Showing posts with label நினைத்தது. Show all posts
Showing posts with label நினைத்தது. Show all posts

Saturday, 7 March 2015

04.12.2014
நேற்று காலைமுதலே பரபரப்பு.
12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனைத்தேடி காவல்துறையினர்.
காரணம்,
நண்பர்களுடன் சேர்ந்து மற்றொரு மாணவனைத்தாக்கியது.
முந்தியநாள் மாலையில் வெளியே நடந்த நிகழ்வு.
காரணம்,
பள்ளியில் அவர்கள் ஒரு குழுவாக அடித்ததற்கு பழிக்குப்பழி.

அடிக்கடி மாணவர்களின் சண்டைகள் பற்றிய செய்திகள்.
சண்டையிட்டுக்கொள்வது சாதாரணம்.
ஆனால், இப்போது வன்முறை,வெறி அதிகரித்துள்ளன.
மாணவர்களுக்கான கூட்டம் கூட்டப்பட்டது.
ஏறத்தாழ இரண்டுமணிநேரம் அறிவுரைகள்.
ஆசிரியர்கள் கோபமாக இருக்கிறார்கள்.
இயலாமையும் வெறுப்பும் பேச்சில்.
என்ன செய்வது?
மதிப்பெண்களை நோக்கிய ஓட்டத்தில்
மனப்பண்புகளை வளர்க்கத்தவறுகிறோமோ?
29.11.2014
வகுப்பறைக்குள் ஒரு மாணவன் கொல்லப்பட்டான்.
இதுவரை பள்ளிகளில் நடைபெற்ற அனைத்து வன்முறைகளும் மீண்டும் விவாதத்தில்.
வழக்கம் போல,
கல்வியாளர்கள், பத்திரிக்கைகளில் தொலைக்காட்சிகளில் விவாதிப்பார்கள். ஆசிரியர்கள்...மாணவர்கள்...பெற்றோர்கள்...சினிமா என்று பல்வேறு தரப்பையும் குறைகூறி.....
நீதி போதனை வகுப்புகள் இல்லை என்பது முக்கிய பொருளாக இருக்கும்.
துறைசார்ந்து பல மட்டங்களில் கூட்டங்கள் நடைபெறும்.

நீதிபோதனை வகுப்புகள் தேவைதான்.
ஒரு பாடவேளை மட்டும் நீதிக்கதைகள் சொல்வதால் பயன் கிடைத்துவிடுமா?
பள்ளி,வீடு,சமூகம் என சுற்றுப்புறம் அத்தனையும் ஒரு குழந்தைக்குப்பாடங்களாக அமைய வேண்டாமா?
பள்ளியில் எல்லா பாடவேளைகளும் வெறும் பாடம் நடத்துவதாக மட்டுமே இல்லாமல் ஆசிரியர் மாணவர் உரையாடல்கள் நடைபெறும் களமாக மாறவேண்டும்.
வீடுகளுக்கிடையே சுவர்களை இடிக்கவேண்டும் என்று பாரதிதாசன் சொன்னதுபோல,
வகுப்பறைச்சுவர்களை இடித்து ஆசிரியர்களும் மாணவர்களும் சுதந்திரமாய் வெளிப்படும்போது மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கலாம்.

Wednesday, 5 November 2014

கல்விகுறித்தும் ஆசிரியரின் அனுபவங்கள் குறித்தும் இப்போது தமிழில் நிறைய நூல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.
பல ஆண்டுகளாகவே ஆசிரியரின் அனுபவங்களை, கல்வி குறித்த தமது எண்ணங்களை வெளியிட்டுக்கொண்டே இருப்பவர்
பேராசிரியர் ச. மாடசாமி.
' எனக்குரிய இடம் எங்கே?' என்ற அற்புதமான அனுபவத்தொகுப்பே நான் வாசித்த இவரின் முதல் நூல்.

பேராசிரியர் ச.மாடசாமியின் எழுத்துக்கள்,
போலியான முகமூடிகள் ஏதுமில்லாத இயல்பான ஆசிரிய அனுபவங்களின் எளிய நடை வாசிப்போரை மயக்கும்.
தன்னையும் சுயவிமர்சனம் செய்துகொள்ளும் நேர்மை கொண்டவை.
இவரின் நூல்களிலிருந்தே 'ஆசிரியம்' குறித்த நூல்களை தேடித்தேடி வாசிக்கத்தொடங்கினேன், திரைப்படங்களை சேகரித்தேன்.
ஆசிரியர்கள், பள்ளி குறித்த திரைப்படங்களின் கதைகளை நண்பர்களுக்குச்சொல்லுவேன். இருப்பினும், படத்தைப்பார்த்தவர்கள் உரையாடினால் மேலும் பல செய்திகளை பேசலாமே என்று எண்ணுவேன். இது போல் நான், எனக்குள் ரசித்த பல படங்களைப்பற்றி பேராசிரியர் எழுதியிருப்பார். வாசிக்கும்போது மனம் துள்ளும். அப்படியான ஒரு படம், ' Good bye,Mr.Chipps'.
1939 இல் வெளியான கருப்பு வெள்ளை காவியம். இதை நாவலாக வாசித்த அனுபவத்தை சிறு நூலாக எழுதியிருப்பார்.
' ஆசிரிய முகமூடி அகற்றி' என்ற இவரில் நூலிலேயே மெக்கோர்ட் - அறிமுகமானார்.
 மெக்கோர்ட்டின் மொழிப்பாட வகுப்புகளை பல இடங்களில் என் வகுப்பு போலவே எண்ணி வியந்தேன்.
' ஆளுக்கொரு கிணறு' மறுத்தல் திறன், சுய விமர்சனம், அறிவொளி, மொழி, கல்வி குறித்த பல்வேறு செய்திகளை கற்றுத்தந்தது.
மதுரையில் வசிக்கிறார் என்றாலும் சந்திக்க இயலாமலே இருந்தது. ஒவ்வொரு புத்தகத்திருவிழாவிலும் சந்திப்பை தவறவிட்டிருக்கிறேன்.
இணையத்தில் கல்வி குறித்து எழுதும் செய்திகளுக்கு பேராசிரியரின் விருப்பமும் எண்ணப்பகிர்வும் மனதில் மகிழ்ச்சியை நிரப்பும்.


சில மாதங்கள் அமெரிக்காவில் இருந்த பேராசிரியர் மதுரை வந்துவிட்டார். முகநூல் வழியே தொடர்புகொண்டபோது, தொலை பேசி எண்ணை வாங்கி அவரே பேசினார்.
நாளை எங்கள் பள்ளிக்கே வந்து சந்திக்கிறேன் என்று அவர் சொன்ன போது அவரின் எழுத்துக்களைப்போலவே சொல்லிலும் எளிமை கண்டு வியந்துபோனேன்.
ஆவலோடு காத்திருக்கிறேன்.மனதுக்குள் பேசிக்கொள்கிறேன்.
பேராசிரியர் ச.மாடசாமி அவர்களுடனான உரையாடல் என் ஆசிரியப்பணியில் புது வேகம் தரும். இன்னும் பல்வேறு எண்ணங்கள் மனதுக்குள்.

Monday, 3 November 2014


நான் மாணவனாக இருந்தபோது,
எனது ஆசிரியர்கள் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று கனவு கண்டேனோ,
அப்படியொரு ஆசிரியராக வேண்டும் என்றே தினமும் முயல்கிறேன்.
" நான் சொல்வதை நீ கேளு!"
அவ்வப்போது தோன்றினாலும் அது சரியா? என்று சொல்லும் முன்போ, பின்னரோ யோசிக்கிறேன்.
வகுப்பறை, சிறைச்சாலை அல்ல.
அமைதியான வகுப்பறையை அதிகம் விரும்புவதில்லை.
அதற்காகவே உரையாடல்களை உருவாக்குகிறேன்.
வகுப்பறை கடந்த வெளியே மனதுக்கு மேலும் நெருக்கமானது.
எப்போதெல்லாம் வகுப்பறையை விட்டு வெளியேற முடியுமோ அப்போதெல்லாம் வகுப்பும்,
சுதந்திர வெளியில் உயிர்ப்புள்ளதாகிறது.
மரங்கள் நிறைந்த பள்ளியில் இருப்பவர்கள் பாக்கியசாலிகள்.
பள்ளிக்குள் இருக்கும் மரங்களே, போதி மரங்கள்.
நேற்று பிற்பகலில் 9 ஆம் வகுப்பு மாணவனின் தந்தை வந்திருந்தார். ஆட்டோ ஓட்டுநர்.
காலையில்தான் அவர் மகனை சற்றே கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியிருந்தேன். காதல்,காதலி, ரவுடியாவது, என்று பல இன்பங்களை பட்டியலிட்டிருந்தான்.
பையன் எப்படிசார் படிக்கிறான்?
ம்..நல்லா படிக்கிறான். பார்ப்போம். கொஞ்சம் பேச்சு அதிகமாயிருக்கு, வயசு அப்படி...படிச்சிடுவான்!
சார்...பெரியவனப்பத்திக்கூட எனக்கு எந்தக்கவலையும் இல்லை.சின்னவன் ரெம்ப சேட்டை பண்றான். என்ன செய்றதுன்னே தெரியல?
சின்னவன் எங்கள் பள்ளியில் 7 ஆம் வகுப்பில் படிக்கிறான்.
அவ்வப்போது பார்த்திருக்கிறேன். சேட்டைக்காரன்.

 சின்னப்பையன்தானே சரியாயிடுவான்.
இல்லசார்...இப்பவே சிகரெட் குடிக்குறான்...அடிச்சும் பாத்துட்டேன், திருந்த மாட்டேங்குறான்.


பார்க்கிறேன்.
ஒற்றைச்சொல்லோடு அதிர்ந்து நின்றுவிட்டேன்.

பல்வேறு எண்ணங்கள்.
நானும் சிறுவயதில், பீடி குடித்துப்பார்த்ததுண்டு. அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
என்ன இருக்கிறது?
என்ற ஆர்வத்தில் ஊரின் வேறு பகுதில் நண்பன்மூலம் வாங்கி,மறைத்து எடுத்து வந்து வீடு மாடியில் யாருமில்லாத வேளையில் பற்றவைத்தேன். கையில் பீடியை வைத்து தீக்குச்சியில் காட்டி,வாயில் வைத்து தீக்குச்சியைக்காட்டி ஒருவழியாக நெருப்பு பற்றியபின்
ஒரே உறி.....இருமல்...தொடர்ந்த இருமல்.
அன்றோடு முடிந்த ஆசை, இளமைப்பருவத்தில் சிறிது வந்து, முடிந்துபோனது.
எத்தனை பேர் பழக்கத்தை கைவிட இயலாமல் தவிக்கின்றனர்?
ஆர்வக்கோளாறு...தவறுகளை செய்யத்தூண்டுகிறது. பின் விளைவுகளை யார் சொல்வது?
பள்ளிக்கு முக்கிய பொறுப்பு உள்ளது.
அவ்வப்போது கண்காட்சிகள் நடத்தலாம்.
அறிவியல் கண்காட்சிபோல.

இப்போது கணேஷ்,சைனி கைனி என்றெல்லாம் பல்வேறு வகையான புகையிலைகளை வாயில் ஒதுக்கிவைத்துக்கொள்ளும் பழக்கம் மாணவரிடையே பரவிவருகிறது.
வாய்ப்புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.
இவற்றின் தீமைகள் குறித்த படவிளக்கங்களுடன் ஒரு கண்காட்சியை பள்ளியில் ஏற்பாடு செய்தால் மாணவர்கள் மனதில் மாற்றங்களை விதைக்கலாம் என நம்புகிறேன்.

இன்பம்


9 ஆம் வகுப்பில் தமிழ்ப்பாடம்.
உவமைக்கவிஞர் சுரதா எழுதிய 'இன்பம்' என்ற பாடலை நடத்தவேண்டும்.
ஏற்கனவே நான் இல்லாதபோது பயிற்சியாசிரியை நடத்திமுடித்திருந்தார்.
இருந்தாலும் மறுபடியும் நடத்தலாம் என்று நான் தொடங்கினேன்.
இன்பம் என்றால் என்ன?
என்ற கேள்வியோடு உரையாடலைத்தொடங்கினேன்.
மகிழ்ச்சி, ஆசை, விருப்பம் என்று ஆளுக்கொன்றாகச்சொன்னார்கள்.
எனக்கொரு யோசனை தோன்றியது.
ஆளுக்கொரு தாளை எடுத்து,
அவரவருக்கு இன்பம் தருபவற்றை எழுதச்சொன்னேன்.
நிறைய எழுதினார்கள்.
பயிற்சியாசிரியையிடம் அனைவரும் எழுதியதை கொடுத்து
வாசித்தபின் என்னிடம் தரச்சொன்னேன்.
மதியவேளையில் என்னிடம் அனைத்து தாள்களும் வந்துசேர்ந்தன. வாசித்துப்பார்த்தேன்.
கூட்டுக்குடும்பம்,பணம், நடிகர்,உணவு,விடுமுறை, என்று பலப்பல இன்பங்களுக்கு இடையே ஒரு சிலர்,
காதலியுடன் சினிமா செல்லுதல் இன்பம் , உணவகம் போவது இன்பம் என்றெல்லாம் எழுதியிருந்தனர்.

