Showing posts with label நூல் விமர்சனம். Show all posts
Showing posts with label நூல் விமர்சனம். Show all posts

Wednesday, 5 November 2014

கல்விகுறித்தும் ஆசிரியரின் அனுபவங்கள் குறித்தும் இப்போது தமிழில் நிறைய நூல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.
பல ஆண்டுகளாகவே ஆசிரியரின் அனுபவங்களை, கல்வி குறித்த தமது எண்ணங்களை வெளியிட்டுக்கொண்டே இருப்பவர்
பேராசிரியர் ச. மாடசாமி.
' எனக்குரிய இடம் எங்கே?' என்ற அற்புதமான அனுபவத்தொகுப்பே நான் வாசித்த இவரின் முதல் நூல்.

பேராசிரியர் ச.மாடசாமியின் எழுத்துக்கள்,
போலியான முகமூடிகள் ஏதுமில்லாத இயல்பான ஆசிரிய அனுபவங்களின் எளிய நடை வாசிப்போரை மயக்கும்.
தன்னையும் சுயவிமர்சனம் செய்துகொள்ளும் நேர்மை கொண்டவை.
இவரின் நூல்களிலிருந்தே 'ஆசிரியம்' குறித்த நூல்களை தேடித்தேடி வாசிக்கத்தொடங்கினேன், திரைப்படங்களை சேகரித்தேன்.
ஆசிரியர்கள், பள்ளி குறித்த திரைப்படங்களின் கதைகளை நண்பர்களுக்குச்சொல்லுவேன். இருப்பினும், படத்தைப்பார்த்தவர்கள் உரையாடினால் மேலும் பல செய்திகளை பேசலாமே என்று எண்ணுவேன். இது போல் நான், எனக்குள் ரசித்த பல படங்களைப்பற்றி பேராசிரியர் எழுதியிருப்பார். வாசிக்கும்போது மனம் துள்ளும். அப்படியான ஒரு படம், ' Good bye,Mr.Chipps'.
1939 இல் வெளியான கருப்பு வெள்ளை காவியம். இதை நாவலாக வாசித்த அனுபவத்தை சிறு நூலாக எழுதியிருப்பார்.
' ஆசிரிய முகமூடி அகற்றி' என்ற இவரில் நூலிலேயே மெக்கோர்ட் - அறிமுகமானார்.
 மெக்கோர்ட்டின் மொழிப்பாட வகுப்புகளை பல இடங்களில் என் வகுப்பு போலவே எண்ணி வியந்தேன்.
' ஆளுக்கொரு கிணறு' மறுத்தல் திறன், சுய விமர்சனம், அறிவொளி, மொழி, கல்வி குறித்த பல்வேறு செய்திகளை கற்றுத்தந்தது.
மதுரையில் வசிக்கிறார் என்றாலும் சந்திக்க இயலாமலே இருந்தது. ஒவ்வொரு புத்தகத்திருவிழாவிலும் சந்திப்பை தவறவிட்டிருக்கிறேன்.
இணையத்தில் கல்வி குறித்து எழுதும் செய்திகளுக்கு பேராசிரியரின் விருப்பமும் எண்ணப்பகிர்வும் மனதில் மகிழ்ச்சியை நிரப்பும்.


சில மாதங்கள் அமெரிக்காவில் இருந்த பேராசிரியர் மதுரை வந்துவிட்டார். முகநூல் வழியே தொடர்புகொண்டபோது, தொலை பேசி எண்ணை வாங்கி அவரே பேசினார்.
நாளை எங்கள் பள்ளிக்கே வந்து சந்திக்கிறேன் என்று அவர் சொன்ன போது அவரின் எழுத்துக்களைப்போலவே சொல்லிலும் எளிமை கண்டு வியந்துபோனேன்.
ஆவலோடு காத்திருக்கிறேன்.மனதுக்குள் பேசிக்கொள்கிறேன்.
பேராசிரியர் ச.மாடசாமி அவர்களுடனான உரையாடல் என் ஆசிரியப்பணியில் புது வேகம் தரும். இன்னும் பல்வேறு எண்ணங்கள் மனதுக்குள்.

Tuesday, 4 November 2014

எது சரியான கல்வி?


முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. 
கல்வி குறித்த சிந்தனைகளோடு இறையன்பு இ.ஆ.ப.
எழுதியுள்ள சிறு நூல்.
சரியான பாதையில் கற்கிறோமா? என்று மாணவர்கள் சுய பரிசோதனை செய்துகொள்ள இந்நூல் உதவியாக இருக்கும்.
ஆசிரியர்களுக்கும் கல்வி குறித்த விவாதங்களை மாணவரிடையே எழுப்ப இந்நூல் அறிமுகமாக இருக்கும்.
மனப்பாடத்தையும் மதிப்பெண்ணையும் விட்டுவிட்டு வாழ்க்கையோடு கல்வியை எப்படித்தொடர்பு படுத்தலாம்?
படைப்பாற்றலை வளர்த்தலே கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும். என்று பல்வேறு கோணங்களில் சிந்தனையைத்தூண்டும் பெரிய கருத்துக்களடங்கிய சிறு நூல்.

நூலிலிருந்து,

சரியான விடைகள், சரியான வினாக்களிலிருந்தே விடுபடத்தொடங்குகின்றன.
சாதாரண நிகழ்வுகளை கல்வியோடும், படிக்கிற பாடங்களை வாழ்க்கையோடும் தொடர்புபடுத்திப்பார்க்கிறபோது நாம் விசாரணையை ஆரம்பிக்கிறோம்.
படைப்பாக்கத்திறன் உள்ளவர்கள் எந்தப்பாடத்தையும் அதற்கான காரணங்கள், விளைவுகள் குறித்த விவரங்களுடன் தீவிர மனப்பான்மையுடன் அணுகுவார்கள்.


