Thursday 26 June 2014

பொன்னியின் செல்வன்


பலமுறை வாசித்த வரலாற்று நாவல். வாசிப்போரை மயங்கவைக்கும் வசீகரம்.
இரு வாரங்களுக்கு முன் நண்பர் சுரேஷ்,செல்பேசியில் அழைத்தார். மதுரையில் பொன்னியின் செல்வன் நாடகம் நடக்கப்போகிறதாமே, தெரியுமா?
ஆமா,சுரேஷ்,இந்த மாசக்கடைசில.
என்னங்க இது கொடுமை,டிக்கெட் தீந்துபோச்சுன்னு சொல்றாங்க.
என்ன, தீந்திருச்சா! நேத்துதான் விளம்பரம் கண்ணுல பட்டுச்சு,குடும்பத்தோட போலாம்னு நெனச்சேன்.
அட, இப்பதாங்க போன் பண்ணினேன்.எல்லா டிக்கெட்டும் தீந்திருச்சு.நீங்க வாகித்தரமுடியுமா?

சென்னையில் நாடகம் சிறப்பாக இருந்ததென வாசித்திருந்ததால் இம்மாதக்கடைசியில் மதுரை நிகழ்விற்காகக் காத்திருந்தேன்.நண்பரின் செய்தி அதிர்ச்சியாக இருந்தது. இணையத்தில் பார்த்தால் அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்து போய் 100 ரூபாய் டிக்கெட் மட்டுமே இருந்தது. அதுவும் இணையவழியே பதிவுசெய்ய முடியாதபடி அந்தத்தளங்கள் சரியாக இயங்கவில்லை.
பல நண்பர்களிடம் விசாரித்தேன். அரங்கு சிறியது. இரு காட்சிகள் மட்டுமே.என்று பல பதில்கள், டிக்கெட்டுக்குப்பதிலாக.

உடன் பணிபுரியும் வெங்கட், அரங்க மேலாளர் மூலம் 29 ஆம் தேதிக்கு டிக்கெட் வாங்கிவிட்டார். மகிழ்ந்த நேரத்தில் மாணவர் தங்கப்பாண்டி தனது கிராமியக்கலை மாணவர்களைவைத்து ஓர் அரங்கேற்றவிழா வைத்திருப்பதாகவும் கண்டிப்பாக வரவேண்டுமென அழைக்க, அதே தேதி.
மாணவருக்காக பொன்னியின் செல்வனை வேண்டாமென்று சொன்னேன். வேறு யாருக்காவது அந்த டிக்கெட்டைக்கொடுக்கலாமென்றால் அதற்குள் வெங்கட் அங்கு, வேண்டாமெனச்சொல்லிவிட்டார்.
நண்பர் பாலா  மூலம் முயன்றதில் நாடக நிகழ்வுக்கு முன்தின இரவு நடைபெறும் முழு ஒத்திகையைப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
நேற்று காலை நண்பர் ரவி  செல்பேசியில் அழைத்து நாடகம் 3 நாட்கள் நடக்கவிருக்கிறது,டிக்கெட் இல்லையாம்,வாங்கித்தரமுடியுமா? என்றார்.
அப்போதுதான் 3 நாட்கள் நாடக நிகழ்வு எனத்தெரிந்தது.
அனைத்தையும் சொன்னேன். ஒத்திகைக்கு அழைத்துச்செல்ல முடியுமா? என்றார். நான் செல்வதே சற்று நெருங்கிய விண்ணப்பத்தில்,மன்னித்துக்கொள்ளுங்கள்.என்றேன்.

நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் லட்சுமி சுந்தரம் ஹாலில் நாடக ஒத்திகை தொடங்கியது.
கோட்டைச்சுவர் போன்ற அரங்க அமைப்பு. ஒப்பனை இல்லாத கலைஞர்கள். மூன்று மணிநேரத்திற்கு மேல் போனதே தெரியவில்லை.
வாசிப்போரின் மனதில் தோன்றிய முகங்களே நேரிலும்.இயல்பான நடை. சிறுவர்முதல் பெரியவர் வரை அற்புதமான நடிகர் பட்டாளம்.

