Saturday, 1 November 2014

ஆசிரியர் நவராத்திரி - 1 - நகை.


நவராத்திரி தொடங்கிவிட்டது.
கோவில்களில் கொலு, கோலாகலம்.
பள்ளிகளில் தேர்வு.
நவராத்திரி கொண்டாட காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இந்த ஒன்பது நாளும் ஆசிரியருக்கு ஏற்ற ஒன்பது செய்திகளைப்பற்றி சிந்தித்தால் என்ன?
என்று தோன்றியது.
நவரசங்களை எடுத்துக்கொண்டேன்.
ஆசிரியர், தேர்ந்த நடிகராக இருக்கவேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குணத்தைப்பற்றி என் சிற்றறிவுக்கு எட்டிய எண்ணங்களை எழுதுகிறேன்.

ஆசிரியர் நவராத்திரி - 1 - நகை.
நவரசங்களில் இது ஒன்றே மற்றவர்களை எளிதில் கவர்வது.
சிரிப்பு. நகை. புன்னகை.
ஆசிரியராக பணியேற்றவுடன் பள்ளி சென்ற முதல் நாள்.
மனம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது.
சக ஆசிரியர்கள் அன்பைத்தெரிவிக்க, யாரைப்பார்த்தாலும் முகம் நிறைய ஆர்வமும் சிரிப்புமாக என் உணர்வை வெளிப்படுத்திக்கொண்டிருந்தேன்.
வகுப்பறைக்குச்செல்ல வேண்டிய நேரம்.
தலைமையாசிரியரின் சொல்லுக்கேற்ப ஒரு ஆசிரியர் என்னை அழைத்துச்சென்றார்.
வழியில்,
தம்பி,
இப்படியே சிரிச்சுக்கிட்டே இருக்காதீங்க. பசங்க,ரவுடிப்பசங்க.
கொஞ்சம் சிரிச்சாலும் தலைல ஏறி உக்காந்துடுவாங்க.
கொஞ்சம் கடுமையா,குரலை சத்தமா உயர்த்தி பேசுங்க.
எதாவது கிண்டலா பேசுனா யோசிக்காம பட்டுன்னு அடிச்சிடுங்க. அதுவும் பெரிய பையனா இருந்தா பயப்படாம அடிச்சிடுங்க. எல்லோரும் பயந்துருவானுக. அப்புறம் கவலையே இல்ல.
எனக்கு பயம் ஆரம்பமாகிவிட்டது.
நான் எப்போதுமே சிரித்த முகத்துடன் இருந்தே பழக்கப்பட்டவன்.
வகுப்பில் மாணவர்களிடம் என்னை அறிமுகம் செய்துவைத்து நீண்ட எச்சரிக்கையும் செய்துவிட்டு கிளம்பினார்.
மாணவர்கள் அமைதியாக என்னைப்பார்த்தனர்.நானும்.
ஒருவன் பேச்சைத்தொடங்கினான்.
சார், உங்க பேரு?
சொன்னேன்.
எங்க பேர கேளுங்க.
பேச ஆரம்பித்தேன்.
தம்பிகளா, வழக்கமான இதுமாதிரி சடங்குகளெல்லாம் எனக்குப்பிடிக்காது.
உங்களுக்கு நான் பாடம் சொல்லித்தர வந்திருக்கேன்.
என்னோட வாத்தியார் எப்படி இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேனோ அப்படி நான் உங்ககிட்ட நடந்துக்கணும்னு ஆசைப்படுறேன்.
நான் எப்படி நடந்துக்கணும்னு நீங்க விரும்புறீங்க?
ஆளுக்கொரு தாளெடுத்து எழுதுங்க.
இன்றுவரை என் முதல் வகுப்புகள் இப்படியே தொடங்குகின்றன.
மாணவரிடம் சிரித்த முகம் காட்டுகிறேன்.
அதையே என்னிடமும் காட்டுகிறார்கள்.
சிலர் சேட்டைகள் செய்யலாம்.
சிலர் ஏமாற்றலாம்.
வேறு ஒரு நேரத்தில் சிரித்தபடி மறைமுகமாகச்சொல்வேன்,
நீ,அப்படி ஏமாற்றியது எனக்குத்தெரியும்.
மாறிவிடுவார்கள்.
வீட்டில் பிள்ளைகள் செய்வதில்லையா?
ஒற்றைச்சிரிப்பு மாற்றங்கள் தரும்.
நம்புகிறேன். இன்றுவரை பொய்க்கவில்லை.

No comments:

Post a Comment