்னோர்களைப்பற்றி ,அவர்கள் வாழ்வைப்பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறேன்?.என் ஆச்சி,தாத்தாவிடம் அவர்களின்,முன்னோர்களின் வாழ்க்கைக் கதைகளைக் கேட்காமல் விட்டுவிட்டோமே?என்ற வருத்தம்  எழுகிறது. இதுதான் " அஞ்ஞாடி"யின் வெற்றி என எண்ணுகிறேன்.

" அஞ்ஞாடி" நம் முகம் தேட வைக்கும் கண்ணாடி.

Tuesday 23 October 2012

தமிழா! தமிழா!

கடந்தவாரம் செய்தித் தாளில் வந்த செய்தி.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அரசு பள்ளி பெண் தமிழாசிரியரை தாக்கிய மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த இரு தினங்களுக்கு முன், இப்பள்ளியில் பணிபுரியும் பெண் தமிழாசிரியை ஒருவரை, அங்கு படிக்கும் சில மாணவர்கள் கேலி செய்துள்ளனர். தட்டிக்கேட்டபோது, ஒரு மாணவர் அந்த ஆசிரியையை கீழே தள்ளி, கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவரை, 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து, தலைமையாசிரியை அங்கையற்கண்ணி உத்தரவிட்டார்.

பெண் தமிழாசிரியை தாக்கப்பட்டதை கண்டித்து தமிழாசிரியர் கழகம் சார்பில், நேற்று சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகம் முன், மாநில துணைத் தலைவர் இளங்கோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன்பின், மாவட்ட கல்வி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். இளங்கோ கூறுகையில்,""பல இடங்களில் ஆசிரியர்களை மாணவர்கள் கேலி,கிண்டல் செய்கிற போக்கு தொடர்கிறது. தமிழாசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை.இலவச கட்டாய கல்வி திட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் பாடம் கடைசி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் நிலைக்கு வரவேண்டும்,'' என்றார்.


இதை வாசித்தவுடன் என்ன தோன்றுகிறது? ஒருவழியாக மாணவனுக்கு தண்டனை தரப்பட்டுவிட்டது.ஆனால் பத்து நாட்களுக்குப் பின் அந்த ஆசிரியையின் நிலை?
இதைவிட தமிழாசிரியர் கழகத்தினரின் கூற்று-  எதெற்கெடுத்தாலும் அரசு,அல்லது கல்வித்திட்டத்தைப்  பழி கூறும் போக்கைக் காட்டுகிறது.


யார் குற்றவாளி?

'செய்முறைத் தேர்விற்கு 50 மதிப்பெண்கள் என்னிடம்தான்' என்று பாயும் காட்டியே வகுப்பெடுக்கும் அறிவியல் ஆசிரியர்கள்.
எவ்வளவுதான் சேட்டை செய்தாலும் செய்முறையில் 47 மதிப்பெண்ணுக்குக் கீழ் குறைக்க மாட்டார்கள் என்று தெரிந்தே பயப்படும்(? ) மாணவர்கள்.
உயர் படிப்புகளுக்கு மொழிப்பாடம் தேவையில்லை - என்று அடிக்கடி கூறும் ஆசிரியர்கள்.
G.O க்களைத் தேடுவது, பணிமாற்றம்,போராட்டம் என்று மட்டுமே இயங்கும் சங்கங்கள்.
சம்பளம் பைசா குறைந்தாலும் கணக்குப்பார்த்து, மாணவனின் மதிப்பெண் ஏன் குறைகிறது? என்று கணக்குப் பார்க்காமல்,ஓரளவு உண்மையிருந்தாலும்- சமூகம்,குடும்பம்,கலாச்சாரச் சீரழிவு என்றெல்லாம் பேசித் தப்பித்துக்கொள்ளும் ஆசிரியர்கள்.
ரௌடியாகத் திரிந்தாலும் அழகிய பணக்காரப்பெண் காதலிப்பாள் என்று திரைப்பாடம் கற்ற மாணவர்கள்.

இப்படியே மாற்றி மாற்றி அடுத்தவரை மட்டுமே குற்றம் கூறிக்கொண்டே இருந்தால் என்னதான் தீர்வு?

            பல ஆசிரியர்கள் மொழிப்பாடம்தானே என்று வகுப்பறையில் கூறுகிறார்கள்.  மொழிப்பாட ஆசிரியர்களும் இலக்கணம்,இலக்கியம் என்று மரபான முறையில் கடினமாகக் கற்பிக்கின்றார்கள்.மாணவரின் பங்கேற்பு என்பதே இல்லாத போதனா முறைகளை மாற்றிப் புதிய முறைகளை மேற்கொள்ள ஆர்வமில்லாத ஆசிரியர்களே அதிகம்.
அதிக சம்பளம் வாங்கிக்கொண்டு தூங்குகிறார்கள் என்று பொதுமக்கள் பேசுவதற்கு யார் காரணம்?
வெறும் அரட்டல்களும் கண்டிப்பும் -காலாவதியாகிவிட்ட செயல்பாடுகள்.
வகுப்பறைச்  சூழலை இனிமையாக்கும் வழிகளை ஆசிரியர்கள்தாம் கண்டறிய வேண்டும்.
நம் பிள்ளைகளின் எதிகாலத்தில் வைக்கும் அக்கரையில் சிறிதளவேணும்  மாணவர்கள் நலனில் காட்டினால் எதிர்காலத் தலைமுறை வளம் பெறும்.

மற்ற குறைகள் இருந்தாலும் முதலில் தம்மை மாற்றிக்கொள்ள முன் வராத ஆசிரியர்களை வரலாறு என்றுமே மன்னிக்காது.


மக்கள் கலைஞன்







இசை என்றவகையில் என் மனதில் பல்வேறு உணர்வுகளை கர்நாடக இசை ஏற்படுத்துகிறது.ராகங்களை பற்றிய அறிவு சிறிதும் எனக்கில்லாவிட்டாலும் நவீன இசை போலவே கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கும் செல்வதுண்டு.
மகாராஜபுரம் சந்தானம்,பாலமுரளி கிருஷ்ணா,M .S.சுப்புலட்சுமி,அருணா சாய்ராம்,சுதா ரகுநாதன்,நித்யஸ்ரீ மகாதேவன் எனப் பலரின் பாடல்களுக்கு,குறிப்பாக தமிழில் பாடியவற்றிற்கு நான் அடிமை.

இசைக்கருவி இசையில் என்றென்றும் என் உள்ளம் கவர் கள்வன் குன்னக்குடி வைத்யநாதன்.பல கச்சேரிகளை நேரில் ரசித்திருக்கிறேன் .
பல முறைகள் அவரிடம் பேசியுமிருக்கிறேன் .
சில ஆண்டுகளுக்குமுன் டெல்லியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்குபெற தமிழக அரசின் கிராமியக் கலைக் குழுவினருடன் நானும் கரகம் ஆடச் சென்றிருந்தேன்.தமிழ்நாடு விடுதியில் தங்கியிருந்தோம்.அங்கே குன்னக்குடியும் இருப்பதாக அறிந்து அனைவரும் அவர் அறைக்குச் சென்றிருந்தோம்.அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
ஒருவர் கதவைத் திறக்க,வந்தவர் ஏதோ  கூறினார்.
என்ன?என்று கேட்டார் குன்னக்குடி.
கதவைத் திறந்தவர் கூறினார்,"பக்கத்து அறையில போலிஸ் IG இருக்காராம்.சத்தம் ரொம்ப வருதாம்.அமைதியா இருக்கச் சொல்றாராம் "
வந்தவரை உள்ளே அழைத்து குன்னக்குடி சொன்னார்,
" அவன்கிட்டப் போய்ச் சொல்லு,பக்கத்துல இருக்கறது குன்னக்குடின்னு"

எந்தத் தொந்தரவும் இல்லாமல் வெகுநேரம் பேசியபின் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பினோம்.

மற்ற கர்னாடக இசைக்கலைஞர்களைப் போலின்றி மக்கள் விரும்பியதையும் தந்தவர் குன்னக்குடி.
அவரது கச்சேரி மூன்று பிரிவுகளாக இருக்கும்.முதலில் கர்னாடக இசையை வாசிப்பார்.அதன் பின் திரைப்படப் பாடல்கள்.பழைய பாடல்கள் முதல் அப்போது வெளியான பாடல்கள் வரை அனைத்தும் வாசித்தபின் பக்திப்பாடல்கள் தொடர்ந்து வாசிக்கப்படும்.ரசிகர்களும் கூடவே பாடிக்கொண்டே கேட்பது கண்கொள்ளாக் காட்சி.

இசையோடு அவர் முகம் காட்டும் பாவங்களும் தனித்தன்மையானவை.
கர்நாடக இசையை மேற்கத்திய இசைக் கருவியான வயலினில் வாசித்ததோடு மட்டுமில்லாமல் வயலினை,பக்க வாத்தியத்திலிருந்து மையத்திற்குக் கொணர்ந்தவர் குன்னக்குடி.
இந்த இணைப்பிலுள்ள பாடலைக் கேளுங்கள், அந்த மகத்தான கலைஞன் மக்களை மயக்கிய விதம் புரியும்....

Monday 22 October 2012

சூப்பர் மேன் வருவாரா?

அமெரிக்கக் கல்வி பற்றிய ஆவணப் படமான Waiting for Superman பார்த்தேன்.2010 ஆம் ஆண்டு வெளியான இப்படம் அமெரிக்கக் கல்விமுறையின் சீரழிவுகளையும் எதிர்காலத்தேவைகளையும் அலசும் ஆகச்சிறந்த படம்.

"சூப்பர் மேன் -உண்மையில்லை என்று அம்மா சொன்ன நாளில்தான் நிறைய அழுதேன்.கிறிஸ்மஸ் தாத்தா வரமாட்டார் என்பதைவிட சூப்பர்  மேன் வரமாட்டார் என்பதுதான் என்னை அதிகம் பாதித்தது.ஏனெனில் சூப்பர் மேன், கெட்டவங்களை அழித்து நல்லவங்களை காப்பாற்றுவார்." என்று ஒரு ஆசிரியர் கூறுவதுடன் படம் தொடங்குகிறது.

