Friday, 31 October 2014

கஞ்சனூர் - சுக்கிரன் அருள் தரும் தலம்.


சுக்கிரன் அருள் தரும் கஞ்சனூர் என்ற கோவிலுக்கு இரவு நெருங்கும் நேரத்தில் நண்பர்களுடன் சென்றேன்.
அந்தக்கோவில் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வளவு தூரத்தில் ஒரு கோவில் நம்ம மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டேன்.
நண்பர்கள், ஆதீனம் மற்றும் நித்தியானந்தா குறித்தும் சில செய்திகளை கேட்டனர். ஊர் அறிந்த செய்திகள்.
கோவிலுக்கு வெளியே வந்தபின் வாகனத்தில் ஏறும்போது ஒரு தேநீர்க்கடை அருகே புதர் போலத்தோன்றியது.
தேர் போலத்தெரிகிறதே! என்று அருகே சென்று பார்த்தேன்.
தேரே தான்.
மரத்தேர்.
நன்கு சிதைந்துவிட்டது. சிற்பங்கள் ஆங்காங்கே தெரிகின்றன.
கிராமம் என்பதால் அப்படியே இருக்கிறது.
ஒரு அற்புதமான கலைச்செல்வம் சிதைந்து கிடக்கிறது என்ற உணர்வே இல்லாமல்......
ஆயிரக்கணக்கில் மக்கள் அங்கே வந்துபோய்க்கொண்டிருக்கிறார்கள்,
சுக்கிரன் அருள் வேண்டி.

சோழர் கலைச்செல்வங்கள்- நவக்கிரகங்கள்


மயிலாடுதுறையில் பத்துநாட்களுக்குமேல் NCC முகாம் என்பதால் மனம் மிகவும் மகிழ்ச்சியால் துள்ளியது. இணையத்தில் தேடி கங்கைகொண்ட சோழபுரம் எவ்வளவு தூரம் என்று பார்த்தேன்.40 கி.மீ.என்று காட்டியது. தாராபுரமும் அப்படியே. இரண்டு ஊர்களையும் எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என முடிவுசெய்துகொண்டேன்.
தமிழக அதிகாரிகள் அனைவரும் ஒருநாள், அனுமதிபெற்று, அதிகாலை 5 மணிக்குக்கிளம்பினோம். கோவில்கள் என்றாலே நவக்கிரகக்கோவில்கலையே சொல்கிறார்கள். வாகன ஓட்டியிடம் என்னென்ன கோவில்கள் செல்லப்போகிறோம்?
என்று கேட்டேன்.
'நான் சொல்லும்படி கேட்டு,நவக்கிரகங்களை மட்டும் தரிசித்துவிட்டு உடனே வந்துவிட்டால் இன்றைய நாளுக்குள் ஒன்பது கோவில்களையும் தரிசித்துவிடலாம்.'
வேகமாக வந்துவிடுங்கள். என்றார்.


வேறு எந்தக்கோவில்கள் செல்வோம்? என்றேன்.
நவக்கிரகக்கோவில்களுக்குச்செல்வதாகத்தான் பேச்சு.என்றார்.
எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
வழியில் வேறு கோவில்கள் இல்லையா? என்றேன்.
அவருக்குப்புரியவில்லை.
தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் இதெல்லாம் எங்கே இருக்கிறது? நாம் போகும் வழியில் பார்க்கலாமா? என்றேன்.
அப்படி வேறு கோவில்கள் போனால் நவக்கிரகக்கோவில்களை முழுமையாகப்பார்க்க முடியாது என்றார்.
முதலில் வைத்தீஸ்வரன் கோவில் சென்றோம்.
நேரே செவ்வாய்-இருக்குமிடம் சொல்லி விரைவில் வந்துவிடுங்கள் என்றார்.
அடுத்தது,திருவெண்காடு. புதன்- இருக்குமிடம் சொல்லி விரைவில் வந்துவிடுங்கள் என்றார்.
எனக்கோ ஆச்சரியம். இது பட்டினத்தடிகள் வாழ்ந்த இடம். முழு ஆலயத்தையும் பார்க்க விரும்பினேன். மற்றவர்களும் ஒப்புக்கொண்டனர். இப்படியே ஒருசில கோவில்கள். அவ்வப்போது நல்ல மழை.
மீண்டும் ஆரம்பித்தேன்.
இப்படியே சாதாரண கோவிலா போயிட்டிருக்கோமே....தாராசுரம்....
ஓட்டுனர் சற்றே குரலை உயர்த்திவிட்டார்.
" என்னசார், சாதாரணக்கோவில்னு சொல்றீங்க, எவ்வளவு பேர் வர்றாங்க தெரியுமா? லீவு நாள்ல லட்சக்கணக்குல வருவாங்க.தாராசுரத்துல அப்புடி என்ன இருக்கு?"
எனக்கு கோபம் வந்தது.
என்னங்க நீங்க? கலையம்சமே இல்லாத கோவிலை எல்லாம் கூட்டம் வர்றதுனால மட்டுமே பெரிசா சொல்றீங்க.இந்தக்கோவில் ஒன்பதுல சில மட்டுமே பழைமையா தெரியுது. தாராசுரம் சோழர் சிற்பக்கலையோட உச்சம் தெரியுமா? தேர்மாதிரியான வடிவமான கோவில்.
ஒரு வழியாக ' சந்திரன்' இருக்கும் திங்களூர் சற்றே தூரம். அதை வேண்டுமானால் விட்டுவிட்டு கங்கை கொண்ட சோழபுரம் போகலாம் என்றார். இரண்டு நண்பர்கள் என்பக்கம் வர, சந்திரன் கோபித்துக்கொள்ளமாட்டார் என்று திங்களூரை விட்டுவிட்டோம்.
வழியில் கும்பகோணத்தில் மதிய உணவு.
உணவகத்தில் கோவில்கள் பற்றி விசாரித்தாலும் நவக்கிரகக்கோவில்கள் பற்றியே சொல்கிறார்கள். கும்பகோணம் கோவில்களின் நகரம். என் மனம் மிகவும் வருந்தியது. கலைச்செல்வங்கள் நிறைந்த கோவில்கள் சொல்லப்படாமலே இருக்கின்றன. யார் சொல்வது?

