Wednesday, 4 March 2015

28.11.2014
ஆண்டுவிழா...
ஆண்டுவிழா ஒத்திகையில் ஹிந்திப்பாடல் குழுவிலேயே இறுதியில் இரண்டு நிமிடங்கள் கட்டைக்கால் ஆட்டமும் இருந்தது.
கிராமிய நடனங்களை மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதில் நான் மட்டுமே ஆர்வம்காட்டிவருகிறேன். கடந்தஆண்டு கலை பண்பாட்டுத்துறை மூலம் பயிற்சி ஏற்பாடு செய்திருந்தேன்.அதில் கட்டைக்கால் நடனம் சிலகாலம் பயின்றனர் நான்கு மாணவர்கள்.
காலில் கட்டை கட்டி நடக்க மட்டுமே பழகியிருந்தனர்.
தொடக்கத்திலேயே என்னிடம் வந்து கேட்டனர்,
சார், கட்டைக்கால் ஆடணும்,கட்டைகள் வேணும்.
என்ன பாட்டு? ஆடத்தெரியுமா?
மிஸ் கூப்பிட்டாங்க. மியுசிக் போட்டுஆடப்போறோம்.
சரி வாங்கித்தர்றேன்.
கலைநிகழ்ச்சிகளின் முழுப்பொறுப்பாசிரியரிடம் சென்றேன்.
சார், அந்த அம்மையார் கட்டைக்கால் ஆட்டத்தையும் சேர்த்திருக்காங்களாம்.
கட்டைக்கால் வேணும்னா வாடகைக்குத்தான் எடுக்கணும்.
சரி,கொண்டுவரச்சொல்லுங்க.
நானும் சொன்னேன்.
மறுநாள் இரண்டு ஜோடி கட்டைகள் வந்தன.
மாணவர்களிடம் கொடுத்தோம்.
மீதி இரண்டு ஆண்டு விழாவிற்கு முதல்நாள் வரும் என்றோம்.
ஆறாம் வகுப்பில் திருவிழா என்றொரு பாடம்.
மாணவர்களுக்கு ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கிராமிய நடனங்களில் சில கூறுகளை கற்றுக்கொடுத்தேன்.
ஒரு மாணவனுக்கு சுலபமாக கரகச்செம்பு தலையில் நின்றது.
கட்டைக்கால் ஆடும் மாணவனை அழைத்து,
இவனுக்கு கரகம் நன்றாக வருகிறது, இவனையும் உங்களோடு சேர்த்துக்கொள்ளுங்கள். என்றேன்.
இரு நாட்கள் கழித்துக்கேட்டேன்.
கரகம் எப்படி ஆடுகிறான்?
அவன் சரியா ஆடலைன்னு மிஸ் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.
ஒத்திகை.
ஹிந்திப்பாடல்.
இருவர் முன்னாள் ஆட, பத்துபேர் பின்னால்.
தொடர்ந்து ஒரு தமிழ்பாடல்.
இருவர் மட்டுமே ஆட, பின்னால் மற்றவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
அடுத்து செண்டை மேள இசை.
கட்டைகள் கட்டி நான்கு மாணவர்களும் அங்கும் இங்கும் நடந்தனர்.
மற்றவர்கள் சுற்றி நின்று கைகளைத்தட்டிக்கொண்டே இருந்தனர்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
மறுநாள் கட்டைக்காலுக்கு வாடகை பேச கிராமியக்கலைஞர் வந்திருந்தார்.
நானும் மாணவர்களை அழைத்து உங்கள் ஆசிரியையிடம் கூட்டிச்செல்லுங்கள்.அவர்களே பேசட்டும். என்று அனுப்பிவைத்தேன்.
சில நிமிடங்களில் அனைவரும் திரும்பி வந்தனர்.
மாணவர்களின் கண்கள் கலங்கியிருந்தன.
மூத்த கிராமியக்கலைஞர் மோகன் சொன்னார்,
அந்த அம்மாவுக்கு வாடகை பற்றி எதுவும் தெரியாதாம்.
சும்மான்னு நெனைச்சாங்கலாம்!
வாடகைன்னா, வேண்டாம்னு சொல்லிட்டாங்க.
பசங்களுக்கும் செம திட்டு.
மாணவர்களைப்பார்த்தேன்.
