Monday, 20 May 2013

உஸ்தாத் ஹோட்டல்


மதுரையைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் என்ற மனிதர், சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் chef வேலைக்குச் செல்லும் முன் தனது ஊருக்கு வந்தார். சாலையோரம் உணவின்றித் தவித்த முதியவரைப் பார்த்தபோது மன மாற்றமடைந்து ,
ஆதரவின்றித் தவிப்போருக்கு உணவு சமைத்துத் தருபவராக மாறினார்.  இன்று அவர் தொடங்கிய  அக்க்ஷயா டிரஸ்ட்  ஆதரவற்றவர் காப்பகமாக வளர்ந்துள்ளது.
இந்த மாமனிதரின் கதை, கேட்போரை நெகிழச் செய்யும்.
இதையே தனது கதையின் உச்சமாக வைத்து அற்புதமான திரைப்படமாக மலையாளத்தில் உருவாக்கியுள்ளார் அன்வர் ரஷீத்.
மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற அத்திரைப்படம் "உஸ்தாத் ஹோட்டல்".
தாயை இழந்து, சகோதரிகளுடன் வளர்ந்ததால் சமையலில் ஆர்வமுடன் வளர்கிறான் பைசல். சுவிட்சர்லாந்திற்கு படிக்கச் சென்றவன் அப்பாவிற்குத் தெரியாமல் சமையல் கலை படிக்கிறான்.இலண்டனில்  வேலை கிடத்த கையோடு தனது ஊரான கோழிக்கோட்டுக்கு வருகிறான்.சமையல் கலைஞன் என்று தெரிந்ததால் திருமண நிச்சயம் தடைப்படுகிறது. அப்பாவின் கோபத்திற்கு ஆளாகி வீட்டைவிட்டு வெளியேறுகிறான். தாத்தாவிடம் செல்கிறான்.
பைசலின் தாத்தா கரீம், உஸ்தாத் ஹோட்டல் என்ற உணவு விடுதியை கோழிக்கோடு கடற்கரையில் நடத்திவருகிறார்.
அங்கு தயாராகும் பிரியாணி அனைவராலும் விரும்பப்படுவது.
பேரனைக்கண்ட தாத்தா மகிழ்கிறார்.நான் அயல் நாட்டில் சமையல் கலை படித்தவன் என்று பைசல் கூறும்போது,
"வயித்த யாராலயும் நிரப்ப முடியும்,மனசயும்  நிரப்புரதுதான் முக்கியம்"
என்று கரீம் சொல்லுவதிலேயே அவரின் சிறப்பு வெளிப்படுகிறது. அங்கேயே தாத்தாவுடன் அனைத்து வேலைகளையும் கவனிக்கிறான். தாத்தாவின் சிபாரிசால் அருகிலிருக்கும் 5 நட்சத்திர விடுதியில் வேலைக்குச் சேர்கிறான்.ஐரோப்பிய கேரளா உணவுத்திருவிழாவில் நல்ல பெயர் கிடக்கிறது.

பைசலின் காதல், உஸ்தாத் ஹோட்டலை ஆக்கிரமிக்க நினைக்கும் 5 நட்சத்திர விடுதி உரிமையாளரின் கோபம்- அதனால் உஸ்தாத் ஹோட்டல் மூடப்பட்டு மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்படுதல் எனக்  கதை  சீராகச் செல்கிறது.

ஐரோப்பிய கேரளா உணவுத்திருவிழாவிற்கு  வந்த chef  மூலம் பைசலுக்கு பாரிஸில் வேலை கிடக்கிறது.தாத்தாவின் உடல் நலம் குறைகிறது. நல்ல வேலைக்குச் செல்லும்வேலையில் தாத்தா  இப்படி உணர்வுப்பூர்வமான தடையாக இருக்கிறாரே என வருந்துகிறான்.
மருத்துவமனையில் இருக்கும் தாத்தா,பைசலை அழைத்து,
உனக்கு விருப்பமான வேலைக்குப் போ.அதற்கு முன் மதுரையிலிருக்கும் எனது நண்பரான நாராயணன் கிருஷ்ணனிடம் இந்தக் கடிதத்தையும் பணத்தையும் கொடுத்துவிட்டு வா எனக் கூறுகிறார்.
பைசல் மதுரை பயணமாகிறான். நாராயணன் கிருஷ்ணனைப் பார்த்து கடிதம் மற்றும் பணத்தக் கொடுக்கிறான்.கரிமின் பேரன் என அறிந்து அவரும் மகிழ்கிறார். கடிதத்தைப் படிக்கிறார்.

" அன்பு நண்பரே,இந்தக் கடிதம் கொண்டு வருபவன் என் பேரன்.எப்படிச் சமைப்பது என்று அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.ஏன்? சமைக்க வேண்டுமென நீங்கள்தான் சொல்லித்தர வேண்டும்"

 நாராயணன் கிருஷ்ணன்வீட்டில் நிறையப் பேருக்கு உணவுதயாராகிக் கொண்டிருக்கிறது.அவருடன் சென்று அனைத்தையும் பார்க்கிறான் பைசல்.மறுநாள் ஒரு மனநலம் குன்றியோர் விடுதிக்குச் சமைக்கச் செல்லும் நாராயணன் கிருஷ்ணன்,பைசலை பிரியாணி செய்யச் சொல்கிறார்.தாத்தா சொல்லித்தந்தபடி செய்கிறான் பைசல். குழந்தைகளின் அன்பு அவனை மாற்றுகிறது.ஊர் திரும்புகிறான். தாத்தா இறந்துவிட்ட செய்தி அறிந்து வருந்துகிறான்,உஸ்தாத் ஹோட்டலைத் தொடர்ந்து நடத்துகிறான்.


படத்தில் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். கரீமாக நடித்துள்ள முதுபெரும் நடிகர் திலகன் இன்று நம்மிடையே இல்லையே என்ற எண்ணமே கண்களை நனைக்கிறது.

மனதை நிறைக்கும் கதை.எவ்வளவோ ஓடி ஆடிச் சம்பாதிக்கிறோம்,ஏன் ? என்று எண்ணியதுண்டா?



1 comment: