மறுதேர்வு பல்வேறு மாற்றங்களுடன் நடைபெற்றது.
அதிகரிக்கப்பட்ட நேரம்,வினாத்தாளையும் விடைத்தாள் நகலையும் தேர்வர்கள் எடுத்துச் செல்லலாம்.விடைக்குறிப்புகளும் இணையத்தில் வெளியிடப்பட்டன.நானும் ஒரு தேர்வறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றினேன்.கேள்விகள் மாணவர்களின் பாடப் புத்தகங்களில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன.
தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன.
வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே தேறியுள்ளனர்.ஏறத்தாழ 6 இலட்சம் பேரில் தேறியவர்கள் ஏறத்தாழ 8000 பேர்.
என்ன ஆனது வருங்கால ஆசிரியர்களுக்கு?
ஆசிரியர் பணி -ஆசிரியர் வேலையானதால் வந்த வினை.கைநிறையச் சம்பளம்.வேலை பார்க்க வேண்டியதில்லை என்ற எண்ணம்.தாங்கள் கேட்டதோடு மட்டுமில்லாமல் பல தலைமுறைகளைக் கெடுக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் பணமே பிரதானமாய்.
மாணவர்களின் எதிர்காலம் குறித்து உண்மையிலேயே கவலைப்படும் ஆசிரியர்கள் அத்திப்பூக்கள்.
அறிவற்ற ஆசிரியரிடம் நம் பிள்ளைகளைப் படிக்க வைக்க விரும்புவோமா?நம் பிள்ளைகள் மட்டும் உயர்தர (?) கொள்ளைக் கல்வி நிறுவனங்களில் படித்து 100 சதவீத மதிப்பெண் பெற்று லட்சலட்சமாய் சம்பாதிக்க வேண்டும்.நாம் காசு கொடுத்து வேலை வாங்கி, மாணவர்களை அடித்து,திட்டி,எக்கேடும் கெட்டுப்போ எனச் சாபங்களும் தந்துவிட்டு,
"எவனுக்குமே படிக்கறதுல அக்கறையில்ல, ஒழுக்கமில்ல,பெத்தவங்க சரியில்ல,கல்வித்திட்டம் சரியில்ல,அரசு எல்லோரையும் பாசாக்கி விட்டுருது"
என்றெல்லாம் புலம்பி நடித்து நம்மைத்தவிர அனைவரையும் பழி சொல்லுகிறோம்.
மாணவர்கள் இருப்பதால் தான் நமக்குச் சம்பளம் என்பதை மறந்து போனோம்.வேலை வாங்கிவிட்டால் 58 வயதுவரை,அதன்பின் வாழும் வரை,அதன்பின் குடும்பத்திற்கும் என பண வரவுகள் இருக்குபோது நமக்கென்ன கவலை.
இப்போது பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வுகள் வைக்கவேண்டும்.குறிப்பிட்ட கால இடைவெளியில் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.தோல்வி அடைபவர்களுக்கு ஊதிய உயர்வுத் தடை, பணி நீக்கம் என்று தகுதிக்கேற்ற தண்டனைகள் தரவேண்டும்.
எனக்கு வயதாகிவிட்டது முன்பு படித்ததை எப்படி நினைவுகூற முடியுமென ஒரு வயதான மருத்துவர் அறுவை சிகிச்சையின் இடையே கூறுவாரா? மற்ற அனைத்து பணியிலும் அன்றைய புதுமை வரை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.ஆசிரியர்களாகிய நாம் மட்டுமே புதியன கற்காமல் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு,கிணற்றுத் தவளைகளாய் இருப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவரைக் குறை கூறிப் பிழைக்கிறோம்.
சட்டங்கள் கடுமையானதாக வரும்.மாணவர்கள் கேள்வி கேட்பார்கள்- அவமானத்திற்குமுன் நாம் கற்போம்.தவறினால் வலியுடன் கற்பிக்கப்படுவோம்.
No comments:
Post a Comment