Monday, 3 November 2014

கேள்வி



காலாண்டுத்தேர்வு விடுமுறை, NCC முகாம் எல்லாம் முடிந்து ஏறத்தாழ 20 நாட்கள் கழித்து பள்ளிக்கு சென்ற திங்களன்று சென்றேன்.
கடந்த ஒரு வாரகாலமாக பயிற்சி ஆசிரியைகள் எனது வகுப்பை நன்றாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று உதவித்தலைமையாசிரியர் கூறினார்.
9 ஆம் வகுப்பிற்குச்சென்றேன்.
இரு பயிற்சியாசிரியைகள் இருந்தார்கள்.
ஒருவர் 9 ஆம் வகுப்பு, மற்றவர் 6 ஆம் வகுப்பு - தமிழ்.
இருவரின் முதன்மைப்பாடங்களும் வேறு.
ஆசிரியை நன்றாகப்பாடம் நடத்தியதாகவும் தெளிவாக விளக்கம் சொல்லி முதல் இயலில் செய்யுள் பகுதியை முடித்து எழுதிப்போட்டாகிவிட்டது என்றனர், மாணவர்கள்.
குறளில் ' கேள்வி' அதிகாரம்.
முடித்து மனப்பாடப்பாடல்கள் படித்து, இன்று தேர்வு.
வினாவிடைகளைக்காட்டினர்.

நான் இவ்வளவு விரைவாக நடத்துவதில்லையே? என்றேன்.
"மாணவர்கள் சொன்னார்கள். இருந்தாலும் வகுப்பிற்கு தினமும் வந்ததால் இரு செய்யுள் பகுதியையும் நடத்தி முடித்துவிட்டேன்." என்று பயிற்சியாசிரியை சொன்னார்.
பரவாயில்லையம்மா! மீண்டும் பார்ப்போம்.
வழக்கம்போல புத்தகங்களை மூடி வைத்துவிட்டு மாணவர்களிடம் கேட்டேன்.
'கேள்வி' என்றால் என்ன?
பெரும்பாலானோர் 'செவி' என்று பதில் சொன்னார்கள்.
புத்தகத்தை எடுத்துப்பார்க்கச்சொன்னேன்.
சான்றோர் உரைகளைக்கேட்டல் - என்று பொருள் இருந்தது.
பயிற்சியாசிரியையை அருகில் அழைத்தேன். வெறுமனே பாடத்தை நடத்தி எழுதிப்போட்டு படிக்கச்செய்வது மட்டுமே மொழிப்பாட ஆசிரியரின் பணியல்ல.
வகுப்பறை ஆசிரியர் மையத்திலிருந்து மாணவர் மையப்பட்டதாக மாறிக்கொண்டிருக்கிறது.
கற்றல் கற்பித்தல் முறைகள் புதிது புதிதாக வந்துகொண்டிருந்தாலும் பாடங்களை வாசித்து நடத்துதலையே ஆசிரியர்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள்.
புதிதாக என்ன முறைகளைப்பின்பற்றலாம்?
யோசிக்கவேண்டும். பார்ப்போம்.

No comments:

Post a Comment