Wednesday, 4 March 2015

17.11.2014
ஆசிரியர் தினத்தை மாணவர்கள் வெகு சிறப்பாக கொண்டாடினர்.
குழந்தைகள் தினத்தை ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டுமென முடிவு செய்தோம்.
மாணவர்கள் அனைவருக்கும் லட்டு வழங்க முடிவு செய்தோம்.
அன்றைய நாள்முழுதும் மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென பல்வேறு நிகழ்வுகளைத்திட்டமிட்டோம்.
கலைத்திரு. முத்து இலட்சுமண ராவ் குழுவினரின் தோற்பாவைக்கூத்து நிகழ்ச்சியுடன் கொண்டாட்டங்கள் தொடங்கின. தொடர்ந்து தமிழாசிரியர்கள் பாலா,முத்துக்குமார்,சிவா ஆகியோர் சேர்ந்து கோமாளி வேடமிட்டு நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தலாமென முதல்நாள் முடிவு செய்தோம்.
எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் தங்கப்பாண்டி குழுவினரின் ஒயிலாட்டம்,தப்பாட்டம்,மற்றும் கட்டைக்கால் ஆட்டம் ஆகியன பிற்பகல் நிகழ்வுகள்.
அவசரமாக அழைப்பிதழ் தயாரானது.
தோற்பாவைக்கூத்து முடிந்ததும் எங்களின்நகைச்சுவை நிகழ்ச்சி. முதுகலை உயிரியல் ஆசிரியர் திரு.ரமணனின் கைவண்ணத்தில் மூவரும் கோமாளிகள் ஆனோம். அப்போதே என்ன செய்யலாம்? என நண்பர்கள் முத்துக்குமாரும் பாலாவும் முடிவு செய்தனர். மருத்துவர், நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பது போல் காட்சியை முடிவு செய்தனர்.
வசனங்கள் அவ்வப்போது பேசிக்கொள்ளலாமென முடிவும் செய்தோம். நாங்களும் மகிழ்ச்சியாக இருந்ததால் தொடக்கம் முதல் இறுதிவரை அனைவரும் சிரித்தபடியே இருந்தனர்.
மதியம் சிறப்பான உணவுக்குப்பின் கலை நிகழ்வுகள் தொடர்ந்தன. தங்கப்பாண்டி குழுவினருடன் நானும் பறை வாசித்தேன். ஒயிலாட்டம் முடிந்ததும் பறையாட்டம்.
தங்கப்பாண்டியும் அவர் நண்பரும் ஆடும்போதே என்னையும் அழைத்தபடியே இருந்தனர்.காலை முதலே நிகழ்சிகளில் பங்கு பெற்றிருந்ததால் இசைத்தபடியே முழுமையாக ஆட என்னால் இயலவில்லை. அவ்வப்போது சிறிது ஆடினேன். வயதும் ஒரு தடைதான்.
காலைமுதல் மாலைவரை தொடக்கப்பள்ளி முதல் மேனிலைப்பள்ளி வரை அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.




14.11.2014
12 ஆம்தேதி எனது மாணவனுக்கு திருமணம்.
என்னிடம் படித்த மாணவர்கள் பலருக்கு திருமணம் ஆகிவிட்டது. சிலர் தேடிவந்து அழைப்பிதழ் தருவார்கள்.செல்வேன்.
தொடர்ந்து பழகிவரும் மாணவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி திருமணம் செய்துகொள்வது மனதுக்கு அதிக மகிழ்ச்சியை தருவது.
எனது பிள்ளக்குத்திருமணம் போன்றே மகிழ்வேன்.
பெற்றவர்களுக்கு ஓரிரு பிள்ளைகள். ஆசிரியருக்கு ஆயிரமாயிரம் பிள்ளைகள்.
சேதுபதி மேனிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியில் சேர்ந்தபோது செந்தில்குமார் 7 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிந்தான்.
அவன் தம்பியும் அதே வகுப்பு.
செந்தில் தேர்ந்த ஓவியன். படிப்பு மிகவும் சுமார்.
எங்கு போட்டி நடந்தாலும் வெற்றி அவனுக்கே.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற்றால் கும்பகோணம் அரசு நுண்கலைக்கல்லூரியில் படிக்கலாம் என சொல்லியிருந்தோம்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை அவனைவிட அதிக பதட்டத்துடன் இணையத்தில் பார்த்தேன்.
