பள்ளிப் பருவம் வாழ்வின் நாற்றாங்கால்.
ஆடம்பர வாழ்க்கைக்கான பணம்
சம்பாதிக்கும் வேலைகளை அடையவே கல்வி என்று இன்றைய மாணவர்கள் பல வழிகளில்
பெற்றோரால் அறிவுறுத்தப் படுகின்றனர்.டாக்டர்,பொறியாளர்,
கணிப்பொறி
வல்லுநர் எனப் பெற்றோரின் ஆசை விளக்கில் தோன்றும் பூதங்களாகவே பிள்ளைகள்
நடத்தப்படுகின்றனர்.பணமே வாழ்க்கை என அனைவரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
அறிவு வளர்ச்சி,மானுடப் பண்புகள் போன்றவை எழுத்தில் கூட இல்லாமல் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கூடங்களும்
மாணவர்களை மனிதர்களாக நடத்தாமல் மதிப்பெண்களால் அளவிடுகின்றன.
கல்விக்கூடங்களில் மானுடத்தைப் போதிக்கும் ஆசிரியர்கள் அருகி வருகின்றனர்.
அதிக அளவு மதிப்பெண் பெறும் மாணவர்களை உருவாக்கும் பள்ளியே சிறந்த பள்ளியாகப் போற்றப்படுகிறது.
தம்
பிள்ளைகள் மதிப்பெண்களைக் குவிக்க என்ன விலை வேண்டுமானாலும் தரப்
பெற்றோர்கள் தயாராக உள்ளனர். அதிக லாபம் தரும் வியாபாரமாகவே
பெரும்பாலான கல்விநிலையங்கள்
நடத்தப்படுகின்றன. புரிந்தாலும் புரியாவிட்டாலும் மனப்பாடம் செ
ய்தே
தீரவேண்டுமென ஆசிரியர்கள் சொல்லித்தருகின்றனர். பாடத்தை வாசித்து விடும்
இயந்திரமாகவே பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கின்றனர். மாணவர்கள் என்ன
நினைக்கிறார்கள் என்று யாருமே கவலைப்படுவதில்லை.
அடக்குமுறை பள்ளிகளின் கல்விமுறை பற்றிய உலகப் படங்களில் முதன்மையானதாகக்
கொண்டாடப் படுவது Dead Poets Society. Tom Schulman தனது பள்ளி
வாழ்விலிருந்து எழுதிய கதையை Peter Weir இயக்கியுள்ளார்.1989 இல்
எடுக்கப்பட்ட இப்படத்தில் Robin Williams ஆசிரியராக நடித்துள்ளார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற பள்ளிகளுள் ஒன்றான வெல்டன் அகாடமியின்
கல்வியாண்டுத்தொடக்கம். 17 வயது வரையான மாணவர்கள் பயிலும் பள்ளி அது.
அறிவிற்கான
ஒளி என்று பள்ளி முதல்வர் நீட்டும் மெழுகுவர்த்தியிலிருந்து மாணவர்கள்
தங்களுடைய மெழுவர்த்தியை ஒளிஏற்றிக் கொள்கின்றனர்.பள்ளியின் பழம்
பெருமை,கண்டிப்பு,சட்ட திட்டங்கள்,நடைமுறைகள் குறித்து முதல்வர்
உரையாற்றுகிறார். புதிய ஆங்கில ஆசிரியராக நமது பள்ளியின் முந்நாள் மாணவரான
ஜான் கீட்டிங் பணியாற்றுவார் என அறிமுகம் செய்து வைக்கிறார். கூட்ட
முடிவில் பெற்றோர்கள் தம் முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு
பிள்ளைகளை விட்டுச்செல்கின்றனர்.
மாணவர் விடுதியில் நீல் பெர்ரியும்
டோட் ஆண்டர்சனும் ஒரே அறையைப் பகிர்ந்துகொள்கின்றனர்.நீல்
துடிப்பானவன்.டாக்டர் ஆகவேண்டும் என அப்பாவால் கண்டிப்புடன்
வளர்க்கப்படுபவன்.டோட்,கூச்ச சுபாவம் உள்ளவன். அவனது அண்ணனைப் போல உயர்
பதவி பெறவேண்டுமென அதே பள்ளியில் சேர்க்கப்பட்டவன்.
நீல் அறையில் மற்ற
நண்பர்களும் கூடுகின்றனர்.முதல்வரின் உரையைக் கிண்டல்
செய்கின்றனர்.பள்ளியின் பெயரை Hell-ton எனக் கேலி செய்துமகிழ்கின்றனர்.