இவற்றையெல்லாம் வாசித்த பயிற்சியாசிரியை என்ன அதிர்ச்சியை சந்தித்திருப்பார்? என்று எண்ணிப்பார்த்தேன். நாளை கேட்கவேண்டும்.
இப்படி, மாணவர்களை எழுதத்தூண்டியது எது?
எனது வகுப்புகள் பல்வேறு உரையாடல்களின் களமாக இருந்திருக்கின்றன. நான் கொடுத்த சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருகிறதா?
மாணவர்களின் குடும்பச்சூழல் என்ன? விடலைப்பருவத்தில் இருக்கும் இவர்களுக்கு என்ன செய்திகளை சொல்லவேண்டும்?
என்று பலவாறு யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

எது இன்பம்?
மாணவர்கள் இன்பம் குறித்து எழுதிக்கொடுத்திருந்த தாள்களுடன் இன்றைய வகுப்பிற்குச்சென்றேன்.
காதல் குறித்து எழுதியிருந்தவர்களின் பெயர்களை மட்டும் சொல்லி யார் என்று பார்த்துக்கொண்டேன்.
பேசத்தொடங்கினேன்.
" நீங்கள் அனைவரும் பல்வேறு இன்பங்களை பட்டியலிட்டிருக்கின்றீர்கள். மகிழ்ச்சி. இப்போது நான் சொன்ன பெயர்கள் நன்றாக எழுதியவர்கள் என்று அர்த்தமில்லை.
சிலர் காதலியுடன் செல்வது பற்றியும் எழுதியிருக்கிறீர்கள்."
மாணவரிடையே சலசலப்பு.மகிழ்ச்சி.
" உங்கள் வயதும்,சுற்றுப்புறமும் அப்படி. சினிமாவும் அப்படித்தான் இருக்கிறது. உங்களுக்கு முன்னாள் இந்த வயதைக்கடந்து வந்தவர்கள் உங்கள் பெற்றோர்கள். அவர்களிடம் இதுபற்றிக்கேட்டால் சரியான விளக்கங்கள் சொல்லக்கூடும். பள்ளியில் ஆசிரியர்களும் சொல்லலாம். இது குறித்து அறிவுப்பூர்வமாக ஒருநாள் விவாதிப்போம்."
" ஏற்கனவே, படித்து முன்னேறியவர்கள் பலரின் கதைகளை உங்களுக்குச்சொல்லியிருக்கிறேன். நினைவில் கொள்ளுங்கள். நன்கு படித்து அறிவால் முன்னேறியவன், அவனுக்குப்பின் வரும் தலைமுறையை அறிவுடையதாக மாற்றுகிறான். உங்கள் தந்தையை விட நீங்கள் முன்னேறும்போது உங்கள் தலைமுறையே மாறும்."

உங்கள் பட்டியலில் பெரும்பாலும் ஆசையே அதிகம் இருக்கிறது.
ஆசை வேறு, இன்பம் வேறு.
ஆசை, அளவுக்கு மீறும்போது துன்பம் தரும்.
இன்பம், அளவுகடந்தாலும் இன்பமே தரும்.
லட்டு வேண்டும்.என்பது ஆசை. அளவுக்கு மீறினால் துன்பம்.
தாயின் முத்தம் இன்பம். எவ்வளவு கிடைத்தாலும் இன்பம்.
கவிஞர் சுரதா பட்டியலிடும் இன்பங்களை இப்போது பார்ப்போம்.
பாடம் தொடர்ந்தது.
மாணவர்கள் பல்வேறு சூழல்களில் இருந்து வருகிறார்கள்.
சொல்லிக்கொண்டே இருப்பது நம் கடமை. யாராவது கேட்பார்கள்.
ஒருநாள் அவர்கள் புத்திக்கு எட்டும்- என்று பயிற்சியாசிரியையிடம் சொன்னேன்.

கேள்வி



காலாண்டுத்தேர்வு விடுமுறை, NCC முகாம் எல்லாம் முடிந்து ஏறத்தாழ 20 நாட்கள் கழித்து பள்ளிக்கு சென்ற திங்களன்று சென்றேன்.
கடந்த ஒரு வாரகாலமாக பயிற்சி ஆசிரியைகள் எனது வகுப்பை நன்றாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று உதவித்தலைமையாசிரியர் கூறினார்.
9 ஆம் வகுப்பிற்குச்சென்றேன்.
இரு பயிற்சியாசிரியைகள் இருந்தார்கள்.
ஒருவர் 9 ஆம் வகுப்பு, மற்றவர் 6 ஆம் வகுப்பு - தமிழ்.
இருவரின் முதன்மைப்பாடங்களும் வேறு.
ஆசிரியை நன்றாகப்பாடம் நடத்தியதாகவும் தெளிவாக விளக்கம் சொல்லி முதல் இயலில் செய்யுள் பகுதியை முடித்து எழுதிப்போட்டாகிவிட்டது என்றனர், மாணவர்கள்.
குறளில் ' கேள்வி' அதிகாரம்.
முடித்து மனப்பாடப்பாடல்கள் படித்து, இன்று தேர்வு.
வினாவிடைகளைக்காட்டினர்.

நான் இவ்வளவு விரைவாக நடத்துவதில்லையே? என்றேன்.
"மாணவர்கள் சொன்னார்கள். இருந்தாலும் வகுப்பிற்கு தினமும் வந்ததால் இரு செய்யுள் பகுதியையும் நடத்தி முடித்துவிட்டேன்." என்று பயிற்சியாசிரியை சொன்னார்.
பரவாயில்லையம்மா! மீண்டும் பார்ப்போம்.
வழக்கம்போல புத்தகங்களை மூடி வைத்துவிட்டு மாணவர்களிடம் கேட்டேன்.
'கேள்வி' என்றால் என்ன?
பெரும்பாலானோர் 'செவி' என்று பதில் சொன்னார்கள்.
புத்தகத்தை எடுத்துப்பார்க்கச்சொன்னேன்.
சான்றோர் உரைகளைக்கேட்டல் - என்று பொருள் இருந்தது.
பயிற்சியாசிரியையை அருகில் அழைத்தேன். வெறுமனே பாடத்தை நடத்தி எழுதிப்போட்டு படிக்கச்செய்வது மட்டுமே மொழிப்பாட ஆசிரியரின் பணியல்ல.
வகுப்பறை ஆசிரியர் மையத்திலிருந்து மாணவர் மையப்பட்டதாக மாறிக்கொண்டிருக்கிறது.
கற்றல் கற்பித்தல் முறைகள் புதிது புதிதாக வந்துகொண்டிருந்தாலும் பாடங்களை வாசித்து நடத்துதலையே ஆசிரியர்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள்.
புதிதாக என்ன முறைகளைப்பின்பற்றலாம்?
யோசிக்கவேண்டும். பார்ப்போம்.

தோடுடைய செவியன்


சக ஆசிரிய நண்பர் கடுமையான கோபமாகப்பேசிக்கொண்டிருந்தார். ஓர் மாணவன் தலை குனிந்து நின்றுகொண்டிருந்தான்.
"இதென்ன, ரவுடி மாதிரி !,
உன் தலையும் ஆளும்.....!"
நண்பரின் கோபம் அதிகமானது.
மாணவன் பதிலேதும் சொல்லாமல் நின்றிருந்தான்.
என்னவென்று கேட்டேன்.
ஒரு காதில் தோடு போட்டுக்கொண்டு பள்ளிக்குள் வந்ததாக கூறினார்.
பெரும்பாலும் இளம்பருவத்தில் இதுபோல் 'அடையாளச்சிக்கலில்'
தவிக்கிறார்கள்.
என்ன செய்யலாம்?



வளரிளம்பருவத்து அடையாளச்சிக்கலை கடந்துதான் நாமும் வந்திருப்போம்.
'நான் பெரியவனாகிவிட்டேன் மற்றவர்களிலிருந்து நான் வித்தியாசமானவன் ' என்பதை உலகுக்குச்சொல்ல ஒரு சிறுவனுக்கு வழிகள் எப்படித்தெரியும்?
பெரும்பாலும் சினிமா காட்டும் பாதையில் தான் இன்றைய இளைஞன் நடக்கிறான்.
நடை,உடை,பேச்சு,முடி என மாற்ற முடிந்ததையெல்லாம் மாற்றுகிறான்.
வீட்டிலிருந்தும் அந்நியனாகிவிடுகிறான்.
சரியான வழியை ,சொல்லிலும் செயலிலும் காட்டுவது யார் ?எப்படி?

எனது மாணவர்களிடம் பேசும்போது சினிமாவில் இருந்தே உதாரணங்கள் சொல்லுவேன்.
சிவப்பா அழகா இருப்பவர்கள் மட்டுமே கதாநாயகனாக நடிக்க முடியும்.
ஆனா, கறுப்பா சரியா தமிழ் பேசத்தெரியாமல் கதாநாயகனாக ரஜினிகாந்த் வரக்காரணம் அவரோட 'நடை'-style- அது யாரையும் போலச்செய்வது அல்ல, தனித்தன்மையானது. அவர் பெரிய நடிகராயிட்டார் அப்படின்னு அவர் மாதிரியே நாம் எவ்வளவு நல்லா செய்தாலும்,
'அப்படியே ரஜினி மாதிரியே இருக்கு!'
என்று அந்தப்புகழும் அவருக்கே போகும்.
ரஜினியைப்போன்ற முக ஒப்புமை கொண்டவர்கள் நடிக்க வந்தார்கள், காணாமல் போணார்கள்.
ஆனால், கறுப்பாகவும் அழகில்லை என்றாலும் திறமைமிக்க பலர் இப்போது திரைத்துறையில் உள்ளனர்.

அறிவுரை.


கேட்க, யாருக்கும்பிடிக்கது.
சொல்ல, எல்லோருக்கும் பிடிக்கும்.
அறிவுரை சொல்லும்போது, அது நம்மை ஒரு படி மேலே வைக்கிறது.
நம் கர்வம் - முனைப்பு, திருப்தியடைந்துகொள்கிறது.
நான் உயர்ந்தவன்.
அதிலும் ஆசிரியர்களாகிய நாம் அறிவுரை சொல்வதில் அப்பாக்களை மிஞ்சிவிடுவோம்.
வகுப்பறையும் மாணவர்களும் கிடைத்துவிட்டால் நம்மில் பலருக்கு மகிழ்ச்சி பொங்கும்.
நாம் சொன்னவுடன் அவர்கள் மாறிவிடவேண்டும்,
என்றும் எதிர்பார்ப்போம். நம்புவோம்.
நாம் மாறுவோமா? முடியுமா? ஒரே அறிவுரையில்!
சொல்வதைவிட செயல்,
சொற்களைக்கடந்த உரையாடல் மாணவர்களுடன் சாத்தியமாகும்போது மாற்றங்கள் சாத்தியமாகும்.
அறிவுரை சொல்லுதல்-
என்பதே ஒரு போதைதானே!
நானும் முகநூலில் எழுதுவதை அறிவுரை என நினைத்துக்கொள்ள மாட்டேன்.
எண்ணங்களின் பகிர்வு. அவ்வளவுதான்.

நவரச நாயகன் / நாயகி.