Monday, 3 November 2014


பயிற்சியாசிரியைகள் இருவருமே ' ஆயிஷா' வாசித்துவிட்டனர்.
நல்லா இருக்கு, சார்.
இன்னும் கொஞ்சப்பேர் வாசிக்கிறாங்க.
' ஆயிஷா' நல்ல தொடக்கம் தரும்.
கல்விகுறித்து மேலும் வாசிக்க ஆர்வத்தைத்தூண்டும். என்றேன்.
தொடர்ந்து சில புத்தகங்கள் தருவேன்.
இருவருமே வாசித்துவிட்டு திருப்பித்தந்துவிட வேண்டும்.
வாசிக்க வாசிக்க, புதுப்புத்தகங்கள் தருவேன். என்றேன்.
மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர்.
இரா.நடராசன், பேரா.மாடசாமி, ஜான் ஹோல்ட், என்று பல்வேறு அற்புத ஆளுமைகளின் புத்தகங்கள்,மற்றும் பல்வேறு புத்தகங்கள் இருக்கின்றன.
எதைக்கொடுக்கலாம்?
எல்லாமே அற்புதமானவை.
டோட்டோ சான், கனவு ஆசிரியர் - இரு நூல்களையும் கொடுத்தேன்.
சனி,ஞாயிறு இரு நாட்களில் வாசித்துவிடலாம்.
அவசரமில்லாமல் ரசித்துப்படியுங்கள்.
எடுத்துச்சென்றிருக்கிறார்கள்.

ஆயிஷா- நூலை வாசிக்கக்கொடுத்தேன்.என்ற முந்தைய பதிவைக்கண்ட நண்பர்களில் சிலர் எங்கு கிடைக்கும்?எனக்கும் வேண்டும்! என்று ஆர்வமுடன் கேட்டிருந்தனர்.
ஆசிரியர்,பள்ளி, கல்விமுறைகள் குறித்து வாசிக்கச்சுவையான நூல்கள் பல உள்ளன.
புத்தகக்கடைகளில் இல்லாத ஊர்களில் இருப்பவர்கள் நகரங்களுக்கு செல்லும்போது வாங்கிக்கொள்ளலாம்.

டோட்டோ சான்
ஜப்பானின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர்.
தனது குழந்தைப்பருவத்தில் படித்த 'டோமோயி'பள்ளியைப்பற்றிய நினைவுத்தொகுப்பே டோட்டோ சான்- அவரின் செல்லப்பெயர்.
டோட்டோ சான், பல்வேறு பள்ளிகளில் இருந்து நீக்கப்படுகிறாள். சேட்டைக்காரி என்று அவளை ஏற்க எந்தப்பள்ளியும் முன்வரவில்லை.
'டோமோயி' பள்ளி அவளை ஈர்க்கிறது.மகிழ்வுடன் பள்ளி செல்கிறாள்.
பழைய ரயில் பெட்டிகளே வகுப்பறைகள்.செயல்முறைகள் மிக்க பாடங்கள்.
தன வாழ்வில் பள்ளி ஏற்படுத்திய மாற்றங்களை டோட்டோசான் அற்புதமாக எழுதியிருக்கிறார்.
குறுகிய காலமே இயங்கிய அப்பள்ளியில் பயின்ற பலரும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.
இந்நூலை நேஷனல் புக் டிரஸ்ட் - வெளியிட்டிருக்கிறது.


கனவு ஆசிரியர்.
பல்வேறு துறைகளில் புகழ்பெற்றவர்கள், தங்களது பள்ளிக்காலம் , கல்வி குறித்த சிந்தனைகள் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு
கனவு ஆசிரியர்.
வாசிக்க வாசிக்க, நாம் ஆசிரியர் என்பதில் பெருமிதமும் இன்னும் அதிகம் செயல்படவேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படும்.
க.துளசிதாசன் தொகுப்பாசிரியர்.
பாரதி புத்தகாலயம் வெளியீடு.

Friday, 31 October 2014

லியோ டால்ஸ்டாய் - சொற்களின் பிரம்மா.


டால்ஸ்டாய் பிறந்தநாள்.
9 ஆம் வகுப்பு மாணவர்களிடம் டால்ஸ்டாயின் படைப்புகள். சிறப்புகள், The Last Station திரைப்படத்தின் கதை ஆகியவற்றை சொன்னேன்.
மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

டால்ஸ்டாயின் படைப்புகளில் என்னை மிகவும் கவர்ந்தது 'அன்னா கரீனினா'.
அன்னாவை நானாகவே உணர்வேன். ஒருமுறைக்குமேல் படிக்கவேயில்லை. ஒரே முறையில் உள்ளம் ஒன்றி உணர்வுடன் கந்து வாசித்திருக்கிறேன். இரு வேறு திரைப்படப்பிரதிகள் இருந்தும் பார்க்க இயலவில்லை. அன்னாவை நானாக உணர்கிறேன். அன்னா ஆண்களால் வஞ்சிக்கப்பட்டவள்.அவர்களின் தவறுகளை அவளின் தவறுகளாக எண்ணி தண்டனையை தனக்குத்தானே கொடுத்துக்கொள்பவள். அவளின் இறப்பை என்னால் மீண்டும் வாசிக்கவோ பார்க்கவோ இயலாது.அன்னாவை நானாகவே உணர்கிறேன்.

டால்ஸ்டாய் உணர்வுகளை சொற்களில் வடித்த  பிரம்மன்.

Thursday, 8 May 2014

ராஜீவ் காந்தி சாலை- நரகத்தின் வழி

           

விநாயக முருகனின் 'ராஜீவ் காந்தி சாலை' நாவல், காமம் சொல்லும் கதைகளுக்கே உரிய எதிர்ப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்திய நாவல்.


ஒரு படைப்பாளியின்முதல் படைப்பிற்கே உரிய அனைத்து வலுவான அம்சங்களையும் உள்ளடக்கியது "ராஜீவ்காந்தி சாலை'.

