Saturday, 31 May 2014

ஆசிரியர்கள் கூட்டம்

இன்று காலை ஆசிரியர்கள் கூட்டம். அதீத உற்சாகத்துடன் சென்றேன். சிலர் வரவேயில்லை. தலைமையாசிரியர், கூட்டம் தொடங்கியபோது திட்ட ஆரம்பித்தவர் முடியும்வரை திட்டிக்கொண்டே இருந்தார்.
பத்தாம் வகுப்பு முடிவுகளைப்பற்றியதாகவே அவரின் பேச்சுக்கள் இருந்தது.தமிழில் கூட மதிப்பெண் எடுக்கவைக்க முடியவில்லையே? சம்பளம் மட்டும் வாங்குகிறோம்?
என்னென்னவோ பேசினார்.வழக்கம் போல பொதுவாகவே திட்டிக்கொண்டிருந்தார்.
நானும் வேலைக்கு வந்த 18 ஆண்டுகளாகவே கவனித்துக்கொண்டிருக்கிறேன்,

ஆசிரியர்கள் கூட்டம் என்றாலே தலைமையாசிரியர் மட்டுமே பேசுவார்.மற்றவர்கள் அமைதியாக அமர்ந்திருப்பர்.சிலர் தலையாட்டுவார்கள்.
ஏதோ இரங்கல் கூட்டம் போலவே இருக்கும். யாராவது எழுந்து கேள்வி கேட்டுவிட்டால் அவ்வளவுதான். நானும் நண்பர்களிடம் கேட்பதுண்டு. உனக்கு ஏன் வேண்டாத வேலை? என்பார்கள்.
ஆனால், ஆசிரியர் அறையில் பேச்சுக்கள் பொறி பறக்கும்.
 ஒரு பிரச்சினை குறித்து யாருமே விவாதிக்க விரும்புவதே இல்லை. பொதுவாகச்சத்தம் போட்டால் போதும்.
ஏன்,ஒவ்வொருவராக காரணங்கள் குறித்து ஆராயக்கூடாது?
அதிகாரிகள்,தலைமையாசிரியர்களிடம் கத்துகிறார்கள்.
தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களிடம் கத்துகிறார்கள்.
ஆண்டுத்தொடக்கமே அமர்க்களம்.

மனம் நிறைந்த மாணவன் - 2


ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை சேதுபதி மேனிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப்பணியாற்றிக்கொண்டிருந்தேன். ஓவிய வகுப்புகளில் படம் வரைவது தவிர உலக ஓவியர்கள், ஓவியங்கள், வரலாறு, இலக்கியம், திரைப்படம் எனப்பல செய்திகள் குறித்து மாணவரிடையே பேசிக்கொண்டிருப்பதுண்டு.
ஒரு நாள் 9 ஆம் வகுப்பில் மொகலாய பேரரசர்களைப்பற்றிப்பேச ஆரம்பித்தேன்.
சிலரின் பெயர்களைச்சொல்ல மறந்து நான் திணறியபோது யாரோ ஒரு மாணவன் சரியாகச்சொல்லிக்கொண்டே இருந்தான். எனக்கு ஆச்சரியம்.
பாடத்துல இருக்காடா?
இல்ல சார்....
யார்றா, அது?
இவந்தான் சார்,
மெதுவாக, தலைகுனிந்தபடி எழுந்தவனைப்பார்த்தேன். மிகுந்த ஆச்சசரியமாக இருந்தது, கௌதம்.
அவனை நான் முதன்முதலில் அவன் அப்பாவுடன் பார்த்திருக்கிறேன். அவனை ஓவிய அறைக்கு அழைத்து வந்து இரண்டு ஓவிய ஆசிரியர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்தபின் வகுப்பிற்கு அனுப்பிவிட்டு,
"சார், இவனுக்கு சின்ன வயசுல மூளைக்காய்ச்சல் வந்து ரொம்பக்கஷ்டப்பட்டான். அதுனால, படிக்குறதுல குறைபாடு இருக்கு. படம் வரைஞ்சா நல்லதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.கொஞ்சம் பாத்துக்கோங்க."
என்று சொல்லிச்சென்றிருந்தார். ஆனால், என்னவோ, சிலநாட்களில் அவன் ஓவிய அறைப்பக்கம் வருவதை நிறுத்திக்கொண்டான்.
வகுப்பில் இப்போது கௌதமை பார்த்ததும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்து கேட்டேன்.
உனக்கு எப்படி எல்லா பேரும் தெரியும்?
பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துவந்து காட்டினான்.
மொகலாயர் வரலாறு குறித்த புத்தகம். மாவட்ட மைய நூலகத்தில் எடுக்கப்பட்டது.
யாருகிட்ட வாங்கின?
நான்தான் எடுத்தேன். மெம்பரா இருக்கேன்.
இந்தப்புத்தகத்த எப்படி எடுத்த?
எனக்கு வரலாறு பிடிக்கும்.
ஒரு நோட்டில் அனைத்து மொகலாய பேரரசர்களின் படங்களையும் வரைந்திருந்தான்.
இந்த நிகழ்விற்குப்பின் கௌதம் வாசிப்பதற்கு பல புத்தகங்களை நானும் பரிந்துரைத்தேன். பத்தாம் வகுப்பில் தவறியபின் அவனைப்பார்ப்பது குறைந்துபோனது.
ஒவ்வொன்றாக எழுதி பத்தாம் வகுப்பில் தேறினான். சென்னை சென்று கிராபிக்ஸ் தொடர்பான படிப்புகளைப்படித்தான். எப்போதாவது கௌதமிடமிருந்து செல்பேசியில் அழைப்பு வரும்.திரைப்படம்,புத்தகம் குறித்துப்பேசுவான். கண்டிப்பாக சென்னை புத்தகக்கண்காட்சியின்போது பேசுவான்.மதுரை வரும்போது வீட்டுக்கு வருவான்.
இப்போது கௌதம் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் குறித்து பணிபுரியும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஆண்டுக்கு ஒருமுறையேனும், சென்னை புத்தகக்கண்காட்சியின்போது கௌதமிடமிருந்து செல்பேசி அழைக்கும்.