ஒவ்வொருநாளும் அதே சடங்குகள்.....காலை உணவு,புத்தகப் பை, பள்ளிக்குச் செல்லுதல்.எதற்காக?

சில குழந்தைகளிடம் அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் ? என்ற கேள்வி கேட்கப்படும்போது ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு துறையைக் கூறுகின்றனர்.குழந்தைகள் தம் எதிர்காலம் குறித்த கனவுகளை, நண்பர்கள்,பெற்றோர்,மற்றும் ஆசிரியரிடமிருந்து பெறுகிறார்கள்.

4 ஆம் வகுப்பில் முதலிடம் பெறும்  மாணவர்கள் 5,6,7,8 என மேலே செல்லச்செல்ல பின்னடைகிறார்கள்.குறை யாரிடம் உள்ளது?
மாணவர்? ஆசிரியர்? கல்வித்திட்டம்?
 எனப் பல கேள்விகளுடன் தொடங்கும் படம் அமெரிக்கக் கல்விமுறை மற்றும் ஆசிரியர்களின் நிறை குறைகளை அலசுகிறது.

அமெரிக்காவில் அருகமைப் பள்ளிகளில்தான் குழந்தைகள் கல்வி பயில வேண்டும்.கிராமம் மற்றும் நகரத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் வாழும் பகுதியிலுள்ள பள்ளிகள் தரத்தில் குறைந்ததாக உள்ளன.பல பள்ளிகள் 'இடைநிற்றல் தொழிற்சாலை'களாக ( dropout factories) இயங்குகின்றன.எட்டாம் வகுப்புவரை தள்ளப்பட்டு வருபவர்கள் 9,10 ஆம் வகுப்புகளில் பள்ளிப் படிப்பை பெரும்பாலும் கைவிடுகின்றனர்.

40 ஆண்டுகள் பழமையான ஒரு பள்ளியில் இதுவரை பயின்றவர்கள் 60,000 பேர்.அதில் கல்லூரிக்கல்வி முடிக்காதவர்கள் 40,000 பேர்.

அரசுப்பள்ளிகளில் குறைந்த இடங்கள்,ஆசிரியர்களின் ஆர்வக்குறைவு ஆகிய காரணங்களால் பெரும்பாலான பள்ளிகள் தரம் குறைந்ததாக உள்ளன.ஒரு சில பள்ளிகளே தரமானதாக உள்ளன.

இங்கே நான் சில செய்திகளைச்  சொல்ல வேண்டும்.
மேலே கூறப்பட்ட செய்திகளைப் படிக்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?
 "அமெரிக்க பள்ளிகளும் இந்தியா போலத்தான்" என்றுதானே? அதுதான் இல்லை.மேலே சொல்லப்பட்ட செய்திகள் அமெரிக்க கல்விமுறையின் அவலத்தைக் காட்டினாலும் பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நம் நாட்டின் ஆகச்சிறந்த பள்ளிகளைப்போல் உள்ளது. விசாலமான வகுப்பறைகள்,சிறந்த கட்டிடங்கள்,உபகரணங்கள்,
வகுப்பிற்கு 20 மாணவர்கள் என வசதிகளில் எந்தக்குறையும் இல்லை.

இப்போது ஆவணப்படத்தைத் தொடருவோம்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதிகளில் கல்வியைத் தொடர இயலாதவர்களே அதிகம் உள்ளனர்.அவர்களில் பெரும்பாலானோர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.அவரவர் குற்றங்களைப் பொறுத்து பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.ஒருவர் குறைந்தபட்ச தண்டனையாக 4 ஆண்டுகள் சிறைவாசம் பெறுகிறார் எனக்கொண்டால் ,
குறைந்தபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெரும் 1   சிறைவாசிக்கு ஆகும் செலவு
33,000 X 4= 1,32,000 டாலர்கள்.
ஒரு மாணவனுக்கு கல்லூரிக் கல்வி வரை ( 13 ஆண்டுகள்) ஆகும் செலவு
8,300 X 13 = 1,07,900 டாலர்கள்.
கல்வியைவிட சிறை பலமடங்கு மக்களின் பணத்தைச் செலவாக்குகிறது.
எனவே கல்வித்தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.

2020 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் பெரும் உயர் பணிகளுக்கு 12 கோடியே 10 இலட்சம் பேர் தேவை.ஆனால்,5 கோடி அமெரிக்கர்கள் மட்டுமே இதற்குத் தகுதியுடன் இருப்பார்கள்.மீதிப் பணியிடங்களை வெளிநாட்டினர் பெறுவார்கள்.இது அமெரிக்காவைப் பெரிதும் பாதிக்குமென பில் கேட்ஸ் கூறுகிறார்.

தற்காலக் குழந்தைகள் கற்பதில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள் என்ற கூற்று உண்மையல்ல.பல புதிய செயல்முறைகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்ற ஆசிரியர்களின்  கூற்றுப்படி,
 'சரியான வழிமுறைகள் கல்வியின் தரத்தை அதிகரிக்கும்'.

சுருக்கமாகக் கூறினால்,
தரமான ஆசிரியர்கள்
அதிகக் கற்றல் நேரம்
உலகத்தரமான கல்வி
உயர்ந்த எதிர்பார்ப்பு ,செயல்முறைகள்
பொறுப்பு உணர்ந்து செயல்படுதல்

ஆகியவை கல்வித்தரத்தை உயர்த்துவதாக கண்டறியப் பெற்றுள்ளன.எனவே சூப்பர் மேனைப் போன்ற ஆசிரியர்கள்தாம் இப்போதைய தேவை.என ஆவணப்படம் நிறைகிறது.

இந்த ஆவணப்படம் என்னுள் பல எண்ணங்களை எழுப்பியது.


அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளே இல்லாத பள்ளிகள்,தொலைநோக்கு திட்டங்கள் ஏதும் இல்லாமல் இலவசங்களில் இயங்கும் அரசுகள்,பிள்ளைகளை ஏதும் செய்ய இயலாத பெற்றோர்,பணி பெறும்வரை போராடி அதன் பின் ஓய்வு வரை ஓய்வெடுக்கும் ஆசிரியர்கள்,மாற்றிமாற்றிக் குறை கூறியே கழியும் கல்வித் திட்டங்கள் இன்னும் பலப் பல தடைகளைத் தாண்டியும் சிறந்த சில  மாணவர்கள் -அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் உருவாக்கப்படுகிறார்கள் என்றால் அதற்குக் காரணமான சூப்பர் மேன்களைக் கண்டறிந்து அவர்களின் வழிமுறைகளை ஆய்ந்து அனைவரும் பின்பற்ற முயல வேண்டும்.

ஆசிரியர்கள் தம் கடமையை உணர்ந்து தாமாகவே தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.கேட்பாரில்லாத இன்றைய சூ ழல், ஆசிரியர்களுக்கு எதிரான மக்களின் மனப்புலம்பலின் இறுதியில் பெருவெடிப்பாக மாறக்கூடும்.
ஆசிரியர்,பெற்றோர் கலந்துரையாடி புதிய செயல்முறைகளைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.
விருப்பு வெறுப்பு இன்றி விவாதம் செய்வோமா?

Saturday 20 October 2012

கற்பிக்க, கசடற!





   Youtube இல் School of life என்ற படம் பார்த்தேன்.
பால்புரூக் நடுநிலைப்பள்ளியில் கடைசி வேலைநாள்.ஆசிரியர்,மாணவர் கூட்டம்.மாணவர் அனுபவப் பகிர்விற்குப்பின் அந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது அறிவிக்கப்படுகிறது.பலத்த ஆரவாரங்களுக்கிடையே நார்மன் வார்னர் பரிசைப் பெறுகிறார். கடந்த 43 ஆண்டுகளும் அவரே தொடர்ந்து சிறந்த ஆசிரியர் பரிசைப் பெற்றுவருகிறார்.அவர் மகன் மேட் ,அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியர்.தந்தையின் நிழலில் வளரும் அவருக்கும் சிறந்த ஆசிரியர் பரிசுபெற்ற ஆவலாக இருக்கிறது.பரிசு பெற்ற மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையிலேயே நார்மன் வார்னர் உயிர் பிரிகிறது.
இந்த ஆண்டின் சிறந்த ஆசிரியர் விருது பெரும் ஆவலுடன் புதிய கல்வியாண்டில் பள்ளிக்குச் செல்கிறார் மேட் .ஆசிரியர்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார் முதல்வர்.வார்னரின் பாடமான சமூக அறிவியலுக்கு புதிய ஆசிரியராக மைக்கேல் டி ஆஞ்சலோ பொறுப்பேற்கிறார்.மைக்கேல் அதே பள்ளியில் பயின்ற மாணவர்.
மைக்கேலின் அறிமுக உரையே மாணவரிடம் ஆரவாரத்தையும் மிஸ்டர்- டி என்ற செல்லப் பெயரையும் பெற்றுத்தருகிறது.
மேட்டின் அறிவியல் வகுப்பு தொடங்குகிறது.குதர்க்கமாகக் கேள்வி கேட்கும் மாணவர் வெளியேற்றப்படுகிறார்.வகுப்பறை ஒழுங்குடன்(?) பாடம் நடைபெறுகிறது.
மைக்கேல், மாணவர் இருக்கைகளை வட்டமாக மாற்றியமைக்கிறார்.அன்பாகப் பேசுகிறார்.அமெரிக்க சுதந்திரப் போர் நாடகமாகவே மைதானத்தில் நடத்தப்படுகிறது.பள்ளி முழுவதும் அனைவர் வாயிலும் மிஸ்டர்-டி .
மிஸ்டர் -டி , புகழடைவது மேட்டிற்கு எரிச்சலைத் தருகிறது.இரவு நேரங்களில் அப்பா பெற்ற விருதைப் பார்த்தபடி இருக்கிறார்.
இரவில் மிஸ்டர்-டி யின் வகுப்பறையுள் தேடுவது,மாணவர்களிடம் நெருங்க முயல்வது என மேட்டின் செயல்கள் அனைத்தும் நகைச்சுவையுடன் படமாக்கப்பட்டுள்ளன.
இரு நாட்கள் மிஸ்டர்-டி யைப் பின்தொடர்ந்து ,அவருக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார் மேட் .டி-யின் மீது இறக்கம் வருகிறது.தனது தந்தையின் வழியையே மிஸ்டர்-டி பின்பற்றுவதை அறிகிறார்.
மறுநாள் தனது மாணவர்களுடன் டி -யின் வகுப்பறைக்குச் சென்று அவரது செயல்முறைகளை அறிகிறார்.
மிஸ்டர் -டி  யின் உடல் நலம் குறைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.புதிய சமூக அறிவியல் ஆசிரியை மீண்டும் வகுப்பறையை பாரம்பரிய(?) முறைக்கு மாற்றுகிறார்.
மேட்டின் வகுப்பறை செயல்பாடுகளின் களமாகிறது .இரண்டாண்டுகள் கழித்து வகுப்பறை காட்டப்படுகிறது.புகைப்படத்தில் மிஸ்டர்-டி யுடன் மேட்  மற்றும் மாணவர்கள்.அதன் கீழ் மிஸ்டர்-டி  யின் பிறந்த,இறந்த ஆண்டுகள்.அருகில் மேட்  கடந்த இரு ஆண்டுகளாகப் பெற்ற சிறந்த ஆசிரியர் விருதுகள்.
நல்லாசிரியர் விருது பெற ஆசைப்படுவது,மாதிரிகளை வைத்துப் பாடம் நடத்த முயல்வது,மாணவர்களுடன் நெருக்கமாக இருக்க முயல்வது,மிஸ்டர் டி மீதான பொறாமை,அதனால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள்,மிஸ்டர்-டி  யின் வழிமுறைகளைக் கற்க முயல்வது என நகைச்சுவையுடன் நடிப்பிலும் முதலிடம் பிடிக்கிறார் மேட்டாக வரும் டேவிட் பெமர்.
மிஸ்டர் -டி ஆக வரும் ரைன் ரெனல்ட்ஸ் எளிமையான நடிப்பால் எளிதில் கவருகிறார்.

