Saturday, 26 July 2014

அன்பின் வலியது ?




நூறாண்டுகளுக்கு முன் பிறந்து ஓவியத்துறையில் மாபெரும் ஆளுமையாக விளங்கியவர் ஃபிரிடா காலோ
மெக்சிகோ நாட்டு ஓவியரான இவரின் பிறந்தநாளும் நினைவுநாளும் ஜூலை மாதத்தில்.
சில ஆண்டுகள் கழித்து ஃபிரிடா FRIDA திரைப்படத்தைப்பார்த்தேன்.

ஓவியர்களின் படங்களை ஒரே மூச்சில் எப்போதும் என்னால் பார்த்துவிட முடியாது. உணர்ச்சிப்பெருக்கால் அவ்வப்போது மனம் வேறு வெளிகளில் அவர்களுடன் சஞ்சரிக்கத்தொடங்கிவிடும்.
ஒரு வாரமாகியது, படம் முடிய.

இளம் வயதில் ஏற்பட்ட விபத்தால் முதுகுத்தண்டில் கடும் பாதிப்படையும் ஃபிரிடாவின் உடல் வலியின் வழியாகவே வாழ்கிறது.
உள்ளத்தின் அன்பு, உடலின் வலி, இன்பம்,காமம் .....
ஆண் ,பெண் வித்தியாசமின்றி உடல்களில் அன்பைத்தேடுகிறாள் ஃபிரிடா.
பெண் உடலை போகப்பொருளாக மட்டுமே பயன்படுத்தித்திரியும் டியகோ ரிவேராவை - சுவரோவியங்களால் உலகப்புகழ் பெற்ற ஓவிய மேதை- ஃபிரிடா சந்திக்கிறாள்.
இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

ஃப்ரிடாவின் ஓவியங்கள் பெண்ணின் உடல் வழியான அன்பையே உருவகப்படுத்துவதாக அமைகின்றன.
தொடர்ந்து பல பெண்களுடனான ரிவேராவின் உறவால் மனம் உடைந்த ஃபிரிடா அவரைப்பிரிகிறாள்.

அரசியல் அடைக்கலம் தேடி வரும் மேதை டிராட்ஸ்கியுடனான நட்பும் உறவில் முடிகிறது.

ஃப்ரிடாவின் உடல் மிகவும் பாதிப்படைகிறது.பாதங்கள் நீக்கப்படுகின்றன.
பெரும்பாலும் படுக்கையிலேயே அவளின் வாழ்நாட்கள் கழிந்திருக்கின்றன.
அன்போடு தேடி வரும் ரிவேரா, ஃபிரிடாவின் இறுதிக்காலம் வரை உடனிருந்து கவனித்துக்கொள்வதோடு அவளின் நெடுநாள் ஆசையான ஓவியக்கண்காட்சியை மெக்சிகோவில் நடத்துகிறார்.

ஃபிரிடா, தனது வாழ்நாள் முழுதும் பெண் உடலும் மனமும்
உணரும் எதிர்நோக்கும் போராட்டங்களை ஓவியங்களில் பதிவு செய்து வைத்திருப்பதாலேயே உலகமெங்கும் கொண்டாடப்படுகிறாள்.

காலந்தோறும் ஃபிரிடாக்கள்,
அன்பு உள்ளங்களைத்தேடுகிறார்கள்.
உலகம் அவர்களின் உடல்களை நாடுகிறது.

குறிப்பு : எப்போதும் ஒரு ஆளுமையைப்பற்றிய திரைப்படம் எடுக்கும்போது மேல்நாட்டவர் காட்டும் அக்கறை, நடிகர்களின் உழைப்பு வியந்து பாராட்டப்படும். இப்படத்தில் ஃபிரிடாவாக சல்மா ஹைக் நடித்திருக்கிறார் என்று பாராட்டவே தோன்றவில்லை.
ஃபிரிடாவே நடித்திருக்கிறார்.
 

காணாமல் போன காமராசர்



ஆளில்லாத லெவல் கிராசிங்.
பள்ளிப்பிள்ளைகளுடன் ஒரு வேன் சிக்கிக்கொண்டது.எங்கோ தூரத்தில் ரயில் வந்துகொண்டிருக்கிறது. ஓட்டுனர் இறங்கி ஓடுகிறார்.
மற்றவர்கள் அனைவரும் இறங்கமுடியாமல் கதறுகின்றனர்.
ஒரு மாணவன் ஜன்னல் வழியாகக்குதித்து,
தண்டபாளத்தில் ஓடுகிறான்.அவன் பின்னால் 'அண்ணே' என்றபடியே மற்றொரு சிறுவனும் குதித்தோடி வருகிறான். மயங்கி விழுகிறான்.
ரயில் வந்துகொண்டே இருக்கிறது.
முதலில் குதித்த சிறுவன் சிவப்புக்கட்டம் போட்ட சட்டை அணிந்திருக்கிறான். கால் சட்டையிலிருந்து கைக்குட்டையை எடுத்து ஆட்டியபடியே ரயிலை நோக்கி ஓடுகிறான்.
கைக்குட்டை வெள்ளையாக இருக்கிறது.
ஓடிக்கொண்டே பார்த்தவன் கண்களில், தண்டபாளத்தின் ஓரத்திலிருந்த பீர் பாட்டில் படுகிறது.
பாய்ந்தெடுத்து, ஒருகணம் யோசித்து, அதை அங்கேயே உடைத்து,கூரிய முனையால் கையைக்கிழித்து, கைக்குட்டையை இரத்தத்தில் நனைக்கிறான்.
சிவப்புக்கைக்குட்டையைப்பார்த்ததும் ரயில் நின்றுவிடுகிறது.

இப்படிச்சில அறிவுப்பூர்வமான காட்சிகளின் தொகுப்பாக 45 நிமிடங்கள் சிறார்களே பெரியவர்கள் போல வேடமிட்டு நடித்த படம் திரையிடப்பட்டது.எங்கள் பள்ளியைச்சார்ந்த 475 மாணவர்களும் 15 ஆசிரிய ஆசிரியைகளும் திரையரங்கிற்குச்சென்றிருந்தோம்.

காமராஜர் திரைப்படம் என்றுதான் சுற்றறிக்கை வந்திருந்தது.
எனது வகுப்பில் மாணவர்களுக்குப்பல்வேறு போட்டிகளைச்சொல்லியிருந்தேன். காமராஜரின் பிறந்தநாளுக்கு முதல்நாள் சென்றிருந்தோம்.
ஆனால்,காட்டப்பட்டதோ சிறுபிள்ளைகள் நடித்த, பெரியவர்களின் மூடத்தனமான கருத்துகளைச்சொல்லும் கத்துக்குட்டிப்படம்.
பாவம் மாணவர்கள்.

பல ஆண்டுகளுக்குப்பின் அரங்கு நிறைந்த காட்சிகளை அந்தப்பழமையான திரையரங்கு பார்த்திருக்கும்.

Saturday, 19 July 2014

மனம் நிறைந்த மாணவன்-3


அந்த ஆசிரியர் வெகு கோபமாக அடித்துக்கொண்டிருந்தார்.அவன் அழுதுகொண்டிருந்தான்.
பார்த்தவுடன் பதறிப்போனேன்.
அண்ணே, என்ன....ஏன்?
என்ன சொன்னாலும் சிரிக்கிறான்...அடிச்சாலும் சிரிக்கிறான்.....
அவன் பாவம்,நல்லவன், அப்பிராணி...எடுத்துச்சொன்னேன்.
வருத்தப்பட்டார்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் செல்லப்பிள்ளையாகவே இருந்த அவன் செல்லப்பெயர் 'தக்காளி' உண்மைப்பெயர் செந்தில்.
மதுரை,வைகையாற்றங்கைரையில் ஆழ்வார்புரம் பகுதியில் காவல்துறை சிறார் மன்றத்தில் நான் சிலகாலம் பணியாற்றியபோது பழக்கமானவர்களில் ஒருவன் தக்காளி.
பெயருக்கேற்றபடி குண்டானவன். ஆனால் பெயருக்குக்காரணம் குண்டாயிருந்ததல்ல, தினமும் அதிகாலையில் காய்கறிச்சந்தைக்குச்சென்று லாரிகளிலிருந்து தக்காளிக்கூடை இறக்கும் வேலை செய்துவந்ததே.
சேதுபதி பள்ளியில் நான் பணியில் சேர்ந்தபின் தக்காளியும் அங்கேயே மாணவனானான்.
படிப்புச்செலவுகளை நான் ஏற்றுக்கொள்வதாகக்கூறியிருந்தேன்.
இருந்தாலும் எப்போதாவது தேவைஎன்றால் மட்டுமே கேட்பான்.தக்காளியின் தேவைகளைத்தக்காளியே கவனித்துக்கொண்டது.

அவனைப்பற்றி ஒருபக்கக்கட்டுரை ஒன்றை அண்ணன்
Murugaraj Lakshmanan தினமலர் வாரமலரில் எழுதினார்.தக்காளி தமிழகமெங்குமிருந்து வாழ்த்துக்களைப்பெற்றான்.

தன பகுதியில் படிக்கும் மற்ற சிறார்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பழக்கம் அவனுக்கு இயல்பாகவே அமைந்த ஒன்று.சிறார் மையத்தை அவனே நன்கு கவனித்துக்கொள்வான்.
மற்றவர்களுக்குச்சொல்லிக்கொடுக்கும் ஆர்வத்தில் 10 ஆம் வகுப்பில் அவன் தவறிவிட்டான்.

அடுத்தமுறை தேறிவந்தால், எங்கள் பள்ளியில் 11ஆம் வகுப்பிற்கு இடம் கிடைக்கவில்லை. இப்போது நான் பணிபுரியும் மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளித்தலைமையாசிரியர் சேதுபதி பள்ளியில் பணிசெய்தவர் என்பதால் தக்காளியைப்பற்றித்தெரியும், இடம் கொடுத்தார்.
12 ஆம் வகுப்பில் 1050 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3ஆவது மாணவனாக பெருமை பெற்ற தக்காளி Bcom படித்து இப்போது ஒரு ஆடிட்டரிடம் பணிசெய்கிறார்.
செந்திலைத்தக்காளி என்றே அவ்வப்போது அழைக்கிறேன்.
திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கின்றன.
பின்தங்கிய தனது பகுதியில் நிறையபேர் நன்கு படிக்கவேண்டும் என்பதே செந்திலின் ஆசை.

மாலை வேளைகளில் செந்திலிடம் படித்தவர்கள் இப்போது நிறைய பொறியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள்.
வேலைப்பழுவின் காரணமாக இப்போது வகுப்புகள் நடத்த முடியவில்லை என்றாலும் சென்ற ஆண்டிலிருந்து தனது பகுதியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெரும் மாணவ மாணவியருக்குப்பரிசுகள் வழங்குதல்,உயர்கல்விக்கு உதவிகள் செய்தல் போன்றவற்றைச்செய்து வருகிறார். செந்திலிடம் படித்த மாணவர்களே அனைத்து பண உதவிகளையும் செய்கிறார்கள்.



சென்ற ஆண்டு முதன்முறையாக நடைபெற்ற விழாவிற்குப்போயிருந்தேன்.
பல ஆண்டுகளுக்குப்பிறகு ஆழ்வார்புரம் பகுதிக்குச்செல்கிறேன்.
நிறைய குழந்தைகள் மீசையோடு. பலர் பெரிய பெண்களாக.
ஏதாவது தேவையா? என்று செந்திலிடம் கேட்டேன்,
வழக்கம்போல, தேவையானால் கேட்கிறேன்,என்றான்.

விழா முடிவில் பல இளைஞர்களுடன் மலரும் நினைவுகளைப்பகிர்ந்து கொண்டிருந்தேன். ஒரு பெண் அருகே வந்து என்னை அழைத்தாள்.
என்னம்மா,
ஆசீர்வாதம் செய்ங்க சார்,
திடீரெனக்காலில் விழுந்தாள்.
கண் கலங்கி,பதறி... நல்லா இரும்மா...எழுந்திரு....
என்னம்மா...பெரியவங்கல்லாம் இருக்காங்க....
எனக்கு யாரென்றும் தெரியவில்லை.பதறிப்போனேன்.வார்த்தைகள் வரவில்லை.கண்கள் திரையிட்டன.
அந்தப்பெண் சொன்னாள் ,
சார்,எஞ்சினியரிங் படிக்கிறேன்,
செந்திலண்ணன் கிட்டதான் படிச்சேன்.
நீங்க அவரோட சார்,அதான்.....

இந்த ஆண்டும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசும் பாராட்டுவிழாவும் வருகின்ற 27 ஆம் தேதி மாலை வைத்திருப்பதாக செந்தில் அழைத்திருக்கிறார். என்ன வேண்டும் என்று கேட்டேன்.சிரிப்பு மட்டுமே பதிலாக வந்தது.
சார்,இப்ப வகுப்பெல்லாம் எடுக்க முடியல,எங்க பகுதில ஒரு லைப்ரரி ஏற்படுத்தலாம்னு நெனைக்கிறேன்.
முடிவு செய்துவிட்டேன்.

Friday, 4 July 2014

மலர்ந்த நினைவுகள்.