சிகரெட் குடிகாரன்.


பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது விடுமுறைக்காலங்களில் திரைப்படங்களுக்குச்செல்லும் போது இடைவேளை நேரத்தில் சிகரெட் பிடிப்பதுண்டு. அதுவும் 'மோர்' என்ற பெயரில் பழுப்பு வண்ணத்தில் ஒல்லியாக,நீளமாக இருக்கும் அயல்நாட்டு சிகரெட். கூட்டமாக இருக்குமிடத்தில் பற்றவைப்பேன். எல்லோரின் பார்வையும் என் மேலேயே இருக்கும். அதிலொரு பெருமிதம்.
+2 க்குப்பின் ஓர் சமூக சேவை நிறுவனத்தில் பணியாற்றியபோது 'கிங்க்ஸ்' பிடிக்க ஆரம்பித்தேன்.
சிகரெட் பிடிக்கும்போது என்னிடம் இருந்த ஒரு பழக்கம், பற்ற வைத்ததிலிருந்து கடைசிவரை ஒவ்வொரு முறையும் புகையை உள்ளே இழுத்து விடுவது முதலான அனைத்தையும் நன்கு கவனிப்பது.
இது நமக்குள் என்ன மாற்றத்தைச்செய்கிறது என்று யோசித்துக்கொண்டே இருப்பேன். ஓஷோவின் புத்தகங்களைப்படித்ததாலும் என் இயல்பாலும் வந்தபழக்கம் இது.பெரும்பாலும் என்னசெய்தாலும் 'இது என்ன செய்கிறது?' என்று கவனித்துக்கொண்டே இருப்பேன்.
அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிகரெட் பிடித்திருப்பேன்.அதன் பின் எவ்வளவு முயன்றும் முடியவில்லை.இயல்பாகவே என்னைவிட்டு எப்படிச்சென்றது என்று தெரியாமலேயே சென்றுவிட்டது.

மனம் நிறைந்த மாணவன் - 1

நீண்ட நாட்களாகவே ஒருமுறையேனும் வீட்டிற்கு வருமாறு அழைத்துக்கொண்டிருந்தான் தங்கப்பாண்டி.
தங்கப்பாண்டி, எங்கள் பள்ளியில் படித்த மாணவன்.+2 க்குப்பின் அரசு இசைக்கல்லூரியில் சேர்ந்து கிராமியக்கலைகள் பயின்றவன்.
எங்கள் பள்ளியில் படிக்கும்போது கிராமிய நடனப்பயிற்சியில் ஆர்வமுடன் கலந்துகொண்டான். மிகவும் சிரமப்பட்டே நடனம் அவனுக்கு வசப்பட ஆரம்பித்தது.
தனது நண்பர்களை இணைத்துத்தனக்கென ஓர் கிராமியக் கலைக்குழுவை உருவாக்கிக்கொண்டான்.
கிராமியக்கலை நிகழ்சிகளுக்குச் செல்வது, மற்றநேரங்களில் கட்டிடவேளைகளுக்குச்செல்வது என நகர்கிறது வாழ்க்கை.
இரவு நேரத்தில் தங்கப்பாண்டியின் வீட்டிற்கு நண்பர் ஓவியர் ரவியுடன் சென்றேன்.