ஒப்பனை இடையே வந்து மயக்காமல் நடிகர்களுடன் மிகக்கொஞ்சம்
பார்வையாளர்கள்.மற்றும் கல்கி.
அனைவரும் சோழர்காலக்கனவுலகில்.
நானும் கலைஞன் என இறுமாந்தேன்.
குறிப்பு.
அழைத்துச்செல்ல இயலவில்லை,சுரேஷ்,ரவி இருவரும்

மன்னித்துவிடுங்கள் நண்பர்களே.

தேசிய மாணவர் படையில் பகத்சிங்


தேசிய மாணவர் படைக்கு புதிய மாணவர் சேர்க்கைக்காக 9 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை அழைத்து NCC யின் முக்கியத்துவம் பற்றிப்பேசினேன். விருப்பமிருப்பவர்கள் சேர்ந்துகொள்ளலாம் மற்றவர்கள் வகுப்பிற்குச்செல்லலாமெனக்கூறிவிட்டு யாரேனும் உயரமான மாணவர்கள் செல்கிறார்களா என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.
நான் செல்லும் ஒன்பதாம் வகுப்பிலிருந்து சிலர் மெதுவாக எழுந்து சென்றனர்.உயரமான ஒருவன் மெதுவாக எழுந்தான்.
நான் பார்வையை சற்றே திருப்பி கவனத்தைமட்டும் அங்கே வைத்தேன். ஏனென்றால், அவன் மற்றவர்களை அழைத்துக்கொண்டிருந்தான்.
"வந்துருங்கடா, ஒருநாள் வராட்டியும் வெளுத்துருவானுக!"
ஒவ்வொருவராக அவன் வசப்பட்டனர். மெதுவாகத்திரும்பி,
"டேய், நீ,வகுப்புக்குப்போ, மத்தவங்க உட்காரு, உங்களுக்கு இது ரெம்ப பயன்படும்"
நான் மற்ற வேலைகளில் கவனமாக இருக்கும்போது அவன் தன் நண்பர்கள் அனைவரையும் அழைத்துச்செல்வதில் வெற்றிபெற்றுவிட்டான்.
மறுநாள் வகுப்பிற்குச்சென்றவுடன்,
பகத்சிங் யார் என்று தெரியுமா?
சுதந்திரப்போராட்ட வீரர்.
என்ன செய்தார் தெரியுமா?
அவருடன் எந்தனைபேர் போராடினார்கள் தெரியுமா?
எப்படி தெரியுமா?
அவர்களில் பலர் அவருடன் படித்த நண்பர்கள்.
என்று பகத்சிங் மற்றும் நண்பர்களின் தியாக வரலாற்றைத்தொடர்ந்தேன்.
எனவே, நல்லவர்கள் நல்லவ்ர்களுடனும் தீயவர்கள் அதேபோலவும் ஒன்று சேர்வார்கள்.
ஒருத்தன்,உங்களில் பலபேரை NCC யில் சேருவதிலிருந்து தடுத்துவிட்டான். நீங்களும் அவனை நம்பி மோசம்போனீர்கள்.
" இப்ப, புரியுதா! பகத்சிங் என்ன செஞ்சாலும் நான் எதுவும் சொல்லாம,
உன் பேருக்காக ஒண்ணும் சொல்லாம விடுறேன்னு சொல்றதுக்கு என்ன காரணம்னு"
(பகத்சிங் என்ற பெயரில் ஒரு மாணவன் என் வகுப்பிலிருக்கிறான்)

வகுப்பு முடிவில் சில மாணவர்கள் Ncc யில் இணைய விருப்பம் தெரிவித்தார்கள்.
மீண்டும் மீண்டும் வரச்செய்து ஆர்வத்தைச்சோதித்தபின் சேர்த்துக்கொண்டேன்,பகத்சிங்கையும்.
எழுத்துக்கள் தெரியாத இரு மாணவர்களுக்குச்சொல்லித்தரும் பொறுப்பை பகத்சிங் எடுத்திருக்கிறான்.

Saturday 21 June 2014

ஓவியர் அணிலும் நானும்.


1998 ஆம் ஆண்டு டெல்லியில் India Art Festival என்று ஓர் சர்வதேச ஓவியக்காட்சி நடைபெற்றது.இப்போது ஆண்டுதோறும் India Art Fair எனும் பெயரில் நடைபெற்று வருகிறது.
அப்போது நானும் நண்பர் ரமணனும் அங்கு சென்றிருந்தோம். மூன்று நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில் இந்தியாவின் புகழ்பெற்ற ஏராளமான ஓவியர்களின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
காலையில் உள்ளே செல்லும் நாங்கள் இரவு காட்சி முடிந்து அனைவரும் வெளியேறும்வரை அங்கேயே சுற்றிக்கொண்டிருப்போம். ஓவியங்களை நேரிலும் தொட்டும் பார்த்தது அற்புதமான அனுபவம்.
ஓவியம் சார்ந்த கருத்தரங்கிலும் பங்குபெற்றிருந்ததால் எளிதில் உள்ளே அனுமதிக்கப்பட்டோம்.
இரண்டாம்நாள் காலை, காட்சி அரங்கினுள் செல்வதற்கான வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது எங்களருகில் உயரமான ஒருவர் நின்றிருந்தார்.அடையாள அட்டையின் கயிறு அவர் தலைக்குள் நுழையவில்லை. ரமணனின் அடையாள அட்டைக்கயிறு நீளமாக இருந்ததால் அதனைக்கொடுத்தார். பெற்றுக்கொண்டவர், எங்களைப்பற்றி விசாரித்தார். நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்திருப்பதாகக் கூறினோம். அவர், தான் ஒரு பாகிஸ்தானி என்றும் லண்டனில் இருந்து வருவதாகவும் ஓவியர் வைகுந்தத்தின் ஓவியங்கள் மிகவும் பிடிப்பதால் பார்க்க வந்திருப்பதாகக்கூறினார்.
தலை கிறுகிறுத்துப்போனோம்.
கருத்தரங்கில், டெல்லியில் மறுநாள் தொடங்கவிருந்த ஓர் ஓவியக்காட்சியின் அழைப்பிதழை அனைவருக்கும் தந்தார்கள். அழைப்பிதழ் இருப்பவர் மட்டுமே தொடக்க விழாவில் பங்குபெற முடியும் என்று குறிப்பிட்டிருந்தனர்.எங்களுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
எங்களால் செல்ல இயலாது என்றாலும் நிறைய அழைப்பிதழ்களைச்சேகரித்துக்கொண்டேன்.
ஊர் திரும்பியபின் அவற்றை வைத்து Keep Drawing என்ற தலைப்பில் mixed media ஓவியம் செய்தேன். பல காட்சிகளில் அது இடம்பெற்றபின் என் வீட்டு ஓவியக்கூடத்தில் நிரந்தமாக இடம்பிடித்தது.
என்னோடு ஓவியக்கூடத்தில் வசிக்கும் அணில் அவ்வப்போது வெயிலுக்கு ஏற்றபடி தனது இருப்பிடத்தை பல்வேறு கித்தான்களுக்கிடையே மாற்றிக்கொண்டிருக்கும். இன்று மாலை பார்த்தேன், புதிய இருப்பிடம் Keep Drawing பின்புறம்.
என்ன, புதிய பழக்கமாக கித்தானிலேயே ஒரு வாசலும் திறந்தாகிவிட்டது.
ஓவியர் அணிலுக்கு வாழ்த்துக்கள்.

வாசித்தல் தவம்.




பத்தாம் வகுப்புப்பொதுத்தேர்வுகளை கருத்திற்கொண்டு 9 ஆம்வகுப்பு மாணவர்கள் அகரவரிசைப்படி பிரிக்கப்பட்டார்கள்.
இப்போது என் வகுப்பில் 40 மாணவரில் சரளமாகத்தமிழில் வாசிக்கத்தெரிந்தவர்கள் 12 பேர். எழுத்துக்களே தெரியாதவர்கள் 2பேர்.
ாசிக்கத்தெரிந்த ஒருவனுடன் இருவர் என்று சிறு குழுக்களாகப்பிரித்து கதைப்புத்தகங்களை வாசிக்கச்சொல்லியிருக்கிறேன்.
சென்ற ஆண்டு 9 ஆம் வகுப்பில் பயின்ற மாணவர்களிடம் இரவலாக வாங்கிய புத்தகங்களும் எனது புத்தகங்களும் சேர்ந்து வகுப்பறை நூலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மேலும்,
அன்றாட நிகழ்வுகளை கையெழுத்துப்பயிற்சி ஏட்டில் எழுதவேண்டும்.
கதை,
சிலரைத்தனியே இழுத்துச்சென்று மயக்குகிறது.
 

கேள்வி

சிறு வயதிலிருந்தே கேள்விகளின் மீது எனக்கு ஆசை அதிகம். அப்பா ஏதாவது சொன்னால் உடனே கேள்வி கேட்பேன்.
" சொன்னா, மொதல்ல சரின்னு கேளு. அப்புறம் கேள்வி கேளு."
என்று கோபமாகக்கத்துவார்.
சரின்னு ஒத்துக்கிட்டா அப்புறம் எப்படி கேள்வி கேக்குறது?-என்பேன்.
திட்டுகள் தொடரும்.
இது தொடர்கதை, வீட்டில்.
பள்ளியிலும் சமீபத்தில் நடந்தது.
ஆசிரியர்களுக்குள்ளேயே இந்நிலை என்றால்?
ஆசிரியர்கள், கூடி விவாதிப்பதைவிட தனித்த குழுப்பொருமல்களில் சுகம் காணுகிறார்கள்.
வகுப்பறை தவிர மற்ற நேரங்கள் தனிமையில் புத்தகங்களுடன் இனிமையாய் கழிகின்றன.
திண்ணைப்பேச்சுத்தீரர்களிடம் கவனமாய் இருக்கிறேன்.

பன்றி

"பான்ட்ரி" மராத்தி மொழிப்படம்.
தமிழில், பன்றி.
ஊருக்கு வெளியே ஒற்றைவீடு.
ஒதுக்கப்பட்டது.
கல்விக்கனவுடன் விடலைப்பையன்.
வயதுக்கேற்ற காதலும்.
குடும்ப வறுமைக்காக உழைத்த நேரம்போகப்படிப்பு.
கைக்குச்சிக்காத கரிக்குருவி,ஜீன்ஸ், கனவுப்பெண்.
வண்ணக்கனவுகள் நனவாகும் நம்பிக்கையில் சிறுவன்.

தானாய் வளர்ந்து திரியும் பன்றிகளை விரட்டும் குடும்பம்.
வேடிக்கை பார்த்துச்சிரிக்கும் ஊர்.
திறந்தவெளிக்கழிப்பிடப்பகுதியில் குறுகும் சிறுவன்.
விரட்டும் நிதர்சனம்,கரிக்குருவி.பன்றி.
நிலை உணர்ந்து வெடிக்கும்போது கேலிபேசுவோர் மீது கற்களை எறிகிறான்,கோபமும் அழுகையுமாய்.
இறுதியாய் ஒரு கல் என் முகத்தில் விழ,
கண்களை மூடிக்கொண்டேன்.
பிறந்தநாளைப்பெருமிதமாகக்கொண்டாடுவதில்லை,
என்றாலும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
42 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
ஓவ்வொரு நொடியுமே பிறந்து வாழ்ந்து கடந்துகொண்டிருந்தாலும் ஒவ்வொரு ஆண்டிலும் இந்தநாள் பிறப்பிற்கும் இறப்பிற்குமிடையே ஓர் மேடை அமைத்துத்தருகிறது. சற்றே இளைப்பாறி,எண்ணங்களை அசைபோட்டுச்செல்ல.
11 வயதில் விடுதி,18 வதில் வீதி- வாழ்க்கை நிறைய பாடங்களைத்தந்திருக்கிறது.
மரக்கிளை வாழும் இலைபோல இருந்து செல்லவே விழைகிறேன்.
இயல்பாக ஒவ்வொரு நொடியும் வாழ்ந்து கடக்கவேண்டும். இறுதியில் தென்றலில் வீழும் சருகாய்.
வாழ்ந்த மண்ணுக்கும் மரத்திற்கும் உரமாகத்தேவை சில துளிகள், விண் நீர் அல்லது விழி நீர்.

நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

மரபுப்பிழை


நீயா நானா? போன்ற விவாத நிகழ்சிகளை எப்போதாவதுதான் பார்ப்பேன். நேற்று திருநங்கைகள் குறித்த நிகழ்ச்சி. அபூர்வமாகவே தொகுப்பாளரும் அதிகம் பேசாத இதுபோன்ற நிகழ்வு அமைந்துவிடுகிறது.
திருநங்கையரின் உலகம் அற்புதமாகப்பதிவு செய்யப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் இருவர் சொன்னவையே நான் குறிப்பிட விரும்புபவை.
ஒருவர், பத்தாம் வகுப்பில் நாமக்கல் மாவட்டத்திலேயே முதல் மாணவனாகத்தேறியவர். 11 ஆம் வகுப்பில் ஆசிரியர் கேலி செய்ததால் படிப்பை நிறுத்திவிட்டு,மும்பைக்கு ஓடி, வழக்கமான எல்லாவற்றிற்குப்பின் இப்போது செயற்பாட்டாளர்.
மற்றவர், ஆசிரியராலேயே இளம்வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன் என்று சொன்ன எழுத்தாளர், செயற்பாட்டாளர், ப்ரியாபாபு.
ஆசிரியப்பணிக்கு முன் ஒரு சமூக சேவை நிறுவனத்தில் பணியாற்றினேன்.மதுரை, முனிச்சாலை பகுதி மையம் எனது பொறுப்பில் இருந்தது.அப்பகுதியில் கரகம் ஆடும் திருநங்கைகள் இருந்தனர்.
பெண் தன்மையுடனிருந்த ஒரு சிறுவனை சமூகப்பணிக்கல்லூரி பேராசிரியர்களிடம் அழைத்துச்சென்று கவுன்செலிங் செய்தோம்.அவன் அதிகம் பெண் தன்மையுடன் இருந்தான்.பெண்களுடனேயே பழகுவான். நன்றாக நடனம் ஆடுவான்.கரகம் சொல்லிக்கொடுத்தேன். எவ்வளவு முயன்றும் ஒருநாள் காணாமல் போய்விட்டான்.சிலவருடங்கள் கழித்துச்சாலையில் அவனைப்போலவே ஒரு பெண்ணைப்பார்த்தேன். எனக்கு சந்தேகம். நானோ, இளம் வயது, மீண்டும் பார்த்தேன். அந்தப்பெண் வேகமாச்சென்றுவிட்டாள்.
மாலை எங்கள் மையத்திற்கு சிறுவர் சிறுமியர் புடைசூழ அவள் வந்தாள்.
எப்படி இருக்கே?
கண்களில் திரண்ட கண்ணீர்.
திடீர்னு காணாம போயிட்டே?
நீயும் எவ்வளவோ முயற்சி பண்ணின, எனக்குள்ள என்னன்னு எனக்குதாண்ணே தெரியும்!
சரி,விடு.
ரோட்ல பாத்து ஏன் பேசல?
இல்லண்ணே? பாக்கிறவங்க உன்ன...தப்பா....
லூசு...எங்க பாத்தாலும் பேசு.எப்ப வேணாலும் இங்க வா.இது உன் வீடு மாதிரி.
அவள் சிலகாலம் கரகம் ஆடிக்கொண்டிருந்தாள்.பிறகு எங்கு சென்றால் என்று தெரியவில்லை.பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இப்போதும் பள்ளியில், சில ஆசிரிய நண்பர்கள் தமது வகுப்பில் யாரேனும் மாணவர்கள் சற்றே பெண்தன்மையுடன் இருந்தால்,. அவர்களைக்கவனித்துப்பார்க்கிறோம்.
மற்றவர்களிடமிருந்து தொல்லைகள் இருக்கிறதா என்று,
அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியாமலேயே.