மறுநாள்
பள்ளி தொடங்குகிறது.ஆங்கில வகுப்பு.கீட்டிங் விசிலடித்தபடி வகுப்பினுள்
நுழைந்து மானவர்களைக்கடந்து வெளியேறுகிறார்.அனைவரும் ஆச்சரியமாக பார்த்தபடி
இருக்க,வகுப்பினுள் எட்டிப்பார்த்து அனைவரையும் வெளியே அழைக்கிறார்.
வரவேற்பறை. அனைவரையும் நிற்கவைத்து,தன்னை அறிமுகம் செய்து
கொள்கிறார். நீங்கள் என்னை மிஸ்டர் கீட்டிங் அல்லது 'ஓ கேப்டன் மை கேப்டன்'
என அழைக்கலாம் என்கிறார்.அந்த வரியிலிருந்து கவிதை வகுப்பு தொடங்குகிறது.
இந்த நாளைக் கைப்பற்றுங்கள். இந்தப் பள்ளியில் எத்தனையோ மாணவர்கள்
பயின்றுள்ளனர்.அனைவருக்கும் ஒரே கனவுதான். இந்த நாளைக் கைப்பற்றுங்கள்.
கீட்டிங்கின்
முதல் வகுப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.கோமாளித்தனம்
என்றும் வித்தியாசமானது என்றும் பலவாறு அனைவரும் பேசிக்கொள்கின்றனர்.
மறுநாள்
புத்தகத்தில் உள்ள 'கவிதையைப் புரிந்து கொள்வது எப்படி?' என்ற பாடத்தை
வாசிக்கச் சொல்கிறார் கீட்டிங். கவிதையைக் அறிவியல்பூர்வமாக பலவிதமாக
அளவிடுகிறது பாடம். முடிவில் கவிதையை அறிவியல்பூர்வமாக எப்படி அளவிட
முடியும்? கவிதை என்பது உணர்வுப்பூர்வமானது.எனவே,தவறான பாடத்தை அனைவரும்
கிழித்து விடுங்கள் என்கிறார்.மாணவர்கள் மகிழ்ச்சியாக புத்தகத்தைக்
கிழிக்கின்றனர்.
' ஏன் நாம் கவிதையை எழுதவும்,படிக்கவும் வேண்டும்?
ஏனெனில்,நாம் மனிதர்கள். மருத்துவம்,சட்டம், பொறியியல்,போன்றவை வாழ்வதற்கான பணத்தைத் தருபவை.
கவிதை, அன்பு, காதல் போன்றவை நம்மை உயிர்ப்புடன் வைப்பவை.'
என்று அரிய வகுப்பு நிறைவடைகிறது. மாணவர்கள் கீட்டிங்கை விரும்பத்தொடங்குகின்றனர்.
நீல், பழைய பள்ளி மலரிலிருந்து கஈட்டிங்கைப் பற்றிய குறிப்புகளை அறிகிறான்.'மரணக் கவிஞர் குழு' அமைத்தவர் என்பதைப் பற்றி அறியும் ஆவலுடன் நண்பர்கள் அனிவரும் ஆசிரியரிடம் கேட்கின்றனர்,
"பள்ளிக்கு
அருகிலுள்ள ஏரிக்கு அப்பாலுள்ள குகையில் யாருக்கும் தெரியாமல் இரவுகளில்
நண்பர்களுடன் சென்று கவிதைகள் வாசிப்போம். இது பள்ளி விதிகளுக்கு
முரணானது.இருந்தாலும் கவிதைமேல் கொண்ட காதலால் அப்படிச் செய்தோம். இதை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்." என்று கீட்டிங் கூறுகிறார்.
நீல், தனது நண்பர்களுடன் அன்றைய இரவே குகைக்குச் சென்று கவிதை வாசித்துத் திரும்புகிறான்.அவ்வப்போது இது தொடர்கிறது.
மைதானத்தில்
கால் பந்து உதைத்தபடி கவிதை சொல்வது, ஓசையுடன் நடந்து கொண்டே கவிதை
சொல்வது, வகுப்பறையில் மேசைமேல் ஏறி நின்று வித்தியாசமான கோணத்தில்
பார்ப்பது என கீட்டிங்கின் புதிய அணுகுமுறைகள் மாணவரிடையே ஆர்வத்தையும்
மற்றவரிடையே பொறாமையையும் ஏற்படுத்துகின்றன.
மிட் சம்மர் நைட் டிரீம்
என்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு நீலுக்கு கிடைக்கிறது.அப்பாவிடம்
கேட்டால் அனுமதி கிடைக்காது என்று,அவரின் கையெழுத்தை தானே போட்டு
அனுமதிக்கடிதம் கொடுத்து நாடக ஒத்திகையில் ஈடுபடுகிறான். நாடகத்தில் மகன்
நடிப்பதை எதிர்பாராத விதமாக அறிந்த தந்தை பள்ளிக்கு வந்து நீலைக்
கண்டிக்கிறார்.மருத்துவர் ஆவதே அவனது குறிக்கோளாக
இருக்கவேண்டும்.நாடகத்திலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்துகிறார். நீல்
வழக்கம் போலத் தந்தையின் சொல்படிக் கேட்பதாகக் கூறுகிறான்.