மூன்று பாடங்களில் 35 மதிப்பெண்கள், மற்றதில் சற்றே அதிகம்.
தேறிவிட்டான்.
அனைவருக்கும் மகிழ்ச்சி.
ஓவியக்கல்லூரியில் படித்தால் எதிர்காலம் எப்படி இருக்கும்?
என அவன் தந்தை விசாரித்தார்.
கவலைப்படாதீங்க,உங்க உதவி இல்லாமலேயே அவனே சம்பாதித்து படித்துக்கொள்வான்.என்றேன்.
கும்பகோணம் கல்லூரியில் சிற்பக்கலை பிரிவில் சேர்ந்தான் செந்தில்.
கொஞ்ச காலத்திலேயே அவன் தந்தை காலமானார்.
தாய், பால்மாடு மூலம்தம்பியை வளர்த்தார்.
செந்தில்,அவனேசம்பாதித்து படித்துத்தேறினான்.
அதோடு பத்தாம் வகுப்பை அடிப்படையாகக்கொண்ட 5 ஆண்டு பட்டப்படிப்பு இல்லாமல் ஆனது.
தொடர்ந்து பல்வேறு வேலைகள்.
அம்மாவையும் சென்னைக்கே அழைத்துச்சென்றுவிட்டான்.
வயது 30 ஐதாண்டியபின்னும் தன் மனதுக்கு நம்பிக்கை வந்தபின்பே திருமணம் செய்துகொள்வேன் என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
கடின உழைப்பு.
இப்போது Interior Designer ஆக இருக்கிறான்.
வீட்டிற்கு வரும்போதெல்லாம் என்னிடம் வேலைகள்,அதிலுள்ள பிரச்சினைகள் பற்றிப்பேசுவான்.
குடும்பம், எதிர்காலம் குறித்து என் மனைவிடம் சொல்லிச்செல்வான்.
காதலிக்கிறேன் என்று சென்ற ஆண்டு என் மனைவிடம் சொல்லியிருக்கிறான்.
விடுமுறையில் சென்னை சென்றபோது அவன் வீட்டில் அந்தப்பெண்ணையும் பார்த்தோம்.
செந்திலின் அம்மாவிடமும் பேசினோம்.
அவருக்கும் மகிழ்ச்சி.
நல்ல நிலைக்கு வந்தபின் திருமணம் என்றான். பெண் வீட்டில் அவனே பேசி முடிவு செய்துவிட்டான்.
12 ஆம் தேதி மதுரையில் திருமணம்.
எனக்கு புத்தாடைகள் எடுத்து வந்திருந்தான்.
எங்கள் பிள்ளை திருமணம் போல் மகிழ்ந்தோம்.
வரும் ஞாயிறு சென்னையில் நடைபெறும் வரவேற்பிற்கும் கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்திருக்கிறான்.
செல்லவேண்டும்.
அவன் மண நாளில் சில முன்னாள் மாணவர்களைப்பார்த்தேன்.
மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
குழந்தைகளுடன் பெரியவர்களாக மாணவர்களை பார்ப்பது அற்புத அனுபவம்.
கண்ணும் மனமும் நிறைந்திருந்தது.



ஒளிப்படத்தில்,
செந்தில் தம்பதியர்.
மாணவன் தந்த ஆடைகளுடன் மகிழ்ச்சியில் நான்.
14.11.2014
இரண்டு நாட்களாக மடிக்கணினி தொல்லை தந்துகொண்டிருந்தது.
இப்போதுதான் சரியானது.
முன்தினம் தேர்வறை கண்காணிப்பு பணி. 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் அவ்வப்போது பார்த்து எழுதிக்கொண்டிருந்தனர்.
முன் இருந்தவனின் தாளைப்பார்த்து பின்னால் இருந்தவன் எழுதினான்.அதற்கு வசதியாக தாளை அவனும் வைத்திருந்தான். சிலமுறைகள் எச்சரித்தேன். பலனில்லை.
இரு பாடவேளைகள் மட்டுமே தேர்வு.
ஒரு பாடவேளை முடிந்திருந்தது.நான் சொல்வதை இருவரும் பொருட்படுத்தவே இல்லை. மூன்றாம் மாணவனும் பார்த்து எழுதத்தொடங்கினான்.
எனது கோபம் அதிகமானது.