பாடம் பார்த்து முடித்தவுடன் மனது கனமாகவும் இலகுவாகவும் இருந்தது. அந்த இருவரில் நான் யார்?
கல்வியாண்டின் தொடக்கத்திலேயே  என் வகுப்பில் இருக்கை முறைகளை மாற்றிவிட்டேன்.ஆனாலும் மாணவர்களுக்கும் எனக்கும் சிறிது இடைவெளி இருப்பதாகவே படுகிறது.வெறுமனே பாடம் நடத்துவதை விடுத்து பல்வேறு செயல்முறைகளில் ஈடுபட்டாலும் ஏதோ குறைகிறது.

எனது பாடமான தமிழில் அனைத்து மாணவரும் எழுதவும்,வாசிக்கவும்,பேசவும் திறமை பெறவேண்டும்.
வகுப்பறைச் சிறையிலிருந்து மாணவரை விடுவித்துக் கற்றலை இனிமையாக்கவேண்டும்.செயல்திட்டங்களை வகுத்து,செயல்படுத்திய பின் குறை நிறைகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.
ஒவ்வொரு நாளும் கற்க வேண்டியவர்கள்-ஆசிரியர்களும்,மாணவர்களும்.


Friday 19 October 2012

பொன்னியின் செல்வன்



மதுரை புத்தகத்திருவிழாவில் வாங்கிய புத்தகங்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள அற்புதம் 'அஞ்ஞாடி '.
பூமணி - மன்னராட்சிகளைப் புகழ்ந்து,மங்கையரை வர்ணித்துக் கொண்டிருந்த வரலாற்றுப் புதினங்களுக்கிடையே 
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்.
மற்ற வரலாற்று  நாவல்களைப் போல ஒரே மூச்சில் வாசிக்க முடியாமல் கண்கள் அவ்வப்போது திரையிட்டுக் கொள்கின்றன .
   அஞ்ஞாடியை பாதி வாசித்துக் கொண்டிருந்தபோதே மனதுள் தோன்றியது, சில வரலாற்றுப் புதினங்களை வாசித்துவிட்டு இதை வாசித்தலென்ன?.
   நீண்ட காலத்திற்குப்பின் பொன்னியின் செல்வனை வாசிக்கத் தொடங்கினேன். வந்தியத்தேவன், தன குதிரையில் என்னையும் ஏற்றிக்கொண்டு ஒரே மூச்சில் ஏரி ,ஆறு,காடு,மலை,அரண்மனைகள்,சிறைச்சாலை,சோளம்,ஈழம் எனப் பல்வேறு இடங்கள் சுற்றி -குந்தவை,வானதி,சுந்தரச் சோழர்,ஆதித்ய கரிகாலர்,அருண்மொழி என்ற ராஜராஜ சோழன் ..........
போன்ற பலருடன் பழக வைத்து ஆயிரக்கணக்கான பக்கங்கள் தாண்டி இறக்கிவிட்டான்.
      பாண்டியர் குறித்த இழிவுகள்(?) பாண்டிய நாட்டுக்காரனான என் மனதில் சிறிது வருத்தம் தந்தாலும் தமிழன் என்ற பெருமிதத்துடன் அடுத்த மூச்சில் பாலகுமாரனின் உடையாரில் ராஜராஜ சோழனுடன்  தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயக் கட்டுமானத்தில் சில ஆயிரம் பக்கங்கள் இணைந்தேன்.
     வரலாற்றுப் புனைவு என்றாலும் பெருவுடையார் ஆலயம் உறுவாவதைப் படிக்கும் போது பெருமிதமாக இருக்கிறது.ராஜராஜ சோழன், மகத்தான சாதனையில் தன்னுடன் ஆலயப் பணியில் ஈடுபட்ட அனைவரின் பெயர்களையும் கல்வெட்டில் பதித்திருப்பதே அவனை வரலாற்று நாயகனாகக் காட்டுகிறது.
ஏறத்தாழ பத்து நாட்கள் மகத்தான சோழப் பேரரசில் வாழ்ந்து திரும்பியபோது ரஜினி படம் பார்த்த விறுவிறுப்பு.
இணையத்தில் ராஜராஜ சோழன் பற்றிய பல்வேறு பதிவுகள்,தஞ்சை பெருவுடையார் ஆலயம் குறித்த ஒளிப்பதிவுகளைப்  பார்த்து மகிழ்ந்தேன்.
மனதில் தீரா வருத்தமும் வாழ்க்கை பற்றிய சிந்தனையையும் ஒருங்கே ஏற்படுத்தியது ராஜராஜ சோழனின் பள்ளிப்படை குறித்த மக்கள் தொலைக்காட்சி செய்தி.
மீண்டும்  அஞ்ஞாடியை வாசிக்கத் தொடங்கிவிட்டேன்.
மாமன்னன்,மக்கள்- யாராக இருந்தாலும் வாழ்க்கை அவரவர் தளத்தில் விளையாடிக்கொண்டே இருக்கிறது,
புரிந்தும் புரியாத புதிராய்.... 





Thursday 4 October 2012

சாட்டை


கல்வி பற்றிய ஆங்கிலப் படங்களான 
    Dead Poets Society, Stand and Deliver,  Mr. Holland’s Opus,   Lean on Me ,                        To Sir, with Love
போன்றவற்றைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் தோன்றும்...
தமிழில் எப்போது இது போன்ற படங்களை எடுப்பார்கள்?.

நம் வருங்காலச் சமுதாயத்தை வடிவமைக்கும் கல்விக்கூடங்கள் அதிலும் குறிப்பாகப் பள்ளியைச் சரியாகக் காட்டிய படங்களே இல்லையென நினைக்கிறேன்.

இன்றைய கல்விமுறை, கல்வி உரிமைச் சட்டம் 2009 க்குப் பின் பல்வேறு மாற்றங்களை அடைந்து வருகிறது.ஆசிரியரை விடுத்து மாணவரை மையப்படுத்தி புதிய அவதாரம் எடுத்து வருகிறது.
எதுவாக இருந்தாலும் மாற்றம் ஆசிரியர் மனங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

சென்ற ஆண்டு பார்த்த  'மாணிக்கக்  கல்லு' என்ற மலையாளப்படம்  அரசுப்பள்ளியை மாற்றிக்காட்டும் ஆசிரியரை ஆரவாரமின்றி இயல்பாகக் காட்டியது.
யாருக்கும் அடங்காத மாணவர்கள், பகுதி நேர (?) ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஆசிரியர், பொதுவுடைமை பேசும் ஆசிரியர், தூங்கும் ஆசிரியர், நாடகம்,கலை நிகழ்வுகளில் ஈடுபட்ட நேரம் போக பள்ளிவரும் ஆசிரியர்,கோழி முட்டை வியாபாரம் செய்யும் உடற்கல்வி ஆசிரியை ,கைத்தொலைபேசியில்  நேரம் செலவழிக்கும் ஆசிரியை, உர வியாபாரம் செய்யும் தலைமை ஆசிரியர் என மாணவர்கள் எக்கேடு கெட்டாலென்ன? கல்விமுறை, அரசு,கலாச்சாரச் சீர்கேடு ,என்றெல்லாம் பல்வேறு காரணங்களைக்  காட்டித் தப்பிக்கும் ஆசிரியர்கள் மத்தியில் மாணவர் நலனை நினைக்கும் ஒரு ஆசிரியர் எப்படி  அனைவரையும்  மாற்றுகிறார்?
ரசித்து ரசித்துப் பார்த்தேன்.

என் தமிழரும் படம் செய்தார்...சாட்டை.

