Wednesday, 5 November 2014

கல்விகுறித்தும் ஆசிரியரின் அனுபவங்கள் குறித்தும் இப்போது தமிழில் நிறைய நூல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.
பல ஆண்டுகளாகவே ஆசிரியரின் அனுபவங்களை, கல்வி குறித்த தமது எண்ணங்களை வெளியிட்டுக்கொண்டே இருப்பவர்
பேராசிரியர் ச. மாடசாமி.
' எனக்குரிய இடம் எங்கே?' என்ற அற்புதமான அனுபவத்தொகுப்பே நான் வாசித்த இவரின் முதல் நூல்.

பேராசிரியர் ச.மாடசாமியின் எழுத்துக்கள்,
போலியான முகமூடிகள் ஏதுமில்லாத இயல்பான ஆசிரிய அனுபவங்களின் எளிய நடை வாசிப்போரை மயக்கும்.
தன்னையும் சுயவிமர்சனம் செய்துகொள்ளும் நேர்மை கொண்டவை.
இவரின் நூல்களிலிருந்தே 'ஆசிரியம்' குறித்த நூல்களை தேடித்தேடி வாசிக்கத்தொடங்கினேன், திரைப்படங்களை சேகரித்தேன்.
ஆசிரியர்கள், பள்ளி குறித்த திரைப்படங்களின் கதைகளை நண்பர்களுக்குச்சொல்லுவேன். இருப்பினும், படத்தைப்பார்த்தவர்கள் உரையாடினால் மேலும் பல செய்திகளை பேசலாமே என்று எண்ணுவேன். இது போல் நான், எனக்குள் ரசித்த பல படங்களைப்பற்றி பேராசிரியர் எழுதியிருப்பார். வாசிக்கும்போது மனம் துள்ளும். அப்படியான ஒரு படம், ' Good bye,Mr.Chipps'.
1939 இல் வெளியான கருப்பு வெள்ளை காவியம். இதை நாவலாக வாசித்த அனுபவத்தை சிறு நூலாக எழுதியிருப்பார்.
' ஆசிரிய முகமூடி அகற்றி' என்ற இவரில் நூலிலேயே மெக்கோர்ட் - அறிமுகமானார்.
 மெக்கோர்ட்டின் மொழிப்பாட வகுப்புகளை பல இடங்களில் என் வகுப்பு போலவே எண்ணி வியந்தேன்.
' ஆளுக்கொரு கிணறு' மறுத்தல் திறன், சுய விமர்சனம், அறிவொளி, மொழி, கல்வி குறித்த பல்வேறு செய்திகளை கற்றுத்தந்தது.
மதுரையில் வசிக்கிறார் என்றாலும் சந்திக்க இயலாமலே இருந்தது. ஒவ்வொரு புத்தகத்திருவிழாவிலும் சந்திப்பை தவறவிட்டிருக்கிறேன்.
இணையத்தில் கல்வி குறித்து எழுதும் செய்திகளுக்கு பேராசிரியரின் விருப்பமும் எண்ணப்பகிர்வும் மனதில் மகிழ்ச்சியை நிரப்பும்.


சில மாதங்கள் அமெரிக்காவில் இருந்த பேராசிரியர் மதுரை வந்துவிட்டார். முகநூல் வழியே தொடர்புகொண்டபோது, தொலை பேசி எண்ணை வாங்கி அவரே பேசினார்.
நாளை எங்கள் பள்ளிக்கே வந்து சந்திக்கிறேன் என்று அவர் சொன்ன போது அவரின் எழுத்துக்களைப்போலவே சொல்லிலும் எளிமை கண்டு வியந்துபோனேன்.
ஆவலோடு காத்திருக்கிறேன்.மனதுக்குள் பேசிக்கொள்கிறேன்.
பேராசிரியர் ச.மாடசாமி அவர்களுடனான உரையாடல் என் ஆசிரியப்பணியில் புது வேகம் தரும். இன்னும் பல்வேறு எண்ணங்கள் மனதுக்குள்.

No comments:

Post a Comment