ஐ.டி நிறுவனங்களின் அசுரத்தனமான வளர்ச்சி(வீக்கம்) சமூகத்தில் ஏற்படுத்தும் எல்லாவித மாற்றங்களையும் அப்பட்டமாகப் பதிவுசெய்கிறார் விநாயக முருகன்.

ஐ.டி.நிறுவனங்களின் வளர்ச்சி மனிதரிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை எவ்வளவு பெரிதாக்கியிருக்கிறது? பொருளாதாரத்தைமட்டுமேவிரும்பிய  மனிதர்கள்  தன் வாழ்வில் இழந்தவை, அழிந்த கிராமங்கள், காமம் என சகல தளங்களிலும் வீரியமுடன் பயணிக்கிறது நாவல்.


 பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துவரும் இன்றைய
சூழலில் காமம் குறித்து இந்திய சமுதாயம் விவாதிக்கவேண்டியதன் அவசியத்தை இந்நாவல் வலியுறுத்துவதாகவே  நினைக்கிறேன்.

எவ்வளவோ அற்புதமான காட்சிகள் நாவலெங்கும் விரவியிருந்தாலும்
அன்னம்,மீன்குழம்பு சமைத்து எடுத்துக்கொண்டு செட்டியாரைப் பார்த்துவரும் ஒரு அத்தியாயம் முதுமைக்காதலையும் வாழ்வின் தேவையையும் அழுத்தமாகப்பதிவுசெய்கிறது.

இன்றைய சமுதாயம் கட்டாயமாகப் படிக்கவேண்டிய நாவல் மட்டுமல்ல,நிறைய விவாதிக்கவும் வேண்டிய நிகழின் கண்ணாடி,'ராஜீவ்காந்தி சாலை'.

Tuesday, 6 May 2014


விந்தைக்கலைஞனின் உருவமில்லாச்சித்திரம்....
 

எழுத்தாளர்களைப்போற்றாத சமூகம் எனப்பலரும் குறைப்பட்டுக்கொள்ளும் தமிழ்ச்சமூகத்தில் ஓவியர்களின் நிலையை எப்படி விவரிக்க முடியும்?
பல நாடுகளில், வாழும் காலத்தில் கவனிக்கப்படாத பல ஓவியர்கள் இன்று ஓவிய உலகில் நாள்தோறும் பேசப்படும் மகா கலைஞர்களாக இறவாப் புகழடைந்திருக்கிறார்கள்.
ஆனால், மூத்த குடியாகிய தமிழ் சமூகத்தில் எப்போதாவது ஓவியர்களைப்பற்றிய புத்தகங்கள் தமிழில் வெளிவருவதுண்டு.

சி.மோகனின் முதல் நாவலாக வெளிவந்து சென்ற சென்னைப்புத்தகக்கண்காட்சியில் பெரிதும் பேசப்பட்ட நாவல்,
விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்.



காலத்தைத்தாண்டிச் சிந்தித்து,தன் கனவுலகில் நாயகனாக வாழ்ந்து,33 வயதில் கனவுலகிற்குப் பெயர்ந்தவர் ,ஓவியர் ராமானுஜம்.
அவரின் வாழ்க்கை பற்றிக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சிறப்பாக நாவலை எழுதியுள்ளார் சி.மோகன்.



பதிப்புலகம் நன்கு வளர்ந்துள்ள இன்றைய சூழலில் ஓர் உன்னத ஓவியக்கலைஞனின் வாழ்க்கைச் சித்திரம், அவன் வரைந்த ஒரு ஓவியம் கூட

இல்லாமல் வெளிவருவது,எவ்வளவு பெரிய அவமானம்!
  (அட்டைப்படம் தவிர.அதுவும் ஓவியர் ஆதிமூலம் வரைந்த ராமானுஜத்தின் கோட்டோவியத்துடன் கலந்து இருக்கிறது)

எழுத்தில் விவரிக்கப்பட்ட செய்திகளை எண்ணத்தில் வாங்கி, கனவில் ஓவியமாகப் பார்க்க வாசகர் என்ன, ராமானுஜமா?



ராமானுஜத்தின் சில ஓவியங்கள்,உங்களின் பார்வைக்கு.(இணையத்தில் எடுத்தவை...பதிவேற்றியவர்களுக்கு நன்றி.)
அலை வாழ்க்கை 
Breaking the Waves படத்தைப்பற்றி முகநூல் மூலமே அறிந்தேன்.
உடனே படத்தைப்பார்த்துவிட வேண்டுமென மனம் துடித்தது.


டென்மார்க் நாட்டில் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் பெஸ் என்ற பெண்ணே முக்கிய பாத்திரம்.
கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் கட்டுப்பாடான கிராமம். பெஸ், இறை நம்பிக்கை மிகவும் உடையவள்.குழந்தை உள்ளம் படைத்தவள். இயான் என்பவரை மணக்கிறாள். கணவரை உயிராக நேசிக்கிறாள்.
என்னை நிறுவனத்தில் வேலைசெய்யும் இயான் ஒரு விபத்தில் சிக்கி உடல் செயல்பாட்டை இழந்து படுத்த படுக்கையாகிறார்.
'இனி என்னால் பயனில்லை,வேறு திருமணம் செய்துகொள்' என இயான் சொல்ல, மறுக்கும் பெஸ் தனது காதல் இயானைக்குணப்படுத்தும் என நம்புகிறாள்.


இயானுக்கு விபரீத ஆசை ஒன்று தோன்றுகிறது,
பெஸ்,வேறு ஆணுடன் உறவுகொண்டு அதைத் தன்னிடம் கூறவேண்டும்.
அதிர்ச்சியடையும் பெஸ், கணவன் மீது கொண்ட காதலால் அவனின் ஆசையை நிறைவேற்றத்தொடங்குகிறாள்.
ஊர் பழிக்கிறது.பெஸ் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. கடவுளோடு பேசுவதாக நம்பி எப்போதும் போல அவளே கடவுளாகவும் பேசிக்கொள்கிறாள்.இயேசு அவளுடனே இருப்பதாக ஆணித்தரமாக நம்புகிறாள்.
இயான் உடல்நிலை மோசமாகிறது. மருத்துவரின் வார்த்தைகளை நம்ப மறுக்கும் பெஸ் இயான் எழுந்து நடமாடுவார் என நம்புகிறாள்.
அதிர்ச்சிகரமான இறுதிக்கட்டத்தில் பெஸ் இறக்கிறாள்,
இயான் பிழைக்கிறார்.


