Friday, 31 October 2014

நீல நிறம்..வானுக்கும் கடலுக்கும்!


சில ஆண்டுகளுக்கு முன்.
CANVAS- ஓவியப்பயிற்சி வகுப்பில் நிலக்காட்சி வரைவது எப்படி? என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தேன்.
ஒரு நிலக்காட்சியை வரைந்து வண்ணம் தீட்டச்சொல்லிக்கொண்டிருந்தேன்.
" வானம்!.... நீல நிறம் தீட்டுங்கள்"
நான் செய்தபின், சுற்றிவந்தேன்.
ஒரு சிறுவன்,6 வயது- அவன் தந்தை நீல நிறம் தீட்டு- என்கிறார்.
மாட்டேன் என்கிறான்.
நான் சிரித்தபடி இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
தந்தை கெஞ்சுகிறார்,
"அங்கபாரு, சார் எப்புடி வரைஞ்சிருக்காரு,
நல்ல பையன்ல, நீயும் அதே மாதிரி செய்! "
சிறுவன் பொறுமையிழந்து ஜன்னலுக்கு வெளியே கையைக்காட்டினான்,
" அங்க பாருப்பா, வானம் புளூ கலராவா இருக்கு?"
காலை 11 மணி. அன்று வானம் வெளுத்திருந்தது, நானும்.


இந்த நிகழ்விற்குப்பின் எங்களின் ஓவியம் கற்பித்தல் முறைகள் பெரிதும் மாறின.

நவீன ஓவியங்கள்,வெற்றுக்கிறுக்கல்களா?



தற்கால ஓவியங்களில் குறிப்பாக நவீன ஓவியங்களைக்காண்பவர்கள் பெரும்பாலும் கேட்கும் ஒரே கேள்வி,
இதில் என்ன வரைந்திருக்கிறார்கள்?
உள்ளதை உள்ளபடி வரைவதையே ஓவியம் என்று வியந்து பாராட்டுகிறார்கள்.
அப்படியே வரைந்திருக்கிறார்! என வியக்கிறார்கள்.
வரைய விரும்புபவர்களும் கற்றுத்தருபவர்களும் கலைக்கல்லூரிகளும் மரபான வழிமுறைகள் என்று தொடங்கி இருப்பதை நகலெடுப்பதை செய்துகொண்டே இருக்கின்றனர்.
இங்கேதான் கலையின் பன்முகத்தன்மை சிதைந்துவிடுவதாக எண்ணுகிறேன்.

உள்ளதை உள்ளபடியே வரைந்து பழகியபின் இயல்பாகவே உருவங்கள் சிதைந்து அருவமாக மாறத்தொடங்கும்,
கலைஞன் தனது தொடர்ந்த பயணத்திலேயே மரபான அழகியலை மாற்றுவான் என்றெல்லாம் பேசித்திரிந்த காலமும் உண்டு.
இப்போது யோசிக்கிறேன்.
வெண்பா எழுதியபின்தான் நவீன கவிதை எழுதவேண்டுமென ஒரு கவிஞனை சொல்லியதுண்டா?
பரதம் பழகியபின்தான் சல்சா ஆடவேண்டுமா?
கலை செம்மையாகுமுன் ஆதிமனிதனிடம் இருந்த துடிப்பான வடிவங்களில் இருந்து தொடங்கிய கலையின் பயணம் எங்கே ?
கலைஞன் இன்றைய மண்ணில் மரமாய் நிற்கவேண்டியவன்.
எண்ணங்களின் வீச்சுக்கேற்ப பாதாளத்தில் வேர்களும் ஆகாயத்தில் கிளைகளும் பரப்பிய மாபெரும் மரமாய்.

என் சுவாசக்காற்று.

வண்ணங்கள் குழைத்து
வடிவாயொரு ஓவியம் செய்கையில்
உயிர்வளி ஊதி ஊதி
உடல் சோர்ந்த வேளையில்
உள்ளம் நிறைக்கும் என் சுவாசக்காற்று.
வார்த்தைகள் கோர்த்து
எண்ணம் இறக்கும் எத்தனிப்பின்
இறுதி எதுவானாலும்
இதயம் நிறைக்கும் என் சுவாசக்காற்று.
சும்மாஇருந்து மனம் வாடும் வேளைகளில்
தேடிச்சோறு நிதந்தின்று சின்னஞ்சிறு கதைகள் பேசும்
வேடிக்கை மனிதனல்ல நீயென
உயிர்த்துளிதரும் என் சுவாசக்காற்று.
என்னுடனே இருந்துவிடு என்பேன்,
பதிலேதும் சொல்லாமல்
ஒற்றைச்சிரிப்பை உதிர்த்தோடிவிடும்
எனக்கான என் சுவாசக்காற்று.

கூத்து.


எட்டாண்டுகளுக்கு முன்.
பள்ளி ஆண்டுவிழா.
ஆசிரியர்களையும் ஒரு கலை நிகழ்ச்சி கொடுக்கச்செய்யலாமென
அப்போதைய தலைமையாசிரியர் எண்ணினார்.
நாங்களும் ஒத்துக்கொண்டோம். உதவித்தலைமையாசிரியரின் விருப்பப்படி நவராத்திரி படத்திலிருந்து சிவாஜி-சாவித்திரி நடித்த நாடகப்பாடலை அப்படியே செய்யலாம் என முடிவு.
நான், சிவாஜி.
சாவித்திரிக்கு என்ன செய்வது?
;கலை நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் கணித ஆசிரியர் பாலாஜி ஒரு யோசனை சொன்னார். அதன்படி எங்கள் பள்ளியில் நிர்வாகப்பணியிடத்தில் பணியாற்றிவந்த ஆசிரியையிடம் பேசி நடிக்க வைப்பது.
"கூத்து என்பதால் பெரிதும் ஆடவேண்டியதில்லை.
பாவனைகள் செய்தால் போதும்.
ஆண் பாத்திரம் அருகிலேயே வரமாட்டார். படக்காட்சியைப்பார்த்தபின் முடிவு சொல்லுங்கள்."
என்று பல்வேறு காரணங்கள் சொல்லி இறுதியில் அவரும் சம்மதித்துவிட்டார்.
நானும் மற்றவர்களும் பள்ளியிலும்,
அவர் வீட்டிலும் தனித்தனியே ஒத்திகை.
நிகழ்ச்சிக்கு வந்தால் போதும்.
இச்செய்தி, தீக்குச்சியின் தீ போல அதனையே எரிக்க,
பாவம் அந்த ஆசிரியை, பதறியடித்து விலகிக்கொண்டார்.
என்ன செய்வது? இரகசியமாக ஒரு முடிவெடுத்தோம்.
வேறு ஆசிரியை ஒத்துக்கொண்டார் என்று செய்தியைப்பரப்பிவிட்டோம்.
தீக்குச்சி, ஒத்திகை நேரங்களில் சுற்றிச்சுற்றி வந்தது.
நிகழ்ச்சி நாள்.
கலை நிகழ்சிகளை வழக்கம்போல் நண்பர் பாலா .தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்.
எங்களின் கூத்து இறுதி நிகழ்ச்சி.
சாவித்திரி தவிர அனைவரும் தயார்.
தக்கதருணத்தில் பாலா மீசையை மழிக்க, ரமணனின் கைவண்ணத்தில் சாவித்திரி தயார்.
நிகழ்ச்சி அறிவிப்பு வந்தவுடன் சிவாஜி கதாபாத்திரம் வந்து சென்றபின் அனைவரும் ஆவலுடன் காத்திருக்க சாவித்திரியின் வருகையின்போது பாலாஜியின் ஏற்பாட்டின்படி வாணவேடிக்கைகள்.

திரைப்படத்திலும் நாடக நடிகை வராமல் சாவித்திரி அந்தப்பாத்திரம் ஏற்றுச்சிறப்பாகச்செய்திருப்பார்.
எங்களின் கூத்தும் அப்படியே ஆனது.
எல்லோருக்கும் அந்த ஆசிரியை யாரென்று கண்டுபிடித்து மகிழ்ந்தார்கள்.
பாவம் தீக்குச்சி!
தீக்குச்சியால் நன்மைகள் உண்டு.
அந்த நிகழ்வை இந்த இணைப்பில் காணலாம்.....
https://www.youtube.com/watch?v=y_Q4YJ4T4AI

கத கேளு! கத கேளு! - விளைவு


நேற்று எங்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி. மாணவர்கள் பல்வேறு படைப்புகளை வைத்திருந்தனர்.
ஒவ்வொன்றாகப்பார்த்துக்கொண்டே சென்றேன்.
( அறிவியல் கண்காட்சிகளைப்பற்றி விரிவாக எழுதவேண்டும்)
6 ஆம் வகுப்பு மாணவனொருவன் எனது சட்டையைப்பிடித்து இழுத்தான்.
என்ன?
பாக்காமப்போறீங்க !?
கவனக்குறைவாக அவனைத்தாண்டிச்சென்றிருக்கிறேன்.
அடடா...! சரி. சொல்லு.
சட்டையைப்பிடித்தபடியே விளக்கினான்.

சில வாரங்கள் முன்பு வரை மதிய வேளையில் தொடக்கப்பள்ளி அருகிலுள்ள குழாய்களை மேனிலைப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எனக்கான பணி. பெரிய மாணவர்களுக்குத்தனியே குழாய்கள் உண்டு.
தொடக்கப்பள்ளிச்சிறுவர், சிறுமியர் நீரை வீணாக்காமல் கவனித்துக்கொள்வேன்.
ஏய்! ஓட்டப்பல்லு, தண்ணிய வீணாக்காத!
அந்தத்துடுக்கான சிறுமி சிரித்தபடி ஓடிவிடுவாள்.
தற்போது சத்துணவுப்பகுதியில் மதிய வேளைகளில் பணி.
இன்று,
மதிய உணவு இடைவேளை.
உதவித்தலைமை ஆசிரியர் அழைத்ததால் சென்றேன்.
தொடக்கப்பள்ளி குழாய்ப்பகுதியில் நின்றிருந்தார்.
சிறுவர், சிறுமியர் நின்றிருந்தனர்.
வழக்கம்போலச்சொன்னேன்.
ஏய்! ஓட்டப்பல்லு, தண்ணிய வீணாக்காத!
அந்தச்சிறுமியும் அவள் தோழியும் சிரித்துக்கொண்டே அருகே வந்தனர்.
ஓட்டப்பல்லு, என் கையில் இரண்டு அடி அடித்தாள், இலவச இணைப்பாக ஒரு கிள்ளும்.
....நரீ .....வலிக்குதா?
சிரித்தபடி ஓடிவிட்டார்கள்.
ஆச்சரியமாகப்பார்த்துகொண்டிருந்த 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன்,
சார,அடிக்கிற... என்றான்,
நான் சிரிப்பதைப்பார்த்துக்குழம்பியபடியே சென்றான்.
பாரதிதாசனின் வரிகள்தான் என் நினைவுக்கு வந்தன,
வீடுகளுக்கு இடையே மட்டுமல்ல,
ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே இடிக்கப்படவேண்டிய சுவர்கள் மட்டுமல்ல
கோட்டைகளே இருக்கின்றன.

கதகேளு...கதகேளு..!- 2


கதைகளின் உலகம், வசீகரமானது.
கனவுகளின் தாய் வீடு.
எல்லையில்லாக்கற்பனை.
உணர்வுகளின் சங்கமம்.
கணந்தோறும் புதுப்புது கருத்து தோன்றும்.
வார்த்தையுள் வசப்படா மாயம்.

குழந்தைகள் பாவம்,
கதைகளை விட்டே துரத்தப்பட்டுவிட்டார்கள்.
பெரியவர்களின் கதைகள் அவர்கள்மேல் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகின்றன.
குழந்தைகளெல்லாம் பெரியவர்களின் முகமூடியுள் திணிக்கப்பட்டுக்கிடக்கின்றார்கள்.
கதைசொல்லிகளே இல்லாமல் போய்விட்டார்கள்.
மாயக்கதைகளின் உலகம் குழந்தைகளைத்தேடி அலைந்துகொண்டிருக்கிறது.
கதைகளின் உலகிற்கு குழந்தைகளை கைபிடித்து அழைத்துச்செல்ல மூவர் முடிவு செய்தோம். சில முணுமுணுப்புகள். அதெப்படி ஆசிரியர், மாணவருடன் சேர்ந்து?
தூண்டுகோல்,சிறிது குத்தித்தானே தூண்டுகிறது!
முகமூடிகள் கழற்ற முகமூடி அணிந்தோம்.
முத்துக்குமார் நாடகக்கலைஞர், பாலா பிறவி நடிகன்.
நான் கிராமிய நடனக்காரனானாலும் நாடகம் நடிப்பதென்பது இரண்டாம் முறை. இரண்டுமே ஆசிரியரான பின்.
முதன்முறை, கம்பன் கழகப்போட்டியில் இராமன் வேடம்.
வாலி வதைப்படலம்.
பாலா வாலியாக கலக்க,
ஓரிரு வசனங்களுடன் முகம் முழுதும் நீலம் பாரித்துப்பாவமாய் நான்.
இம்முறை, பஞ்சதந்திரம். நீல நரி மற்றும் முயலாக.
வழக்கம்போல ரமணனின் கைவண்ணத்தில் விரைவாக முகமாற்றங்கள்.
பெரியவர்கள் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தார்கள்.
குழந்தைகளோடு குழந்தையானேன்.
குழந்தைகள் குதூகலமானார்கள்.
காட்டிற்குள் மிருகங்களுடன் ஆடிப்பாடி
பேசித்திரிந்தோம்.
மனிதனாய், நரியாய், முயலாய்......
நாள்தோறும் ஒப்பனை இல்லாமல் செய்வதுதானே.

கதகேளு...கதகேளு!


சிறுவர்களுக்கான கதைகள் எங்கே போயின?
வீட்டுச்சூழல் மாறி ஆண்டுகளாகிவிட்டன.
பள்ளிச்சூழல் மதிப்பெண் சுழலில் சிக்கித்தவித்தாலும் முப்பருவக்கல்வி குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது.
காலம்காலமாக நம்மிடையே உலவிவரும் பல்வேறு கதைகளை மாணவரிடையே கொண்டு சேர்க்கவேண்டுமென முடிவுசெய்தோம்.
சென்ற கல்வியாண்டில் மதிய உணவு இடைவேளையில் தமிழாசிரியர் முத்துக்குமாரும் நானும் கதைகளைச்சொல்லத்தொடங்கினோம்.
இந்த ஆண்டு 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக தமிழாசிரியர்கள் பாலா,முத்துக்குமார்,சிவா மூவரும் சேர்ந்து பல்வேறு நிகழ்வுகளை நடத்த முடிவு செய்தோம்.
வாசித்தலை மேம்படுத்தலே முதல் பணி என முடிவு செய்து, முதல் கட்டமாக எழுத்துக்களை விளையாட்டாக அறிமுகம் செய்யும் ' வாசி..நேசி...சுவாசி!' என்ற நிகழ்வினை நடத்தினோம்.

தொடர்ந்து வாசிப்பையும் கற்பனை,சிந்தனை மற்றும்பல திறன்களையும் வளர்க்கும்பொருட்டு 'கதகேளு...கதகேளு!' என்ற நிகழ்வை யோசித்தோம்.
கதையும் நாடகமும் கலந்து எளிய ஒப்பனையுடன் இருந்தால் நன்றாக இருக்குமென எண்ணினோம்.
மாணவர்கள் சுலபமாக நடித்துவிடுவார்கள். ஆசிரியர்களும் அவர்களோடு சேர்ந்து நடித்தால் என்ன?
ஆசிரியர் மாணவரிடையே இடைவெளி குறையுமே!
செயல்படுத்தினோம்.
பஞ்சதந்திரக்கதைகளில் இருகதைகள்.
ஒருவாரத்தில் ஆசிரியர் முத்துக்குமாரின் இயக்கத்தில் வடிவம் பெற்றது.
ஒப்பனை- முதுகலை உயிரியல் ஆசிரியர் ரமணன் மற்றும் சில மாணவர்கள்.
எங்கள் மதுரைக்கல்லூரி வாரியத்தைச்சார்ந்த தொடக்கப்பள்ளி மாணவ மாணவியரையும் அழைத்திருந்தோம்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் பஞ்சதந்திரக்கதைகள் குழந்தைகள் மத்தியில்.

ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அனைவரும் பல்வேறு மிருகங்களுடன் காட்டிற்குள் மகிழ்ச்சியாக உலவி வந்தோம்.
நிகழ்வின் நிறைவில் மகிழ்ந்த பள்ளிச்செயலர் திரு.எஸ்.பார்த்தசாரதி, நடித்த அனைத்து மாணவர்களுக்கும் சட்டைத்துணி போர்த்திக்கௌரவித்தார்.

மதுரை மாவட்டப்பள்ளிகளுக்கெல்லாம் சென்று இந்நிகழ்வை நடத்துங்கள் என்றும் கூறி எங்களை உற்சாகப்படுத்தினார்.