பள்ளியை மையக்கருவாக வைத்து தமிழில் படம் எடுத்த தைரியத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.
கொலைவெறியுடன் மடியில் கத்தியை மறைத்து வைத்திருக்கும் வில்லன்...உதவித் தலைமை ஆசிரியரைத் தவிர மற்ற அனைத்துக் குறைகளையும் மன்னித்து விடலாம்.
படம் பார்க்கும் அனைவரின் மனதிலும் அவர்கள் வாழ்வில் சந்தித்த நல்ல,கெட்ட(?) ஆசிரியர்களின் நினைவுகள் மலரும்.இதுவே படத்தின் வெற்றி.
ஆசிரியர்கள், இந்தப் படத்தைப் பார்க்கும்போது  நான் இப்படியெல்லாம் இல்லை.கதாநாயகனைப் போல பல மாற்றங்களை என் வகுப்பறையில் செய்திருக்கிறேன் அல்லது செய்வேன் என்ற எண்ணம் தோன்றினால் மாற்றங்களை வரவேற்கத் தொடங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

எல்லாம் சரி.அசகாய சூரர்களான இன்றைய  மாணவர்கள் படுத்தும் பாட்டை எப்படிச் சமாளிப்பது?
ஆசிரியர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

Saturday 18 August 2012

விருது வாங்குதல்


"மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு, கல்வி மாவட்ட வாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து, ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஆறு விண்ணப்பங்கள் வீதம் தேர்வு செய்து, மாநில அளவில் பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையிலான குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, மாநில குழுவிற்கு, 1,000 விண்ணப்பங்கள் வரை வந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையிலான குழு, அடுத்த வாரத்தில் சென்னையில் கூடி, தகுதியான, 359 ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது. இக்
குழுவில், தொடக்கக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.
அரசியல்வாதிகளை மொய்க்கும் ஆசிரியர் சிறந்த நல்ஆசிரியர் விருதுக்கு, பரிந்துரை செய்யுமாறு, மாவட்ட அமைச்சர்கள், உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் ஆகியோரை ஆசிரியர்கள் மொய்த்து வருகின்றனர்.
இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது,""சிறந்த ஆசிரியர் தேர்வுக்கு, பல்வேறு தகுதிகள் உள்ளன.
வரையறுக்கப்பட்ட தகுதிகள் உள்ளவருக்கு மட்டுமே, ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். ஆசிரியர் தேர்வு, நேர்மையான முறையில் நடக்கும்,'' என்றார்.

தகுதிகள் என்னென்ன?
பணிமூப்பு, கற்பித்தலில் உள்ள திறமை, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பாடத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவ, மாணவியர் பெற்ற தேர்ச்சி சதவீதம், பொதுத்தேர்வில் பெற்ற தேர்ச்சி சதவீதம், தலைமை ஆசிரியராக இருந்தால், பள்ளி வளர்ச்சிக்காகவும், கல்வித்தர மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த அளவில், அவரின் செயல்பாடுகள் குறித்த விவரம் ஆய்வு
செய்யப்படும்.
மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனரா, எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவு மாணவர்கள் கல்வி பெறுவதற்காக சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டார்களா என்பது உட்பட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப தகுதியான ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர்."

                                                                                                                   - பத்திரிக்கை செய்தி.

இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கான முயற்சிகள் தீவிரமடைந்து ஏறத்தாழ முடிவுகள் உறுதி ஆகியிருக்கும்.மேற்கண்ட செய்தி நல்லாசிரியருக்கான தகுதிகளை கூறுகிறது.முதல் தகுதியே பணிமூப்பு.

ஓய்வுபெறும்போது நல்லாசிரியர் என்று பாராட்டி விருது வழங்குவது அந்த ஆசிரியரின் முயற்சிக்கு வெகுமதி.
பெரும்பாலும் ஓய்வு பெறவுள்ள தலைமையசிரியர்களே மாநில,மத்திய விருதுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
வலிமையான பின்னணி இருந்தால் மட்டுமே தற்போது பணியிலிருப்பவர்கள் விருது வாங்குகின்றனர்.சில நேரங்களில் ஆள் கிடைக்காவிட்டால் யாராவது ஒரு ஆசிரியருக்கு விருது யோகம்.

தற்போது பெருமைக்காக,பெயருடன் சேர்த்துக் கொள்ள மட்டுமே விருதுகள். விருது பெற்றவர்கள் பெரும்பாலும் பள்ளியில் பணிசெய்வதைவிட' பிற' பணிகளைச் செய்பவர்கள்.பெரும் விபத்துக்களை சந்தித்த 'பள்ளிகளை' தொடங்கியவர்கள் விருது வாங்கிய ஆசிரியர்களே.

  இப்போது சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கினால் ,விருது பெற்றுவிட்டோம் என்ற உணர்வே அவர் பணியை  மேலும் சிறப்பாக மாற்றும்.
ஓய்வு பெறப்போகும் ஆசிரியருக்கு ஒன்றும் இளம் ஆசிரியருக்கு ஒன்றுமாக இரு விருதுகள் வழங்கலாம்.
எப்படியானாலும் விருது வாங்க விரும்பும் ஆசிரியருக்கே விருது கிடைக்கும்.
என்னதான் செய்வது?
ஆசிரியப் பணியை அறப்பணியாகச் செய்பவருக்குத்   தெரியும் ,

'தகுதியான விருதுகள்  மாணவர்களாலேயே வழங்கப்படுகின்றன'.

Tuesday 14 August 2012

சண்டை செய்தாலும் நம்மில் சகோதரர்!


டுத்தடுத்து இரு நாட்கள்.சுதந்திர தின கொண்டாட்டங்கள்.வெளியேறிவிட்டான் வெள்ளையன்.
நம் நாடு நம் கைகளில்.
அனைத்து வித அடிமைத்தளைகள்,ஊழல்கள் எல்லாமிருந்தும்
நாம் முன்னேறியிருக்கிறோம்.
 
ஆனால்,இந்த நாட்கள் எல்லைக்கோட்டின் அருகிலும் தள்ளியும் வாழப் பிரிந்த இலட்சக் கணக்கான
மக்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்குமா?
நம் எல்லோரின் மனதிலும் எதிரி நாடு பாகிஸ்தான்.
அங்கு நாம்.
ஒரு குடும்பத்தின் சொத்துத் தகராறு தானே பிரிவினை.
தம்  உடன்பிறந்த  சகோதரனுக்காக விட்டுக்கொடுப்பவர் எத்தனை பேர்?
நாட்டுப்பிரிவினையின்  போது பிரிந்த
குடும்பங்கள்,சிதைந்த உறவுகள்  எத்தனை, எத்தனை?
 
போர் ஏதுமின்றி லட்சக்கணக்கானோர்  கொடூரமாகக்  கொல்லப்பட்ட உலக நிகழ்வு இந்திய பாகிஸ்தான் பிரிவினை.

இன்றைய மகிழ்ச்சியுடன் உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைப்போம்.
நம் பிள்ளைகளுக்காவது நாட்டுப் பிரிவினையின் அவல நினைவுகளை
பாரபட்சமின்றி எடுத்துக் கூறி சகிப்புத்தன்மை வளர்ப்போம்.

சண்டை செய்தாலும் நம்மில் சகோதரர்!

சுதந்திரமா சுதந்திரம் .........


வருடம்தோறும் வருகிறது சுதந்திர தினம்.
சுதந்திரத்திற்கான  மகிழ்ச்சி விடுமுறையால்.
வழக்கம்  போல் ஏதாவது தொலைக்கட்சியில் சுதந்திரம் என்றால் என்ன? என்று சிக்கியவர்களிடம் கேட்பார்கள்.அவர்களும் கேணத்தனமான பதிலை சிரித்துக்கொண்டே சொல்வார்கள்.
சிறப்புப் பேட்டிகளில் 'தல'களும் தளபதிகளும் சுதந்திரம் பெற்ற வீர வரலாற்றைக் கூறுவார்கள்.
சிறு வயதுமுதல் சுதந்திரத்தை கொண்டாடிய விதத்தை நமீதாக்கள் குழற நாமும் வாய் குழைந்து ரசிக்கலாம்.
சிறப்பு  திரைப்படங்களை பேரண்டத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாகப்  பார்க்கலாம்.
மதிய உணவிற்குப்பின் படுத்துத் தூங்கலாம்.
மான்களும் மயில்களும் சுதந்திரமாக குத்தாட்டம் போடுவதை கண்டு குடும்ப கெமிஸ்ட்ரியுடன் குதூகலிக்கலாம்.
சுதந்திரம் யாருக்கு? என்று மாமியார் - மருமகள், பெற்றோர் - பிள்ளைகள், குடிப்பவர் - குடிக்காதோர் என்று  சமுதாயத்தின் இரு முக்கிய பிரிவினர் நீயா நானா என வாய் வாதம் செய்வதுடன்  நாமும்  வாதம் செய்யலாம்.

பாவம் ஆசிரியர்கள் அனைத்து  முக்கிய நிகழ்வுகளையும் சிறிது தியாகம் செய்துவிட்டு பள்ளிக்கு கொடியேற்றும் நிகழ்விற்காகச் செல்லவேண்டும்.மகிழ்ச்சியாக ஆறாம் வகுப்பு மாணவர்களும் கட்டாயத்தின் பேரில் மற்ற சிலரும் வருவார்கள்.இப்போதெல்லாம்  பசையுடன் கொடி இருக்கிறது.சட்டையில் ஒட்டிக்கொள்வது சுலபம்  என்றாலும் கறை படிந்துவிடும்,போகாது.நெஞ்சில் குத்திவிடாமல் குண்டூசியால் குத்திக்கொள்வதே  நல்லது.

இவ்வாறான முன்னேற்றங்கள் எதையும் அறியாமல் மிச்சமிருக்கும் ஒரு சில வயதானவர்கள் காந்தி குல்லாவுடன் நேதாஜி சிலை முன் குரலில் மட்டும் நடுக்கத்துடன்  'வந்தே மாதரம்' என்று கர்ஜிப்பார்கள்.
அவர்களின் உள்ளங்களில் மறைந்திருக்கும், அவர்கள் பெற்ற  நம் நாட்டின்  எதிர்காலம்.