தஞ்சையும் சிதம்பரமும் எப்படியோ தப்பிவிட்டன.சுற்றுலா செல்கிறார்கள்.
கங்கைகொண்ட சோழபுரம், ஆயிரம் ஆண்டுகளை இப்போதுதான் நிறைவு செய்திருக்கிறது.
இராஜேந்திரன், தந்தைக்கு ஏற்ற தனயன்.
அற்புதமான கலைச்செல்வம்.
மாலைவரை ராஜேந்திரனின் கரம்பற்றி சுற்றிச்சுற்றி வந்தேன்.

கேன்வாஸ்- ஓவியப்பயிற்சி வகுப்பு.


காலாண்டுத்தேர்வு  விடுமுறை அற்புதமானது.
வெளியே எங்கும் செல்லவில்லை.
மனம் இல்லை. இயலவும் இல்லை.
பல்வேறு சிந்தனைகள். குழப்பம்.
வாசிப்பு-காமிக்ஸ் மட்டுமே.
நாள்தோறும் நீண்ட பகல் தூக்கம்.
எனது தொடர்ந்த செயல்பாடுகளில் இருந்து விலகி நின்று மெதுவான,தீர்க்கமான அசைபோடல்.

கேன்வாஸ்- ஓவியப்பயிற்சி வகுப்பு.
பத்து ஆண்டுகளைக்கடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
கடந்த ஞாயிறு, வகுப்பிற்கு வந்திருந்தவர்களோடு சிறிது கலந்துரையாடினேன்.
ஓவியர்கள்,ஓவிய ஆர்வலர்கள் தங்களுக்குள் சமகால ஓவியம் குறித்து கருத்துப்பரிமாற்றம் செய்துகொள்ளும் களமாகவே 'கேன்வாஸ்' தொடங்கப்பெற்றது.
கால ஓட்டத்தில் மதுரை ஓவியர்கள், கலை குறித்த விவாதங்களிலும் ஓவிய முயற்சிகளிலும் ஆர்வம் காட்டாததால் மெதுவாக ஓவியம் கற்றுத்தரும் வகுப்பாக மாற்றம் பெற்றது.
வருங்காலத்தலைமுறையினர் மரபான பயிற்சி இல்லாமல் இயல்பாக,மகிழ்ச்சியாக கலையை புரிந்துகொள்ள வேண்டும் என்று தொடர்ந்து ஓவிய வகுப்புகள் நடத்தப்பெற்றன.
ஆனால்,கால ஓட்டத்தில் உடனிருந்த ஓவிய நண்பர்கள் தொடர்ந்து வகுப்புகளுக்கு வர இயலாத சூழல் உருவானது.
வகுப்பும் மரபான முறையில் ஓவியம் வரையக்கற்றுத்தரும் வகுப்பாக மாறிவந்தது.
' இது நமது வேலை இல்லையே?'
என்று மனம் தீவிரமாக எண்ணத்தொடங்கியது.
எனவே,
ஒருவாரம் விட்டு ஒரு வாரம் என்று தொடர்ச்சியாக ஓவியப்பயிற்சி நடத்துவதை நிறுத்திக்கொள்வது என முடிவு செய்தேன்.
அனைவரும் ஒத்துக்கொண்டனர்.
பதிலாக,
ஓவியக்காட்சிகள் நடத்துவது, செய்முறை விளக்கங்கள் என்று கலை சார்ந்த நிகழ்வுகளாக அவ்வப்போது நடத்திக்கொள்ளலாம் என முடிவு செய்தோம்.
மனம் லேசானது.

கே.பி.எஸ்.


12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நண்பர்களுடன் சாலையில் சென்றுகொண்டிருந்தேன். ஒலிபெருக்கியில் ஒரு பாடல், கே. பி. சுந்தராம்பாள் பாடியது. அப்படியே நின்றுவிட்டேன். நண்பர்கள் அழைத்தார்கள். பாடலைக்கேட்டபின் வருகிறேன் என்று சொல்லி நின்றுவிட்டேன்.
இதுதான் என் நினைவில் இருக்கும் கே.பி.எஸ். பாடலை ரசித்த முதல் நிகழ்வு.

அதன் பின் எப்போது எங்கு கே.பி.எஸ். பாடல் கேட்டாலும் நின்று ரசித்திருக்கிறேன். பாடலுக்காகவே அவர் நடித்த படங்களைப்பார்த்திருக்கிறேன்.காதுக்குள் நுழைந்ததும் நரம்புகள் வழியே உடலெங்கும் பாயும் மின்சாரம் அவர் குரல்.அது எனக்குள் என்னவெல்லாம் செய்யுமென்று எழுத வார்த்தைகளால் இயலாது.

மகாகவி காளிதாஸ் படத்தில்,
" சென்று வா மகனே, சென்று வா" என்று பாடும் போது இன்று வரை அவர் என்னைப்பார்த்துப்பாடியதாகவே உணர்கிறேன்.