பெஸ்,பாவி.எனவே இறுதிச்சடங்குகள் செய்யாமல் புதைத்துவிட வேண்டுமென ஆலயத்தில் முடிவுசெய்கின்றனர்.
நண்பர்கள் உதவியுடன் பெஸ் உடலை கடலுக்குள் எடுத்துச்சென்று ஜல சமாதியாக்குகிறார் இயான்.
அனைவரும் ஆச்சரியப்படும்படியாக வானிலிருந்து மணியோசை கேட்கிறது.
இரண்டரை மணிநேரம் ஓடும் இப்படம் முழுவதும் பெஸ் ஆக நடித்திருக்கும்  Emma Watson நம் மனதில் நிறைகிறார். கடவுளுடன் பேசும் காட்சிகள் நெகிழ்ச்சியானவை. ஒரு குழந்தைபோல படம் முழுவதும் நம்மையும் அவருடன் அழைத்துச்செல்கிறார்.
காதல்,அன்பு, நம்பிக்கையின் வலிமையை எளிமையாகக் கூறியதிலேயே இப்படம் வெற்றியடைகிறது.
படத்தின் இறுதிக்காட்சியில் வானிலிருந்து மணி ஒலிப்பது,பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்றபோதும் நம் மனம் நம்புகிறது என்பதே இப்படத்தின் வெற்றி.
இயான்,தன் மனைவியிடம் வேறு திருமணம் செய்துகொள் எனச் சொல்லும்போது ரத்தக்கண்ணீர் திரைப்படத்தின் இறுதிக்காட்சி என் மனதில் நிழலாடியது.

Sunday, 20 October 2013

பவா

எல்லா நாளும் கார்த்திகை
வாசிப்பை நேசிப்பவர்கள் அறிந்த பெயர் பவா செல்லதுரை.
அவரைப் பற்றிப் பிறர் எழுதியவற்றை வாசிப்பவர்களுக்கு
திருவண்ணாமலையில் அவர் வீட்டிற்கு நாமும் போக மாட்டோமா? என்ற ஏக்கம்  ஏற்படுவது தவிர்க்க இயலாதது.
அவரைப் போலவே அவரின் எழுத்துக்களும் எளிமையானவை,இனிமையானவை,வலிமையானவை.
வம்சி வெளியீடாக வந்திருக்கும் "எல்லா நாளும் கார்த்திகை"
பவாவின் கட்டுரைத்தொகுப்பு.
கலை,இலக்கியம் மற்றும் திரைத்துறை சார்ந்த ஆளுமைகளைப் பற்றிய பாவாவின் சொற்சித்திரங்கள் நிறைந்தது ,எல்லா நாளும் கார்த்திகை.

ஒவ்வொரு கட்டுரையையும் வாசிக்கும்போது அந்த ஆளுமைக்கு அருகில் நம்மைக் கைபிடித்து அழைத்துச்செல்கிறார் பவா.முடிவில் நாமே அவராக மாறி அந்த ஆளுமையுடன் கலந்து விடுவதே பவாவின் வெற்றி.

பாலு மகேந்திரா பற்றியது முதல் கட்டுரை.
புதிய படத்தின் கதை பற்றிய உரையாடலில் பாலு மகேந்திரா கேட்கிறார், 'மூன்றாம் பிறை' ஸ்ரீதேவியை கமல் எங்கிருந்து அழைச்சிட்டு போவார்னு ஞாபகப்படுத்துங்க பாக்கலாம்"
பவாவைப் போலவே நானும் திணறிப்போனேன்.
விடை ஆச்சரியப்படுத்தியது. மறுநாள் பள்ளியில் ஓய்வு நேரத்தில் நண்பர்களிடம் கேட்டேன்.செல்பேசியில் ஒருவர் தேடித் திரைப்படத்தை ஓடவிட்டார். அனைவருக்கும் அந்தக் காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது."இது ஞாபகமே இல்ல"
என்றனர்.அது பற்றிய பாலு மகேந்திராவின் வார்த்தைகள் ,
"ஒரு விபச்சார விடுதியிலிருந்து.ஆனா அது உங்களுக்கு மட்டுமல்ல,படம் பார்த்த யாருக்கும் ஞாபகம் இருக்காது.ஏன்னா படத்தோட ட்ரீட்மெண்ட்ல அது காணாமல் போயிடுது"
இதைப்போலவே பல்வேறு உணர்வுகளின் கலவையில் அனைத்து ஆளுமைகளையும்  நம்மோடு கலந்துவிடுகிறார் பவா.

ஃபிராய்ட்

ஏதாவது பேசும்போது தம் மேதைத் தனத்தைக் காட்டப் பலர் பயன்படுத்தும் வார்த்தைகள்,"சைக்காலஜி, ஃபிராய்ட் ". 
குறிப்பாகப் பாலுணர்வு குறித்துப் பேசுபவர்கள் தாங்கள் சொல்வதுதான் உண்மை என நிலைநாட்ட, ஃபிராய்ட் பெரிதும் பயன்படுகிறார்.

உண்மையில் யார் இவர்? என்னதான் சொன்னார்? 'பல்லி  விழும் பலன்' போல கனவுகளுக்கு விளக்கம் சொன்னாரா?
மனம்,பாலியல், ஒழுக்கம்,மதம்,நரம்பு நோய்கள்  எனப் பல பொருள்கள் பற்றி ஃபிராய்ட் கூறுவது என்ன?
அவர்தம் கருத்துக்களின் இன்றைய நிலை என்ன?

ஃபிராய்ட் குறித்த சிறந்த அறிமுக நூலான இதை ஆங்கிலத்தில் எழுதியவர்  சிகாகோ பல்கலைப் பேராசிரியர் ஜோனத்தன் லியர். இந்நூலை மிகச்சிறப்பாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் ஆங்கிலப் பேராசிரியர் ச.வின்சென்ட்.
உளவியல் நூலை தக்க  கலைச்சொற்களோடு வாசிப்பவர்  புரிந்துகொள்ளும்படியான சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
இது போன்ற மொழி பெயர்ப்பு நூல்கள் தமிழ்ச் சிந்தனைப் பரப்பிற்கு புதிய வெளிகளைக் காட்டும்.

 கதை, கட்டுரை போலில்லாமல் நிறுத்தி, யோசித்து வாசித்தால் ஃபிராய்ட் வசப்படுவார்.



Sunday, 18 November 2012

துடைத்துக்கொண்டு போய்ச் சேர்

சமயம், தத்துவத்தில் தேடல் உள்ளவர்கள் ஜென்னை நன்கு அறிவார்கள். உண்மை எளிமையானது. விளக்கங்கள் கடுமையானவை. ஜென் கவிதைகள், எளிமைக்குள் பிரபஞ்ச,மானுட ரகசியங்களை உள்ளடக்கியவை.
தமிழில் ஜென் கவிதைகள் குறித்த புத்தகங்களில் சிறந்தது  2003 ஆம் ஆண்டு உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட 'பெயரற்ற யாத்ரீகன்'. ஆகச் சிறந்த ஜென் கவிதைகளை மொழிபெயர்த்து ஆங்கில மூலத்துடனும் வழங்கியிருப்பவர் யுவன் சந்திரசேகர்.
அத்தனை கவிதைகளும் எண்ணங்களைத் துளியிலிருந்து கடலாக விரிப்பவை. எனக்கு மிகவும் பிடித்த பலவற்றுள் ஜென் முழுமையையும் எளிமையாய் விளக்கியது 'க்கோ உன்' எழுதிய கவிதை. இவரைப் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை. கவிதையை உணர்வோம்.

சாமியார் ஜாங் க்கு - ஸோங் சுறுசுறுப்பாய்
மலங்கழிப்பதில்
ஈடுபட்டிருந்தபோது, தவளைகளின் சப்தத்தைக்
கேட்டார். உந்துதலுற்று,
இசைக்கத் தொடங்கினார்.

வசந்தத்தின் தொடக்கத்தில், நிலவெரியும் இரவுகளில்
தவளைகளின் சப்தம் உலகத்தைத்
துளைக்கிறது.
ஒரு துருவத்திலிருந்து மறு துருவம் வரை.
நம் அனைவரையும்
ஒரே குடும்பமென உணரவைக்கிறது.

இதோ பார்,
மலம் கழித்து முடித்துவிட்டால்
துடைத்துக்கொண்டு
போய்ச் சேர்.


எவ்வளவு எளிமையான வரிகள். சாமியார் மலம் கழிக்கும்போது கூட இயற்கையை ரசித்துப் பாடுகிறார்.
தவளையின் சப்தம் உலகையே ஒரே குடும்பமாக உணர வைப்பதாக ஆச்சரியப்படுகிறார். உண்மையான துறவிகளுக்கு அனைத்தும் ஒன்று. காக்கை, குருவி, கடல், மலை அனைத்தையும் ஒன்றாகப் பார்த்த பாரதி போல.
இப்படி எண்ணி எண்ணி வியக்கும் வேளையில் தொடரும் வரிகளே ஜென்னை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்கின்றன. பார்வையின் புதிய பரிமாணத்தையும்.
நீ எதற்காக வந்தாய்? மலம் கழிக்க. அதை முடித்துவிட்டால் கழுவிக்கொண்டு போய்ச் சேர்.
வந்த வேலையை மறந்துவிட்டுத் தத்துவம் பேசினாலும் பயனில்லை. இப்போது என்ன செய்கிறாயோ அதில் மட்டுமே முழு கவனத்தையும் வை  என்பதே  ஜென். எளிமையாகத் தோன்றினாலும் ஒரு வேலையைச் செய்யத் தொடங்கியவுடனேயே மனம் அலைபாய்வதை உணரவோ, நிறுத்தவோ முடிவதில்லை. அப்போது அதில் மட்டுமே இருப்பதே தியானம். வாழ்வின் தரிசனம்.
எனது கழிப்பறைக் கதவில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறது இந்தக் கவிதை. தினமும் வாசிக்கிறேன். எண்ணங்கள் கவிதையில், மற்றதில் அலைபாயும்போது முகத்தில் அறைகிறது,
 துடைத்துக்கொண்டு போய்ச் சேர்,
தினமும்.

Friday, 2 November 2012

ஆயிரம் பக்க அற்புதம்

   " அஞ்ஞாடி" என்று தோன்றியது,வாசித்து முடித்தவுடன்.
மனமெங்கும் மகிழ்ச்சியும் துக்கமும் எல்லாமும் கலந்த கலவையாய் நிறைந்தது.
வரலாற்று நாவல்களே நம்மை அதிகம் கனவுலகில் சஞ்சாரிக்க வைப்பவை.என் இனத்தின்,தமிழனின் பெருமை என மார்தட்ட வைப்பவை.
வந்தியத் தேவனையும் வானதியையும் மறக்க முடியாமல் பிள்ளைகளின் பெயர்களாக்கி மகிழ்ந்திருக்கிறோம்.
அரசிளங்குமரிகள் ,அரண்மனைகள், போர்கள்,எனப் பல்வேறு விவரணைகளில் மயங்கியிருக்கிறோம்.

வாழ்க்கை என்பதுதான் என்ன?
காலம் காலமாக விடை தேடப்படும் கேள்வி.

