Saturday, 1 November 2014

'கற்க கசடற'


தேர்வு முடிந்ததும் மாணவர்களை அனுப்பிக்கொண்டிருந்தோம்.
எங்கள், இடைநிலை உதவித்தலைமையாசிரியர் அருகே நின்றுகொண்டிருந்தார். மெதுவாக பேச்சுக்கொடுத்தேன்.
என்ன,அன்னைக்கு ஒரே சத்தமா இருந்துச்சு!
நான் பதிலுக்கு சத்தமிட்டது நினைவுக்கு வந்திருக்கலாம். இருந்தாலும் கேட்டதால் மெதுவாக பதில் சொல்ல ஆரம்பித்தார்.
ஆமா, இந்த விகடன்ல ஆசிரியரபத்தி தப்பா எழுதிக்கிட்டே இருக்குறான்....
அப்புடியா....எப்போ, நீங்க வாசிச்சீங்களா?
இல்ல, சொன்னாங்க....
அதான பாத்தேன், போன ரெண்டு வாரம் மட்டும்தான் நேரடியா ஆசிரியர்களை எழுதிருக்காங்க,
கொஞ்சம் தப்பு கொஞ்சம் சரி மாதிரி தெரியுது.....
அந்த வேலைநாள் பத்தி ஏதோ ....
அட, ஆமா, அத சொன்னது நம்ம நண்பர்தான்,நான் கொஞ்சம் திருத்தித்தர்றேன்னு சொன்னேன், அவசரப்பட்டு எழுதிட்டாங்க.(சும்மா ரீல்)..மேலும் தொடர்ந்தேன்.
ஆசிரியர்களின் விடுமுறைகள் பற்றிய புலம்பல்கள் அதிகப்பிரசங்கம். ஆனா, கற்றல் கற்பித்தல் நாட்கள் பற்றிய கணக்கு.......
ஒவ்வொரு பள்ளிக்கும் வேலை நாள் மாறுது சார்,
அவன் எழுதுனது தப்பு.
9 ஆம் வகுப்பு வரைக்கும் நிறைய நாட்கள் கற்றல் கற்பித்தல் நாள்.
10 ஆம் வகுப்புக்கு அவுங்க சில தேர்வுகள் நடக்குற நாட்களை கழிச்சிருக்காங்க.ஆனா இடைப்பருவத்தேர்வுகள் ,மூன்று திருப்புதல் தேர்வுகள் நடக்குற நாளெல்லாம் கழிச்சா இன்னும் குறையும்.
12 ஆம் வகுப்புக்கு செய்முறைத்தேர்வு நாட்களையும் சேத்துக்கலாம்.அதுக்கு அப்புறம் அவன் பள்ளிக்கே வரமாட்டான்.....
11 ஆம் வகுப்பு தாமதமா தொடங்கி சீக்கிரமா முடிஞ்சிடும்.
இப்போ சொல்லுங்க....கூட்டிக்கழிச்சுப்பாத்தா
கணக்கு எப்புடி!
நீங்க,விகடனுக்கு என்ன பதில் எழுதப்போறீங்க?
டேய்...ஒழுங்கா வரிசையா போ......
உதவித்தலைமையாசிரியர் மெதுவாக நகர்ந்தார்.
எங்கள் இடைநிலை உதவித்தலைமையாசிரியர் விளையாட்டாய் பேசினாலும் விகடனின் 'கற்க கசடற' நமக்கு சிலவற்றை முன்னெச்சரிக்கை செய்கிறது.
அரசுக்கும் மக்களுக்கும் முன்னெச்சரிக்கை செய்யவேண்டியதும்
விகடனின் கடமை.

தேர்வுகள்


தேர்வுகள் தொடங்கிவிட்டன.
பணிகளிலேயே கடினமானதாக நான் உணர்வது தேர்வறைக்கண்காணிப்பாளர் பணியையே.
காலையும் மாலையும் மூன்று மணிநேரம்.
தேர்வறையில் உட்காரும் பழக்கமும் எனக்கு இல்லை.
அதிகம் கேள்வி கேட்பவன் என்பதால் எனக்குப்பணியும் அதிகமாக இருக்கும். பணியில் என்றும் சோம்பேறித்தனம் காட்டியதில்லை. எனினும் மனம் சற்றே வெறுப்படையும்.
அதை மாணவரிடம் காட்டிக்கொள்ள மாட்டேன்.
மாணவர்களில் பலரும் எழுத்துச்சோம்பேறிகளாக உள்ளனர்.
கொஞ்ச நேரமே எழுதிவிட்டு சும்மாவே இருக்கின்றனர். வேடிக்கை அல்லது தூக்கம்.
எதையாவது எழுது என்று சொன்னாலும் கேட்பதில்லை.
எழுத சோம்பேறித்தனப்படுவதாலேயே எழுத்துப்பிழைகள் அதிகமாக வருகின்றன.
பாடத்திட்டம், பயிற்று முறைகள் ஆகியன மாற்றம் கண்டு வருவதுபோல் தேர்வுமுறையும் மாறினால் என்ன?
எப்படி?