எனது நண்பர்கள் பலர் சூரியன் பண்பலையில் பணியாற்றுகிறார்கள் ,நண்பர் சுதன் பாலா 'சூர்யோதயம்' என்ற நிகழ்ச்சியை காலையில் வழங்கினாலும் கே.பி.எஸ். பாடல்களை அடிக்கடி ஒலிபரப்புகிறார்கள் என்பதற்காகவே காலை வேளையில் சமையலறையில் 'ரேடியோ மிர்ச்சி' கேட்கிறேன்.
கே.பி.எஸ் தனது குரலால் அன்றாடம் எனது ஒவ்வொரு அணுவுக்கும் புத்துயிரூட்டிகொண்டே இருக்கிறார்.
 
தினந்தோறும் ரசித்துக்கொண்டே இருக்கிறேன்.

அறம்.


ஒருநாள் மாலை பள்ளி முடிந்தபின் பள்ளிச்செயலருடன் சில ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருந்தோம். பழம்பெருமை வாய்ந்த மதுரைக்கல்லூரி வாரியத்தின் வரலாறுபற்றி தானக்குத்தெரிந்த செய்திகளைச்சொல்லிக்கொண்டிருந்தார்.

மகாகவி பாரதி பணியாற்றிய சேதுபதி மேனிலைப்பள்ளியில் ராமண்ணா கூடம் என்ற பெரிய கூடம் உள்ளது.
திரு.ராமண்ணா மதுரையில் புகழ்பெற்ற தொழிலதிபர்.பள்ளிக்கு ஒரு கூடம் கட்டித்தருகிறேன் என்று வாக்களித்திருக்கிறார்.
காலப்போக்கில் தொழிலில் நசிவு ஏற்பட்டு வீடு மட்டுமே எஞ்சியிருக்கிறது.கொடுத்த வாக்கைக்காக்க வேண்டுமே என்பதற்காக தனது வீட்டை விற்று பள்ளியில் கூடம் கட்டித்தந்து அன்றைய தமிழக ஆளுநரை வைத்து திறப்பு விழா நடத்தியபின் ஊரைவிட்டுச்சென்றுவிட்டார்.
சென்ற ஆண்டு சேதுபதி பள்ளிக்கு 125 ஆவது ஆண்டுவிழா. ஒருநாள் பள்ளிக்கு வந்த ஒரு பெண்மணி, தாம் மறைந்த திரு ராமண்ணா அவர்களின் பெயர்த்தி எனவும் இப்போது நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம்.எங்கள் தாத்தா இறக்கும்போது ஒரு உயில் எழுதி வைத்திருந்தார். அதில், மதுரை சேதுபதி பள்ளியில் தாம் ஒரு கூடம் கட்டித்தந்திருப்பதாகவும் அதன் மராமத்துப்பணிகளை தமது சந்ததிகளே பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஏதேனும் பணிகள் இருந்தால் கூறுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
இந்தச்செய்தி கேட்டவுடன் அனைவரின் கண்களும் கலங்கின.
அறம் இன்னுமிருக்கிறது.


(ராமண்ணா கூடம்....பழைய படம்.இன்று புதுப்பொலிவுடன் இருக்கிறது.)

நடிகவேள்


ஊர் ஆயிரம் சொல்லும்.வாழவேண்டிய வயது. நீ, திருமணம் செய்துகொள்.என்று தன் மனைவியை தனது நண்பனிடம் ஒப்படைக்கிறான் மரண வாயிலில் நிற்கும் நோயாளி ஒருவன்.
படம்- இரத்தக்கண்ணீர்
ஆண்டு- 1954
நடிகர்- நடிகவேள் எம்.ஆர். ராதா.
காலையில் தாலிகட்டியவள் வேறொருவனைக்காதலித்திருக்கிறாள் என்பதால் அவனைத்தேடி அவனுடனேயே சேர்த்துவைத்துவிடலாம் என ஒரு நல்லவன் 7 நாட்கள் முயன்று கண்டுபிடித்து இறுதியில் காதலனிடம் ஒப்படைகிறான்.காதலன் காதலியிடம் தாலியை கழற்றிவிட்டு வரச்சொல்ல, அவளோ தடுமாற, அந்த மலையாளக்காதலன் தமிழ்ப்பெண்களின் தாலிக்கயிற்றின் பெருமைகளைப்பட்டியலிட, கயிறுடனே காலமெல்லாம் வாழ்வாள்.
படம்- அந்த 7 நாட்கள்.
ஆண்டு- 1981
இயக்குனர், நடிகர் - கே. பாக்கியராஜ்.
நடிகவேளை நினைக்கும்போதெல்லாம் எனக்கு இந்த இரு படங்களின் இறுதிக்காட்சிகளே நினைவுக்கு வரும்.
பிற்போக்காகப்போய்க்கொண்டே இருக்கிறோம்.

திருமணங்கள் சொர்க்கம்.