Monday 13 August 2012

என் வகுப்பில் நான்

           6,7,8 வகுப்புகள் எடுக்கும் அனைத்து  ஆசிரியர்களும் கண்டிப்பாக SSA  சார்பாக நடத்தப்படும் மாதாந்திரக் கருத்தாய்வுக் கூட்டத்தில் பங்குபெறவேண்டும் என்று முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுறுத்தியதால் எங்கள் பள்ளியிலிருந்து ஏற்கனவே சென்றுகொண்டிருந்த நால்வருடன் புதிதாக நான்கு ஆசிரியர்கள் சென்றிருந்தோம். இதுவே எனக்கு முதல் பயிற்சி.
ஏறத்தாழ 70 ஆசிரியர்கள்.18 பேரைத்தவிர அனைவரும் பெண்கள்.
          பொதுவாக மாநிலமெங்கும் CCE முறையில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும் பற்றிய விவாதமே அன்றைய பயிற்சி.  மூன்று ஆசிரியர் பயிற்றுநர்கள் .
எப்போதாவது பேசுவார் ஒருவர்.சத்தம் அதிகமாகும்போது அமர்ந்துவிடுவார்,
மற்றொருவர் ," Teachers....Please..LISTEN ...கவனமா கேளுங்க...officers visit  வருவாங்க....Please ..."என்று கூவிக்கொண்டே இருப்பார்.
மூன்றாவது ஆசிரியர் பயிற்றுநர்,
ஒவ்வொரு கேள்வி,பதிலையும்   வாசிக்கும்போதும் , அது குறித்த கருத்துக்கள்,அருகில் இருப்போருடனான பேச்சு என வகுப்பில் சலசலப்பு  அதிகரித்தால் , சிரித்தபடி
 'Teachers.....Masters... கவனிங்க.நீங்களா பேச ஆரமிச்சிடுவீங்களே..."
என்று  சமாளித்து தொடர்வார்.ஆண் ஆசிரியர்கள் நகைச்சுவையாக ஏதேனும் சொல்லிக்கொண்டிருந்தோம்.எல்லாவற்றையும் சமாளித்தார்.

  இடைவேளை நேரத்தில் ,
'வகுப்பு நல்லா போகுதே...பரவாயில்ல,போரடிக்காம இருக்கு.என்ன இன்னும் ஆழமா விவாதிக்கணும்.நம்மோட கருத்துக்கள அதிகமா கேக்க மாட்டேங்கறாங்க"
என்று சக ஆசிரியர் கூறியது சரி எனப்பட்டது.
வீட்டிற்கு வந்தபின் அன்றைய வகுப்பு பற்றி  யோசித்தேன்.சில குறைபாடுகள் இருந்தாலும் முழு நாளும் வகுப்பும் சுவாரசியமாக நடத்திச்செல்லப்பட்டதற்கு என்ன காரணம்? பயிற்றுநருக்கும் ஆசிரியர்களுக்குமிடையே கருத்து பரிமாற்றம் நன்றாக இருந்தது.சத்தம் அதிகமாகும்போதேல்லாம் சிரித்தபடியே சமாளிக்கப்பட்டது.ஒரு நாள் முழுவதும் ஒரே தலைப்பு சார்ந்து ஒரு வகுப்பை கலகப்பாக நடத்த முடிகிறது.மகிழ்ச்சி.

அப்படியே நம் வகுப்பறைக்கு வருவோம்.

"ஏய்,அமைதியா இரு.ஏன் இப்படி கத்துறிங்க?அப்படியே கழுத்த   திருகி கொன்னுடுவேன் ',
வெளிய போடா...பாடம் நடத்தும்போது கவனிக்காம விதண்டாவாதமா ஏதாவது கேட்டுக்கிட்டே இருக்க....நாயி..."
இது போல் பலவும்.வகுப்பறையில் சத்தம் அதிகமானால் நமக்கு வெறி பிடித்து விடுகிறது.

"உங்கள் வகுப்பு   ஒரே சத்தமா இருக்கு ,கொஞ்சம் அமைதியா பாத்துக்கோங்க,பசங்கள கண்ட்ரோலா வச்சிக்கணும்."
என்று மென்மையாகவும் சில சமயங்களில் கடினமாகவும் தலைமை ஆசிரியரிடமிருந்து வார்த்தைகள் வரும் போது நம் மனம் சுருங்கிவிடுகிறது.


என்ன இருந்தாலும் நம் வகுப்பறையில் நாமே ராஜா.
அத்துணை ஆசிரியர்களை அவ்வளவு நேரமும் எப்படி ஒரு ஆசிரியர் பயிற்றுநரால்  சமாளிக்க முடிகிறது?
என்ற கேள்வியின் விடையிலேயே என்  வகுப்பில் 45 நிமிடங்களை எப்படி இனிமையாக்கலாம்?என்பதன் பதிலும் இருக்கிறது.


உரை வளர்த்த தமிழர்


சென்ற ஆண்டு தமிழாசிரியர்களுக்கான பயிற்சியில் ஒரு மூத்த தமிழ் கூறினார்,
'இரண்டாம் தாளில் கவிதை எழுது என்று ஒரு கேள்வி வருது.நட்பு,மழை, அப்படின்னு கேக்கறாங்க.
கோனார் உரைல இந்த எல்லா தலைப்புலயும் ஈசியா போட்டிருக்காங்க.பசங்கள வாங்கி படிக்க சொல்லுங்க.நல்ல மார்க் எடுக்கலாம்.'

எனக்கு கடுமையான கோபம் வந்தது. மொழிப்பாடம் வெறும் மனப்பாடமா?
 என் முதல் வகுப்பிலேயே மாணவர்களிடம் கூறுவேன்,
'யாரிடமாவது தமிழ் உரை ஏதாவது பார்த்தேன்னா அப்பவே வாங்கி கிழித்துப் போட்டிருவேன்'.
புத்தகத்தை விட  பெரியதாகவும் விலை அதிகமாகவுமே உரைகள் விற்கப்படுகின்றன.ஆசிரியர்களே உரை எழுதுகிறார்கள்.
கடினமான நடை.சாணித் தாள்.சிறிய எழுத்துக்கள். இருந்தாலென்ன? உரை வாங்கிப் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்பது  பொது நம்பிக்கை.பல ஆசிரியர்களே உரைகளை பரிந்துரை செய்கிறார்கள்.
சமச்சீர் கல்வியில் தமிழ் புத்தகங்களில் செய்யுள் பாடம் உரையுடனே அச்சிடப்பட்டுள்ளது.முப்பருவக் கல்வி முறையால் புத்தகம் மூன்றானது போலவே உரையும் மூன்றாகிவிட்டது.புரிதல்  இல்லாத மனப்பாடக்  கல்வியும் அதிக மதிப்பெண் பெறுவதே அறிவு ,அதிகப் பணம் தரும் வேலை என்ற கானல் நீர்களின் பின்னால் அலைகின்றனர் மக்கள்.
முப்பருவக் கல்விமுறையில் செயல்வழிக் கற்றல் நம்பிக்கை தருவதாக இருந்தாலும் சில ஆசிரியர்களை நினைத்தால் பயமாகவும் இருக்கிறது.மாணவர் கைகளில் கல்வி மாறும் காலம் வரும்.

வீடியோ மாரியம்மன்


இமையம் ஆசிரியராகப் பணி  செய்பவர். வட மாவட்டங்களின் வட்டார மொழி வழக்கில் தேர்ந்த எழுத்தாளர்.
இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வீடியோ மாரியம்மன்.11 சிறு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.ஒவ்வொன்றும் நம் கிராமங்களின் வெவ்வேறு முகத்தைப் பதிவு செய்கின்றன..  கிராமங்களில் வாழும்,  அடித்தட்டு மக்களாக ஆக்கப்பட்ட விவசாயிகளே பெரும்பாலும் இவரின் கதாபாத்திரங்கள். நவீனம் சிதைக்கும் இந்தியாவின் முதுகெலும்பை வலியுடன் பதிவு செய்துள்ளார்.
இமையத்தின் கதை மாந்தர்கள் வயதானவர்கள்.வாழ்வை  நவீனம் சிதைக்கும் போது எதிர்த்தும் ,முடியாமலும் வேதனைப்படுபவர்கள். தங்கள் பிள்ளைகளாலேயே புறக்கணிக்கப்படுபவர்கள்.வருந்திச்  செத்துக்கொண்டிருக்கும் அந்த வயதான தலைமுறைக்கு அடுத்து வரும் நாம் என்னவாகப் போகிறோம்?
மனது பதைக்கிறது.
இதுதான் இமையத்தின் எழுத்துகளின் வெற்றி.

கோவில் திருவிழாவில் கூத்தின் இடத்தை வீடியோ படங்கள் பிடிப்பது எள்ளல் கலந்து வருத்தமுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது,வீடியோ மாரியம்மன் கதையில்.ஊர் சாமியை விட வீடியோ படமே இளைய தலைமுறையின் தேவையாக இருக்கிறது.ஊடாட்டமாக வரும் சாதி மாறிய காதல் மனம் பதைக்க வைக்கிறது.
அதிகப் பணம் கிடைக்கிறது என்பதற்காக கம்பெனிக்காரனிடம் ஊரார் விளைநிலங்களை விற்கின்றனர்.கடைசிவரை விற்க மறுத்து மகனுடன் போராடிப்பார்க்கிறார் கிழவர்.நிலம் வாங்கியது,தன் தந்தையின் உழைப்பு,நிலம் சார்ந்திருக்கும் உறவுகள் என கிழவர் வருந்த நம் மனமும் பதைக்கிறது.நிலத்தைச் சுற்றியுள்ள அனைவரும் தத்தம் நிலங்களை விற்றுவிட்டனர் என்பதை அறிந்த கிழவர்,துடிக்கிறார்.

நெலத்த கொடுத்தா நெலம் மட்டுமா போவும்? ஆடு மாடு போவும்.கோயி போவும்,வண்டி போவும்,மாடு தண்ணி குடிக்கிற தண்ணித்தொட்டி போவும்,
வெத நெல்லு,வெத தானியம்,வேதப்புட்டி,ஏரு, கலப்ப,பூட்டங்கவுறு, நெல்லு குத்துற உரலு,உலக்கன்னு  பலதும் போவும்.படி,வள்ளம்,மரக்கா இருக்காது.குதிர் இருக்காது.மம்பட்டி,களக்கட்டு,அருவான்னு ஒண்ணும் இருக்காது.
இந்த ஊட்டுல இருக்கிற எல்லாப் பொருளும் போயிட்டா நீயும் நானும் தான் இருப்பம்.நீயும் நானும் இருக்கிறதுக்குப் பேருதான் ஊடா?