ஏண்டா, நீங்க சொல்லலியா?
கண்களில் நீர்.
என்ன செய்வது?
சரி.மோகன், வாடகையை அப்புறம் வாங்கிக்கங்க.
டேய்,நீங்க கட்டையை கால்ல கட்டுங்க.
ஒருசில ஸ்டெப் சொல்லித்தர்றேன்.
அழகர் ஆட்டத்துல நீங்களும் ஆடுறீங்க.
அழகர் வரும்போது காலில் கட்டை கட்டி உயரமாக ஒய்யாரமாக ஆடியபடி அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும் அனைவரையும் மகிழ்வித்தார்கள்.
நான்கு மாணவர்களில் மூன்றுபேர் மட்டுமே ஆடினார்கள். ஒருவனைக்காணவில்லை.

27.11.2014
முந்தாநாள் காலை தலைமையாசிரியர் என்னையும் நண்பர்களையும் அழைத்தார்.
இன்று மாலை ஆண்டுவிழா நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக நடத்தித்தர வேண்டும். கலை நிகழ்ச்சிகள் உங்களின் கைகளில்தான் உள்ளது. மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதீர்கள்.
சிவா, மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதே, பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
சார், எல்லாம் சிறப்பாக நடக்கும்.
பரதம் அந்தப்பையன் நன்றாக ஆடுகிறான்.முதல் நிகழ்ச்சியாக அவனே ஆடுவான். ஓரிரு ஆசிரியர்கள் பக்கவாத்தியங்கள் வாசிப்பதுபோல நடிப்பார்கள். எனவே, பார்க்க நன்றாக இருக்கும். என்றார்கள்,நண்பர்கள்.
நான் சொன்னேன்,
சார், முந்தைய வருடங்களில் அவர்கள் சொல்லித்தந்து பரதம் ஆடிய யாரும் ஆடியது பரதமே இல்லை. எப்போதுமே மாணவர்கள் அவர்களாகவே ஆடுவார்கள்.இவர்கள் சும்மா பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
முதல் நிகழ்ச்சியாக வேண்டாமே!
சார், முதலில் பரதம் தான். நல்லா இருக்கும்.
அனைவரும் வெளியே வந்தோம்.
எனக்கு கடுமையான கோபம்.
என்னசெய்யலாம் என்று யோசித்தேன்.
கிராமிய நடனத்தில் நான் ஆடுவதை நிறுத்திக்கொள்ளலாம் என முடிவு செய்தேன்.
யாரிடமும் சொல்லவில்லை.
சித்திரைத்திருவிழாவில் ஆற்றில் இறங்கும் அழகர்போலவே குதிரையில் அழகரை உருவாக்கிக்கொண்டிருந்தனர் எங்கள் முன்னாள் மாணவர்கள் சையது மற்றும் சேகர்.
ஒப்பனை முடிந்ததும் அப்படியே பெண்போலவே இருந்தான் பரதம் ஆடும் மாணவன்.
ஆசிரியர்களும் பக்கவாத்தியக்காரர்கள் போல அபிநயிக்க பரதம் அற்புதமாக அரங்கேறியது.
அழகர் ஆட்டக்காரர்கள் ஒப்பனை முடிந்ததும் அனைவரிடமும் பேசினேன்.
நண்பர்களே,இது நம் பள்ளியில் உங்களுக்கு இறுதி ஆண்டுவிழா. முழு வேகத்துடன் ஆடுங்கள்.உங்கள் பயிற்சி சிறப்பாக இருந்தது. நன்றாக ரசித்து மகிழ்ந்து ஆடுங்கள்.என்றேன்.
சார்,இன்னும் நீங்க டிரஸ் மாட்டல.
நான் ஆடல.
அனைவரும் உடைகளை களையத்தொடங்கினர்.
பதறித்தடுத்தேன்.
நண்பர்களே, நான் ஆடவில்லை என்பதற்கு காரணம் இருக்கிறது. இதைவைத்துதான் நான் கலை நிகழ்சிகள் தொடர்பாக வருங்காலத்தில் கேள்வி கேட்க முடியும்.நீங்கள் ஆடாவிட்டால் அது என்மீது குற்றமாக மாறிவிடும். நீங்கள் சிறப்பாக ஆடினால் நான் தைரியமாகப்பேசமுடியும்.