05.10.2014

இன்று உலக ஆசிரியர் தினம்.
வாழ்த்துக்கள்.
வகுப்பறை.
ஆசிரியர். எதிரே மாணவர்கள்.
மாணவர்கள் ஒவ்வொருவராக வாசிக்கிறார்கள்.
ஆசிரியர் அவ்வப்போது விளக்கம் சொல்கிறார்.
வாசிக்கும்போது புத்தகத்தையும்,பேசும்போது ஆசிரியரையும் மாணவர்கள் பார்க்கிறார்கள்.
# இரவு நேரம் தூக்கம் வரவில்லை என்றால் ஏதேனும் புத்தகத்தை வாசியுங்கள். விரைவில் தூக்கம் வந்துவிடும்.
# நமக்கு செய்தி பிடிக்கும் என்றாலும் விளக்கப்படங்கள் இல்லாமல் 45 நிமிடங்கள் வெறுமனே செய்தி வாசிப்பவர் மட்டுமே வாசித்துக்கொண்டிருந்தால் பொறுமையாகக்கேட்க முடியுமா?
பெரும்பாலும் வகுப்பறைகள் மட்டும் ஏன் இப்படி நடைபெற வேண்டும்?
ஆசிரியர் மாணவர்கள் அனைவரையும் பார்த்துக்கொண்டே பேசலாம். மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் ஒருவரையே பார்க்கிறார்கள். கவனிக்க முயல்கிறார்கள்.
அவர்களின் கவனம் நம்மீது நிலைக்க என்ன செய்யலாம்?
ஆசிரியர் நவரச நாயகன் / நாயகி ஆக வேண்டும்.
சொல்லும் செய்திக்கேற்ற முகபாவங்களை வெளிப்படுத்தவேண்டும்.
குரலில் ஏற்ற இறக்கங்கள், உணர்ச்சி வேண்டும்.
ஒரே இடத்தில் நிற்காமல் வகுப்பறை முழுதும் இயங்கவேண்டும்.
ஆசிரியர் சிறந்த நடிகராக இருக்க முயலவேண்டும்.
மாணவர்கள் அமரும் முறையை மாற்றியமைக்கவும் முயற்சிக்கலாம்.
அவ்வப்போது வகுப்பைவிட்டு வெளியே மாணவர்களை அழைத்துச்சென்று வட்டமாக அமரவைத்து பாடம் நடத்தலாம்.
வகுப்பறை என்னும் நாடக மேடையில் நாமும் மாணவர்களும் நடிகர்களே.
நாமே செயல்பட்டுக்கொண்டிராமல் மாணவர்களையும் ஈடுபடவைப்பதிலேயே கற்றல் கற்பித்தல் நிகழ்கிறது.

ஆசிரியர் நவராத்திரி - 9 - அமைதி.


நவராத்திரியை முன்னிட்டு நவரசங்கள்- ஒன்பது உணர்ச்சிகள், ஆசிரியருக்குப்பயன்படுபவை என்று மனதில் தோன்றியதை எழுதலாம் என இத்தொடரைத்தொடங்கினேன்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப
(தொல்காப்பியம், மெய் 3)
என்று எட்டு மெய்ப்பாடுகளுடன் தொல்காப்பியர் நின்றுவிட்டார். நவரசம் என்று பலரும் பல்வேறு சுவைகளைச்சொல்கின்றனர். குழப்பம் வேண்டாம் என்று நான் தொல்காப்பியரைப்பின்பற்றினேன்.
ஒன்பதாவது சுவையாக பெரும்பாலானோர் சொல்வது ' அமைதி'.
எண்வகை மெய்ப்பாடுகளும் இல்லாநிலை என்பதால் தனியே தொல்காப்பியர் கூறாது விடுத்தார் என்றும் கொள்ளலாம்.
அமைதி.
பிறரின் கவனத்தை தன்மீது திருப்ப வேண்டும் என்பதற்காக நாம் பல்வேறு விளையாட்டுகளை விளையாடுகிறோம் என்று மனோதத்துவம் கூறும். அதில் முக்கியமான ஒன்று ' Kiss me or Kick me'
எனும் விளையாட்டு. குழந்தைகள் நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காவே சேட்டைகளைச்செய்கின்றார்கள்.
ஆசிரியர், கோபப்படாமல் முகத்தில் அமைதியைக்காட்டி அன்பாக எடுத்துக்கூறும்போது மனமாற்றம் மாணவரிடையே சாத்தியமாகும்.
உணர்வுகளைக்கடந்த அமைதி புத்தநிலை.
அன்பின் முழுமை.

ஆசிரியர் நவராத்திரி - 8 - உவகை.


மகிழ்ச்சி.
அனைவரும் விரும்பும் சுவை.
பாராட்டுக்கள் மகிழ்ச்சியைத்தரும்.
ஆசிரியர்களாகிய நாம் பாராட்டப்பட்டிருக்கிறோமா?
நமது புதிய முயற்சிகளுக்காக,
வெளிப்படையாக நாம் பாராட்டப்படுவதுபோல் தோன்றினாலும் அதிகமாக விமர்சிக்கப்படுகிறோம்.
குறை சொல்லப்படுகிறோம்.
மகிழ்ச்சியில் முழுமையாகப்பங்கு பெறுபவர்களும் பகிர்ந்து கொள்பவர்களும் குறைவு.
குழந்தைகள்,
பாராட்டைப்பெரிதும் விரும்புகின்றனர்.
முதலிடம் பெறுபவர்களை மட்டுமல்ல,
வகுப்பறையில் ஒவ்வொரு குழந்தையையும் பாராட்ட வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் பாராட்டிப்பாருங்கள்.
வகுப்பறை மாற்றங்களின் விளைநிலமாகும்.

ஆசிரியர் நவராத்திரி - 7 - பெருமிதம்.


என தந்தையார் சொல்லுவார்,
" இந்த வருஷமாவது நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பம் குடுடா!"
அவருக்கு என்னவோ அந்த விருதின்மேல்
அவ்வளவு ஆசை.( அவர் ஆசிரியரல்ல).
நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் அதிக கேலிக்குரியதாகவே மாறி வருகிறது.
நியாயமாக சிலருக்குக்கிடைத்தாலும் " நான் நேர்மையாக வாங்கினேன்" மற்றவர் போல் 'வாங்கவில்லை' என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.
எங்கேனும் நமது மாணவர்கள் நம்மிடமோ பிறரிடமோ,
" என் ஆசிரியரால் நான் நன்றாக இருக்கிறேன்"
என்று சொல்லக்கேட்கும்போது நினைத்தாலும் மறைக்கமுடியாதபடி
ஆசிரியரின் முகத்தில் தோன்றும் பெருமிதமே,
அவர் வாழ்நாளில் பெரும் உயரிய விருது.

இன்றைய நிலையில் ஆசிரியர்கள் பல்வேறு விமர்சனங்களை எதிர்நோக்கிச்செயல்பட வேண்டியுள்ளது.
எல்லாவிதமான உணர்வுகளின் எதிர்மறையான தாக்குதல்களிலிருந்து ஆசிரியரைக்காக்கும் ஒரே மெய்ப்பாடு ' பெருமிதம்'.
ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
நான் ஆசிரியர்.
நாளைய தலைமுறை என் கையில்.
நானே,
வருங்காலத்தலைமுறையை வடிக்கும் சிற்பி.

