Sunday 17 March 2013

கொடும்பாளூர் ...காலம் சிதைத்த கலை - 2

 கொடும்பாளூர் ...காலம் சிதைத்த கலை - 2


கொடும்பாளூரில் இருந்த பல சிற்பங்கள் பல்வேறு அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பெற்று வருகின்றன.
தற்போது பாதுகாக்கப்படும் இரு கோவில்களின் சுவர்கள்,விமானங்களில் உள்ள சிற்பங்கள் முற்காலச் சோழர் கலைக்குச் சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.
கொடும்பாளூரில் உள்ள சிற்பங்களைத்  தள்ளி நின்றும், அருகே சென்றும், பார்த்தும், தொட்டும், கண்மூடித் தடவியும் பல வழிகளில் இரசித்தேன் . உணர்வுப்பூர்வமாக அன்றைய  கொடும்பாளூரில் இருந்தேன். என்னை மிகவும் ஈர்த்தவை அர்த்தநாரி , ஆடவல்லானின் சிற்பங்கள்.
ஆணும் பெண்ணும் கலந்த அர்த்தநாரியின் எளிய வடிவம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். ஆடவல்லானைச் செதுக்கிய சிற்பியின்,உடற்கூறு அறிவும் சிற்ப வடிவமைப்பின் தேர்ந்த ஞானமும் என்னை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தின.

சோழர் காலக் கலைக்கு மிகவும் புகழ் சேர்த்தது நடராஜரின் செப்புத்திருமேனி.பிரபஞ்சத் தத்துவ நடனமாக நடராஜர் வடிவம் பெற்றுள்ளார். கொடும்பாளூரில் ஏறத்தாழ 5 அடி உயரமுள்ள ஆடவல்லானின் சிற்பமும் சிவதாண்டவத்தைக் காட்டுவதாக வடிவமைக்கப் பெற்றுள்ளது.
சராசரி ஆணின் உடல் அமைப்புடன் சிவன், முயலகன் மீது நடனம் புரிகிறார். தனது இடதுகாலை முயலகன் மீது ஊன்றி வலது காலைச் சிறிது தூக்கியபடி காட்சிதருகிறார்.

முகத்தில் கோபமும் உதட்டில் புன்னகையும் ஒருங்கே காணப்படுகிறது.



முன். பின் கைகள் சமநிலையுடன் இருக்கின்றன. உடல் நளினமாக இருக்கிறது.

















சிவன் தனது  வலது காலைத்  தூக்கி அந்தரத்தில் வைத்து இருப்பதால் உடலின் எடை முழுவதையும் இடது காலே தாங்கவேண்டியுள்ளது. இடது பாதத்தின் முன் பகுதியை  முயலகனின் பின்புறத்தில் வைத்திருப்பதால் குதிகால் இடுப்புச்சரிவில் இறங்கியாக வேண்டும்.அப்போது உடலின் சமநிலை குலையும். இதைச் சரிப்படுத்த முயலகனைக்  கை , கால்களை ஊன்றியபடி  தவழும் நிலையில் சிற்பிவடிவமைத்துள்ளார். இருந்தாலும் ,இடுப்புச்சரிவில் சிவனின் பாதத்தைத் தங்கவேண்டி முயலகனின் வலது கையை வடிவமைத்ததே  சோழச் சிற்பியின் கலைத் திறனின் உச்சம் .

 சிற்ப  இலக்கண விதிகள்  என இருந்தாலும் ஒன்றுபோலவே செய்யாமல் தனது மனதிற்கேற்ப சில சுவையான மாற்றங்களுடன் படைக்கப்படும் கலையே காலத்தைத்தண்டி அதே உணர்வைப் பார்ப்பவர்களின் மனதில் ஏற்படுத்துகிறது.

கொடும்பாளூர்....காலம் சிதைத்த கலை.




 அன்று...
முற்காலச் சோழர் காலம். சோழவள நாட்டின்  எல்லையைக்காத்து,  சோழப் பேரரசர்களுடன் இணைந்து போரிட்டுப்பல வெற்றிகளைப் பெற உறுதுணையாக இருந்த சிற்றரசர்களுள் ஒருவர் இருக்குவேளிர்கள்.
கொடும்பாளூரைத் தலைநகரமாகக் கொண்டவர்கள். இந்நகரம் சிலப்பதிகாரத்தில் புகழப்படுகிறது.
கவுந்தியடிகளுடன் மதுரை செல்லும் வழியில் கோவலனும் கண்ணகியும் கொடும்பாளூர்க் கோட்டம் கடக்கின்றனர்.
சிவபெருமானின் திரிசூலம் போல மூன்று பெருவழிகள் இங்கிருந்து மதுரை செல்கின்றன.
இருக்குவேளிர்கள் சோழர் படைத்தளபதிகள். ஈழப்போரில் முக்கியப்பங்கு வகித்தவர்கள்.சோழ அரசகுடும்பத்தினருடன் மண உறவு கொண்டவர்கள். இவர்களுள் முக்கியமானவர் பூதி விக்கிரம கேசரி. மாவீரன்.இரண்டாம் பராந்தகன் சுந்தரச்சோழனின் சமகாலத்தவன்.
பூதி விக்கிரம கேசரிக்கு கற்றளிப் பிராட்டி, வரகுண நங்கை என்ற இரு மனைவியர். இம்மூவரும் சேர்ந்து எழுப்பிய கோயிலே மூவர் கோயில் என்ற  ஒரே வரிசையில் ஒரே விதமாகக் கட்டப்பெற்ற மூன்று சிவன் கோயில்கள்.
பிற்காலத்தில் கொடும்பாளூர் மணிக்கிராமத்தார் என்ற வணிகக் குழுவாக தமிழகமெங்கும் வணிகம் செய்தனர்.

இன்று...
மூவர் கோயில், மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் கொடும்பாளுர் சத்திரம் என்ற  கிராமத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது.முதற் கோயிலும் திருச்சுற்றும் அழிந்துபட்ட நிலையில் இரு கோயில்கள் மட்டுமே உள்ளன.கோயில் விமானத்தின் உள்  கட்டமைப்பு தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு முன்மாதிரியானது.

ஒருகாலத்தில் தலைநகராக இருந்த இடம் இன்று தொல்பொருள் துறையால் பராமரிக்கப்படுகிறது.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உன்னதமான கலைப் பாணியை உடையவர்கள் சோழர்கள். கோயிலின் சுவர்களில் உள்ள சிற்பங்கள் இயல்பான உருவ அமைப்பு உடையவை.அரை அடிக்கும் குறைவான அளவுள்ள பல சிற்பங்கள் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டு விளங்குகின்றன.



வயல் வெளியிடையே கலைப் பொக்கிஷமாக இருக்கும் மூவர் கோயில் மனதில்  மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது.
இக்கோயிலில்  பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டும் காலத்தால் சிதைந்தும் காணப்படுகின்றன. அவை சொல்லாமல் சொல்கின்றன நாம் வாழ்ந்த கதையை, வாழ வேண்டிய முறையை.