ஆவணி பல்வேறு பத்திரிக்கைகளுடனேயே வருகிறது.
இன்றைய மணவிழாக்கள் ஆடம்பரத்தின் வெளிப்பாடு என்ற நிலை மாறி குடும்பங்களின் பெருமையாகியிருக்கின்றன.
லட்சங்களைச்செலவழித்து லட்சங்களைச்சம்பாதிக்கிறார்கள்.கணக்கு வைத்து மீண்டும் செய்ய வேண்டும்.
மொய் குறித்து விரிவாக தனியே பேசலாம்.
மொய் செய்து, வந்ததா என்று குறிப்பேடுகளை புரட்டிப்புரட்டி....
சரி.
மணவிழாவைப்பார்ப்போம்.
பல்லாயிரக்கணக்கான ரூபாய் வாடகையில் மண்டபம்.
வசதிக்கேற்ற வரவேற்பு. அதீத அலங்காரங்கள்.
டெசிபல் பற்றிக்கவலைப்படாத கச்சேரி. உறவினர்,நண்பர்களுக்குள் பேசிக்கொள்ள முடியாமல் எல்லாம் சைகைமயம்.
வீணாவதைப்பற்றிச்சிறிதும் கவலையின்றி வாழையிலை நிறைக்கும் உணவு வகைகள்.
ஒவ்வொன்றையுமே தனித்தனியே விவாதிக்கலாம்.

ஏன், இவ்வளவு வீண்?
கோவிலில் திருமணம்.
மண்டபம்,உணவு,என்று எவ்வளவு செலவு செய்ய நினைக்கிறோமோ அவ்வளவு தொகைக்கு நம் ஊர் பள்ளிக்கு ஓர் அறையே மணமக்கள் பெயரில் கட்டிக்கொடுத்துவிடலாமே!
சிலர் செய்யும் செலவுகளைப்பார்த்தால் பள்ளிக்கூடமே கட்டலாம்.

பாரதிவிழா.


14 ஆண்டுகளுக்கு முன். சேதுபதி மேனிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப்பணி.
முதுகலைத்தமிழாசிரியர் செந்தூரன் அவர்கள் சொன்னார்,"எனக்கு ஒரு ஆசை,பாரதியின் நினைவு நாளுக்கு பள்ளிப்பிள்ளைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசளித்து 'பாரதி விழா' என்று கொண்டாடலாமா?"
நானும் ஆசைப்பட்டேன். எங்களுடன் தாவரவியல் ஆசிரியர் கோபாலகிருஷ்ணனும் சேர்ந்துகொள்ள கனவு பெரிதாகி செயல் வடிவம் காணத்தொடங்கியது.
ஒரு குழந்தை பிறக்கும்போது சாமானியன், உலகை விட்டு நீங்கும்போதே புகழுடல் எய்துகிறான்.பாரதி இறவாப்புகழ் அடைந்த நாளையே கொண்டாட வேண்டும் என்று கல்கியும் எழுதியுள்ளார் எனச்சொல்லி, நினைவுநாளை விழாவாகக்கொண்டாடக்கூடாது என்று எழுந்த எதிர்ப்புகளை சுலபமாக சமாளித்தோம்.
ஆசிரியர்கள்,நண்பர்களிடம் நன்கொடைகள் பெற்று போட்டிகள் நடத்தப்பெற்றன.
தொடக்கமற்றும் நடுநிலைப்பள்ளிகள்,
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள்,
மெட்ரிக் பள்ளிகள்
என மூன்று பிரிவுகள்,மூன்று நாட்கள்.பல்வேறு வகுப்பு நிலைகள்.
பல்வேறு போட்டிகள் என முதல் பாரதிவிழா களைகட்டியது.

பாரதி நினைவுநாளில் பரிசளிப்பு விழா.
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் பட்டிமன்றம். அனைவரும் மகிழ்ந்தனர்.
இரண்டு ஆண்டுகள் கழித்து நிர்வாக காரணங்களுக்காக செந்தூரன் ஐயா மதுரைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றலாக,நானும் மாறினேன்.
பாரதி விழா,
தலைமையாசிரியர் திரு ராஜகோபால் ஆசிரியர்கள் ரமணன்,பாலா,முத்துக்குமார், வெங்கட்,சொக்கலிங்கம்,நாராயணன்,பரமசிவம்  மற்றும் பலரின் கூட்டு முயற்சியால் மாபெரும் விழாவாகத்தொடர்ந்தது.

அனைத்துப்பள்ளிகளும் ஆவலுடன் எதிர்நோக்கும் போட்டியாக மாறியது.
போட்டிகளில் சிறு சிறு மாற்றங்கள் - கல்லூரி,ஆசிரியர்கள் என்று புதிதாகச்சேர்த்து - பாரதி விழா பிரமாண்டமாக நடைபெற்று வந்தது.
மறைந்த காளிமுத்து அவர்கள், திரு.இறையன்பு, திரு.மாலன், தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன், பாரதி.கிருஷ்ணகுமார். என்று பல்வேறு அற்புதமான பேச்சாளர்கள் பாரதி விழாவில் சிறப்புரை ஆற்றிப்பரிசுகள் வழங்கிச்சிறப்பித்திருக்கின்றனர்.

மூன்றாண்டுகளுக்குமுன் திரு.செந்தூரன் ஓய்வு பெற்றுவிட, மற்றவர்கள் விழாவை நடத்தினோம்.
மாற்றங்கள் தொடங்கின.
விழா தொடக்கத்தில் சந்தித்த அதே விமர்சனங்களை சந்தித்தது.
அதே பதிலைச்சொன்னோம்.
மூன்று நாள் போட்டிகள் குறைந்து ஒருநாள் ஆனது.

13 ஆண்டுகளுக்குப்பின் இந்த ஆண்டு பாரதிக்கு விழா இல்லாமல் , அவன் நினைவுநாள் ஒரு சாதாரண நாளாக கடந்துபோனது.