பெரியார்

வழக்கம் போல் பாடம் முடிந்தபின் கடைசி 15 நிமிடங்கள், இன்று யாருடைய பிறந்தநாள் என்று கேட்டேன். அதுவரை அமைதியாக இருந்த மாணவர்கள் மகிழ்ச்சியானார்கள்.
சிலர் கத்தினர்,"பெரியார்"
முழு பேரு?
ஒருவன் சொன்னான்,"பெரியார்.ஈ.வெ .ராமசாமி".
யாரு அவரு?
நீங்க சொல்லுங்க!
வழக்கம்போல் தொடங்கினேன்.
ஒரு தலைவர் என்ன செய்தார் என்று பார்க்கணும்னா, அவர் இல்லாம போயிருந்தா என்ன ஆயிருக்கும் அப்படின்னு பாத்தாலே போதும்.
பெரியார் இல்லேன்னா.... இப்படி நாம எல்லோரும் ஒன்றாக வகுப்புல இருந்திருக்க முடியாது.
சிலர் படிக்க, சிலர் ஆடு மாடு மேய்க்க,ஆளுக்கொரு வேலை பார்த்துக்கிட்டு இருந்திருப்போம்.
என்று தொடங்கி சில செய்திகளைச்சொன்னேன்.
சிறிது நேரம் கழிந்ததும் சிலர் பேச ஆரம்பித்தனர்.சிறு குசும்புகள்.
பின் வரிசையில் கவனம் சிதற ஆரம்பித்தது.
எனது பேச்சை நிறுத்திவிட்டேன்.
மீண்டும் சொன்னேன்,
"பெரியார் இல்லையென்றால் நீங்கள் இப்படி இருந்திருக்க முடியாது".
சிலர் கவனிக்காமல் சிரித்துக்கொண்டிருந்தனர்.
நான் சொல்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன்.
ஒரு சிலர், "ஐயா,சொல்லுங்கள்" என்றனர்.
"எல்லாம் சொல்லிவிட்டேன்". அமைதியானேன்.

அரசுப்பள்ளி

ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் ஏன் சேர்க்கவில்லை? என்ற வினா எழுப்பப்படும்போதெல்லாம் என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்று நடுநிலையோடு விவாதம் செய்யாமல் ஏன் கோபப்படுகிறோம்?
அரசு மருத்துவர், தனது பிள்ளைகளை எங்கு காட்டுகிறார்?
ரேஷன் கடை, இன்ன பிற அரசுத்துறைகளை உதாரணம் காட்டுவதே ஒருவகையில் நம் அறியாமையைக்காட்டுகிறது.
அரசு மருத்துவர் தனியார் மருத்துவமனையை நாடக்காரணம்,
அரசு மருத்துவமனையில் தரம் இல்லை.
அதேபோல் அரசுப்பள்ளியில் தரம் இல்லை என நாம் ஒத்துக்கொள்ளத்தயாரா?
இரு மருத்துவமனைகளிலும் மருத்துவம் செய்வதென்னவோ ஒரே மருத்துவர்தான் என்பதும் முரண்.
சரி. நுகர்பொருளோடு கல்வியை ஒப்பிட முடியுமா?
கல்வி, அறிவு சார்ந்தது.
பிற துறையினரின் தவறுகள் சிறு பாதிப்பையே தரும்.
ஆசிரியரின் தவறுகள்,
வருங்காலத்தலைமுறையையே பாதிக்கும்.
ஆசிரியர் பற்றாக்குறை, கட்டமைப்பு, இடமாறுதல், பயிற்றுமுறை குழறுபடிகள் என்று சொல்லப்படும் காரணங்கள் ஆர்வமிக்க ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் சரிசெய்ய இயலும்.

யோசிக்கலாம்.