ஆசிரியர் நவராத்திரியில் 'அச்சம்' குறித்த பதிவின் கருத்துக்களில் CCE குறித்த செய்திகள் மகிழ்ச்சியைத்தந்தன. அது குறித்து......
Muthukrishnan Ellappan நீங்கள் சொல்வது உண்மையே. ஆனால், பல்வேறு செயல்பாடுகள் இருப்பதால் புதிய கல்விமுறை போன்ற தோற்றமும் CCE முறை தருகிறது.
CCE முறையை பல ஆசிரியர்கள் விரும்பவில்லை.ஏன் ?
நீண்டகாலமாக பின்பற்றிவந்த நடைமுறைகள் மாறும்போது அனைத்து ஆசிரியர்களுக்கும் தெளிவாக எடுத்துச்சொல்லப்பட்டிருக்கவேண்டும்.
ஓரிரு நாட்களில் சட்டம்போல சில செய்திகள் சொல்லப்பட்டன.
ஆசிரியர்கள் செயலில் இறங்கியபின் என்னென்ன சந்தேகங்கள் ஏற்படுகின்றன? என்று பார்த்து சரி செய்யப்படவில்லை.
SSA பயிற்சிகளும் "இப்படிச்செய்" என்று சொல்வது போலவே அமைந்தன.
மாணவர்களுடன் நேரடியாக செயல்படுபவர்கள் ஆசிரியர்களே.
அவர்களின் சந்தேகங்கள் முறையாகத்தீர்த்துவைக்கப்படவே இல்லை.

விளைவு.....
செயல்பாடுகள் இயந்திரத்தனமாக மாறியிருக்கின்றன.
அரசுத்தேர்வுகள் மதிப்பெண்ணை நோக்கியே ஓடும்போது பெற்றோர்கள் எல்லா வகுப்புகளிலும் அதையே விரும்பினர்.
( CCE பற்றிய செய்திகள் பெற்றோரை அடையவே இல்லை)
மேல்வகுப்பு ஆசிரியர்களும் RTE குறித்த சரியான புரிதல் இன்றி
"தர்ம பாஸ்" என்று கேலிபேசும் நிலையை CCE அடைந்துகொண்டிருக்கிறது.
ஆங்காங்கே சில ஆசிரியர்களே CCE குறித்த புரிதலோடு இயங்கிவருகிறார்கள்.
ஆங்கில மருத்துவம்போல உடனடி விளைவுகள் எதிர்பார்க்க இயலாது எனினும் செயல்பாடுகள் முறையாகக்கவனிக்கப்பட வேண்டும்.
9 ஆம் வகுப்புகளில் CCE செயல்பாடுகள் இன்னும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை.
புதிய முறைகள் அறிமுகம் ஆகும்போது ஆசிரியர்களும் ஆர்வமுடன் தேடவேண்டும். CCE ஆசிரியரின் புதுமைச்சிந்தனைகளுக்கு இடம் தரக்கூடியது.
வகுப்பறைக்கு வெளியே வர ஆசிரியர்கள் முயன்றால் புதிய தலைமுறை உருவாகும்.
30.09.2014
ஆசிரியர் நவராத்திரியில் 'அச்சம்' குறித்த பதிவின் கருத்துக்களில் CCE குறித்த செய்திகள் மகிழ்ச்சியைத்தந்தன. அது குறித்து......

 Muthukrishnan Ellappan   நீங்கள் சொல்வது உண்மையே. ஆனால், பல்வேறு செயல்பாடுகள் இருப்பதால் புதிய கல்விமுறை போன்ற தோற்றமும் CCE முறை தருகிறது.
CCE முறையை பல ஆசிரியர்கள் விரும்பவில்லை.ஏன் ?
நீண்டகாலமாக பின்பற்றிவந்த நடைமுறைகள் மாறும்போது அனைத்து ஆசிரியர்களுக்கும் தெளிவாக எடுத்துச்சொல்லப்பட்டிருக்கவேண்டும்.
ஓரிரு நாட்களில் சட்டம்போல சில செய்திகள் சொல்லப்பட்டன.
ஆசிரியர்கள் செயலில் இறங்கியபின் என்னென்ன சந்தேகங்கள் ஏற்படுகின்றன? என்று பார்த்து சரி செய்யப்படவில்லை.
SSA பயிற்சிகளும் "இப்படிச்செய்" என்று சொல்வது போலவே அமைந்தன.
மாணவர்களுடன் நேரடியாக செயல்படுபவர்கள் ஆசிரியர்களே.
அவர்களின் சந்தேகங்கள் முறையாகத்தீர்த்துவைக்கப்படவே இல்லை.

விளைவு.....
செயல்பாடுகள் இயந்திரத்தனமாக மாறியிருக்கின்றன.
அரசுத்தேர்வுகள் மதிப்பெண்ணை நோக்கியே ஓடும்போது பெற்றோர்கள் எல்லா வகுப்புகளிலும் அதையே விரும்பினர்.
( CCE பற்றிய செய்திகள் பெற்றோரை அடையவே இல்லை)
மேல்வகுப்பு ஆசிரியர்களும் RTE குறித்த சரியான புரிதல் இன்றி
"தர்ம பாஸ்" என்று கேலிபேசும் நிலையை CCE அடைந்துகொண்டிருக்கிறது.

ஆங்காங்கே சில ஆசிரியர்களே CCE  குறித்த புரிதலோடு இயங்கிவருகிறார்கள்.
ஆங்கில மருத்துவம்போல உடனடி விளைவுகள் எதிர்பார்க்க இயலாது எனினும் செயல்பாடுகள் முறையாகக்கவனிக்கப்பட வேண்டும்.
9 ஆம் வகுப்புகளில் CCE  செயல்பாடுகள் இன்னும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை.
புதிய முறைகள் அறிமுகம் ஆகும்போது ஆசிரியர்களும் ஆர்வமுடன் தேடவேண்டும். CCE ஆசிரியரின் புதுமைச்சிந்தனைகளுக்கு இடம் தரக்கூடியது. 
வகுப்பறைக்கு வெளியே வர ஆசிரியர்கள் முயன்றால் புதிய தலைமுறை உருவாகும்.

Saturday, 1 November 2014

ஆசிரியர் நவராத்திரி - 6 - வெகுளி.


ஆசிரியர் வெகுளியுடன் இருக்கவேண்டும்.
மனிதன், சிந்திக்கத்தெரிந்தவன், ஆறாம் அறிவு உண்டு.
நல்லது கெட்டது எனப்பகுத்தறியும் பண்புடையவன்.
நம்மைவிடக்குறைவான அறிவு படைத்த உயிரினங்கள் எல்லாமே தக்க நேரம் வரும்போது வெகுளி பெருக்குகின்றன.
ஆசிரியர்கள்?
கற்ற கல்வி, சிந்தனையைத்தூண்டியதால் அமைதி காக்கிறோமா?
சமூகத்தில் அன்றாடம் சாதாரணமாக நிகழும் கேடுகள் குறித்து தார்மீக வெகுளி கொண்டு எதிர்வினையாற்றியிருக்கிறோமா?
சமூகக்கேடுகள் குறித்து நாம் வெகுளி பெருக்கி,
மாணவருக்கும் சொல்லித்தரவேண்டும்.
கதைகள், உணர்வுப்பூர்வமான கதைகள் பிஞ்சு மனங்களில் பதிக்கப்படவேண்டும்.
சமூகத்தின் தவறுகள் மேல் எழும் நமது வெகுளி மாணவருக்கும் மாற்றப்படும்போது புதிய தலைமுறை உதயமாகும்.

"அந்தப்பையன் கள்ளங்கபடம் இல்லாதவன்,வெகுளி!"
என்ற ஒரே பொருளிலேயே 'வெகுளி' என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது.
வெகுளியின் நேரடியான பொருள் -கோபம்.
ரௌத்திரம் பழகு.

ஆசிரியர் நவராத்திரி - 5 - அச்சம்.


'வாத்தியார்ன்னு சொன்னாலே வயித்துல புளியக்கரைக்கும்'
போன தலைமுறை மாணவர்கள்.
'வகுப்புக்குள்ள போறதே, காட்டுக்குள்ள போறமாதிரி'
இன்றைய ஆசிரியர்கள்.
மொத்தத்தில் ' பள்ளி ' அச்சத்தின் உறைவிடம்.

மாணவர்களுக்கு கல்வி மேல் ஏற்படும் அச்சம், ஆசிரியரின் மேலுள்ள அச்சம் போலத்தோன்றுகிறது.
அதிகாரிகள், விளக்கப்படாத கல்விமுறைகள், விவாதிக்கும் ஊடகங்கள்,கேலி பேசும் பொதுமக்கள், பணிச்சுமை, புரிந்துகொள்ள இயலாத மாணவர்கள், என்று பலமுனைத்தாக்குதலில்
பகிர்தலுக்கு வழியின்றி மன அழுத்தத்தில் ஆசிரியர்கள்.
பயம்..அச்சம்.
அச்சம், கண்களை மூடிக்கொள்ளச்செய்யும்.
அச்சம் தவிர்த்து விழி திறந்தால் வழி கிடைக்கும்.
ஆசிரியர்கள் தன்னையும் உணர்ந்துகொண்டு புதிய தலைமுறையை உருவாக்கும் உன்னத பணியில் இருப்பவர்கள்.
பள்ளி எனும் வயலில் முக்கிய களை- அச்சம்.
அச்சம் தவிர்.

ஆசிரியர் நவராத்திரி - 4 - மருட்கை.


உறவினர் வீடுகளுக்குச்செல்கிறோம். குழந்தைகள் இருந்தால் என்ன செய்வார்கள்?
நன்கு பழகவில்லை என்றாலும் நாம் சிரித்த முகத்துடன் அணுகினால்
நெருங்குவார்கள்.
அடுத்து....
அவர்களின் பொக்கிஷங்களை எடுத்துவந்து காட்டத்தொடங்குவார்கள்.
பொம்மை, சிறு பொருட்கள்,வரைந்த படங்கள்....
முதல் பொருளைக்காட்டும்போதே நம் சிரிப்புடன் சிறிது வியப்பையும் கலந்து ஆச்சரியத்துடன் பார்த்தோம் என்றால் அடுத்த பொருட்கள் தொடரும்.
இன்னும் ரகசியமாக அவர்கள் சேர்த்துவைத்திருக்கும் மூடிகள்,ரப்பர்,
மயிலிறகு என்று குழந்தைகளின் உண்மையான பொக்கிஷ உலகுக்குள் நாமும் நுழைத்து வியந்து, குழந்தையாகலாம்.
பள்ளியிலும் மாணவர்கள் தமது படைப்புகளுக்கு இதைத்தான் ஆசிரியரிடம் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், சிலர் திருத்தத்தொடங்கிவிடுகிறோம்.

புன்னகையுடன் அவ்வப்போது சேரும் ஆச்சரியமே அதை பொன்னகை ஆக்கும்.
சிரிப்பின்மேல் சிறிது மருட்கை தூவி மாணவரின்
படைப்புகளை அணுகுவோம்.
உள்ளத்தில் இடம் பிடிப்போம்.

ஆசிரியர் நவராத்திரி - 3 - இளிவரல்.


மூன்றாம் சுவை இளிவரல்- இழிப்பு.
மதிய உணவு இடைவேளைகளில் எனக்கு மைதானத்தில் மாணவர்களை கவனிக்கும் பொறுப்பு.
சுற்றிக்கொண்டே இருப்பேன்.
மாணவர்கள் சாப்பிடும்போது
ஆசிரியரைப்பார்த்தால் அன்போடு கேட்பார்கள்,
சாப்பிடுங்க,
பெரும்பாலும் பழையசோறு அல்லது மோரும் ஊறுகாயும்.பலவகையான உணவுகளும் இருக்கும்.
சாப்பிடுங்க' என்று நீட்டும் மாணவரிடமிருந்து சிறிது எடுத்துச்சாப்பிடாமல் இருந்ததேயில்லை.
எனக்குப்பிடிக்காத காய்கறியாக இருந்தால், இது பிடிக்காது என சிரித்தபடி மறுப்பேன்.
எனக்குக்கொடுத்தபின்பே சாப்பிடும் மாணவர்களும் உண்டு.
சிறிதளவு உணவு-சிரித்தமுகம்
அன்பைப்பரிமாற இதுவும் ஒரு வழி.
சிலர்,
மாணவர் ஏதேனும் நீட்டியவுடன் முகம் சுழிப்பார்கள்.
மோப்பக்குழையும் அனிச்சம்.......என்று சொல்லித்தருவதை விட செயலில் காட்டுவதே அழகு.
ஒருவகையில் மாணவரும் விருந்தினரே.

இளிவரல் - அருவருப்பு, ஆசிரியர் விலக்கவேண்டிய சுவைகளுள் முக்கியமானது.

ஆசிரியர் நவராத்திரி - 2- அழுகை.