தனி மனிதன் என்ன செய்துவிடமுடியும்?
வகுப்பறைக்குள் பாரதியைப்பற்றி பேசினேன்.
வருங்காலத்தலைமுறையின் எண்ணத்தில் பாரதியை ஏற்றிவிட முடியும்.

பாரதி ஓவியம் .....ஓவியர் ரவி

காமெடி பீசு.


6ஆம் வகுப்பில் வினா விடைகள் எழுதிக்கொண்டிருந்தேன்.
அவ்வப்போது மாணவர்கள் அதிகமாகச்சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தனர். வகுப்பிற்கு வெளியே மராமத்துப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அங்கிருந்து ஒரு பெரிய கட்டையை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தேன். கண்களை நன்கு விழித்தபடி குரலை உயர்த்தி,
" ஏய், சத்தம் போடுறவன,ஒரே அடி" என்றேன்.
திடுக்கிட்டு வகுப்பறை அமைதியாக, முன்னால் இருந்த ஒரு சிறுவன்
சிரித்துக்கொண்டே சொன்னான்,
"காமெடி பீசு".
அனைவரும் சிரித்தனர்.நானும்.
நண்பரிடம் சொன்னேன்.
இதை வளர விடக்கூடாது என்றார்.
இதைத்தான் வளர்க்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

லியோ டால்ஸ்டாய் - சொற்களின் பிரம்மா.


டால்ஸ்டாய் பிறந்தநாள்.
9 ஆம் வகுப்பு மாணவர்களிடம் டால்ஸ்டாயின் படைப்புகள். சிறப்புகள், The Last Station திரைப்படத்தின் கதை ஆகியவற்றை சொன்னேன்.
மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

டால்ஸ்டாயின் படைப்புகளில் என்னை மிகவும் கவர்ந்தது 'அன்னா கரீனினா'.
அன்னாவை நானாகவே உணர்வேன். ஒருமுறைக்குமேல் படிக்கவேயில்லை. ஒரே முறையில் உள்ளம் ஒன்றி உணர்வுடன் கந்து வாசித்திருக்கிறேன். இரு வேறு திரைப்படப்பிரதிகள் இருந்தும் பார்க்க இயலவில்லை. அன்னாவை நானாக உணர்கிறேன். அன்னா ஆண்களால் வஞ்சிக்கப்பட்டவள்.அவர்களின் தவறுகளை அவளின் தவறுகளாக எண்ணி தண்டனையை தனக்குத்தானே கொடுத்துக்கொள்பவள். அவளின் இறப்பை என்னால் மீண்டும் வாசிக்கவோ பார்க்கவோ இயலாது.அன்னாவை நானாகவே உணர்கிறேன்.

டால்ஸ்டாய் உணர்வுகளை சொற்களில் வடித்த  பிரம்மன்.

ஆசிரியர் தினம் - 'ஆயிஷா'


எந்த ஆண்டுமில்லாத மகிழ்ச்சியுடன் இந்த ஆண்டு ஆசிரியர் தினம் எங்கள் பள்ளியில் கொண்டாப்பட்டது.
ஒரு சில வகுப்புகளில் தொடங்கிய நிகழ்வுகள் ஒவ்வொரு வகுப்பாகப்பரவ, மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் பணத்தைச்சேர்த்து கேக்,குளிர்பானம், மிட்டாய், வண்ணத்தாள்களை வெடிக்க,நுரை பீய்ச்ச என்று பல்வேறு பொருட்களை வாங்க வெளியேயும் செல்ல ஆரம்பித்தனர்.
கூச்சலும் கொண்டாட்டமுமாக கண்ணில் பட்ட அனைத்து ஆசிரிய ஆசிரியைகளையும் தங்கள் வகுப்பறைகளுக்கு அழைத்தனர்.
மேலே நுரை பீய்ச்சினர். கேக் வெட்டி,வண்ணத்தாள் வெடித்து,
கத்தி .....ஆனந்தக்கூத்து.
ஆசிரியர்கள் அறைக்கு கேக் கொண்டுவந்த வண்ணமிருந்தனர், மாணவர்கள்.

10 ஆம் வகுப்பு மாணவனொருவன்,
தனது வகுப்பு நண்பர்கள் ஆசிரியர் தினக்கொண்டாட்டங்களுக்கு பங்குப்பணம் கேட்டபோது தரமறுத்து,
" ஆசிரியர் தினத்துக்கு நாம எல்லோரும் காசு சேத்து அவுங்களுக்கு மரியாதை செய்யுறோம்.குழந்தைகள் தினத்துக்கு அவுங்க நமக்கு என்ன செய்றாங்க?"
என்று கேட்டதாக ஆசிரிய நண்பர் ஒருவர் கூறினார்.
எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அந்த மாணவனுக்கு திங்கட்கிழமை ஒரு 'ஆயிஷா' பரிசளித்துவிடவேண்டும்.

நீல நிறம்..வானுக்கும் கடலுக்கும்!


சில ஆண்டுகளுக்கு முன்.
CANVAS- ஓவியப்பயிற்சி வகுப்பில் நிலக்காட்சி வரைவது எப்படி? என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தேன்.
ஒரு நிலக்காட்சியை வரைந்து வண்ணம் தீட்டச்சொல்லிக்கொண்டிருந்தேன்.
" வானம்!.... நீல நிறம் தீட்டுங்கள்"
நான் செய்தபின், சுற்றிவந்தேன்.
ஒரு சிறுவன்,6 வயது- அவன் தந்தை நீல நிறம் தீட்டு- என்கிறார்.
மாட்டேன் என்கிறான்.
நான் சிரித்தபடி இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
தந்தை கெஞ்சுகிறார்,
"அங்கபாரு, சார் எப்புடி வரைஞ்சிருக்காரு,
நல்ல பையன்ல, நீயும் அதே மாதிரி செய்! "
சிறுவன் பொறுமையிழந்து ஜன்னலுக்கு வெளியே கையைக்காட்டினான்,
" அங்க பாருப்பா, வானம் புளூ கலராவா இருக்கு?"
காலை 11 மணி. அன்று வானம் வெளுத்திருந்தது, நானும்.