ஒரு பாடம்


ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குப்பாடத்தை அரிச்சுவடியிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். அதிலும் ஆங்கிலவழி மாணவர்கள் அர்த்தநாரிகள்- ஆங்கிலமும் தமிழும் அப்படி,இப்படி.
எழுத்துக்களை அறிமுகம் செய்யுமுன் கதைகளைச்சொல்லி என்மீது ஈர்ப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
வழக்கம்போல தெனாலிராமனில் தொடங்கி வகுப்பறைச்சூழலைக்கலகலப்பாக்கிவிட்டு 'சடகோ' கதைக்கு வந்தேன்.
சடகோவின் வரலாறு, உலகப்போர்,அணுகுண்டு வீச்சு சார்ந்து சில ஒளிப்படத்தொகுப்புகள் என்னிடம் உண்டு. அவற்றை மாணவர்களுக்குக்காட்டலாம் என ஒலி_ஒளி அறைக்கு அழைத்துச்செல்ல முடிவு செய்தேன்.
"வகுப்பறையை விட்டு வெளியே செல்கிறோம்,வரிசையாக ஒருவர்மீது ஒருவர் இடித்துக்கொள்ளாமல்,முந்தாமல் வரவேண்டும்." என்றேன்.
சிறுவர்கள்,கத்திக்கொண்டும்,முந்திக்கொண்டும் இடித்துத்தள்ளிக்கொண்டும் வந்தனர்.
மைதானத்தின் மத்தியில் நிறுத்தினேன்.முகத்தைக்கடுமையாக வைத்துக்கொண்டேன்.
" என்னசொன்னேன்? ஒருத்தர ஒருத்தர் இடிக்காம,முந்தாம,சத்தம் போடாம வரணும்னு சொன்னேன்ல....ஏன்,இப்படி....அப்படியே வரிசையா ஒரு நிமிடம் நில்லுங்க."
மதிய வெயில். லேசாக வியர்க்க ஆரம்பித்தது.
" நீங்க ஒழுக்கம் தவறியதால நல்ல படங்கள் பார்க்கிற வாய்ப்ப இழந்திட்டீங்க,அப்படியே திரும்பி வகுப்பிற்குப்போங்க"
மாணவர்கள் அமைதியாக வகுப்பிற்குச் சென்றனர்.
அனைவரும் மிகவும் அமைதியாக இருந்தனர்.
பல சிறுவர்களின் முகங்கள் வியர்வை பூத்திருந்தன.
எனக்கு மனதிற்குள் வருத்தம்.
வெயில் ரெம்ப சூடா இருந்துச்சா?
மெதுவாக,'ஆமா'
எத்தனை டிகிரி இருக்கும்தெரியுமா?
ஆளுக்கொரு பதில் சொல்ல.....
(முதல் நாளே எங்களுக்குள் ஒப்பந்தம். என் கேள்விகளுக்குப்பதில் சொல்லவேண்டும். சரி,தவறு என்று அவசியமில்லை)
30_32 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
" இதிலேயே நம்மால் ஒரு நிமிடம் நிற்க முடியலையே ஏறத்தாழ 6௦௦௦ டிகிரி வெப்பம் இருந்தா எப்படி இருக்கும் நெனச்சுப்பாரு?"
அவ்ளவு சூடு இருந்தது இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசியபோது.
என்று தொடங்கிய பாடம், 

சடகோவின் கதை, உலகப்போர்,அணுகுண்டு வீச்சு என விரிந்து
மறுநாள் பல்வேறு ஒளிப்படங்களைப்பார்த்த பின்பு
நாங்கள் அனைவரும் 1௦௦௦ காகிதக்கொக்குகளைச்செய்து உலக சமாதானத்திற்காக சடகோவின் நினைவாலயத்திற்கு அனுப்பிவைப்போம் என்ற மாணவர்களின் மனமொத்த விருப்பத்தோடு நிறைவுற்றது.