என்று மகனிடம் கேட்டும் போது,இழந்தவை நம் மனதில் வந்துபோகின்றன.வீட்டுப் பெண்களும் மகனின் பக்கமே இருக்கின்றனர்.அதிகப் பணம் தரும் பொருட்களும் நகையுமே அவர்களின் ஆசை.  'உயிர் நாடி' நிலத்தின் பங்கையும் மூத்த தலைமுறையின் இயலாமையையும் ஒருங்கே பதிகிறது.

இமையத்தின்  கிராமம்  முகமூடிகள் இல்லாதது.மனிதர்களின் அன்பு,ஆசை, கோபம், சுயநலம், என அனைத்தும் ஊடாடும் உணர்வுத்தளம்.

நுகர்வு கலாச்சாரம் இன்றைய கிராம மனிதரிடையே ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் கவனிக்கத்தக்கவை.மனம் பாரமானாலும் மூத்தவர்களைப்போலவே ஏதும் செய்ய இயலாமல் புலம்புபவர்களாக இருக்கிறோம்.ஐவகை நிலங்களைப் பகுத்து வாழ்ந்த தமிழினம் அனைத்தையும் அழித்து நகரப் பாலைகளை உருவாக்கி வாழ்ந்து   வருகிறது.
மண்,மனிதர்,இயற்கை மற்றும் வாழ்க்கையுடனான தொப்புள் கொடி உறவுகளை அழித்துவிட்டு கான்கிரீட் காட்டிற்குள் குளிர்  சாதன வசதியுடன் தொலைக்காட்சிப் பெட்டியில் இயற்கையை ரசிக்கிறோம்.

இமையத்தின் மனிதர்கள் இயற்கையை , வாழ்வை  நேசிப்பவர்கள். எளிமையானவர்கள். மனிதத்தின்  உயிர் நாடிகளான  அவர்கள்  அழிந்து கொண்டிருப்பது கவலை தந்தாலும் அவரின் கதைகளில் உலவும் சிறுவர்கள் அனைத்து நிகழ்வுகளுக்கும்  சாட்சியாக இருந்து பார்த்துக் கொண்டிருப்பதே நம் மனதிற்கு நம்பிக்கையும்,தெம்பும் தருவதாக இருக்கிறது.
 இமையம் 

Sunday 12 August 2012

சாதி நமதொழிய வேறில்லை


பள்ளிகளில் சாதி இருக்கிறதா?
கேட்டவுடன் சிரிக்கவைக்கும் அபத்தமான கேள்வியாகத் தோன்றுகிறது.
பள்ளியில் சேர்ந்தது முதல் நேற்று வரை வருகைப்பதிவேடு,தேர்வு முடிவுகள், விலையில்லா செருப்பிற்காக அளவு எடுத்தது முடிய அனைத்து இடங்களிலும்  சாதிபிரிவு கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இட ஒதுக்கீடு ஏன்? என்பது அனைவராலும் மறக்கப்பட்டு கேலிக்கூத்தாகிவிட்டது.

ஒவ்வொரு சாதிக்கும் சங்கங்கள்,விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் அல்லது அரசனாக இருந்திருந்தால் அவரே அச்சாதியின் அடையாளம்.  சாதித்தவர்கள் எல்லாம் சாதித் தலைவர்களாகிப் போனார்கள்.அவைகளின் வார்த்தைகள் மறக்கப் பட்டு சிலைகளே அடையாளங்களாகி நிரந்தரமாய் கம்பிக் கூண்டுக்குள் அடைபட்டு விட்டார்கள்.
சட்டைப் பையில்,பர்சில்,வீட்டில்- எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து விட்டனர்.என் சாதி! என மார்தட்டும் மனிதரில் எத்தனை பேருக்கு அவர் வாழ்க்கை வரலாறாவது தெரியும்?
அவர்கள் பிறந்த,நினைவு நாட்களில் பொது மக்களிடையே கலவர பயம் ஏற்படுத்தப்படுகிறது.

என் சாதியே உயர்ந்தது எனக் கூவும் சங்கங்கள் இட ஒதுக்கீட்டில் இறுதியையே விழைகின்றன.

பள்ளியில்....................?
சுவர்களில் ஆசிரியர்,நடிகர்,நண்பன்,எதிரி எனக் கிறுக்குவதுடன் சாதித் தலைவர்களின் பெயர்களும் இணைந்துள்ளது.
காமராசர் பிறந்த நாள் போட்டிகள் - நாடார் பள்ளிகள், வீரமா முனிக்கு கிறித்தவப் பள்ளி, இவை தவிர பள்ளிப் பெயரிலேயே சாதி.

ஆசிரியர்களிடையே அப்பட்டமாகவே சாதி.

 பெரியார் கூட அவர் பிறந்த சாதிக்கு அடையாளமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வகுப்பறைக்குள் மாற்றம் வருமென நம்புகிறேன்.
கானல் போல் தோன்றினாலும்
நம்பிக்கை தானே வாழ்க்கை.

வினோத ராட்சசன் - தேவதச்சன்


எளிமையான வாழ்வின் மின்னும் தருணங்களை படம் பிடிப்பவர் தேவதச்சன்.
கண்மூடித்திறக்கும் நேரத்தில் நிலவில் நிறுத்தி பூமியைக்காட்டும் ஆச்சரியம்.எளிய வார்த்தைகளுக்குள் தோன்றி விரியும்பிரமாண்டம்.ஜென் பௌத்தம் கூறுவதைப் போன்ற எளிய தருணங்களில் மனம் மென்மையாகும்போது திடீரெனக் கிடைக்கும் ஞானம்,அவர் கவிதைகள்.

மனம் இலேசாகக் கலங்கினாலும் தேவதச்சனை வாசிக்கத் தொடங்கிய  நொடியே தள்ளி நின்று என்னை நானே பார்த்துக்கொள்வேன்.வார்த்தைகள் மனதை சலவை செய்யும்,
அடித்துத் துவைத்தல்ல,அறியாமலே.
இன்று மீண்டும் வாசித்தது அவரின் ஹோம்ஸ் என்னும் காற்று  கவிதை தொகுப்பு .ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப் புது வெளிகள் தரும் பரவசம் ,வாழ்வின் தரிசனம்.

எப்போவெல்லாம்
மைனாவைப் பார்க்கிறேனோ
அப்போவெல்லாம் தெரிகிறது
நான்
நீராலானவன் என்று

அதன்
குறுஞ்சிறகசைவில்
என் மேலேயே
தெறிக்கிறேன் நான்.

வாசித்ததும் வாசல் திறந்து எண்ண வெளிகளில் பறக்கத்தொடங்கும் மனம்.
 மைனாவாகவும் நீராகவும்.

ஒரு தட்டைக்
கீழே போட்டுவிடாதே
அதன்
 ஓசை விரிவில்
தட்டு பிரம்மாண்டமாகிவிடும்.

 
வார்த்தைகளால் நினைவில் விழுந்த தட்டின் ஓசை மனம் தாண்டி அண்டமெங்கும் விரிந்து செல்கிறது.
ஒவ்வொரு கவிதையும் அதற்கான தனித்த வெளியில் என்னை அலைக்கிறது.
ஒரு கவிதையின் வெளியிலிருந்து மீண்டு அடுத்ததை வாசிக்கத் தொடங்க ஆகும் இடைவெளியில் வெளிச்சமாகிறது வாழ்க்கை.

பள்ளிக்குத் திரும்புகையில்
ஆசிரியர்கள் அவர்களை அதிசயிக்கிறார்கள்
அடையாளம் தெரியாமல்
ஆசிரியர்களை அவர்கள் அதிசயிக்கிறார்கள்
அடையாளம் தெரிந்து.


பள்ளி சென்ற எல்லோருமே வியந்த  தருணம்.வாசித்ததும் நினைவில் ஒட்டிக்கொள்ளும் வார்த்தைகள்,என்னிடம் வார்த்தைகள் அற்றுப் போகச் செய்துவிடுகின்றன.

தேவதச்சனின் வார்த்தைகள்  அண்ட வெளியில் அழைத்துச் செல்லும் தூரத்திலிருந்து மீண்டு வந்து என் முகம் அணியும் வரையான இடைவெளியே  நான்.
தேவதச்சன் 

Friday 10 August 2012

அசடன்-அசடி

அப்பாடி என்றிருக்கிறது.
பல தடைகளைத்தாண்டி ஒருவழியாக தஸ்தாவெஸ்கியின் அசடனைப் படித்துவிட்டேன்.
கரமசோவ் சகோதரர்கள்,குற்றமும் தண்டனையும் -போலவே தஸ்தாவெஸ்கி அசாதாரணமாக மனித மன  வெளிகளை துல்லியமாக படம் பிடிக்கிறார்.பெரும்பாலும் ஆணின் மன ஓட்டங்களையே பதிவு செய்பவராக இருந்தாலும் அசடனில் பெண்களின் மனதையும்  அற்புதமாக வரைந்துள்ளார்.

மிஷ்கின், அற்புதமான பாத்திரப் படைப்பு.நல்லவன் இப்படித்தான் இருப்பான்.என்றெல்லாம் பல்வேறு விமரிசனங்களில் படித்திருக்கிறேன்.அதே எண்ணத்துடன் வாசிக்கத் தொடங்கிய எனக்கு அப்படித் தோன்றவில்லை.மிஷ்கினை விட என் மனதை நிறைத்தது தஸ்தாவெஸ்கியின் பெண்களே.அவர்களே ஆண்களின் அச்சாணிகள்.ஆணின் மையப்புள்ளி பெண்ணாகவும் பெண்ணின் மையப்புள்ளி ஆணாகவும் வாழ்க்கை பயணிக்கிறது.
அசடனில் உலவும் பெண்கள் அனைவருமே பல்வேறு மனப்போராட்டங்களுடனும் சரியாகவும் குழப்பமாகவும் முடிவெடுப்பதில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர்.

