தேசிய மாணவர் படைக்கு புதிய மாணவர் சேர்க்கைக்காக 9 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை அழைத்து NCC யின் முக்கியத்துவம் பற்றிப்பேசினேன். விருப்பமிருப்பவர்கள் சேர்ந்துகொள்ளலாம் மற்றவர்கள் வகுப்பிற்குச்செல்லலாமெனக்கூறிவிட்டு யாரேனும் உயரமான மாணவர்கள் செல்கிறார்களா என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.
நான் செல்லும் ஒன்பதாம் வகுப்பிலிருந்து சிலர் மெதுவாக எழுந்து சென்றனர்.உயரமான ஒருவன் மெதுவாக எழுந்தான்.
நான் பார்வையை சற்றே திருப்பி கவனத்தைமட்டும் அங்கே வைத்தேன். ஏனென்றால், அவன் மற்றவர்களை அழைத்துக்கொண்டிருந்தான்.
"வந்துருங்கடா, ஒருநாள் வராட்டியும் வெளுத்துருவானுக!"
ஒவ்வொருவராக அவன் வசப்பட்டனர். மெதுவாகத்திரும்பி,
"டேய், நீ,வகுப்புக்குப்போ, மத்தவங்க உட்காரு, உங்களுக்கு இது ரெம்ப பயன்படும்"
நான் மற்ற வேலைகளில் கவனமாக இருக்கும்போது அவன் தன் நண்பர்கள் அனைவரையும் அழைத்துச்செல்வதில் வெற்றிபெற்றுவிட்டான்.
மறுநாள் வகுப்பிற்குச்சென்றவுடன்,
பகத்சிங் யார் என்று தெரியுமா?
சுதந்திரப்போராட்ட வீரர்.
என்ன செய்தார் தெரியுமா?
அவருடன் எந்தனைபேர் போராடினார்கள் தெரியுமா?
எப்படி தெரியுமா?
அவர்களில் பலர் அவருடன் படித்த நண்பர்கள்.
என்று பகத்சிங் மற்றும் நண்பர்களின் தியாக வரலாற்றைத்தொடர்ந்தேன்.
எனவே, நல்லவர்கள் நல்லவ்ர்களுடனும் தீயவர்கள் அதேபோலவும் ஒன்று சேர்வார்கள்.
ஒருத்தன்,உங்களில் பலபேரை NCC யில் சேருவதிலிருந்து தடுத்துவிட்டான். நீங்களும் அவனை நம்பி மோசம்போனீர்கள்.
" இப்ப, புரியுதா! பகத்சிங் என்ன செஞ்சாலும் நான் எதுவும் சொல்லாம,
உன் பேருக்காக ஒண்ணும் சொல்லாம விடுறேன்னு சொல்றதுக்கு என்ன காரணம்னு"
(பகத்சிங் என்ற பெயரில் ஒரு மாணவன் என் வகுப்பிலிருக்கிறான்)
வகுப்பு முடிவில் சில மாணவர்கள் Ncc யில் இணைய விருப்பம் தெரிவித்தார்கள்.
மீண்டும் மீண்டும் வரச்செய்து ஆர்வத்தைச்சோதித்தபின் சேர்த்துக்கொண்டேன்,பகத்சிங்கையும்.
எழுத்துக்கள் தெரியாத இரு மாணவர்களுக்குச்சொல்லித்தரும் பொறுப்பை பகத்சிங் எடுத்திருக்கிறான்.
No comments:
Post a Comment