நன்கு குனிந்து நுழையுமளவு தாழ்ந்த வாசல்,ஒற்றை அறையுடன் ஓட்டு வீடு. குறுக்குச்சட்டம் முழுவதும் மெடல்கள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன.
அறையெங்கும் பரிசுப்பொருட்களும்,கிராமிய நடனங்களுக்குத் தேவையான பொருட்களும்.
வீட்டிலிருந்து ஊருக்கு வெளியே வந்தோம்.
வயல்வெளிகள்,வீட்டு மனைகளாக மாறியிருக்கின்றன. ஆங்காங்கே வீடுகள்.தனித்த ஒரு வீட்டின் மேலெரிந்துகொண்டிருந்த குழல் விளக்கொளியில் சிறார்கள்.
வேலைகளுக்குச்சென்று வந்தபின் தனது பகுதியில் வசிக்கும் சிறார்களுக்குஇரவு நேரத்தில் பல்வேறு கிராமியக்கலைகளைச் சொல்லித்தருகிறார் தங்கப்பாண்டி.
ஒயிலாட்டம்,சிலம்பாட்டம்,

கட்டைக்கால்  ஆட்டம்,தப்பாட்டம்,கரகம்,கபடி என அனைவரும் வெகு ஆர்வமுடன் பயின்று வருகின்றனர்.

பயிற்சியில் சேரும்போது தட்சிணையாக வெற்றிலைபாக்குடன் 11 ரூபாய்கள் தரவேண்டும். அவ்வளவுதான்.வேறு கட்டணம் ஏதுமில்லை.
சிறார்களின் பயிற்சியை வெகுநேரம் பார்த்து வியந்தோம்.
தங்கப்பாண்டி ஏராளமான சிறார்களுக்கு கிராமியக்கலைகளைப்
பயிற்றுவித்துள்ளார்.

கிராமியக்கலை பயிலவரும் பள்ளிச்சிறுவர் சிறுமியர் பலரின் கல்விச்செலவு,தனிப்படிப்புச் செலவுகளையும் தங்கப்பாண்டியே கவனித்துக்கொள்கிறார்.

இவரின் சேவையைப் பாராட்டி இளம் சாதனையாளர் விருது வழங்கிக்கௌரவித்துள்ளது,ஆனந்தவிகடன்
தங்கப்பாண்டி கண் நிறைந்த கனவுகளோடு கூறியவை,
" சார்,இப்போ 150 பேர் படிக்கிறாங்க. சிலபேரு பள்ளிக்கூடப் பசங்க,
அவங்களுக்கு பாடம் படிக்கவும் டியுசன் என் செலவுலேயே ஏற்பாடு பண்றேன்,என் பிரண்ட்சா சேந்து வேலைக்குபோய் சம்பாதிக்கறதுல ஒரு பகுதிய சேத்துவச்சு ஆட்டத்துக்குத் தேவையான பொருட்களைச் செஞ்சுக்கறோம்.எனக்கு ஒரு ஆசை, எல்லாப் பசங்களையும் சேர்த்து ஒரு அரங்கேற்றம் வைக்கணும். நாங்க வேலைக்குப் போற காசுல டிரஸ்,ஆட்ட சாமான்கள் வாங்கி வச்சுட்டோம்.எல்லாப்பசங்க, இது வரைக்கும் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த மூத்த கலைஞருங்க எல்லாரையும் கௌரவிக்கணும். அதுக்கு சால்வை,ஷீல்டுன்னு கொஞ்சம் செலவுக்குப்பணம் சேக்கணும்."


தங்கப்பாண்டியின் ஆசைகள் தன்னலமற்றவை.
எளிய கிராமியக்கலைஞனுக்கேயுரியவை.