மாணவர்கள் ஒத்துக்கொண்டனர்.
அழகர் ஆட்டம் என்பதால் ஆறு மாணவர்களுமே ஆடத்தொடங்கிய நாளிலிருந்தே விரதமிருந்துவருகின்றனர். அன்றையநாளில் காலையில் இருந்தே எதுவுமே சாப்பிடவில்லை.
நிகழ்ச்சிக்கு முன் ஏதேனும் சாப்பிடச்சொல்லியும் மறுத்துவிட்டனர்.
இறுதி நிகழ்ச்சியாக அழகர் ஆட்டம் தொடங்கியது.
ஒருசில ஒளிப்படங்கள் மட்டுமே என்னால் எடுக்க முடிந்தது.
ஆட்டத்தின் வேகத்தில் மெய்மறந்து விழிகளில் நீர்த்திரையுடன் நின்றிருந்தேன்.
அழகர் மேடையில் தோன்றியபின் அனைவரும் எழுந்து ஆர்ப்பரிக்க நானும் வைகைக்குள் நின்றுகொண்டிருந்தேன்.

25.11.2014
பள்ளியில் விளையாட்டுவிழா மற்றும் ஆண்டு விழா.
வேலைகள் அதிகம்.
வழக்கம்போல கலைக்குழுவிலும் பணி.
ஆடுகிறோம், என்று மாணவர்கள் திரைப்படப்பாடல்களோடு கலைக்குழு பொறுப்பாசிரியர்களை தேடி வருவார்கள். ஆசிரியர்களும் ஆசிரியைகளும் தங்கள் குழுக்களை தயார் செய்வார்கள்.
எங்களுக்குள்ளும் குழுக்கள் உண்டு.
நான் நாட்டுபுற நடனம் ஏதேனும் தயார் செய்வேன்.
இந்த ஆண்டு அழகர் ஆட்டம்.
விழாவுக்கு ஒருசில நாட்களுக்கு முன் முழுமையான ஒத்திகை நடைபெறும்.
இரு தினங்களுக்கு முன்,சனிக்கிழமை ஒத்திகை.
12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பரதம் ஆடினான்.
" மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன......."
எப்போதோ சிறுவயதில் கற்றிருக்கிறான்.ஓரளவு படத்தைப்பார்த்து ஆடுகிறான். தாளம் சரியாக இல்லை.
ஆடி முடிந்ததும் ஒரு ஆசிரியை,
இவன் ஆடுனது பரதமே இல்ல, கூத்தாடுறான். கண்டபடி குதிக்கிறான்.
தாளமே இல்ல. நம்ம ஸ்கூல் தலைவருக்கு நல்லா பரதம் தெரியும்.இப்படி தப்பா ஆடுனா கோபிப்பாரு.
தலைமையாசிரியரும் ஒத்துக்கொண்டார்.
இதை யார் ஏற்பாடு செய்தார்கள்?
அனைவரும் இல்லையென ஒதுங்கிக்கொண்டனர்.
அந்த மாணவனை ஆடச்சொல்லி ஊக்கப்படுத்திய முதுகலையாசிரியர் அப்போது வரவில்லை.
நான் நடப்வற்றை கவனித்துக்கொண்டிருந்தேன்.
ஒரு மாணவன் ஆர்வமுடன் தானாகவே கற்றுக்கொண்டு வந்து ஆடியது பொறுக்கவில்லையே என்று கோபம் வந்தது. சண்டை போடாமல் காத்திருந்தேன்.
அவனை குறைசொல்லிய ஆசிரியைதான் முந்தைய ஆண்டுகளில் பரதம் ஏற்பாடு செய்பவர்.ஓரளவு தெரியும்.
ஆனால்,இதுவரை அவர் சொல்லிக்கொடுத்த மாணவர்களும் முழுமையாக பரதம் ஆடியதில்லை.
பொறுமையாக இருந்தேன்.
அந்த ஆசிரியையும் அவரின் தோழியும் இணைந்தே கலை நிகழ்சிகள் தருவார்கள்.
அவர் தோழி ஒரு குழுவை உருவாக்கியிருந்தார்.
9 ஆம் வகுப்பு மாணவர்கள்,
இன்றைய தொலைக்காட்சி நடனம் போல கடுமையான அசைவுகளுடன் சிறு சிறு திரைப்படப்பாடல்களுக்கு நடனமாடினர். அதில் இந்திப்பாடல்களும் இருந்தன.
மாலை வீட்டிற்கு வந்தபின் ஹிந்திப்பாடலின் அர்த்தம் பார்த்தேன்.
எண்ணியது சரி. மோசமான வார்த்தைகள்.

ஆண்டு விழாக்களில் கலை நிகழ்சிகளில் ஒரு தரம் வேண்டாமா?
பாடல்களில், நடன அசைவுகளில் கவனம் வைக்கவேண்டும்.
திரைப்படப்பாடல்களை பயன்படுத்தலாம்.அர்த்தம் கவனிக்கப்படவேண்டும்.
நம் பகுதியில் உள்ள கிராமியக்கலைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
வெறும் கேலிக்கூத்தா, ஆண்டுவிழா?
மறுநாளும் பள்ளியில் ஒத்திகை.
கலைக்குழு பொறுப்பாசிரியரிடம் சென்றேன்.
பள்ளியில் கலைநிகழ்ச்சி என்றால் அதில் ஒரு பொறுப்பும் அர்த்தமும் இருக்கவேண்டும். இந்திப்பாடல் நல்ல வார்த்தைகள் உள்ளதாக இல்லை. தடை செய்யுங்கள்.
இந்திதானே, என்றார்.
பள்ளி நிர்வாகக்குழு தலைவருக்கு ஹிந்தி நன்றாகத்தெரியும்.இதுபோன்ற பாடல்கள் அவருக்கும் பிடிக்காது என்றேன்.
தலைமையாசிரியரிடமும் சொன்னேன்.
கலைக்குழு பொறுப்பாசிரியர் கேட்டார்,
உனக்கு என்னதான் வேண்டும்?
இரண்டே கோரிக்கைகள்.
ஒன்று,
இதுவரை நன்கு பரதம் தெரிந்து யாரும் ஆடவில்லை.
மாணவனின் ஆர்வத்தை தடை செய்யக்கூடாது.
பரதம் முதல் நிகழ்ச்சியாக இடம்பெறவேண்டும்.
இரண்டு,
அந்த இந்திப்பாடல் கூடவே கூடாது.
பரதம் இருக்கும். இந்தியை எடுக்க முடியாது, H.M இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்.
எனக்கு கோபமாக வந்தது.
எனது மாணவர்களை ஆடவிடாமல் நிறுத்திவிடுவேன் என்று சொல்லிப்பார்த்தேன்.
தோற்றுப்போனேன்.
அழகர் ஆட்டமாடும் மாணவர்கள் இந்த ஆண்டோடு 12 ஆம் வகுப்பு முடித்துச்செல்கிறார்கள். எனவே, ஆடவிடாமல் செய்ய
மனம் ஒப்பவில்லை.
Like ·
·
21.11.2014
அஞ்சு பைசா என்பது அவன் பட்டப்பெயர்.
பட்டப்பெயர்கள் இப்போது அரிதாகிவிட்டன.
குறைபாடுகளை சொல்லிக்கேலி செய்யும் போக்குகள் தென்படுகின்றன.
இதுபோல் ஆச்சரியமான பெயர்கள் அபூர்வம்.
9 ஆம் வகுப்பில் படிக்கிறான் அஞ்சுபைசா.
தமிழ் எழுத்துக்களே தெரியாது.
பள்ளி தொடங்கியதிலிருந்து என்னென்னவோ செய்துபார்த்துவிட்டேன்.
பகத்சிங் சொல்லித்தருவான் என்று நம்பினேன்.அவனும் விட்டுவிட்டான்.ஓரளவு முன்னேற்றம் என்றாலும் வாசிக்க இயலவில்லை.
பார்த்து எழுதுவான்.
கையெழுத்துப்பயிற்சி நல்லது என்று சொன்னபோது எல்லோரையும்போல அவனும் நாளுக்கு ஒருபக்கம் என்று புத்தகத்தில் இருக்கும் மனப்பாடப்பாடல்களை எழுதத்தொடங்கினான். ஓரிரு நாட்களில் நாளுக்கு பத்து இருபது என்று புத்தகத்தின் முன்னட்டை முதல் பின்னட்டை வரை எழுதுவான். பக்கத்திற்கு ஒரு தேதி என்று எதிர்காலத்தில் எழுதிக்கொண்டிருந்தான்.
