1998 ஆம் ஆண்டு டெல்லியில் India Art Festival என்று ஓர் சர்வதேச ஓவியக்காட்சி நடைபெற்றது.இப்போது ஆண்டுதோறும் India Art Fair எனும் பெயரில் நடைபெற்று வருகிறது.
அப்போது நானும் நண்பர் ரமணனும் அங்கு சென்றிருந்தோம். மூன்று நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில் இந்தியாவின் புகழ்பெற்ற ஏராளமான ஓவியர்களின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
காலையில் உள்ளே செல்லும் நாங்கள் இரவு காட்சி முடிந்து அனைவரும் வெளியேறும்வரை அங்கேயே சுற்றிக்கொண்டிருப்போம். ஓவியங்களை நேரிலும் தொட்டும் பார்த்தது அற்புதமான அனுபவம்.
ஓவியம் சார்ந்த கருத்தரங்கிலும் பங்குபெற்றிருந்ததால் எளிதில் உள்ளே அனுமதிக்கப்பட்டோம்.
இரண்டாம்நாள் காலை, காட்சி அரங்கினுள் செல்வதற்கான வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது எங்களருகில் உயரமான ஒருவர் நின்றிருந்தார்.அடையாள அட்டையின் கயிறு அவர் தலைக்குள் நுழையவில்லை. ரமணனின் அடையாள அட்டைக்கயிறு நீளமாக இருந்ததால் அதனைக்கொடுத்தார். பெற்றுக்கொண்டவர், எங்களைப்பற்றி விசாரித்தார். நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்திருப்பதாகக் கூறினோம். அவர், தான் ஒரு பாகிஸ்தானி என்றும் லண்டனில் இருந்து வருவதாகவும் ஓவியர் வைகுந்தத்தின் ஓவியங்கள் மிகவும் பிடிப்பதால் பார்க்க வந்திருப்பதாகக்கூறினார்.
தலை கிறுகிறுத்துப்போனோம்.
கருத்தரங்கில், டெல்லியில் மறுநாள் தொடங்கவிருந்த ஓர் ஓவியக்காட்சியின் அழைப்பிதழை அனைவருக்கும் தந்தார்கள். அழைப்பிதழ் இருப்பவர் மட்டுமே தொடக்க விழாவில் பங்குபெற முடியும் என்று குறிப்பிட்டிருந்தனர்.எங்களுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
எங்களால் செல்ல இயலாது என்றாலும் நிறைய அழைப்பிதழ்களைச்சேகரித்துக்கொண்டேன்.
ஊர் திரும்பியபின் அவற்றை வைத்து Keep Drawing என்ற தலைப்பில் mixed media ஓவியம் செய்தேன். பல காட்சிகளில் அது இடம்பெற்றபின் என் வீட்டு ஓவியக்கூடத்தில் நிரந்தமாக இடம்பிடித்தது.
என்னோடு ஓவியக்கூடத்தில் வசிக்கும் அணில் அவ்வப்போது வெயிலுக்கு ஏற்றபடி தனது இருப்பிடத்தை பல்வேறு கித்தான்களுக்கிடையே மாற்றிக்கொண்டிருக்கும். இன்று மாலை பார்த்தேன், புதிய இருப்பிடம் Keep Drawing பின்புறம்.
என்ன, புதிய பழக்கமாக கித்தானிலேயே ஒரு வாசலும் திறந்தாகிவிட்டது.
ஓவியர் அணிலுக்கு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment