இமையம் ஆசிரியராகப் பணி செய்பவர். வட மாவட்டங்களின் வட்டார மொழி வழக்கில் தேர்ந்த எழுத்தாளர்.
இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வீடியோ மாரியம்மன்.11 சிறு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.ஒவ்வொன்றும் நம் கிராமங்களின் வெவ்வேறு முகத்தைப் பதிவு செய்கின்றன.. கிராமங்களில் வாழும், அடித்தட்டு மக்களாக ஆக்கப்பட்ட விவசாயிகளே பெரும்பாலும் இவரின் கதாபாத்திரங்கள். நவீனம் சிதைக்கும் இந்தியாவின் முதுகெலும்பை வலியுடன் பதிவு செய்துள்ளார்.
இமையத்தின் கதை மாந்தர்கள் வயதானவர்கள்.வாழ்வை நவீனம் சிதைக்கும் போது எதிர்த்தும் ,முடியாமலும் வேதனைப்படுபவர்கள். தங்கள் பிள்ளைகளாலேயே புறக்கணிக்கப்படுபவர்கள்.வருந்திச் செத்துக்கொண்டிருக்கும் அந்த வயதான தலைமுறைக்கு அடுத்து வரும் நாம் என்னவாகப் போகிறோம்?
மனது பதைக்கிறது.
இதுதான் இமையத்தின் எழுத்துகளின் வெற்றி.
கோவில் திருவிழாவில் கூத்தின் இடத்தை வீடியோ படங்கள் பிடிப்பது எள்ளல் கலந்து வருத்தமுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது,வீடியோ மாரியம்மன் கதையில்.ஊர் சாமியை விட வீடியோ படமே இளைய தலைமுறையின் தேவையாக இருக்கிறது.ஊடாட்டமாக வரும் சாதி மாறிய காதல் மனம் பதைக்க வைக்கிறது.
அதிகப் பணம் கிடைக்கிறது என்பதற்காக கம்பெனிக்காரனிடம் ஊரார் விளைநிலங்களை விற்கின்றனர்.கடைசிவரை விற்க மறுத்து மகனுடன் போராடிப்பார்க்கிறார் கிழவர்.நிலம் வாங்கியது,தன் தந்தையின் உழைப்பு,நிலம் சார்ந்திருக்கும் உறவுகள் என கிழவர் வருந்த நம் மனமும் பதைக்கிறது.நிலத்தைச் சுற்றியுள்ள அனைவரும் தத்தம் நிலங்களை விற்றுவிட்டனர் என்பதை அறிந்த கிழவர்,துடிக்கிறார்.
நெலத்த கொடுத்தா நெலம் மட்டுமா போவும்? ஆடு மாடு போவும்.கோயி போவும்,வண்டி போவும்,மாடு தண்ணி குடிக்கிற தண்ணித்தொட்டி போவும்,
வெத நெல்லு,வெத தானியம்,வேதப்புட்டி,ஏரு, கலப்ப,பூட்டங்கவுறு, நெல்லு குத்துற உரலு,உலக்கன்னு பலதும் போவும்.படி,வள்ளம்,மரக்கா இருக்காது.குதிர் இருக்காது.மம்பட்டி,களக்கட்டு,அருவான்னு ஒண்ணும் இருக்காது.
இந்த ஊட்டுல இருக்கிற எல்லாப் பொருளும் போயிட்டா நீயும் நானும் தான் இருப்பம்.நீயும் நானும் இருக்கிறதுக்குப் பேருதான் ஊடா?
என்று மகனிடம் கேட்டும் போது,இழந்தவை நம் மனதில் வந்துபோகின்றன.வீட்டுப் பெண்களும் மகனின் பக்கமே இருக்கின்றனர்.அதிகப் பணம் தரும் பொருட்களும் நகையுமே அவர்களின் ஆசை. 'உயிர் நாடி' நிலத்தின் பங்கையும் மூத்த தலைமுறையின் இயலாமையையும் ஒருங்கே பதிகிறது.
இமையத்தின் கிராமம் முகமூடிகள் இல்லாதது.மனிதர்களின் அன்பு,ஆசை, கோபம், சுயநலம், என அனைத்தும் ஊடாடும் உணர்வுத்தளம்.
நுகர்வு கலாச்சாரம் இன்றைய கிராம மனிதரிடையே ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் கவனிக்கத்தக்கவை.மனம் பாரமானாலும் மூத்தவர்களைப்போலவே ஏதும் செய்ய இயலாமல் புலம்புபவர்களாக இருக்கிறோம்.ஐவகை நிலங்களைப் பகுத்து வாழ்ந்த தமிழினம் அனைத்தையும் அழித்து நகரப் பாலைகளை உருவாக்கி வாழ்ந்து வருகிறது.
மண்,மனிதர்,இயற்கை மற்றும் வாழ்க்கையுடனான தொப்புள் கொடி உறவுகளை அழித்துவிட்டு கான்கிரீட் காட்டிற்குள் குளிர் சாதன வசதியுடன் தொலைக்காட்சிப் பெட்டியில் இயற்கையை ரசிக்கிறோம்.
இமையத்தின் மனிதர்கள் இயற்கையை , வாழ்வை நேசிப்பவர்கள். எளிமையானவர்கள். மனிதத்தின் உயிர் நாடிகளான அவர்கள் அழிந்து கொண்டிருப்பது கவலை தந்தாலும் அவரின் கதைகளில் உலவும் சிறுவர்கள் அனைத்து நிகழ்வுகளுக்கும் சாட்சியாக இருந்து பார்த்துக் கொண்டிருப்பதே நம் மனதிற்கு நம்பிக்கையும்,தெம்பும் தருவதாக இருக்கிறது.
இமையம்
இமையம் னு சொல்லி பெருமாள்முருகன் போட்டோவ போட்டிறுக்கீங்க..உடனே இமையத்தின் போட்டோவைப் பிரசுரியுங்கள் நண்பரே...
ReplyDelete