என்னைக் கவர்ந்தவள்  நஸ்தாஷியா பிலிப்போவ்னா  .அவள் அற்புதமான உணர்வுகளுடைய மனுஷி.பல்வேறு கஷ்டங்களையும் அவமானங்களையும் தாங்கிய அவள் வாழ்வின் வசந்தமாய் வருகிறான் மிஷ்கின்.இருவரின் காதல் வார்த்தைகளில் சிக்காத உணர்வுப்பிரவாகம்.மிஷ்கின் மீது கொண்ட உண்மைக்  காதலே அவளை விலகி ஓடவைக்கிறது.ரோகோஷினை திருமணம் செய்ய முடிவும் தப்பித்தலுமாக அலைக்கழிக்கிறது.நாவலின் உயிர் மூச்சாக, தென்றலும் சூறாவளியுமாக நடத்திச் செல்கிறாள் நஸ்தாஷியா பிலிப்போவ்னா .

மிஷ்கின், அசடன்.சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் மனதில் எண்ணியதை அப்படியே வெளிப்படுத்துவதால் அசடன். கொஞ்சம் கொஞ்சமாக நானும்  அவனாகவே ஆகிவிட்டேன்.ஆணை இயக்கும் சக்தியாக இருக்கிறாள் பெண்.ஆகிய இருவரையும் காதலிக்கிறேன் என்று சொன்ன நிமிடத்திலேயே அற்புதமான,முழுமைபெற்ற மனிதனாக எனக்குத் தோன்றினான் மிஷ்கின்.
நம் உள்ளத்து உணர்வுகளை அதே தளத்தில் நம்மைத் தவிர யாராலும் புரிந்துகொள்ள இயலாது.நம்மை சரியாகப் புரிந்து  கொள்பவரைத் தேடியலையும் மனம் இறுதியில்  தனக்குத் தானே  பேசி,சிரித்து,அழுது, இருமையாகும் போதே அசடாகிறோம்.தொடங்கிய இடத்தில் முடிந்துபோன முழுமை மிஷ்கின்.

அக்லேயா இவானோவா ,துடுக்குப்பெண்ணாக வளம் வருபவள்.இளம் வயது தேவதை.இளம் பருவத்திற்கே உரிய தாவல்களை உடையவள்.யாரைத் திருமணம் செய்வது என பல எண்ணங்களிடையே மிஷ்கினையும் தொலைத்தவள்.

மரண தண்டனை பெற்றவனின் கடைசி எண்ணங்கள்,பல்வேறு ஆண்,பெண்களின்  அக உணர்வுகள் என மனித வாழ்வின் ரகசியங்களிடையே நம்மைக் கைபிடித்து   அழைத்துச் செல்கிறார் தஸ்தாவெஸ்கி.

மனம் மகிழ்ச்சியையே பெற விரும்புகிறது,ஆனால் துக்கத்திலேயே மகிழ்கிறது.மகிழ்ச்சியை விட துக்கத்தையே பிறரிடம் பகிர்ந்துகொள்கிறோம் உருவாக்கியும், உண்மையாகவும்.
தஸ்தாவெஸ்கியின் எழுத்துக் கண்ணாடி நம் முகமும் காட்டுகிறது.அதுவே மனிதத்தின் முகமும்.


Sunday 5 August 2012

கேள்வி விடைகள் 2

மரணம் தழுவிய உடல்
மலரைப்போல மிதக்கிறது.
அதன் ஒவ்வொரு அணுவிலும்
வாழ்க்கை ததும்பி வழிகிறது.
அருகே புன்னகையுடன் அமர்ந்திருக்கிறான்
மரணதேவன்.
மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டேயிருக்கிறான்
வாழ்வின் ரகசியங்களை.
அவன் மொழி புரியாமல்
ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
நான் அவனை.
அவன் என்னை.
புரியவில்லை என்றேன் மெதுவாக.
உணர் என்றான் புன்னகையுடன்.
புரிந்தது போலும்
புரியாதது போலும் இருக்கிறது
வாழ்க்கை.

Saturday 4 August 2012

கேள்வி விடைகள்.

நசிகேதா! 
மானிட உலகில் அடைதற்கரிய ஆசைகள் எவையெவை உண்டோ அவை அனைத்தையும் உன் விருப்பம்போல்  கேட்டுக்கொள்.சாரதிகளுடன் தேர்களைத் தருகிறேன்.வாத்தியக் கலைஞர்களை தருகிறேன்.ஆண்களை மயக்குகிற இந்த தேவலோகப் பெண்களைத் தருகிறேன்.இத்தகைய பெண்கள் மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடியவர்கள் அல்லவே! நான் தருகின்ற இவர்களால் நீ வேண்டிய பணிவிடை பெற்றுக்கொள்.
ஆனால்... 
மரணத்தைப் பற்றி மட்டும் கேட்காதே! 
                                                                                                                - கட உபநிடதம் 
                                               மரணத்தைப் பற்றிய சிந்தனைகளும் தத்துவங்களும் யாரேனும் தெரிந்தவர்களின் மரணத்தின் போதே தோன்றி விவாதிக்கப்பட்டு மறக்கப் படுகின்றன.
ஒவ்வொரு நாளும் செய்தித்தாளைப் படிக்கும்போதும் மரணச் செய்திகளையே முதலில் படிக்கிறேன்.அஞ்சலிகளில் வரும் நிழற்படங்களை உற்று நோக்கி அவர்களின் பிறப்பு, இறப்பு தேதிகளைப் பார்த்து வயதையும் கணக்கிடுகிறேன்.
வயதானவர்களின் மரணம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.குறைந்த வயதுடையவர்களின் மரணம், ஏன்? எப்படி? என்று கேள்விகளையும் மரணம் பற்றிய விடையிலா எண்ணங்களையும் நினைவில் சுழல விடுகிறது.
பிறக்கும்போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டு விடுவதாக நம்புகிறேன்.வாழ்க்கைப் பயணமே மரணத்தை நோக்கியதுதானே!
இடையில் எத்தனை எத்தனை நம்பிக்கைகள்,எதிர்பார்ப்புகள்,ஆசைகள்,பணத்திற்கான படிப்பு, வேலை,திருமணம்,வம்சம்  வளர்க்க பிள்ளைகள்,அவர்களின் மேல் திணிக்க கனவுகள்.
ஏன் பிறந்தேன்? என்பதைவிட எதற்கு பிறந்தேன்?என்ன செய்கிறேன்? செய்யப்போகிறேன்? என்ற கேள்விகளே  மனதைப் பிசைகின்றன.
ஓடி  ஓடி,தேடித் தேடி - எதை? எதற்காக?.
நிகழில் வாழச் சொல்கிறான் புத்தன்.
எது நிகழ்? வரும் நொடி -எதிர்காலம்.உடனேயே அது இறந்த காலமாக ஆகிவிடுகிறது.
இடையில் இருந்தும் இல்லாமலிருக்கிறது நிகழ்.
நிலையாமை,மாயை என்னென்னவோ சொல்லப்பட்டாலும் நிலையானதில் நிலையில்லாதது நிலைத்திருப்பதாகவே தோன்றுகிறது.
தேடல்கள் விடையை நோக்கி நகர்த்துவதாகத் தோன்றினாலும் வட்டமாய் ,தொடங்கிய இடத்திலேயே முடிவும் விடை ஏதுமின்றி.
என்னமோ இருக்கிறது. தேடலே புதிய கதவுகளை உருவாகித் திறக்கவும் முயல்கிறது.எப்போதும்போல் கணியன் பூங்குன்றனின் பாடலைப் படித்துக்கொள்கிறேன்.
அதுவே   கேள்வி போலவும் விடை போலவும் தோன்றிக்கொண்டே இருக்கின்றது.

முத்துக் காதணிப் பெண்



Girl with a Pearl Earring
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டச்சு (Dutch) ஓவியர் வெர்மீர்.(1632 - 1675)  இவரது ஓவியங்கள் பெரும்பாலும்  வீட்டின் உட்புறக் காட்சிகளையே சித்தரிப்பவை.பெரும்பாலும் அவரது ஓவிய அறையையே வரைந்திருக்கிறார். அக்கால நடுத்தர வர்க்கம் மற்றும் உயர் வக்கத்தினரையும் பணிப்பெண்களையும் 
அவரது ஓவியங்கள் காட்டுகின்றன.மிகத்தெளிவாக இல்லாவிட்டாலும் அவரது வாழ்க்கை பற்றிய குறிப்புகள் 
மூலம் அவரைப்பற்றி அறியமுடியும்.
                தம் வாழ்நாளில் ஏறத்தாழ 66 படங்கள் வரைந்திருந்தாலும் 34 ஓவியங்களே தற்போது காணக் கிடைக்கின்றன.மிகச்சிறப்பான பார்வைப்புலம்,வண்ணக்கலவை,அலங்காரப் பொருட்கள்
 ஆகியன இவரது ஓவியங்களின் தனிச்சிறப்பு.
camera obscura  என்ற கருவியைப் பயன்படுத்தியதாலேயே இவரது 
ஓவியங்களில் perspective மிகச் சிறப்பாக வந்துள்ளது என்று கூறுவர்.
               வெர்மீருக்கு 14 குழந்தைகள் பிறந்தன.பிறந்த சில நாட்களிலேயே இறந்த 4 தவிர பத்து குழந்தைகளுடன் வாழ்ந்த இவர் அக்காலத்தில் நாடெங்கும் ஏற்பட்ட பண நெருக்கடியால் வருந்தி தனது 43  ஆவது வயதிலேயே இறந்தார்.
               வெர்மீரின் புகழ் பெற்ற ஓவியங்களுள் ஒன்று Girl with a Pearl Earring. இதை வரைந்த நிகழ்வு  குறித்த டிரேசி  செவாலியே  வின்   புகழ் பெற்ற நாவலைத் தழுவி எடுக்கப்பெற்ற  திரைப்படம் Girl with a Pearl Earring.
              வெர்மீர் வசிக்கும் சிறு நகரம் டெல்ப். அவரது வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு வருகிறாள் கிரிட்.   மூத்த பணிப்பெண் கிரிட்டிற்கு வீடு முழுவதையும் சுற்றிக்காட்டுகிறாள்.வெர்மீரின்அறையைக் காட்டி
 " இது எஜமானரின் அறை.இதையும் நீ சுத்தம் செய்ய வேண்டும்.ஆனால் அனுமதியில்லாமல் உள்ளே செல்லக் கூடாது" என்கிறாள்.
மறுநாள் காலை எசமானியுடன் ஓவியரின் அறைக்குள் சென்று
 சுத்தம் செய்யத் தொடங்குகிறாள்.அப்போது வரைந்து கொண்டிருக்கும் ஓவியமும் அதற்கான மாதிரி அமைப்பும் அவளை மிகவும் கவருகின்றன.
                ஓவியரின் ஆறாவது குழந்தை பிறப்பையும் புதிதாக வரைந்து முடித்த ஓவியத்தை, வரையப் பணித்த பணக்காரரான வான் ரைவனிடம் ஒப்படைப்பதையும் விருந்தாகக்  கொண்டாட ஏற்பாடு செய்கிறார் ஓவியரின் மாமியார். 
                          
