Monday, 3 November 2014

நேற்று பிற்பகலில் 9 ஆம் வகுப்பு மாணவனின் தந்தை வந்திருந்தார். ஆட்டோ ஓட்டுநர்.
காலையில்தான் அவர் மகனை சற்றே கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியிருந்தேன். காதல்,காதலி, ரவுடியாவது, என்று பல இன்பங்களை பட்டியலிட்டிருந்தான்.
பையன் எப்படிசார் படிக்கிறான்?
ம்..நல்லா படிக்கிறான். பார்ப்போம். கொஞ்சம் பேச்சு அதிகமாயிருக்கு, வயசு அப்படி...படிச்சிடுவான்!
சார்...பெரியவனப்பத்திக்கூட எனக்கு எந்தக்கவலையும் இல்லை.சின்னவன் ரெம்ப சேட்டை பண்றான். என்ன செய்றதுன்னே தெரியல?
சின்னவன் எங்கள் பள்ளியில் 7 ஆம் வகுப்பில் படிக்கிறான்.
அவ்வப்போது பார்த்திருக்கிறேன். சேட்டைக்காரன்.

 சின்னப்பையன்தானே சரியாயிடுவான்.
இல்லசார்...இப்பவே சிகரெட் குடிக்குறான்...அடிச்சும் பாத்துட்டேன், திருந்த மாட்டேங்குறான்.


பார்க்கிறேன்.
ஒற்றைச்சொல்லோடு அதிர்ந்து நின்றுவிட்டேன்.

பல்வேறு எண்ணங்கள்.
நானும் சிறுவயதில், பீடி குடித்துப்பார்த்ததுண்டு. அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
என்ன இருக்கிறது?
என்ற ஆர்வத்தில் ஊரின் வேறு பகுதில் நண்பன்மூலம் வாங்கி,மறைத்து எடுத்து வந்து வீடு மாடியில் யாருமில்லாத வேளையில் பற்றவைத்தேன். கையில் பீடியை வைத்து தீக்குச்சியில் காட்டி,வாயில் வைத்து தீக்குச்சியைக்காட்டி ஒருவழியாக நெருப்பு பற்றியபின்
ஒரே உறி.....இருமல்...தொடர்ந்த இருமல்.
அன்றோடு முடிந்த ஆசை, இளமைப்பருவத்தில் சிறிது வந்து, முடிந்துபோனது.
எத்தனை பேர் பழக்கத்தை கைவிட இயலாமல் தவிக்கின்றனர்?
ஆர்வக்கோளாறு...தவறுகளை செய்யத்தூண்டுகிறது. பின் விளைவுகளை யார் சொல்வது?
பள்ளிக்கு முக்கிய பொறுப்பு உள்ளது.
அவ்வப்போது கண்காட்சிகள் நடத்தலாம்.
அறிவியல் கண்காட்சிபோல.

இப்போது கணேஷ்,சைனி கைனி என்றெல்லாம் பல்வேறு வகையான புகையிலைகளை வாயில் ஒதுக்கிவைத்துக்கொள்ளும் பழக்கம் மாணவரிடையே பரவிவருகிறது.
வாய்ப்புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.
இவற்றின் தீமைகள் குறித்த படவிளக்கங்களுடன் ஒரு கண்காட்சியை பள்ளியில் ஏற்பாடு செய்தால் மாணவர்கள் மனதில் மாற்றங்களை விதைக்கலாம் என நம்புகிறேன்.

No comments:

Post a Comment