ஆனாலும் மனம் பொறுக்காமல் இரவில் கீட்டிங்கின் அறைக்குச் சென்று அவரது கருத்தைக் கேட்கிறான்.
அப்பாவின்
ஆசையை நிறைவேற்றுவது மகனின் கடமை. உனது ஆசைகளையும் அவரிடம் அன்பாக
எடுத்துக் கூறி நடிக்க அனுமதி பெறுமாறு ஆசிரியர் கூறுகிறார்.
அப்பாவிடம்
பேசினாலும் அனுமதிகிடைக்காது என முடிவுசெய்து,அவருக்குத் தெரியாமல்
நாடகத்தில் நடிக்கிறான் நீல். நாடக முடிவில் அனைவரும் அவன் நடிப்பைப்
பாராட்டுகின்றனர்.அவன் அப்பாவும் அரங்கிற்கு வந்திருக்கிறார்.கோபமுடன்
நீலைத் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். தனது வார்த்திகளை அவன்
மீறிவிட்டதாகவும் அவனை ராணுவப் பள்ளியொன்றில் சேர்க்கவிருப்பதாகவும்
கூறுகிறார்.மனம் உடைந்த நீல்,இரவில் அப்பாவின் துப்பாக்கியால் சுட்டுத்
தற்கொலை செய்துகொள்கிறான்.
நீலின் பெற்றோரின் வேண்டுகோளின்படி வெல்டன் பள்ளி முதல்வர் நோலன், நீலின் நண்பர்களையும் பெற்றோரையும் அழைத்து மிரட்டி
நீலின் தற்கொலைக்குக் காரணம் கீட்டிங்கின் தவறான போதனா முறைகள்தான் என
எழுதி வாங்குகிறார்.டோட், மறுத்தாலும் அனைவரின் வற்புறுத்தலின் பேரில்
கையொப்பமிடுகிறான். கீட்டிங் பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறார்.
மறுநாள்
ஆங்கில வகுப்பு.பள்ளி முதல்வர் நோலன்,மாணவர்களின் புத்தகத்தை எடுத்து
'கவிதையைப் புரிந்து கொள்வது எப்படி?' என்ற பாடத்தை வாசிக்கச் சொல்கிறார்.
கீட்டிங்கின் சொற்படி அந்தப்பாடத்தைக் கிழித்து விட்டதாக அனைவரும்
கூறுகின்றனர்.
" அது மிகச்சிறந்த அறிவியல் பூர்வமான அணுகுமுறை.இவ்வளவு
நாள் நீங்கள் தவறாக வழி நடத்தப்பட்டு இருக்கிறீர்கள்.இனி நான் உங்களுக்கு
சொல்லித்தருகிறேன்." என்று தனது புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச்
சொல்கிறார் நோலன்.
அப்போது தனது உடைமைகளை எடுக்கவேண்டி அங்கு வருகிறார்
கீட்டிங். அவரைப் பார்த்ததும் குற்ற உணர்வுடன் அனைவரும் தலை குனிய, பிறரின்
வற்புறுத்தலின் பேரிலேயே தானும் கைஎழுத்திட்டதாக கதறுகிறான் டோட்.நோலன்
அவனைக் கண்டித்து, விரைவில் வெளியேறுமாறு கீட்டிங்கிடம் கூறுகிறார். முதல்வரின் சொல்லையும் மீறி தனது மேசைமேல் ஏறி நின்று
'ஓ கேப்டன் மை கேப்டன்' என்று கண்ணீருடன் அழைக்கிறான் டோட் . முதல்வர்
கடுமையாகக் கண்டித்துச் சத்தமிட மற்ற சில மாணவர்களும் அதையே
செய்கின்றனர்.அமைதியாக வெளியேறுகிறார் கீட்டிங்.
மாற்றங்களை
விரும்புபவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்கத்தயாராகவும்
இருக்கவேண்டும். எவ்வளவுதான் அடக்குமுறைகள் இருந்தாலும் கற்பித்தலில்
ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தம் பணியைத் தொடருவார்கள். அவர்களிடமே மானுடத்தின்
எதிர்காலம் ஆக்கம் பெறுகிறது.பல்வேறு விருதுகளைக் குவித்த இப்படம் இன்றளவும் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் ஒரு பாடமாகவே விளங்கி வருகிறது.