கல்வி, அதன் பயன் குறித்த தீர்க்கமான சிந்தனை பெரும்பாலான ஆசிரியர்களிடம் இல்லை.பணம் குறித்தே யோசிக்கிறார்கள்.கல்வியும் அதை நோக்கியே நகர்ந்துள்ளது.
விலை உயர்ந்த பள்ளியில் முதலீடு செய்தால் நல்ல வேலையில் அறுவடை செய்யலாம் என குழந்தைகளின் கண்ணைக்கட்டி ஓடவிடுகிறார்கள். அதற்காகவே அரசுப்பள்ளிகள் தரக்குறைவுடன் நடத்தப்படுகின்றன. வெளிப்படையாக ஆசிரியர் தெரிவதுபோல மறைமுகக்காரணிகளும் உண்டு. எனினும் ஆசிரியர்களுக்கே பெரும்பங்கு உண்டு.
அருகமைப்பள்ளி குறித்து யாரும் மூச்சு விடுவதில்லை. இன்னும் இலவசத்திட்டங்களை முறைப்படுத்தினாலே நல்ல பயன் கிடைக்கலாம். உதாரணமாக, இலவச பயண அட்டையின் பயண தூரத்தைக்குறைக்கலாம். +2 வகுப்பிற்கு படித்து முடித்தபின் மடிக்கணினி வழங்குவதை நிறுத்தலாம்.
ஆசிரியர் தனது குழந்தையை அரசுப்பள்ளியில் படிக்கவைத்தால் ஊக்க ஊதியம் அளிக்கலாம். ஆசிரியருக்கு ஆண்டுதோறும் அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு வைத்து சமகால அறிவை பரிசோதித்து தேறினால் மட்டுமே ஆண்டு ஊதிய உயர்வு வழங்கலாம்..........
யோசிக்கலாம்.

நம் வகுப்பறைக்குள் நாமே ராஜா.


புத்தகங்கள் மாறுகின்றன.
கல்விமுறைகள் மாற்றப்படுகின்றன.
என்ன செய்யவேண்டுமென தெளிவாகச்சொல்ல ஆளில்லை.
ஏன் செய்யவில்லை? என்று கேட்க ஆயிரம் பேர்.
ஒரு முறையை செய்து பார்த்து விளைவைக்காணும் முன்பே
மாற்று முறை.
மாணவரைவிடக்குழம்பிய நிலையில் ஆசிரியர்கள்.
காகிதத்தில் சதவீதம் கேட்கும் அதிகாரிகள்.

எல்லாம் சரி.
கோபமும் குழப்பமும் செல்லுமிடம் குழந்தைகள் தானே!

உயிர்த்துடிப்புடன் ஆர்வத்துடன் வலம் வரும் குழந்தைகளுக்கு நாம் என்ன சொல்லித்தருகிறோம்?
பாடப்புத்தகங்கள்,பாடத்திட்டங்கள் அவ்வப்போது குழப்புவதால் அவற்றின்மீது பழிபோட்டு சுலபமாக சிலர் தப்பிவிடலாம்.
ஒரு ரூபாய்க்கு வாங்கினாலும்
தரம் பார்த்துப்பொருள் வாங்கும் நான்,
வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ற அளவு பணி செய்கிறேனா?
என்ற சுய பரிசோதனையே அவசியம்.

மாநிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் அரசுப்பள்ளிகள்
சாதிக்கும்போது அனைத்து அரசுப்பள்ளிகளும் சாதிக்கத்தடையாக இருப்பவற்றை கண்டறிந்து நீக்க வேண்டும்.
தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் ஆசிரியை,
நம் பிள்ளைக்கு ஒழுங்காகச்சொல்லித்தருகிறாரா?
என்று எவ்வளவு கவனிக்கிறோம்.
நம்மை நாம்தான் சுயபரிசோதனை வேண்டும்.

காதிதத்தில் கேட்போருக்கு அதைக்கொடுப்போம்.
கனவுகளுடன் வரும் குழந்தைகளுக்கு
கனவுகள் வளர்ப்போம்.
நம் வகுப்பறைக்குள் நாமே ராஜா.

கவிவாக்கு


11ஆம் தேதி நள்ளிரவிற்குப்பின்பே மகாகவி புகழுடல் எய்தினான். எனவே 12 ஆம் தேதியே அவனது நினைவு நாளாகக்கொண்டாடப்படவேண்டும் என்றாலும் இன்றையதினத்தையே காலம் காலமாக கொண்டாடிப்பழகிவிட்டோம்.
நாளில் என்ன இருக்கிறது?
பாரதியை நினைத்தாலே போதும்.
'படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் ஐயோவென்று போவான்'
பாரதியின் வரிகளிலேயே இவை மட்டுமே அதீத கோபத்துடன் வெளிப்பட்ட வரிகள் என்று நம்புகிறேன்.
இவ்வளவு வெறுப்பை அவன் எங்குமே உமிழ்ந்ததில்லை.வெள்ளையர் மீது கூட இப்படி ஒரு சாபமிட்டதாகத்தெரியவில்லை.
படித்தவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
கவிவாக்கு பொய்க்காது.