                  விருந்தின்போது தமது அடுத்த ஓவியத்தை வேறு  ஒரு 
ஓவியரிடம் வரையவிருப்பதாக அறிவிக்கிறார் வான் ரைவன்.
அவர் வாங்குவதை நம்பியே வெர்மீரின்  குடும்பம் உள்ளது.
                  மறுநாள் ஒவியரின் அறையைச் சுத்தம் செய்யச் செல்லும் முன் எஜமானியிடம் கேட்கிறாள் கிரிட் ,
     ஜன்னல்களை சுத்தம் செய்யட்டுமா?
     செய்.ஒவ்வொன்றையும் என்னிடம் கேட்கத் தேவையில்லை.
    இல்லை...ஜன்னலை சுத்தம் செய்தால் அறையின் ஒளியமைப்பு மாறும்.
    அதனாலென்ன? பரவாயில்லை.செய்.
                   இந்த சிறு உரையாடலே கிரிட்டின் ஓவிய ஆர்வத்தையும் 
ஓவியரின் மனைவியின் மெத்தனத்தையும் தெளிவாகக் காட்டுகின்றது.
கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை ஆக்கிரமிக்கத்தொடங்குகிறாள் கிரிட்,நமது மனதையும்.


                   அறையைச் சுத்தம் செய்யும்போது புதிய ஒரு பெட்டி 
இருப்பதைப்  பார்க்கிறாள் கிரிட்.அங்குவந்த ஓவியர் அவளிடம் இது ஓர் ஒளிப்படக்  கருவி  என்றும் அதைப் பயன்படுத்துவதையும் காட்டுகிறார்.அது எதிரே உள்ள காட்சியை பிரதிபலிப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறாள். மெதுவாக ஓவியருடன் பழகத் தொடங்குகிறாள்.வண்ணங்களைப்பற்றி எடுத்துக் கூறுகிறார் வெர்மீர்.நம்மைச் சுற்றியுள்ளவற்றை எப்படிப் பார்க்க வேண்டுமென அறிந்து கொள்கிறாள்.
                  கிரிட் , மாமிசம் வாங்கச் செல்லும்போது அங்கு வேலை பார்க்கும் இளைஞனுடன் நட்பு மலர்கிறது.
பணிப்பெண் என்ற புதிய ஓவியத்தை வரையத்தொடங்குகிறார் வெர்மீர்.வண்ணங்களை அரைப்பதில் உதவியாக இருக்கிறாள் கிரிட்.
                 புதிய ஓவியம் வரைய ஒப்பந்தம் பெரும் ஆசையில் 
ஓவியரின் மாமியார் மீண்டும் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்கிறார்.உங்களுடைய குடும்பத்துடன் விருந்து மேசையில் இருக்கும் காட்சியை பெரிய ஓவியமாக வரைந்தால் நன்றாக இருக்கும் என வான் ரைவனிடம் ஆசை காட்டுகிறாள்.விருந்தில் கிரிட்டைப் பார்த்து ஆசை கொண்ட ரைவன்,
  " விருந்துக்காட்சி வரையலாம்.ஆனால் என் அருகில் கிரிட் இருக்குமாறு வரைந்தால் மட்டுமே வாங்கிக்கொள்வேன்."
என்கிறான்.ஓவியர் அதன் உட்பொருளை அறிந்து அதிர்ச்சியடைகிறார்.
                 மறுநாள் மாமிசம் வாங்கச் செல்லும் கிரிட்டை பார்த்து 
அனைவரும் ரகசியமாகப் பேசிக்கொள்ள,கடைக்காரர் மற்றும் தன் காதலன் மூலம் ,ரைவன் ஒரு பணிப்பெண்ணை வரைய சொன்னால்அவளை அடைந்துவிடுவான்  என்று அர்த்தம் என அறிகிறாள்.காதலன் எச்சரிக்கின்றான்.
                கிரிட்,வெர்மீரிடம் தன்னை வரைய வேண்டாம் என 
 கேட்டுக்கொள்கிறாள்.ஓவியரும் சம்மதிக்கிறார்.ஆனால் அவளைத் தனியாக ஒரு ஓவியம் வரைய விரும்புவதாகக் கூறுகிறார்.அவளும் சம்மதிக்கிறாள்.தன் மனைவியின் முத்துக் காதணியை அணிந்துகொண்டால் நன்றாக  இருக்குமென ஓவியர் கூற தனக்கு காதில் துளை இல்லையென மறுத்துவிடுகிறாள் கிரிட்.
                வான் ரைவன் கிரிட்டைக் கற்பழிக்க முயல்கிறான்.
வாழ்க்கை பயத்துடனே கழிகிறது. 
கிரிட் காதணி அணிய மறுத்ததால் இரண்டு ஓவியங்களும் 
முடிக்கப்படாமல் இருக்கின்றன.இதனை  அறிந்த ஓவியரின் மாமியார் தனது மகள் வீட்டில் இல்லாத நாளில் அவளது முத்துக் காதணிகளை எடுத்து வந்து கிரிட்டிடம் கொடுத்து,
 இதை அணிந்துகொள்.உன்னால் தான் ஓவியங்களை முடிக்க வைக்க முடியும்.என் மகள் வீட்டில் இல்லை.-என்கிறாள். 
தானே கிரிட்டின் காதில் துளையிட்டு முத்துக் காதணியை அணிவித்து ஓவியத்தை வரைந்து முடிக்கிறான் வெர்மீர்.கிரிட்டின்  காதில் வெர்மீர் துளையிடும் காட்சி பாரதிராஜாவின் நாடோடித் தென்றலை நினைவு படுத்துகிறது.

           ஆரம்பம் முதலே கிரிட்டிற்கு ஓவியரின்  பிள்ளைகளுடனான உறவு சுமுகமாக இல்லை.ஓவியரின் மகள் மூலம் நடந்ததை அறிகிறாள் ஓவியரின் மனைவி.அவளுக்கு,கிரிட்டுடன் ஓவியர் பழகுவது பிடிக்கவில்லை.என் முத்துக்காதணியை இவள் எப்படி அணியலாம் என சண்டையிடுகிறாள்.அந்த ஓவியத்தைப் பார்க்க விரும்புகிறாள்.ஓவியர் காட்ட மறுக்கிறார். விவாதங்களுக்குப்பிறகு ஓவியத்தைக் காட்டுகிறார். கோபத்துடன் அதைக் கிழிக்கச் செல்லும் மனைவியைத் 
தடுக்கிறார்.கோபத்தில் "வீட்டை விட்டுப் போ " என கிரிட்டிடம் கத்துகிறாள்.ஓவியர் ஏதும் சொல்லாமலிருக்க அங்கிருந்து வெளியேறி காதலனுடன்வசிக்கத்தொடாங்குகிறாள் கிரிட்.
                 சிலநாட்கள் கழித்து ஓவியரின் மூத்த பணிப்பெண் கிரிட்டின் வீட்டிற்கு வந்து ஒரு துணி மடிப்பைக் கொடுக்கிறாள்.பிரித்துப் பார்க்கிறாள் கிரிட்.அதனுள் அவளை   வரைந்தபோது அவள் தலையில்  அணிந்திருந்த நீல வண்ணத் துணியுள் இருந்தன முத்துத் தோடுகள்.
               கடைசிக்காட்சியில் நடைபெறும் மனைவியுடனான 
வாக்குவாதத்தின் போது ஓவியம் நமக்குத் தனியாகக் காட்டப்படாமல் கிரிட் கையிலிருக்கும் காதணிகள்   ஓவியத்தின் காதணியாகமாறி அதிலிருந்து camera வெளியேறி அந்த அற்புதமான ஓவியம் நம் மனமெங்கும் நிறைவதோடு 
படம் முடிகிறது.
              17 ஆம் நூற்றாண்டின் டெல்ப் நகரம்,வெர்மீரின்  அறை ஆகியன  நம் கண்முன்னே அப்படியே காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் உடை அலங்காரங்களும் ஓவியம் போன்ற காட்சி  அமைப்புகளும் தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமைக்குச் சான்று.
         கிரிட்,   ஓவியருடன் நெருக்கமாகப் பழகும்போது தன் உடலில் எழும் உணர்வுகளை காதலன் மூலமாகவே தீர்த்துக்கொள்ளும் காட்சிகள் கவித்துவமானவை.
              கலைஞர்களின் வாழ்க்கையும் படைப்பிற்கான தேடல்களும் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன.
Directed by
Peter Webber
Produced by Andy Paterson
Anand Tucker
Screenplay by Olivia Hetreed
Based on Girl with a Pearl Earring by
Tracy Chevalier
Starring Colin Firth
Tom Wilkinson
Cillian Murphy

Judy Parfitt
Music by Alexandre Desplat
Cinematography Eduardo Serra
Editing by Kate Evans

விருதுகள் 

Wins


வெர்மீரின் ஓவியங்கள்