இரண்டாம் நாளான இன்று ஆசிரியருக்கு அலங்காரம், அழுகை.
ஒன்பது சுவைகள்- ரசங்கள்- ஆசிரியரின் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்று எழுதத்தொடங்கினேன்.
இரண்டாவது சுவையே அழுகை.
ஆசிரியருக்கு அழுகை எவ்வாறு முக்கியமாகும்?
யார்தான் அழுகையை விரும்புவார்?
கதையே இல்லாவிட்டாலும் நகைச்சுவைத்தோரணங்களால் ஆன திரைப்படங்கள் ஓடிவிடுகின்றன.
அழுகை அதிகம் என்று நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வசூலில் தோல்வியடைந்து விருதுகளை மட்டுமே பெறுகின்றன.
ஆனால், வீடுகள் தோறும் தொலைக்காட்சித்தொடர்கள் பெரும்பாலும் சோகம் பிழிகின்றன.
வாழ்வில் மகிழ்ந்த தருணங்களை விட சோகமான நிகழ்வுகளே மனதைவிட்டு அகலாமல் தங்கிவிடுகின்றன.
சில வேளைகளில், கருத்துக்களைச்சொல்லும்போது இடையே சிறிது சோகம், அழுகை கலக்கும்போது மாணவரின் மனதில் நன்கு பதியும்.
வெறுமனே செய்தியாகவோ, உணர்வுக்கலப்பின்றி தட்டையாகவோ சொல்லாமல் உணர்வின் உன்னத வெளிப்பாடாக அமையும்போது
வாழ்நாள் முழுதும் மாணவர் மனதில் நீங்காமல் நிலைக்கும்.

பகத்சிங் நாட்டுக்காக செய்த தியாகத்தை சொல்லும்போதே வீரமும் அழுகையும் மாறிமாறி சொற்களில் கலந்து உணர்வுப்பூர்வமாக வெளிப்படும்போது நாட்டின் விடுதலைக்கு முன்னோர் செய்த தியாகங்கள் பசுமரத்தாணியாகும்.
இதுவே இன்றைய அத்தியாவசியத்தேவை.

ஆசிரியர் நவராத்திரி - 1 - நகை.


நவராத்திரி தொடங்கிவிட்டது.
கோவில்களில் கொலு, கோலாகலம்.
பள்ளிகளில் தேர்வு.
நவராத்திரி கொண்டாட காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இந்த ஒன்பது நாளும் ஆசிரியருக்கு ஏற்ற ஒன்பது செய்திகளைப்பற்றி சிந்தித்தால் என்ன?
என்று தோன்றியது.
நவரசங்களை எடுத்துக்கொண்டேன்.
ஆசிரியர், தேர்ந்த நடிகராக இருக்கவேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குணத்தைப்பற்றி என் சிற்றறிவுக்கு எட்டிய எண்ணங்களை எழுதுகிறேன்.

ஆசிரியர் நவராத்திரி - 1 - நகை.
நவரசங்களில் இது ஒன்றே மற்றவர்களை எளிதில் கவர்வது.
சிரிப்பு. நகை. புன்னகை.
ஆசிரியராக பணியேற்றவுடன் பள்ளி சென்ற முதல் நாள்.
மனம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது.
சக ஆசிரியர்கள் அன்பைத்தெரிவிக்க, யாரைப்பார்த்தாலும் முகம் நிறைய ஆர்வமும் சிரிப்புமாக என் உணர்வை வெளிப்படுத்திக்கொண்டிருந்தேன்.
வகுப்பறைக்குச்செல்ல வேண்டிய நேரம்.
தலைமையாசிரியரின் சொல்லுக்கேற்ப ஒரு ஆசிரியர் என்னை அழைத்துச்சென்றார்.
வழியில்,
தம்பி,
இப்படியே சிரிச்சுக்கிட்டே இருக்காதீங்க. பசங்க,ரவுடிப்பசங்க.
கொஞ்சம் சிரிச்சாலும் தலைல ஏறி உக்காந்துடுவாங்க.
கொஞ்சம் கடுமையா,குரலை சத்தமா உயர்த்தி பேசுங்க.
எதாவது கிண்டலா பேசுனா யோசிக்காம பட்டுன்னு அடிச்சிடுங்க. அதுவும் பெரிய பையனா இருந்தா பயப்படாம அடிச்சிடுங்க. எல்லோரும் பயந்துருவானுக. அப்புறம் கவலையே இல்ல.
எனக்கு பயம் ஆரம்பமாகிவிட்டது.
நான் எப்போதுமே சிரித்த முகத்துடன் இருந்தே பழக்கப்பட்டவன்.
வகுப்பில் மாணவர்களிடம் என்னை அறிமுகம் செய்துவைத்து நீண்ட எச்சரிக்கையும் செய்துவிட்டு கிளம்பினார்.
மாணவர்கள் அமைதியாக என்னைப்பார்த்தனர்.நானும்.
ஒருவன் பேச்சைத்தொடங்கினான்.
சார், உங்க பேரு?
சொன்னேன்.
எங்க பேர கேளுங்க.
பேச ஆரம்பித்தேன்.
தம்பிகளா, வழக்கமான இதுமாதிரி சடங்குகளெல்லாம் எனக்குப்பிடிக்காது.
உங்களுக்கு நான் பாடம் சொல்லித்தர வந்திருக்கேன்.
என்னோட வாத்தியார் எப்படி இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேனோ அப்படி நான் உங்ககிட்ட நடந்துக்கணும்னு ஆசைப்படுறேன்.
நான் எப்படி நடந்துக்கணும்னு நீங்க விரும்புறீங்க?
ஆளுக்கொரு தாளெடுத்து எழுதுங்க.
இன்றுவரை என் முதல் வகுப்புகள் இப்படியே தொடங்குகின்றன.
மாணவரிடம் சிரித்த முகம் காட்டுகிறேன்.
அதையே என்னிடமும் காட்டுகிறார்கள்.
சிலர் சேட்டைகள் செய்யலாம்.
சிலர் ஏமாற்றலாம்.
வேறு ஒரு நேரத்தில் சிரித்தபடி மறைமுகமாகச்சொல்வேன்,
நீ,அப்படி ஏமாற்றியது எனக்குத்தெரியும்.
மாறிவிடுவார்கள்.
வீட்டில் பிள்ளைகள் செய்வதில்லையா?
ஒற்றைச்சிரிப்பு மாற்றங்கள் தரும்.
நம்புகிறேன். இன்றுவரை பொய்க்கவில்லை.