விடைத்தாளைக்காட்டிய மாணவனிடமிருந்து விடைத்தாளை எடுத்து
பின்னால் கொடுத்தேன்.
நன்றாக பார்த்து எழுதிக்கொள். எட்டிப்பார்த்தால் சரியாகத்தெரியாது.
இடையில் வரும் தேர்வுகள் உனது படிப்பறிவை பரிசோதிக்க மட்டுமே தவிர இதில் அதிக மதிப்பெண் வாங்கினால் பயன் ஏதுமில்லை. மற்றவர்களை ஏமாற்றலாம் என நினைக்காதே,நீதான் ஏமாந்து போவாய்,
சொல்லியபடியே அந்த விடைத்தாளை கிழித்துவிட்டேன்.
பார்த்து எழுதுவதை விட காட்டுவது தவறு.
தாளுக்குரியவன் அழுதுவிட்டான்.
அறையில் இருந்த அனைவரும் திகைத்துவிட்டனர்.
எனக்கு அதிர்ச்சி.
இப்படியான செயலை ஒருபோதும் நான் செய்ததே இல்லை.
திட்டுவேன்.பேசுவேன். எப்படி ஒரு விடைத்தாளை கிழித்தேன்?
அறியாமல் இப்படியொரு செயலை செய்துவிட்டோமே என மனம் பதறியது.
அழாதே, நீ செய்தது தப்புதானே என்றேன்.
ஆமென தலையசைத்தான்.
சரி, மீண்டும் எழுது.
நேரமில்லை.
நான் சொல்லிக்கொள்கிறேன்.
வேறு மாணவனிடம் தாள்கள் வாங்கிக்கொடுத்தேன்.
தேர்வு முடிந்தபின் அதே அறையில் 11 ஆம் வகுப்பிற்கான தேர்வு.
அறைக்கு வந்த ஆசிரிய நண்பரிடம் இவன் ஒரு பாடவேளை எழுதட்டும் இவனது நேரத்தை நான் எடுத்துக்கொண்டேன் என்று சொல்லி இருக்கவைத்தேன்.
அவனது ஆசிரியரிடமும் நடந்ததைக்கூறி விடத்தாளைப்பெற்றுக்கொள்ளுமாறு சொன்னேன்.
நல்லபாடம்.
11.11.2014
நேற்று 10, 12 ஆம் வகுப்புகளுக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு. முதலிரண்டு பாடவேளைகள் தேர்வறைக்கண்காணிப்பு பணி. முடிந்தபின் 9 ஆம் வகுப்பிற்குச்சென்றேன்.
ஏதேனும் ஒரு பத்தியை வாசித்து மாணவர்களைக்கேட்கச்செய்து கேட்டதை எழுதச்சொல்லலாம் என எண்ணினேன்.
வகுப்பில், 15 மாணவர்கள் வரவில்லை. எனக்கோ ஆச்சரியமாக இருந்தது! மாணவர்களிடம் கேட்டேன்.
ஒரேடியா இங்லீஷ், அறிவியல்,சமூகறிவியல் சார் எல்லாரும் டெஸ்ட் சொல்லிட்டாங்க.....
எப்படியும் நாளைக்கு வந்துதானே ஆகணும்!
அதெல்லாம் சமாளிச்சுரலாம்......
வாசிக்கவே தெரியாத இரு மாணவர்களும்
வந்திருந்தனர்.
நீங்க படிச்சாச்சா?
எப்பவும்போல எழுதிருவோம்!

பள்ளியில் நடத்தும் தேர்வுகள் தவிர, வகுப்பறைக்குள் தேர்வுகள் நடத்துவது எனக்கும் பிடிக்காது.
பத்தாம் வகுப்பிலும் எழுதிக்காட்ட விரும்பும் மாணவர்கள் எழுதலாம் என்று சொல்லிவிடுவேன்.
08.11.2014
திரைப்பட ரசனைக்குழு உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றிய பின் மாணவர்களின் ரசனை எந்த அளவு இருக்கிறது? என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது.
ஒன்பதாம் வகுப்பில் உரையாடலைத்தொடங்கினேன்.
இப்போ நாம திரைப்படம் குறித்து பேசப்போறோம்.
மாணவர்கள் ஆர்வமானார்கள்.
ஒரு படத்தை விமர்சனம் செய்யப்போறோம்.
முக்கிய நிபந்தனை,
நடிகர்களின் ரசிகர் என்ற முறையில் தாக்குதல் கூடாது.
படத்தில் நீ பார்த்த நிறைகளை முதலில் சொல்லலாம்.
என்று சொல்லி படத்தின் பெயரை கரும்பலகையில் எழுதினேன்.
கத்தி.
படம் சூப்பர்.
கூட்டமா கத்தக்கூடாது. ஒருத்தர் எழுந்து சொல். பிறகு அடுத்தவர்.
விஜய் நடிப்பு, கதாநாயகி அழகு....
நாம படத்தோட கதை, மற்ற தொழில் நுட்ப செய்திகளை கவனிப்போம்.
கதாநாயகன் யாருக்காக போராடுறான்?
விவசாயிகள்.
வயதானவர்கள்.
விவசாய நிலம்.
திடீரென எனக்கு ஒரு கேள்வி தோன்றியது.
வில்லன் என்ன வேலை செய்கிறான்?
கம்பெனி.
இல்ல,பேக்டரி கட்டுறான்.
என்ன ஃபாக்டரி?
தொழிற்சாலை.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒருவர்கூட கோலா நிறுவனம் என்று சொல்லவில்லை.
பாடல்,நடனம் என்று நிறைகள் எழ, குறைகளைக்கேட்டேன்.

படம் முடியும்போது ஒரு விஜய் தப்பித்து வருகிறார். எப்படி என்று காட்டுப்போது காசை சுண்டுகிறார்,
ஆனா,அந்த சண்டைய காட்டல!
பெரும்பாலும் சண்டை,நடனம் போதவில்ல என்பதே குறைகளாக இருந்தது.
கதைத்திருட்டு குறித்த செய்திகள் யாருக்கும் தெரியவில்லை.
சார், படத்துல ஒரு நல்ல விஷயம் சொல்லவா?
சொல்லு.
நல்லவனால சண்டையெல்லாம் போடா முடியாது. அதுனால கெட்டவன்,அவன ஜெயிலுக்கு அனுப்பிட்டு எல்லாருக்காகவும் போராடுறான்.
அதிர்ந்துபோனேன்.
இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் தமிழ் சினிமா மசாலாவை விட்டு மாறாது என்று எண்ணினேன்.
மனம் ஏன் கதாநாயகனை விரும்புகிறது?
தமிழ் சினிமாவின் சுருக்கமான வரலாறு, சிறந்த இயக்குனர்கள்,போன்ற சில செய்திகளை சொன்னேன்.
நண்பர்களிடம் இவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ளலாம் என்று உயிரியல் ஆய்வகம் சென்றேன்.
12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிக்கொண்டிருந்தனர்.
நண்பரிடம் சுருக்கமாக சித்தியை சொல்லிவிட்டு, அந்த மாணவர்களிடம் ஒரு கேள்வி மட்டும் கேட்கலாமே! என்று கேட்டேன்.
தம்பிகளா, கத்தி படத்துல வில்லன் என்ன வேலை செய்யறார்?
சிறிது நேர யோசனைக்குப்பின்,
பாக்டரி.
கொக்கோ கோலா கம்பெனி.
இல்ல சார், MNC கம்பெனி.
போதும். எழுதுங்க.
06.11.2014
காலை முதலே மனம் எப்போது மாலை வரும் என்று ஏங்கிக்கிடந்தது.
பேராசிரியர் ச.மாடசாமி அவர்களை சந்திக்கப்போகிறேன்,பள்ளிக்கே வரப்போகிறார் என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன்.
பிற்பகல் 3.30மணிக்கு பள்ளி நிறைவடைந்தது.
ஆசிரியர் வந்துவிட்டார். இனிய எளிய மனிதர். நீண்டநாட்கள் பழகியவர்கள்போல இயல்பாக சிரித்துக்கொண்டோம்.
அவரின், சொலவடைகளும் சொன்னவர்களும் புத்தகமும் அமர்த்யா சென் எழுதிய The Argumentative Indian புத்தகமும் இரு பேனாக்களும் பரிசாகத்தந்தார்.மிகவும் மகிழ்ந்தேன்.
நிறைய பேசினோம்.
அவர்தம் எழுத்தைப்போலவே எளிமையும் ஒளிவு மறைவுமில்லா வெள்ளந்தி மனிதர்.
எனது பள்ளி அனுபவங்களையும் கேட்டார்.
நகரில் ஆண்கள் பள்ளி பெண்கள் பள்ளி என்று பிரிந்து இருப்பதே அவருக்கு ஆச்சரியமானதாக இருந்தது.
சமச்சீர் கல்வி புத்தக ஆக்கத்தில் அவரின் பங்கு, இன்றைய மாணவர்களின் நடத்தை மாற்றங்கள் என பல்வேறு செய்திகளை பேசினோம்.

பேராசிரியரிடம் பேசியதிலிருந்து,
பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று பத்தாண்டுகள் ஆகிவிட்டன.
ஓய்வு பெறும்போது மாணவர்களின் வாய்களுக்கு கொடுத்த அளவு கைகளுக்கு வேலை கொடுக்கவில்லையோ? என்றே எண்ணினேன்.
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக பல்வேறு தண்டனைகளை அடிக்கடி பெற்றாலும் எனது கல்லூரி வகுப்பறையில் பரிசோதனை முயற்சிகளில் நிர்வாகம் தலையிட்டதில்லை.
புதிய பரிசோதனைகளை செய்யும் ஆசிரியர்கள் நிறைய பின்விளைவுகளை சந்திக்கத்தயாராக இருக்க வேண்டும்.இல்லையெனில் தனிமைப்பட்டுவிட நேரிடும்.
ஐரோப்பிய வகுப்பறைகள் எளிமையானவை. சுதந்திரமானவை.சமீபத்தில் பிரான்ஸ் நாட்டவரின் கட்டுரை ஒன்றைப்படித்தேன். இப்போது அங்கே பள்ளிகள் 'இந்திய மாதிரியை' பின்பற்றத்தொடங்கிவிட்டன. நம்மைப்பார்த்து கடினமான பாடங்களை சிறு வயதிலிருந்தே கற்பிக்க தொடங்கிவிட்டனர்.
மனதுக்கு மகிழ்ச்சியாகவும் தெம்பாகவும் இருந்தது. தொடர்ந்து ஆசிரியரை அவரது இல்லத்திலேயே சந்திப்பேன்.இன்னும் நிறைய கற்க வேண்டியுள்ளது.

Wednesday, 3 December 2014

06.11.2014
வாசிப்பு மிகவும் கடினமானதாகவே இருக்கிறது. சற்றே பெரிய வார்த்தைகளைக்கண்டாலே திணறிவிடுகிறார்கள்,மாணவர்கள்.
வாசிப்பவர்களும் தெளிவாக உச்சரிக்காமல் அவசரப்படுகிறார்கள். என்ன செய்யலாம்? என்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பாலா சொன்னார்,
" சிவாஜி நடித்த வசனங்களை மாணவர்களுக்கு காட்டி நடிக்கச்சொன்னால் என்ன?"
நல்ல யோசனையாகத்தோன்றியது.
பள்ளி விழாக்களிலும் நாடகம் அருகி சம்பிரதாயமாகிவிட்டது.
கட்டபொம்மன் வசனங்கள் மாறுவேடப்போட்டிக்கு போய்விட்டன.
சிவாஜியின் சிறந்த காட்சிகளைச்சேகரித்தேன்.
கட்டபொம்மன் - ஜாக்சன் சந்திப்பு, கட்டபொம்மன் தூக்கிலிடப்படும் காட்சி,
சாக்ரடீஸ்,சேரன் செங்குட்டுவன்,வீர சிவாஜி, அசோகன் போன்ற நாடகங்கள்.
மனோகரா, இராஜராஜ சோழன், திருவிளையாடல்,சரஸ்வதி சபதம் வசனங்கள்.
என்று காட்சிகளை சேகரித்தேன்.
பல்வேறு காரணங்களால் பள்ளி ஒலி-ஒளி அறையைப்பயன்படுத்த இயலவில்லை. மடிக்கணினியை எடுத்துச்சென்றேன்.
வகுப்பறையில் மாணவர்கள் படக்காட்சிகளைப்பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.
மடிக்கணினி என்பதால் ஒலி போதுமானதாக இல்லை. இருப்பினும் கேட்க முயன்றனர்.எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.
ஒருசில காட்சிகளை மட்டும் காட்டிவிட்டு எப்படியேனும் ஓரிரு நாட்களில் ஒலி-ஒளி அறைக்குச்சென்று
படங்களை கண்டிப்பாக பார்ப்போம் என்று மாணவர்களிடம் கூறினேன்.