ஒருபக்கம் எழுது,நிறுத்தி எழுது என்று சொன்னாலும் கேட்பதில்லை.
சொந்தமாக எழுதத்தெரியாது.
சிரித்த முகத்துடன் இருப்பான்.
தமிழ் வகுப்பு தொடங்குவதற்கு முன்பே எனது அறைக்கு அழைக்க வந்துவிடுவான்.
வகுப்பில் நான் ஏதேனும் சொல்லிக்கொண்டிருந்தால் சிறிது கவனிப்பான். பிறகு,விளையாடத்தொடங்கிவிடுவான்.
வேறு யாரேனும் பேசினால் எழுந்துசென்று அடிப்பான்.
அடி வாங்குவான்.
அவனது சேட்டைகள் சிலசமயங்களில் எல்லை மீறும்போது முன்னால் அழைத்து உட்காரச்சொல்வேன்.
என்னசொன்னாலும் வாசிப்பில் ஆர்வம் காட்டவே இல்லை.
பயிற்சி ஆசிரியை சொன்னால் கேட்பான் என்று எண்ணினேன்,சிறிது முயன்றான். எனினும் சேட்டைகள் தொடர்ந்தன.
நேற்று அவன் சேட்டை எல்லை மீறியது. என்ன சொல்லியும் கேட்கவில்லை. முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டேன்.
இனி நீ திருந்த மாட்டாய்,உனக்கு எவ்வளவோ செல்லம் கொடுத்துவிட்டேன்.நீ படிப்பதில்,வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.வா, உனக்கு T.C வாங்கித்தந்துவிடுகிறேன். என்றேன்.
கொஞ்சம் கொஞ்சமாக அவன் முகமும் இருண்டது.
எனக்குப்பாவமாக தோன்றியது.இருந்தாலும் முகத்தை கடுமையாகவே வைத்துக்கொண்டேன்.
அவன் அழுவதுபோல் ஆகிவிட்டான்.
பக்கத்தில் இருந்தவனிடம்,
இவனை என் அறைக்குமுன்பாக உட்கார வை. வீட்டுக்கு ஒரேடியாக அனுப்பிவிடுகிறேன்.திருந்தவே மாட்டான்.
என்றுசொல்லியனுப்பிவிட்டேன்.
அனைவரும் அதிர்ந்துவிட்டனர்.

வகுப்பு முடிந்த பின் அறைப்பக்கம் செல்லவே இல்லை.
சில பாடவேளைகள் கழிந்தபின் மைதானத்தில் வந்துகொண்டிருந்தபோது,
அஞ்சு பைசா எதிரே வந்தான்.
என்ன?
சாரி,சார்.
கண்களில் நீர்.
தப்புதானே!.
ம்.
வாசிக்கத்தெரியாம இருக்கறது எனக்கு அசிங்கமில்லையா?
ம்.
என் அறையிலேயே இரு. வாசிச்து பழகிட்டு வகுப்புக்கு போகலாம்.
சிரித்தான்.சிரித்தேன்.
20.11.2014
நேற்று,
ஆறாம் வகுப்பில் படைப்பாற்றல் திறன்.
குறிப்புகளை எவ்வாறு விரித்து எழுதுவது?என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.
ஒரு மாணவன் எழுந்தான்.
சார், முஸ்லீம், இந்துவுக்கு அண்ணனா?
எனக்கு விளங்கவில்லை. என்ன கேள்வி இது?
நீங்க தானே சொன்னீங்க, முஸ்லீம் இந்துவுக்கு அண்ணன் அப்படின்னு!
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இது என்ன?இப்படி ஒரு செய்தி நான் சொல்லியிருக்க மாட்டேனே!என்றேன்.
சிலர்,இல்லை, சொல்லவில்லை.என்றனர்.

நான் சுதாரித்துக்கொண்டேன்.
சுதந்திரம் பெற்ற நாளை வைத்துப்பார்த்தால்,
சுதந்திர பாகிஸ்தான் அண்ணன்,
சுதந்திர இந்தியா தம்பி என்று முந்தைய வகுப்பில் கலந்துரையாடியிருந்தோம். அதைத்தான் அவன்,
மதம் சார்ந்து புரிந்துகொண்டிருக்கிறான்.