இந்த நிகழ்விற்குப்பின் எங்களின் ஓவியம் கற்பித்தல் முறைகள் பெரிதும் மாறின.

நவீன ஓவியங்கள்,வெற்றுக்கிறுக்கல்களா?தற்கால ஓவியங்களில் குறிப்பாக நவீன ஓவியங்களைக்காண்பவர்கள் பெரும்பாலும் கேட்கும் ஒரே கேள்வி,
இதில் என்ன வரைந்திருக்கிறார்கள்?
உள்ளதை உள்ளபடி வரைவதையே ஓவியம் என்று வியந்து பாராட்டுகிறார்கள்.
அப்படியே வரைந்திருக்கிறார்! என வியக்கிறார்கள்.
வரைய விரும்புபவர்களும் கற்றுத்தருபவர்களும் கலைக்கல்லூரிகளும் மரபான வழிமுறைகள் என்று தொடங்கி இருப்பதை நகலெடுப்பதை செய்துகொண்டே இருக்கின்றனர்.
இங்கேதான் கலையின் பன்முகத்தன்மை சிதைந்துவிடுவதாக எண்ணுகிறேன்.

உள்ளதை உள்ளபடியே வரைந்து பழகியபின் இயல்பாகவே உருவங்கள் சிதைந்து அருவமாக மாறத்தொடங்கும்,
கலைஞன் தனது தொடர்ந்த பயணத்திலேயே மரபான அழகியலை மாற்றுவான் என்றெல்லாம் பேசித்திரிந்த காலமும் உண்டு.
இப்போது யோசிக்கிறேன்.
வெண்பா எழுதியபின்தான் நவீன கவிதை எழுதவேண்டுமென ஒரு கவிஞனை சொல்லியதுண்டா?
பரதம் பழகியபின்தான் சல்சா ஆடவேண்டுமா?
கலை செம்மையாகுமுன் ஆதிமனிதனிடம் இருந்த துடிப்பான வடிவங்களில் இருந்து தொடங்கிய கலையின் பயணம் எங்கே ?
கலைஞன் இன்றைய மண்ணில் மரமாய் நிற்கவேண்டியவன்.
எண்ணங்களின் வீச்சுக்கேற்ப பாதாளத்தில் வேர்களும் ஆகாயத்தில் கிளைகளும் பரப்பிய மாபெரும் மரமாய்.

என் சுவாசக்காற்று.

வண்ணங்கள் குழைத்து
வடிவாயொரு ஓவியம் செய்கையில்
உயிர்வளி ஊதி ஊதி
உடல் சோர்ந்த வேளையில்
உள்ளம் நிறைக்கும் என் சுவாசக்காற்று.
வார்த்தைகள் கோர்த்து
எண்ணம் இறக்கும் எத்தனிப்பின்
இறுதி எதுவானாலும்
இதயம் நிறைக்கும் என் சுவாசக்காற்று.
சும்மாஇருந்து மனம் வாடும் வேளைகளில்
தேடிச்சோறு நிதந்தின்று சின்னஞ்சிறு கதைகள் பேசும்
வேடிக்கை மனிதனல்ல நீயென
உயிர்த்துளிதரும் என் சுவாசக்காற்று.
என்னுடனே இருந்துவிடு என்பேன்,
பதிலேதும் சொல்லாமல்
ஒற்றைச்சிரிப்பை உதிர்த்தோடிவிடும்
எனக்கான என் சுவாசக்காற்று.

கூத்து.


எட்டாண்டுகளுக்கு முன்.
பள்ளி ஆண்டுவிழா.
ஆசிரியர்களையும் ஒரு கலை நிகழ்ச்சி கொடுக்கச்செய்யலாமென
அப்போதைய தலைமையாசிரியர் எண்ணினார்.
நாங்களும் ஒத்துக்கொண்டோம். உதவித்தலைமையாசிரியரின் விருப்பப்படி நவராத்திரி படத்திலிருந்து சிவாஜி-சாவித்திரி நடித்த நாடகப்பாடலை அப்படியே செய்யலாம் என முடிவு.
நான், சிவாஜி.
சாவித்திரிக்கு என்ன செய்வது?
;கலை நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் கணித ஆசிரியர் பாலாஜி ஒரு யோசனை சொன்னார். அதன்படி எங்கள் பள்ளியில் நிர்வாகப்பணியிடத்தில் பணியாற்றிவந்த ஆசிரியையிடம் பேசி நடிக்க வைப்பது.
"கூத்து என்பதால் பெரிதும் ஆடவேண்டியதில்லை.
பாவனைகள் செய்தால் போதும்.
ஆண் பாத்திரம் அருகிலேயே வரமாட்டார். படக்காட்சியைப்பார்த்தபின் முடிவு சொல்லுங்கள்."
என்று பல்வேறு காரணங்கள் சொல்லி இறுதியில் அவரும் சம்மதித்துவிட்டார்.
நானும் மற்றவர்களும் பள்ளியிலும்,
அவர் வீட்டிலும் தனித்தனியே ஒத்திகை.
நிகழ்ச்சிக்கு வந்தால் போதும்.
இச்செய்தி, தீக்குச்சியின் தீ போல அதனையே எரிக்க,
பாவம் அந்த ஆசிரியை, பதறியடித்து விலகிக்கொண்டார்.
என்ன செய்வது? இரகசியமாக ஒரு முடிவெடுத்தோம்.
வேறு ஆசிரியை ஒத்துக்கொண்டார் என்று செய்தியைப்பரப்பிவிட்டோம்.
தீக்குச்சி, ஒத்திகை நேரங்களில் சுற்றிச்சுற்றி வந்தது.
நிகழ்ச்சி நாள்.
கலை நிகழ்சிகளை வழக்கம்போல் நண்பர் பாலா .தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்.
எங்களின் கூத்து இறுதி நிகழ்ச்சி.
சாவித்திரி தவிர அனைவரும் தயார்.
தக்கதருணத்தில் பாலா மீசையை மழிக்க, ரமணனின் கைவண்ணத்தில் சாவித்திரி தயார்.
நிகழ்ச்சி அறிவிப்பு வந்தவுடன் சிவாஜி கதாபாத்திரம் வந்து சென்றபின் அனைவரும் ஆவலுடன் காத்திருக்க சாவித்திரியின் வருகையின்போது பாலாஜியின் ஏற்பாட்டின்படி வாணவேடிக்கைகள்.

