Girl with a Pearl Earring |
---|
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டச்சு (Dutch) ஓவியர் வெர்மீர்.(1632 - 1675) இவரது ஓவியங்கள் பெரும்பாலும் வீட்டின் உட்புறக் காட்சிகளையே சித்தரிப்பவை.பெரும்பாலும் அவரது ஓவிய அறையையே வரைந்திருக்கிறார். அக்கால
நடுத்தர வர்க்கம் மற்றும் உயர் வக்கத்தினரையும் பணிப்பெண்களையும்
அவரது ஓவியங்கள் காட்டுகின்றன.மிகத்தெளிவாக இல்லாவிட்டாலும் அவரது வாழ்க்கை பற்றிய குறிப்புகள் மூலம் அவரைப்பற்றி அறியமுடியும்.
தம் வாழ்நாளில் ஏறத்தாழ 66 படங்கள் வரைந்திருந்தாலும் 34 ஓவியங்களே தற்போது காணக் கிடைக்கின்றன.மிகச்சிறப்பான பார்வைப்புலம்,வண்ணக்கலவை,அலங்காரப் பொருட்கள்
ஆகியன இவரது ஓவியங்களின் தனிச்சிறப்பு.
camera obscura என்ற கருவியைப் பயன்படுத்தியதாலேயே இவரது
ஓவியங்களில் perspective மிகச் சிறப்பாக வந்துள்ளது என்று கூறுவர்.
வெர்மீருக்கு 14 குழந்தைகள் பிறந்தன.பிறந்த சில நாட்களிலேயே இறந்த 4 தவிர
பத்து குழந்தைகளுடன் வாழ்ந்த இவர் அக்காலத்தில் நாடெங்கும் ஏற்பட்ட பண
நெருக்கடியால் வருந்தி தனது 43 ஆவது வயதிலேயே இறந்தார்.
வெர்மீரின் புகழ் பெற்ற ஓவியங்களுள் ஒன்று Girl with a Pearl Earring. இதை வரைந்த நிகழ்வு குறித்த டிரேசி செவாலியே வின் புகழ் பெற்ற நாவலைத் தழுவி எடுக்கப்பெற்ற திரைப்படம் Girl with a Pearl Earring.
வெர்மீர் வசிக்கும் சிறு நகரம் டெல்ப். அவரது வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு வருகிறாள் கிரிட். மூத்த பணிப்பெண் கிரிட்டிற்கு வீடு முழுவதையும்
சுற்றிக்காட்டுகிறாள்.வெர்மீரின்அறையைக் காட்டி
" இது எஜமானரின் அறை.இதையும் நீ சுத்தம் செய்ய வேண்டும்.ஆனால் அனுமதியில்லாமல் உள்ளே செல்லக் கூடாது" என்கிறாள். மறுநாள் காலை எசமானியுடன் ஓவியரின் அறைக்குள் சென்று சுத்தம் செய்யத் தொடங்குகிறாள்.அப்போது வரைந்து கொண்டிருக்கும் ஓவியமும் அதற்கான மாதிரி அமைப்பும் அவளை மிகவும் கவருகின்றன.
ஓவியரின் ஆறாவது குழந்தை பிறப்பையும் புதிதாக வரைந்து முடித்த ஓவியத்தை, வரையப் பணித்த பணக்காரரான வான் ரைவனிடம் ஒப்படைப்பதையும்
விருந்தாகக் கொண்டாட ஏற்பாடு செய்கிறார் ஓவியரின் மாமியார்.
விருந்தின்போது தமது அடுத்த ஓவியத்தை வேறு ஒரு
ஓவியரிடம் வரையவிருப்பதாக அறிவிக்கிறார் வான் ரைவன். அவர் வாங்குவதை நம்பியே வெர்மீரின் குடும்பம் உள்ளது.
மறுநாள் ஒவியரின் அறையைச் சுத்தம் செய்யச் செல்லும் முன் எஜமானியிடம் கேட்கிறாள் கிரிட் ,
ஜன்னல்களை சுத்தம் செய்யட்டுமா?