வகுப்பறையில் உரையாடும் செய்திகளை எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்வதில்லை. வேறு வேறு மட்டங்களில் புரிந்துகொள்கின்றனர்.
கவனிக்கின்றனர். விட்டுவிடுகின்றனர். தவறாகவும் புரிந்துகொள்கின்றனர்.
அவரவர் புரிதலின் படி நமது செய்தி வீட்டிலும் நண்பர்களிடையேயும்
பகிர்ந்துகொள்ளப்படும்.
சாதி,மதம் போன்ற சிக்கலான செய்திகளை வகுப்பில் விவாதிக்கும்போது மிகுந்த கவனமுடன் நடுநிலையுடன் இருக்கவேண்டியது அவசியம்.
கவமுடனும் தெளிவுடனும் இருந்தும் தவறான புரிதல்கள் இருப்பதை எண்ணி வியந்தேன்.கேட்டதை எண்ணி மகிழ்ந்தேன்.
தம்பி,
நாடுகளை இந்து,முஸ்லீம் என்று மதத்தின் பெயரால் அழைக்கக்கூடாது.
சில நாடுகள் மதம் சார்ந்தவை.
நம் நாடு மதம் சார்ந்தது அல்ல.
இந்தியா, மதச்சார்பற்ற நாடு.
பல்வேறு இன,மொழி,மத மக்கள் வாழும் நாடு.
இன்று ஒரு வரி புதுசா படிப்போம்,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி நம்ம ஊர்ல இருந்த ஒரு புலவர் பாடின பாட்டு,
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"
கரும்பலகையின் மேற்பகுதியில் எழுதிவந்தேன்.
18.11.2014
செந்தில் திருமணம்-2
சென்னையில் செந்திலின் திருமண வரவேற்பு.
நான் குடும்பத்துடன் அவசியம் வரவேண்டும் என்பது அன்புக்கட்டளை.
அனைவரும் செல்ல இயலவில்லை.நான் மட்டும்.
கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் எங்கள் பள்ளி மாணவன் கருணாகரன் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது செந்தில் அங்கே படிக்கச்சென்றான். கல்லூரியில் கற்றதைவிட மூத்தவர்களான கருணாகரன் மற்றும் அவரின் அறைத்தோழர்களிடம் கற்றதே அதிகம்.
அனைவருமே இப்போது சிறந்த ஓவியர்களாக உள்ளனர். அவர்களுள்,தமிழகம் அறிந்த இளையராஜாவும் ஒருவர். விகடனில் இவரது தத்ரூபமான ஓவியங்களை ரசிக்காதோர் இல்லை.
அனைவரும் திருமண வரவேற்பிற்கு வந்திருந்தனர்.
எங்கள் பள்ளியிலிருந்து சென்னை ஓவியக்கல்லூரியில் பயின்ற, படித்துக்கொண்டிருக்கிற அனைவரும் வந்திருந்தனர்.

அன்றைய இரவில் இளையராஜாவுக்கு ஓவியர் ரவிவர்மா பற்றிய திரைப்படத்தின் கதையைச்சொன்னேன்.
மறுநாள் அவர் வீடு சென்று ஓவியங்களை பார்த்ததும் உரையாடியதும் இனிய அனுபவம்.
அங்கிருந்து செந்தில் வீட்டிற்கு என்னை அழைத்துச்செல்ல நாசர் வந்திருந்தான். எங்கள் பள்ளியில் பயின்ற மாணவன். இப்போது சென்னை ஓவியக்கல்லூரியில் MFA படித்துக்கொண்டிருக்கிறான்.
மதிய உணவு செந்திலின் வீட்டில்.
அவனே வடிவமைத்த பொருள்களை காட்டினான்.
பள்ளி நினைவுகள் குறித்து மனைவியிடம் பகிர்ந்துகொண்டான்.
அவனே கேள்வி கேட்டு பதிலும்சொல்லிக்கொண்டான்.
சார்,எனக்கு எவ்வளவு நெருக்கம் தெரியுமா?
சார் இல்ல, Friend.
சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே செந்திலின் மனைவி அவன் காதில் ஏதோ கிசுகிசுக்க, சார்!......என்றான்.
என்ன?
உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கணுமாம்.
திருமணத்தன்றே காலில் விழ வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.
காரணம்,எனக்கு கூச்சமாக இருந்தது.
முக்கிய காரணம் அவ்வப்போது நெகிழ்ந்துகொண்டிருந்த நிலையில் கண்டிப்பாக அழுதேவிடுவேன்.
அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு.
இப்போது என்ன செய்வது, சரி என்றேன்.
சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தபின் கிளம்பினேன்.
அவர்கள் விடுவதாக இல்லை.
கையில் குங்குமத்தை கொடுத்துவிட்டு இருவரும் ஆசிபெற, வார்த்தைகள் எல்லாம் என்னைவிட்டுச்சென்றுவிட்டன.
அமைதியாய் அப்படியே நின்றுகொண்டிருந்தேன்.
கண்ணீர் தளும்பி இருந்தது.
சிறிதுநேரத்தில் நினைவுக்கு வந்த வார்த்தைகள் சொல்லின,
ஒரு மகளும் கிடைத்துவிட்டாள்.
தொடர்வண்டியில் தூங்கும் வரை என்னை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டேன்.
படுத்தவுடன் செந்திலை நினைத்தேன்.
அளவற்ற ஆனந்தத்தை தடைசெய்யவில்லை.
இமையணைகள் திறந்தன.
எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை.
அப்படியே தூங்கிப்போனேன்.

18.11.2014
பசும்பொன் முத்துராமலிங்கர் பற்றிய செய்திகள் 6 ஆம் வகுப்பில் இன்றும்.
பிறந்த தேதி அடிப்படையில் அண்ணன், தம்பி யார் என்பதை முடிவுசெய்துகொண்டோம்.
ஆலய நுழைவு போராட்டம், குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஆகிய இரண்டையும் கதையாகச்சொன்னேன்.
மதுரை மீனாட்சி ஆலயத்திற்குள் எல்லோரும் போகமுடியாத காலம் இருந்தது என்பதே மாணவர்களுக்கு ஆச்சரியமான செய்தியாக இருந்தது.
வைத்தியநாதர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கோவிலுக்குள் நுழைய தடைசெய்யப்பட்டிருந்த இனத்தவர்களை உடன் அழைத்துக்கொண்டு சென்றதை எடுத்துக்கூறினேன்.
பசும்பொன் முத்துராமலிங்கரின் உதவி இதற்கு முக்கிய பங்காகும்.
வைத்தியநாதரின் வீடு நம் பள்ளிக்கு சற்று தொலைவில் உள்ளது.தற்போது அங்கு ஒரு உணவுவிடுதி இயங்கிவருகிறது.
என்றும் கூறினேன்.
குற்றப்பரம்பரைச்சட்டம் மூலம் இந்தியா முழுதும் பல்வேறு இனத்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
முத்துராமலிங்கர் இதை எதிர்த்து தொடர்ந்து போராடிவென்றார்.

ஒரு மாணவன் கேட்டான்,
நீங்க சொன்னதெல்லாம் கதையா? நிஜமா?
இப்போ கேட்ட கதையெல்லாம் முன்னாடி நடந்த உண்மை.என்றேன்.
சிறு இடைவேளை மணியடித்தது.
மாணவர்களில் சிலர் வெளியே இருந்த கூடத்தில் வட்டமாக நின்று,
சாட்...பூட்...திரி.....
என்ன விளையாட்டு?
இரும்பு தொட்டு.
அப்படின்னா?
அவுட் ஆனவன் சொல்லும் இரும்புக்கம்பியை எல்லோரும் போயி பிடிச்சுக்கணும்.அதுக்கு முன்னாடி அவன் தொட்டுட்டா நாம அவுட்டு. தொட விரட்டும்போது வேற கம்பிய பிடிச்சுக்கிட்டா அவுட் இல்ல. ஆனா,அவன் சொன்ன கம்பிக்கு எப்படியும் வந்துரணும்.
நிறைய கம்பிகளால் ஆன கூடம் அது.( தோற்பாவைக்கூத்து நடைபெற்ற இடம்).
சார்,விளையாட வர்றீங்களா?
பத்து நிமிடங்கள் போனதே தெரியாமல் விளையாட்டு.
இருமுறைகள் அவுட் ஆனேன்.