பூமணியின் தேடலின் விளைவே " அஞ்ஞாடி".
கந்தக பூமி என்றழைக்கப்படும் கோவில்பட்டி பகுதியிலிருந்து ரத்தமும் சதையுமாய் வாழ்க்கையை அறுவடை செய்திருக்கிறார்.ஒருவன் வாழ்ந்த கதை -ஒரு இனத்தின் பெருமையாக மார்தட்டி மீசை முறுக்கப்படும் இக்காலத்தில் மூத்த குடிகளின் வாழ்க்கையை ஆவணப் படுத்தியிருக்கிறார்.
வளமான வட்டார வழக்கு
சொலவடைகள்
நாட்டார் பாடல்கள்
தொன்மக் கதைகள்
அரசு ஆவணங்கள்
மதங்கள்
இனக்குழுக்கள் 
என ஆய்வு செய்ய வேண்டிய பல செய்திகளை அற்புதக் கலவையாகப் படைத்து தமிழ் நாவல்களிடையே அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார் பூமணி.

வட்டார வழக்கும்,இயல்பும் நவீனமும் கலந்த மொழிநடையுடன் புத்தனைப் போல வாழ்வை உணரச் செய்கிறது
 " அஞ்ஞாடி".
 ஏறத்தாழ சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமாக 300 ஆண்டுகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கும்    " அஞ்ஞாடி" நம் முன்னோர்களின் எளிய வாழ்வு,பழக்க வழக்கங்கள், உணவு, கலை, கலாச்சாரம் என எல்லாவற்றையும் மீட்டுக் காட்டுகிறது.
நிறைய இழந்திருக்கிறோம்  என்ற கவலையையும் இயற்கையோடு இணைந்த வாழ்வின் சுகத்தையும் நம் மனத்துள் எழுப்புகிறது. எல்லாவற்றையும் தாண்டி வாழ்க்கையை அறிமுகம் செய்து வைக்கிறது.

வெறும் பெயர்களும் ஊரையும் தவிர என் முன்னோர்களைப்பற்றி ,அவர்கள் வாழ்வைப்பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறேன்?.என் ஆச்சி,தாத்தாவிடம் அவர்களின்,முன்னோர்களின் வாழ்க்கைக் கதைகளைக் கேட்காமல் விட்டுவிட்டோமே?என்ற வருத்தம்  எழுகிறது. இதுதான் " அஞ்ஞாடி"யின் வெற்றி என எண்ணுகிறேன்.

" அஞ்ஞாடி" நம் முகம் தேட வைக்கும் கண்ணாடி.

Monday, 13 August 2012

வீடியோ மாரியம்மன்


இமையம் ஆசிரியராகப் பணி  செய்பவர். வட மாவட்டங்களின் வட்டார மொழி வழக்கில் தேர்ந்த எழுத்தாளர்.
இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வீடியோ மாரியம்மன்.11 சிறு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.ஒவ்வொன்றும் நம் கிராமங்களின் வெவ்வேறு முகத்தைப் பதிவு செய்கின்றன..  கிராமங்களில் வாழும்,  அடித்தட்டு மக்களாக ஆக்கப்பட்ட விவசாயிகளே பெரும்பாலும் இவரின் கதாபாத்திரங்கள். நவீனம் சிதைக்கும் இந்தியாவின் முதுகெலும்பை வலியுடன் பதிவு செய்துள்ளார்.
இமையத்தின் கதை மாந்தர்கள் வயதானவர்கள்.வாழ்வை  நவீனம் சிதைக்கும் போது எதிர்த்தும் ,முடியாமலும் வேதனைப்படுபவர்கள். தங்கள் பிள்ளைகளாலேயே புறக்கணிக்கப்படுபவர்கள்.வருந்திச்  செத்துக்கொண்டிருக்கும் அந்த வயதான தலைமுறைக்கு அடுத்து வரும் நாம் என்னவாகப் போகிறோம்?
மனது பதைக்கிறது.
இதுதான் இமையத்தின் எழுத்துகளின் வெற்றி.

கோவில் திருவிழாவில் கூத்தின் இடத்தை வீடியோ படங்கள் பிடிப்பது எள்ளல் கலந்து வருத்தமுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது,வீடியோ மாரியம்மன் கதையில்.ஊர் சாமியை விட வீடியோ படமே இளைய தலைமுறையின் தேவையாக இருக்கிறது.ஊடாட்டமாக வரும் சாதி மாறிய காதல் மனம் பதைக்க வைக்கிறது.
அதிகப் பணம் கிடைக்கிறது என்பதற்காக கம்பெனிக்காரனிடம் ஊரார் விளைநிலங்களை விற்கின்றனர்.கடைசிவரை விற்க மறுத்து மகனுடன் போராடிப்பார்க்கிறார் கிழவர்.நிலம் வாங்கியது,தன் தந்தையின் உழைப்பு,நிலம் சார்ந்திருக்கும் உறவுகள் என கிழவர் வருந்த நம் மனமும் பதைக்கிறது.நிலத்தைச் சுற்றியுள்ள அனைவரும் தத்தம் நிலங்களை விற்றுவிட்டனர் என்பதை அறிந்த கிழவர்,துடிக்கிறார்.

நெலத்த கொடுத்தா நெலம் மட்டுமா போவும்? ஆடு மாடு போவும்.கோயி போவும்,வண்டி போவும்,மாடு தண்ணி குடிக்கிற தண்ணித்தொட்டி போவும்,
வெத நெல்லு,வெத தானியம்,வேதப்புட்டி,ஏரு, கலப்ப,பூட்டங்கவுறு, நெல்லு குத்துற உரலு,உலக்கன்னு  பலதும் போவும்.படி,வள்ளம்,மரக்கா இருக்காது.குதிர் இருக்காது.மம்பட்டி,களக்கட்டு,அருவான்னு ஒண்ணும் இருக்காது.
இந்த ஊட்டுல இருக்கிற எல்லாப் பொருளும் போயிட்டா நீயும் நானும் தான் இருப்பம்.நீயும் நானும் இருக்கிறதுக்குப் பேருதான் ஊடா?

என்று மகனிடம் கேட்டும் போது,இழந்தவை நம் மனதில் வந்துபோகின்றன.வீட்டுப் பெண்களும் மகனின் பக்கமே இருக்கின்றனர்.அதிகப் பணம் தரும் பொருட்களும் நகையுமே அவர்களின் ஆசை.  'உயிர் நாடி' நிலத்தின் பங்கையும் மூத்த தலைமுறையின் இயலாமையையும் ஒருங்கே பதிகிறது.

இமையத்தின்  கிராமம்  முகமூடிகள் இல்லாதது.மனிதர்களின் அன்பு,ஆசை, கோபம், சுயநலம், என அனைத்தும் ஊடாடும் உணர்வுத்தளம்.

நுகர்வு கலாச்சாரம் இன்றைய கிராம மனிதரிடையே ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் கவனிக்கத்தக்கவை.மனம் பாரமானாலும் மூத்தவர்களைப்போலவே ஏதும் செய்ய இயலாமல் புலம்புபவர்களாக இருக்கிறோம்.ஐவகை நிலங்களைப் பகுத்து வாழ்ந்த தமிழினம் அனைத்தையும் அழித்து நகரப் பாலைகளை உருவாக்கி வாழ்ந்து   வருகிறது.
மண்,மனிதர்,இயற்கை மற்றும் வாழ்க்கையுடனான தொப்புள் கொடி உறவுகளை அழித்துவிட்டு கான்கிரீட் காட்டிற்குள் குளிர்  சாதன வசதியுடன் தொலைக்காட்சிப் பெட்டியில் இயற்கையை ரசிக்கிறோம்.

இமையத்தின் மனிதர்கள் இயற்கையை , வாழ்வை  நேசிப்பவர்கள். எளிமையானவர்கள். மனிதத்தின்  உயிர் நாடிகளான  அவர்கள்  அழிந்து கொண்டிருப்பது கவலை தந்தாலும் அவரின் கதைகளில் உலவும் சிறுவர்கள் அனைத்து நிகழ்வுகளுக்கும்  சாட்சியாக இருந்து பார்த்துக் கொண்டிருப்பதே நம் மனதிற்கு நம்பிக்கையும்,தெம்பும் தருவதாக இருக்கிறது.
 இமையம் 

Sunday, 12 August 2012

வினோத ராட்சசன் - தேவதச்சன்


எளிமையான வாழ்வின் மின்னும் தருணங்களை படம் பிடிப்பவர் தேவதச்சன்.
கண்மூடித்திறக்கும் நேரத்தில் நிலவில் நிறுத்தி பூமியைக்காட்டும் ஆச்சரியம்.எளிய வார்த்தைகளுக்குள் தோன்றி விரியும்பிரமாண்டம்.ஜென் பௌத்தம் கூறுவதைப் போன்ற எளிய தருணங்களில் மனம் மென்மையாகும்போது திடீரெனக் கிடைக்கும் ஞானம்,அவர் கவிதைகள்.

மனம் இலேசாகக் கலங்கினாலும் தேவதச்சனை வாசிக்கத் தொடங்கிய  நொடியே தள்ளி நின்று என்னை நானே பார்த்துக்கொள்வேன்.வார்த்தைகள் மனதை சலவை செய்யும்,
அடித்துத் துவைத்தல்ல,அறியாமலே.
இன்று மீண்டும் வாசித்தது அவரின் ஹோம்ஸ் என்னும் காற்று  கவிதை தொகுப்பு .ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப் புது வெளிகள் தரும் பரவசம் ,வாழ்வின் தரிசனம்.

எப்போவெல்லாம்
மைனாவைப் பார்க்கிறேனோ
அப்போவெல்லாம் தெரிகிறது
நான்
நீராலானவன் என்று

அதன்
குறுஞ்சிறகசைவில்
என் மேலேயே
தெறிக்கிறேன் நான்.

வாசித்ததும் வாசல் திறந்து எண்ண வெளிகளில் பறக்கத்தொடங்கும் மனம்.
 மைனாவாகவும் நீராகவும்.

ஒரு தட்டைக்
கீழே போட்டுவிடாதே
அதன்
 ஓசை விரிவில்
தட்டு பிரம்மாண்டமாகிவிடும்.

 
வார்த்தைகளால் நினைவில் விழுந்த தட்டின் ஓசை மனம் தாண்டி அண்டமெங்கும் விரிந்து செல்கிறது.
ஒவ்வொரு கவிதையும் அதற்கான தனித்த வெளியில் என்னை அலைக்கிறது.
ஒரு கவிதையின் வெளியிலிருந்து மீண்டு அடுத்ததை வாசிக்கத் தொடங்க ஆகும் இடைவெளியில் வெளிச்சமாகிறது வாழ்க்கை.

பள்ளிக்குத் திரும்புகையில்
ஆசிரியர்கள் அவர்களை அதிசயிக்கிறார்கள்
அடையாளம் தெரியாமல்
ஆசிரியர்களை அவர்கள் அதிசயிக்கிறார்கள்
அடையாளம் தெரிந்து.


பள்ளி சென்ற எல்லோருமே வியந்த  தருணம்.வாசித்ததும் நினைவில் ஒட்டிக்கொள்ளும் வார்த்தைகள்,என்னிடம் வார்த்தைகள் அற்றுப் போகச் செய்துவிடுகின்றன.

தேவதச்சனின் வார்த்தைகள்  அண்ட வெளியில் அழைத்துச் செல்லும் தூரத்திலிருந்து மீண்டு வந்து என் முகம் அணியும் வரையான இடைவெளியே  நான்.
தேவதச்சன் 

Friday, 10 August 2012

அசடன்-அசடி

அப்பாடி என்றிருக்கிறது.
பல தடைகளைத்தாண்டி ஒருவழியாக தஸ்தாவெஸ்கியின் அசடனைப் படித்துவிட்டேன்.
கரமசோவ் சகோதரர்கள்,குற்றமும் தண்டனையும் -போலவே தஸ்தாவெஸ்கி அசாதாரணமாக மனித மன  வெளிகளை துல்லியமாக படம் பிடிக்கிறார்.பெரும்பாலும் ஆணின் மன ஓட்டங்களையே பதிவு செய்பவராக இருந்தாலும் அசடனில் பெண்களின் மனதையும்  அற்புதமாக வரைந்துள்ளார்.

மிஷ்கின், அற்புதமான பாத்திரப் படைப்பு.நல்லவன் இப்படித்தான் இருப்பான்.என்றெல்லாம் பல்வேறு விமரிசனங்களில் படித்திருக்கிறேன்.அதே எண்ணத்துடன் வாசிக்கத் தொடங்கிய எனக்கு அப்படித் தோன்றவில்லை.மிஷ்கினை விட என் மனதை நிறைத்தது தஸ்தாவெஸ்கியின் பெண்களே.அவர்களே ஆண்களின் அச்சாணிகள்.ஆணின் மையப்புள்ளி பெண்ணாகவும் பெண்ணின் மையப்புள்ளி ஆணாகவும் வாழ்க்கை பயணிக்கிறது.
அசடனில் உலவும் பெண்கள் அனைவருமே பல்வேறு மனப்போராட்டங்களுடனும் சரியாகவும் குழப்பமாகவும் முடிவெடுப்பதில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர்.

என்னைக் கவர்ந்தவள்  நஸ்தாஷியா பிலிப்போவ்னா  .அவள் அற்புதமான உணர்வுகளுடைய மனுஷி.பல்வேறு கஷ்டங்களையும் அவமானங்களையும் தாங்கிய அவள் வாழ்வின் வசந்தமாய் வருகிறான் மிஷ்கின்.இருவரின் காதல் வார்த்தைகளில் சிக்காத உணர்வுப்பிரவாகம்.மிஷ்கின் மீது கொண்ட உண்மைக்  காதலே அவளை விலகி ஓடவைக்கிறது.ரோகோஷினை திருமணம் செய்ய முடிவும் தப்பித்தலுமாக அலைக்கழிக்கிறது.நாவலின் உயிர் மூச்சாக, தென்றலும் சூறாவளியுமாக நடத்திச் செல்கிறாள் நஸ்தாஷியா பிலிப்போவ்னா .

மிஷ்கின், அசடன்.சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் மனதில் எண்ணியதை அப்படியே வெளிப்படுத்துவதால் அசடன். கொஞ்சம் கொஞ்சமாக நானும்  அவனாகவே ஆகிவிட்டேன்.ஆணை இயக்கும் சக்தியாக இருக்கிறாள் பெண்.ஆகிய இருவரையும் காதலிக்கிறேன் என்று சொன்ன நிமிடத்திலேயே அற்புதமான,முழுமைபெற்ற மனிதனாக எனக்குத் தோன்றினான் மிஷ்கின்.
நம் உள்ளத்து உணர்வுகளை அதே தளத்தில் நம்மைத் தவிர யாராலும் புரிந்துகொள்ள இயலாது.நம்மை சரியாகப் புரிந்து  கொள்பவரைத் தேடியலையும் மனம் இறுதியில்  தனக்குத் தானே  பேசி,சிரித்து,அழுது, இருமையாகும் போதே அசடாகிறோம்.தொடங்கிய இடத்தில் முடிந்துபோன முழுமை மிஷ்கின்.

அக்லேயா இவானோவா ,துடுக்குப்பெண்ணாக வளம் வருபவள்.இளம் வயது தேவதை.இளம் பருவத்திற்கே உரிய தாவல்களை உடையவள்.யாரைத் திருமணம் செய்வது என பல எண்ணங்களிடையே மிஷ்கினையும் தொலைத்தவள்.

மரண தண்டனை பெற்றவனின் கடைசி எண்ணங்கள்,பல்வேறு ஆண்,பெண்களின்  அக உணர்வுகள் என மனித வாழ்வின் ரகசியங்களிடையே நம்மைக் கைபிடித்து   அழைத்துச் செல்கிறார் தஸ்தாவெஸ்கி.

மனம் மகிழ்ச்சியையே பெற விரும்புகிறது,ஆனால் துக்கத்திலேயே மகிழ்கிறது.மகிழ்ச்சியை விட துக்கத்தையே பிறரிடம் பகிர்ந்துகொள்கிறோம் உருவாக்கியும், உண்மையாகவும்.
தஸ்தாவெஸ்கியின் எழுத்துக் கண்ணாடி நம் முகமும் காட்டுகிறது.அதுவே மனிதத்தின் முகமும்.


Tuesday, 24 July 2012

அசடன்

                  தஸ்தாவெஸ்கியின் The Idiot நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான அசடன்  மதுரை பாரதி புத்தக நிலையத்தால் வெளியிடப் பெற்றுள்ளது.
                வாங்கிச் சில மாதங்கள் கழித்து இப்போது படிக்கத்தொடங்கியுள்ளேன்.
               ஏறத்தாழ 660 பக்கங்கள்.சிறிய எழுத்துக்கள் என்ற எல்லாத் தடைகளையும் தாண்டி வாசிக்கத்தொடங்கிவிட்டேன்.
             வாயினுள் நுழையாத ரஷ்யப் பெயர்கள் சில பக்கங்கள் தாண்டியதும் பழகத்தொடங்கியுள்ளன.
              அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் பேராறு ஏற்படுத்திய பயத்தையும் மீறி இறங்கிய என்னை மிஷ்கின்  என்ற சுழல் வாரிச்சுழற்றி இழுத்துச்சென்று கொண்டிருக்கிறது.
                 என்னையறியாமல் அவனாகவே மாறிப்பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
 விரிவாக விரைவில்..........