திரைப்படத்திலும் நாடக நடிகை வராமல் சாவித்திரி அந்தப்பாத்திரம் ஏற்றுச்சிறப்பாகச்செய்திருப்பார்.
எங்களின் கூத்தும் அப்படியே ஆனது.
எல்லோருக்கும் அந்த ஆசிரியை யாரென்று கண்டுபிடித்து மகிழ்ந்தார்கள்.
பாவம் தீக்குச்சி!
தீக்குச்சியால் நன்மைகள் உண்டு.
அந்த நிகழ்வை இந்த இணைப்பில் காணலாம்.....
https://www.youtube.com/watch?v=y_Q4YJ4T4AI

கத கேளு! கத கேளு! - விளைவு


நேற்று எங்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி. மாணவர்கள் பல்வேறு படைப்புகளை வைத்திருந்தனர்.
ஒவ்வொன்றாகப்பார்த்துக்கொண்டே சென்றேன்.
( அறிவியல் கண்காட்சிகளைப்பற்றி விரிவாக எழுதவேண்டும்)
6 ஆம் வகுப்பு மாணவனொருவன் எனது சட்டையைப்பிடித்து இழுத்தான்.
என்ன?
பாக்காமப்போறீங்க !?
கவனக்குறைவாக அவனைத்தாண்டிச்சென்றிருக்கிறேன்.
அடடா...! சரி. சொல்லு.
சட்டையைப்பிடித்தபடியே விளக்கினான்.

சில வாரங்கள் முன்பு வரை மதிய வேளையில் தொடக்கப்பள்ளி அருகிலுள்ள குழாய்களை மேனிலைப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எனக்கான பணி. பெரிய மாணவர்களுக்குத்தனியே குழாய்கள் உண்டு.
தொடக்கப்பள்ளிச்சிறுவர், சிறுமியர் நீரை வீணாக்காமல் கவனித்துக்கொள்வேன்.
ஏய்! ஓட்டப்பல்லு, தண்ணிய வீணாக்காத!
அந்தத்துடுக்கான சிறுமி சிரித்தபடி ஓடிவிடுவாள்.
தற்போது சத்துணவுப்பகுதியில் மதிய வேளைகளில் பணி.
இன்று,
மதிய உணவு இடைவேளை.
உதவித்தலைமை ஆசிரியர் அழைத்ததால் சென்றேன்.
தொடக்கப்பள்ளி குழாய்ப்பகுதியில் நின்றிருந்தார்.
சிறுவர், சிறுமியர் நின்றிருந்தனர்.
வழக்கம்போலச்சொன்னேன்.
ஏய்! ஓட்டப்பல்லு, தண்ணிய வீணாக்காத!
அந்தச்சிறுமியும் அவள் தோழியும் சிரித்துக்கொண்டே அருகே வந்தனர்.
ஓட்டப்பல்லு, என் கையில் இரண்டு அடி அடித்தாள், இலவச இணைப்பாக ஒரு கிள்ளும்.
....நரீ .....வலிக்குதா?
சிரித்தபடி ஓடிவிட்டார்கள்.
ஆச்சரியமாகப்பார்த்துகொண்டிருந்த 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன்,
சார,அடிக்கிற... என்றான்,
நான் சிரிப்பதைப்பார்த்துக்குழம்பியபடியே சென்றான்.
பாரதிதாசனின் வரிகள்தான் என் நினைவுக்கு வந்தன,
வீடுகளுக்கு இடையே மட்டுமல்ல,
ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே இடிக்கப்படவேண்டிய சுவர்கள் மட்டுமல்ல
கோட்டைகளே இருக்கின்றன.

கதகேளு...கதகேளு..!- 2


கதைகளின் உலகம், வசீகரமானது.
கனவுகளின் தாய் வீடு.
எல்லையில்லாக்கற்பனை.
உணர்வுகளின் சங்கமம்.
கணந்தோறும் புதுப்புது கருத்து தோன்றும்.
வார்த்தையுள் வசப்படா மாயம்.

குழந்தைகள் பாவம்,
கதைகளை விட்டே துரத்தப்பட்டுவிட்டார்கள்.
பெரியவர்களின் கதைகள் அவர்கள்மேல் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகின்றன.
குழந்தைகளெல்லாம் பெரியவர்களின் முகமூடியுள் திணிக்கப்பட்டுக்கிடக்கின்றார்கள்.
கதைசொல்லிகளே இல்லாமல் போய்விட்டார்கள்.
மாயக்கதைகளின் உலகம் குழந்தைகளைத்தேடி அலைந்துகொண்டிருக்கிறது.
கதைகளின் உலகிற்கு குழந்தைகளை கைபிடித்து அழைத்துச்செல்ல மூவர் முடிவு செய்தோம். சில முணுமுணுப்புகள். அதெப்படி ஆசிரியர், மாணவருடன் சேர்ந்து?
தூண்டுகோல்,சிறிது குத்தித்தானே தூண்டுகிறது!
முகமூடிகள் கழற்ற முகமூடி அணிந்தோம்.
முத்துக்குமார் நாடகக்கலைஞர், பாலா பிறவி நடிகன்.
நான் கிராமிய நடனக்காரனானாலும் நாடகம் நடிப்பதென்பது இரண்டாம் முறை. இரண்டுமே ஆசிரியரான பின்.
முதன்முறை, கம்பன் கழகப்போட்டியில் இராமன் வேடம்.
வாலி வதைப்படலம்.
பாலா வாலியாக கலக்க,
ஓரிரு வசனங்களுடன் முகம் முழுதும் நீலம் பாரித்துப்பாவமாய் நான்.
இம்முறை, பஞ்சதந்திரம். நீல நரி மற்றும் முயலாக.
வழக்கம்போல ரமணனின் கைவண்ணத்தில் விரைவாக முகமாற்றங்கள்.
பெரியவர்கள் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தார்கள்.
குழந்தைகளோடு குழந்தையானேன்.
குழந்தைகள் குதூகலமானார்கள்.
காட்டிற்குள் மிருகங்களுடன் ஆடிப்பாடி
பேசித்திரிந்தோம்.
மனிதனாய், நரியாய், முயலாய்......
நாள்தோறும் ஒப்பனை இல்லாமல் செய்வதுதானே.

கதகேளு...கதகேளு!


சிறுவர்களுக்கான கதைகள் எங்கே போயின?
வீட்டுச்சூழல் மாறி ஆண்டுகளாகிவிட்டன.
பள்ளிச்சூழல் மதிப்பெண் சுழலில் சிக்கித்தவித்தாலும் முப்பருவக்கல்வி குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது.
காலம்காலமாக நம்மிடையே உலவிவரும் பல்வேறு கதைகளை மாணவரிடையே கொண்டு சேர்க்கவேண்டுமென முடிவுசெய்தோம்.
சென்ற கல்வியாண்டில் மதிய உணவு இடைவேளையில் தமிழாசிரியர் முத்துக்குமாரும் நானும் கதைகளைச்சொல்லத்தொடங்கினோம்.
இந்த ஆண்டு 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக தமிழாசிரியர்கள் பாலா,முத்துக்குமார்,சிவா மூவரும் சேர்ந்து பல்வேறு நிகழ்வுகளை நடத்த முடிவு செய்தோம்.
வாசித்தலை மேம்படுத்தலே முதல் பணி என முடிவு செய்து, முதல் கட்டமாக எழுத்துக்களை விளையாட்டாக அறிமுகம் செய்யும் ' வாசி..நேசி...சுவாசி!' என்ற நிகழ்வினை நடத்தினோம்.

தொடர்ந்து வாசிப்பையும் கற்பனை,சிந்தனை மற்றும்பல திறன்களையும் வளர்க்கும்பொருட்டு 'கதகேளு...கதகேளு!' என்ற நிகழ்வை யோசித்தோம்.
கதையும் நாடகமும் கலந்து எளிய ஒப்பனையுடன் இருந்தால் நன்றாக இருக்குமென எண்ணினோம்.
மாணவர்கள் சுலபமாக நடித்துவிடுவார்கள். ஆசிரியர்களும் அவர்களோடு சேர்ந்து நடித்தால் என்ன?
ஆசிரியர் மாணவரிடையே இடைவெளி குறையுமே!
செயல்படுத்தினோம்.
பஞ்சதந்திரக்கதைகளில் இருகதைகள்.
ஒருவாரத்தில் ஆசிரியர் முத்துக்குமாரின் இயக்கத்தில் வடிவம் பெற்றது.
ஒப்பனை- முதுகலை உயிரியல் ஆசிரியர் ரமணன் மற்றும் சில மாணவர்கள்.
எங்கள் மதுரைக்கல்லூரி வாரியத்தைச்சார்ந்த தொடக்கப்பள்ளி மாணவ மாணவியரையும் அழைத்திருந்தோம்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் பஞ்சதந்திரக்கதைகள் குழந்தைகள் மத்தியில்.

ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அனைவரும் பல்வேறு மிருகங்களுடன் காட்டிற்குள் மகிழ்ச்சியாக உலவி வந்தோம்.
நிகழ்வின் நிறைவில் மகிழ்ந்த பள்ளிச்செயலர் திரு.எஸ்.பார்த்தசாரதி, நடித்த அனைத்து மாணவர்களுக்கும் சட்டைத்துணி போர்த்திக்கௌரவித்தார்.

மதுரை மாவட்டப்பள்ளிகளுக்கெல்லாம் சென்று இந்நிகழ்வை நடத்துங்கள் என்றும் கூறி எங்களை உற்சாகப்படுத்தினார்.