Tuesday, 27 May 2014

பிள்ளை வளர்த்தல்


விடுமுறையின்போது பள்ளியில் மாணவர் சேர்க்கைப்பணிக்காகச்சென்றிருந்தேன். அரசுப்பள்ளித்தலைமையாசிரியராகப் பணிபுரியும் ஒரு அம்மையார் வந்திருந்தார்.
வாங்கம்மா.எப்படி இருக்கீங்க? என்ன,இந்தப்பக்கம்?
என் பையனுக்கு டி.சி வாங்க வந்தேன்.அவன் இங்கதான் +2 படிச்சான்.
அப்படியா! எனக்குத்தெரியாதே! பரவால்லையே, மெட்ரிக்ல சேக்காம இங்க சேத்திருக்கீங்களே!
நீ,வேறப்பா, +1 அந்தப்பள்ளிகொடத்துல படிச்சான், ரெம்ப படிக்கச்சொல்லி ஸ்ட்ரிட்டா இருக்காங்கண்ணு போக மாட்டேன்னுட்டான் வந்து +2 ல சேத்தேன்.
எவ்வளவு மார்க்?
கம்மிதான்.
தம்பி என்ன பண்ணப்போற?
..........காலேஜ்.
அந்த காலேஜ் சரியில்லேன்னு சொல்றாங்களே... என்ன........,காதுல தோடு,டி சர்ட், ஜீன்ஸ் அப்படின்னு இஷ்டம்போல திரியலாம்..
அதுக்குத்தான் தம்பி அந்தக் காலேஜ் போறேன்னு அடம் பிடிக்கிறான், எங்க சொல்றத கேக்குறான்.
அந்த அம்மையார் வெகு சாதாரணமாகச் சொல்லிச்சென்றார்.
1௦ ஆம் வகுப்புத்தேர்வு முடிவுகள் வெளிவந்த மறுநாள் காலை, பால் போடும் பையனிடம் கேட்டேன்,
தம்பி, எவ்வளவு மார்க்?
437 சார்.
இந்தப்பையனின் தந்தை கண்பார்வையற்றவர்,சுயதொழில் செய்பவர்.
தனது உழைப்பில் படிக்கிறான்.
பிள்ளைகள் கேட்பதையெல்லாம் கொடுப்பதல்ல பெற்றோரின் வேலை.அவை வந்த வழி_வலியையும் சொல்லித்தர வேண்டும்.

Thursday, 8 May 2014

ராஜீவ் காந்தி சாலை- நரகத்தின் வழி

           

விநாயக முருகனின் 'ராஜீவ் காந்தி சாலை' நாவல், காமம் சொல்லும் கதைகளுக்கே உரிய எதிர்ப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்திய நாவல்.


ஒரு படைப்பாளியின்முதல் படைப்பிற்கே உரிய அனைத்து வலுவான அம்சங்களையும் உள்ளடக்கியது "ராஜீவ்காந்தி சாலை'.

ஐ.டி நிறுவனங்களின் அசுரத்தனமான வளர்ச்சி(வீக்கம்) சமூகத்தில் ஏற்படுத்தும் எல்லாவித மாற்றங்களையும் அப்பட்டமாகப் பதிவுசெய்கிறார் விநாயக முருகன்.

ஐ.டி.நிறுவனங்களின் வளர்ச்சி மனிதரிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை எவ்வளவு பெரிதாக்கியிருக்கிறது? பொருளாதாரத்தைமட்டுமேவிரும்பிய  மனிதர்கள்  தன் வாழ்வில் இழந்தவை, அழிந்த கிராமங்கள், காமம் என சகல தளங்களிலும் வீரியமுடன் பயணிக்கிறது நாவல்.


 பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துவரும் இன்றைய
சூழலில் காமம் குறித்து இந்திய சமுதாயம் விவாதிக்கவேண்டியதன் அவசியத்தை இந்நாவல் வலியுறுத்துவதாகவே  நினைக்கிறேன்.

எவ்வளவோ அற்புதமான காட்சிகள் நாவலெங்கும் விரவியிருந்தாலும்
அன்னம்,மீன்குழம்பு சமைத்து எடுத்துக்கொண்டு செட்டியாரைப் பார்த்துவரும் ஒரு அத்தியாயம் முதுமைக்காதலையும் வாழ்வின் தேவையையும் அழுத்தமாகப்பதிவுசெய்கிறது.

இன்றைய சமுதாயம் கட்டாயமாகப் படிக்கவேண்டிய நாவல் மட்டுமல்ல,நிறைய விவாதிக்கவும் வேண்டிய நிகழின் கண்ணாடி,'ராஜீவ்காந்தி சாலை'.