ஏண்டா, சாமி என்னப்படைச்சே

கல்வியாண்டின் முதல்நாள் மாலை. பள்ளிச்செயலரின் கூட்டம் 6 மணியைத்தாண்டி நடைபெற்றிருந்தது. 6 ஆம் வகுப்பு தமிழ் வழிக்கு 23 மாணவர்களே சேர்ந்திருந்தனர். மாணவர் சேர்க்கை வெகுவாகக்குறைந்திருப்பது குறித்துததனது வருத்தத்தைப்பதிவு செய்திருந்தார். நிறைய பேர் படித்த பள்ளி.கடந்த 3 ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கை எப்படிக்குறைகிறது? என்று யோசியுங்கள் என்றார்.நான் சில காரணங்களைச்சொன்னேன்.வழக்கம்போல அனைவரும் அமைதியாக இருந்தனர். வெளிய வந்த பின்னாடி...
அடா..அடா...அடா....

மறுநாள் காலை,தலைமையாசிரியர் அறையைக் கடக்கும்போது பார்க்கிறேன். ஒரு சிறுவனுடன் நடுத்தர வயதுக்காரர் தலைமையாசிரியர் மற்றும் உதவித்தலைமையாசிரியர் அருகில் நின்றுகொண்டிருக்கிறார்.
"பின்னாடி பிரச்சினையாயிரும் இப்பவே போயி மாத்திட்டு வந்திருங்க" என்று இருவரும் மீண்டும் மீண்டும் சொல்ல, சிறுவனுடன் வந்தவர், விழித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார்.
என்ன என்றேன்.
மாற்றுச்சான்றிதழில் 14 என்று பிறந்த தேதியை எழுதும்போது லேசாக இழுத்து இருக்கிறது.
எங்கள் தலைமையாசிரியர் அந்தஇடத்தில் திருத்தி, சிறு ஒப்பம் வாங்கி வரச்சொல்கிறார்.
வந்தவர் 18 கிமீ தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்திலிருந்து வந்திருக்கிறார்.அவருக்கு எதுவுமே புரியவில்லை.
"லேசாதானே இழுத்திருக்கு" என்கிறார்.

சேர்க்கை விண்ணப்பம் எழுதும் ஆசிரியரிடம் முதலில் விண்ணப்பம் எழுதச்சொன்னேன்.
தலைமையாசிரியரிடம்,


"சார்,இப்பல்லாம் எந்த ஆவணமும் கேட்க வேண்டிய அவசியம் இல்ல, பின்னாடி பாத்துக்கலாம்,அவரு பாவம் கிராமத்துல இருந்து வந்திருக்காரு.ஏற்கனவே பசங்க இல்லாம கஷ்டப்படுறோம்.இப்ப போயி திருத்திட்டு வரச்சொன்னா..அப்படியே போயி வேற ஸ்கூல்ல
சேத்துட்டுப்போயிடுவாரு"
பையனின் தந்தையிடமும்,
இப்ப,இருக்கட்டும் ஆபீஸ்ல கேட்டுட்டு மாத்தணும்னு சொன்னாங்கன்னா அப்பறமா சொல்லி அனுப்புறோம்,அப்ப மாத்திக்கலாம்" என்று சொல்லி அனுப்பிவிட்டுப்பையனை வகுப்பிற்கு அழைத்துச்சென்றேன்.
பாடவேளை தொடங்கிப்பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும்.அறிவியல் ஆசிரியர் அமைதியாக ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
மாணவர்கள் கத்திக்கொண்டிருக்க,சிலர் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.
"புதுப்பையன்" என்றேன்.
திரும்பினார்.திரும்பிக்கொண்டார்.

மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்,
'ஏண்டா, சாமி என்னப்படைச்சே....
என்னைப்படைக்கையிலே, என்ன நெனைச்சே?'