செய்.ஒவ்வொன்றையும் என்னிடம் கேட்கத் தேவையில்லை.
இல்லை...ஜன்னலை சுத்தம் செய்தால் அறையின் ஒளியமைப்பு மாறும்.
அதனாலென்ன? பரவாயில்லை.செய்.
இந்த சிறு உரையாடலே கிரிட்டின் ஓவிய ஆர்வத்தையும்
ஓவியரின் மனைவியின் மெத்தனத்தையும் தெளிவாகக் காட்டுகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை ஆக்கிரமிக்கத்தொடங்குகிறாள் கிரிட்,நமது மனதையும்.
அறையைச் சுத்தம் செய்யும்போது புதிய ஒரு பெட்டி
இருப்பதைப் பார்க்கிறாள் கிரிட்.அங்குவந்த ஓவியர் அவளிடம் இது ஓர் ஒளிப்படக் கருவி என்றும் அதைப் பயன்படுத்துவதையும் காட்டுகிறார்.அது எதிரே உள்ள காட்சியை பிரதிபலிப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறாள். மெதுவாக ஓவியருடன் பழகத் தொடங்குகிறாள்.வண்ணங்களைப்பற்றி எடுத்துக் கூறுகிறார் வெர்மீர்.நம்மைச் சுற்றியுள்ளவற்றை எப்படிப் பார்க்க வேண்டுமென அறிந்து கொள்கிறாள்.
பணிப்பெண் என்ற புதிய ஓவியத்தை வரையத்தொடங்குகிறார் வெர்மீர்.வண்ணங்களை அரைப்பதில் உதவியாக இருக்கிறாள் கிரிட்.
புதிய ஓவியம் வரைய ஒப்பந்தம் பெரும் ஆசையில்
ஓவியரின் மாமியார் மீண்டும் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்கிறார்.உங்களுடைய குடும்பத்துடன் விருந்து மேசையில் இருக்கும் காட்சியை பெரிய ஓவியமாக வரைந்தால் நன்றாக இருக்கும் என வான் ரைவனிடம் ஆசை காட்டுகிறாள்.விருந்தில் கிரிட்டைப் பார்த்து ஆசை கொண்ட ரைவன்,
" விருந்துக்காட்சி வரையலாம்.ஆனால் என் அருகில் கிரிட் இருக்குமாறு வரைந்தால் மட்டுமே வாங்கிக்கொள்வேன்."
என்கிறான்.ஓவியர் அதன் உட்பொருளை அறிந்து அதிர்ச்சியடைகிறார்.
மறுநாள் மாமிசம் வாங்கச் செல்லும் கிரிட்டை பார்த்து
அனைவரும் ரகசியமாகப் பேசிக்கொள்ள,கடைக்காரர் மற்றும் தன் காதலன் மூலம் ,ரைவன் ஒரு பணிப்பெண்ணை வரைய சொன்னால்அவளை அடைந்துவிடுவான் என்று அர்த்தம் என அறிகிறாள்.காதலன் எச்சரிக்கின்றான்.
கிரிட்,வெர்மீரிடம் தன்னை வரைய வேண்டாம் என
கேட்டுக்கொள்கிறாள்.ஓவியரும் சம்மதிக்கிறார்.ஆனால் அவளைத் தனியாக ஒரு ஓவியம் வரைய விரும்புவதாகக் கூறுகிறார்.அவளும் சம்மதிக்கிறாள்.தன் மனைவியின் முத்துக் காதணியை அணிந்துகொண்டால் நன்றாக இருக்குமென ஓவியர் கூற தனக்கு காதில் துளை இல்லையென மறுத்துவிடுகிறாள் கிரிட்.
வான் ரைவன் கிரிட்டைக் கற்பழிக்க முயல்கிறான்.
வாழ்க்கை பயத்துடனே கழிகிறது. கிரிட் காதணி அணிய மறுத்ததால் இரண்டு ஓவியங்களும் முடிக்கப்படாமல் இருக்கின்றன.இதனை அறிந்த ஓவியரின் மாமியார் தனது மகள் வீட்டில் இல்லாத நாளில் அவளது முத்துக் காதணிகளை எடுத்து வந்து கிரிட்டிடம் கொடுத்து,
இதை அணிந்துகொள்.உன்னால் தான் ஓவியங்களை முடிக்க வைக்க முடியும்.என் மகள்
வீட்டில் இல்லை.-என்கிறாள்.
தானே கிரிட்டின் காதில் துளையிட்டு முத்துக் காதணியை அணிவித்து ஓவியத்தை வரைந்து முடிக்கிறான் வெர்மீர்.கிரிட்டின் காதில் வெர்மீர் துளையிடும் காட்சி பாரதிராஜாவின் நாடோடித் தென்றலை நினைவு படுத்துகிறது.
ஆரம்பம் முதலே கிரிட்டிற்கு ஓவியரின் பிள்ளைகளுடனான உறவு சுமுகமாக இல்லை.ஓவியரின் மகள் மூலம் நடந்ததை அறிகிறாள் ஓவியரின் மனைவி.அவளுக்கு,கிரிட்டுடன் ஓவியர் பழகுவது பிடிக்கவில்லை.என் முத்துக்காதணியை இவள் எப்படி அணியலாம் என சண்டையிடுகிறாள்.அந்த ஓவியத்தைப்
பார்க்க விரும்புகிறாள்.ஓவியர் காட்ட மறுக்கிறார். விவாதங்களுக்குப்பிறகு
ஓவியத்தைக் காட்டுகிறார். கோபத்துடன் அதைக் கிழிக்கச் செல்லும் மனைவியைத்
தடுக்கிறார்.கோபத்தில் "வீட்டை விட்டுப் போ " என கிரிட்டிடம் கத்துகிறாள்.ஓவியர் ஏதும் சொல்லாமலிருக்க அங்கிருந்து வெளியேறி காதலனுடன்வசிக்கத்தொடாங்குகிறாள் கிரிட்.
சிலநாட்கள் கழித்து ஓவியரின் மூத்த பணிப்பெண் கிரிட்டின் வீட்டிற்கு வந்து ஒரு துணி மடிப்பைக் கொடுக்கிறாள்.பிரித்துப் பார்க்கிறாள் கிரிட்.அதனுள் அவளை வரைந்தபோது அவள் தலையில் அணிந்திருந்த நீல வண்ணத்
துணியுள் இருந்தன முத்துத் தோடுகள்.
கடைசிக்காட்சியில் நடைபெறும் மனைவியுடனான
வாக்குவாதத்தின் போது ஓவியம் நமக்குத் தனியாகக் காட்டப்படாமல் கிரிட் கையிலிருக்கும் காதணிகள் ஓவியத்தின் காதணியாகமாறி அதிலிருந்து camera வெளியேறி அந்த அற்புதமான ஓவியம் நம் மனமெங்கும் நிறைவதோடு படம் முடிகிறது.
17 ஆம் நூற்றாண்டின் டெல்ப் நகரம்,வெர்மீரின் அறை ஆகியன நம் கண்முன்னே அப்படியே காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் உடை அலங்காரங்களும்
ஓவியம் போன்ற காட்சி அமைப்புகளும் தொழில் நுட்பக் கலைஞர்களின்
திறமைக்குச் சான்று.
கிரிட், ஓவியருடன் நெருக்கமாகப் பழகும்போது தன் உடலில் எழும் உணர்வுகளை காதலன் மூலமாகவே தீர்த்துக்கொள்ளும் காட்சிகள் கவித்துவமானவை.
கலைஞர்களின் வாழ்க்கையும் படைப்பிற்கான தேடல்களும் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன.
|
|||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விருதுகள்
|
|||||||||||||||||
Nice
ReplyDelete