Wednesday, 7 May 2014

Artist

   ஓவியன்

               ஓவியக்கல்லூரியில் பயிலும் இருவரின் காதலை ஓவியத்துடன் சொல்லும் படம் ஆர்டிஸ்ட்.
பெற்றோரின் எதிர்புகளை மீறி ஓவியக்கல்லூரியில் சேரும் காயத்ரி, அவளின் சீனியர் மைக்கேலின் பேச்சுக்களால் கவரப்படுகிறாள்.ஓவியக்கலை குறித்த மைக்கேலின் பார்வைகள் கயத்ரியைக் காதல் கொள்ள வைக்கின்றன.
மைக்கேலின் விருப்பப்படி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழத்தன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள் காயத்ரி. காதலர்கள் தனியே வசிக்கத்தொடங்குகின்றனர்.
மைக்கேல் ஓவியத்தில் சாதிக்க விரும்புகிறான். காதலனுக்காகப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்குச் செல்கிறாள் காயத்ரி.அவளின் சம்பாத்தியத்தில் குடும்பமும் நடத்திக்கொண்டு,மைக்கேலுக்குத்தேவையான வரைபொருட்களை வாங்குவது சிரமமானதாக இருக்கிறது.
ஒரு விபத்தில் கண் பார்வையை இழக்கிறான்,மைக்கேல்.மருத்துவச் செலவுகளுக்குக் கல்லூரி நண்பன் அபினவ் உதவுகிறான். வாழ்க்கை மேலும் சிரமமானதாகிறது. கடுமையாக உழைக்கிறாள் காயத்ரி.கண் பார்வையற்ற நிலையிலும் மைக்கேல் ஓவியம் வரைய விரும்புகிறான்.

பல்வேறு வண்ணங்களை வாங்க இயலாத நிலையில்  காயத்ரிவருத்தப்படும்போது தன்னிடம் ஒரு பெட்டி ப்ருஷ்யன் நீலம் இருக்கிறது,அதை மைக்கேலிடம் கொடு என அபினவ் கூறுகிறான்.காயத்ரி தயங்க, மைக்கேலுக்குக் கண் தெரியாது என்பதால் கண்டுபிடிக்க இயலாது எனச் சமாதானம் சொல்கிறான். ,பிரஷ்யன் நீல வண்ணங்களை அபினவிடம்  பெற்று மைக்கேலுக்குத் தருகிறாள்,காயத்ரி..அவனும் பலவண்ணங்கள் கொண்டு வரைவதாக எண்ணிக்கொண்டு ஒரே வண்ணத்தில் ஓவியங்களை வரைகிறான்.
Dreams in Prussian Blue  என்ற தலைப்பில் ஓவியக்காட்சி தொடங்கும் வேளையில்
தனது ஆசைக்கு காயத்ரி இணங்க மறுத்ததால் ஒரே வண்ணத்தில் ஓவியங்களை வரைந்த உண்மையை அபினவ்  ,தன் மனைவிமூலம் மைக்கேலிடம் வெளிப்படுத்திவிடுகிறான்.
பல்வேறு வண்ணங்களை மனக்கண்ணில் கண்டு வரைந்த ஓவியங்கள் ஒரே வண்ணத்தில் இருப்பதை அறிந்து கோபம் கொள்கிறான், மைக்கேல்.
தான் ஏமாற்றப்பட்டதாக மனம் வெறுத்த மைக்கேல், காயத்ரியை தன் வாழ்விலிருந்து வெளியேற்றுகிறான்.
மைக்கேலாக பகத் பாசில், காயத்ரியாக ஆன் அகஸ்டின் இருவரும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கலைஞனாக இருந்தாலும் தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கும் ஆணாதிக்கவாதியாக மைக்கேல்.
காலம் காலமாக தான் விரும்பியவனுக்காக வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் பெண்ணாக காயத்ரி.
கலைத்துறையில் சாதிக்கத்துடிக்கும் இளைஞர்களின் வெறியை பகத் பாசில் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.சாதிக்கவேண்டும் என்ற வெறியே தன்னைச்சார்ந்தவர்களை  துன்பத்திற்குள்ளாக்குகிறது என்றாலும் ஒரு கலைஞன் பலவேளைகளில் தன்னைப்பற்றிமட்டுமே சிந்திப்பவனாக இருக்கிறான்.
அன்பு,அரவணைப்பிற்காக ஏங்குபவள் என்பதாலேயே எளிதில் பெண்ணைத் தன ஆசைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆண்கள் பெரும்பாலான ஆண்கள் நம்புகின்றனர். இயல்பாக அபினவின் ஆசைகளைக் காயத்ரி கடந்துசெல்லும் காட்சிகள் கவித்துவமானவை, பெண்ணின் இயலாமையையும் வெளிப்படுத்துபவை.
ஓவியக்கலையின் பரிமாணங்களை விவாதிக்கும் இப்படம் காதல் உணர்வை மென்மையாக வெளிப்படுத்துகிறது.
புதுமை பேசுபவர்களின் செயல்பாடுகளில், மன இடுக்குகளில் தேங்கிக்கிடக்கும் கசடுகளை, பழமை  முகமூடிகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது  இந்த மலையாளத்திரைப்படம்.
Dreams in Prussian Blue ஆங்கில நாவலை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்  சியாமாபிரசாத்.