மாணவர் தங்கப்பாண்டியின் மாணவர்களின் கிராமியக்கலைகள் அரங்கேற்ற விழா. ஊர்வலமாக கிராமியக்கலைகளை நிகழ்த்தியபடி சிறார்கள் கொண்டாட்டமாய் பவனிவர, இடையே தனி நாதஸ்வரம், தவிலுடன் ஆடிக்கொண்டே வந்தார் ஒரு ராஜா. அவரைச்சில படங்கள் எடுக்கலாம் என நெருங்கினேன். என்னை உற்றுப்பார்த்தவர், ஓடிவந்து நாடியைப்பிடித்து,
ராசா,நல்லாருக்கியா? பாத்து ரொம்ப நாளாச்சு!
என்ன ஆச்சரியம்,மறதியின் கொடும் அடுக்குகளிலிருந்து எப்படி மீண்டது அந்தப்பெயர்?!
தாளமுத்து.
கூவினேன்,
தாளமுத்து.....எப்படி இருக்கீங்க? நல்லாஇருக்கீங்களா? எங்க இருக்கீங்க?
ஆச்சரியமும் அன்பும் நினைவுகளும் மனதுள் நிறைந்தன.

19 ஆண்டுகளுக்கு முந்தைய குடியரசு தினம். தலைநகரில் நடைபெறும் கொண்டாட்டங்களுள் ஒன்று 'அகில இந்திய கிராமியக்கலை விழா'.
பல மாநிலங்களின் சார்பாக வந்திருந்த கலைக்குழுக்களுடன் தமிழகத்தின் சார்பாக மயிலாட்டம் ஆட பெருங்குழுவாக நாங்களும். ஒரு மாதகால ஒத்திகை.
ஒவ்வொருநாளும் அவரவர் பயிற்சி முடிந்ததும் பல்வேறு மாநிலக்கலைஞர்களும் கூடி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக மகிழ்ந்திருப்போம்.
கடுங்குளிரின் பொருளை அங்குதான் உணர்ந்தேன்.
நடனக்களைப்பு அதையும் மிஞ்சும்.
நடனங்களில் துள்ளலானது பஞ்சாபியர்களின் பாங்க்ரா.நமது ஒயிலாட்டம் போல. இசையில் நமது தவில் நாதஸ்வரம்தான்.

ஆடுவதற்காக வந்திருந்தாலும் தாளமுத்து அடிப்படையில் கிராமிய இசைக்கலைஞர்.மிகச்சிறந்த கிராமியப்பாடகர். வெள்ளந்தியான மனிதர்.எப்போதும் எங்களின் கொண்டாட்டங்கள் அவரின் பாடல்களால் துள்ளலாகும்.
யார் எப்போது கேட்டாலும் மறுக்காமல் பாடுவார். அக்காலத்தில் ஊடகங்களின் ஆதிக்கம் அதிகமில்லாததால் வானொலியோடு அவர் புகழ் வளர்ந்தது.

வயசு 75 ஆச்சு.முன்னமாதிரி ஆடப்பாட முடியல.
இருந்தாலும் தங்கப்பாண்டி கூப்டான்,மரியாதை செய்யணும்னு,
வந்துட்டேன். சும்மா எப்படி இருக்க,அதான் ஆட்டமும்.
நல்லாஇருக்கீங்களா ?
எனக்கென்ன,ரெம்பக்கஷ்டமில்ல.ஓடுது.
காசுபணமில்லாட்டியும் சந்தோஷமா இருக்கேன்.
காசா வேணும்? ஏதோ, இருக்கிறவர நடமாடணும், நிகழ்ச்சின்னு போனா நாலு ஊரப்பாத்து நாம ரசிக்கணும்,நம்மளப்பாத்து மக்கள் ரசிக்கணும் அவ்வளவுதான்.

அவ்வளவுதான்.

எழுத்துப்பிழைகளைத்திருத்துதல்?



படித்த பெரியவர்கள், மற்றும் பல ஆசிரியர்களாலேயே எழுத்துப்பிழை இல்லாமல் எழுத இயலாத நிலையே காணப்படுகிறது.
சுயமாக எழுதும் பழக்கம் அறவே இல்லாதது போலவே தோன்றுகிறது.
மொழிப்பாடத்திலும்,
கட்டுரைகள், மாணவரின் சொந்தப்படைப்பாக இல்லாமல் ஆசிரியர் சொல்வதை அல்லது எழுதிப்போடுவதை அப்படியே நகல் செய்து மனப்பாடம் பண்ணுதலே அதிகம்.

எனது வகுப்பில்,
தொடக்கத்திலேயே சொல்லிவிடுவேன்.
'நாம் பேசும்போது எழுத்துப்பிழையோ,இலக்கணப்பிழையோ வருவதில்லை.காரணம் அதிகம் பேசிப்பழகியிருக்கிறோம்.
நாமாக எழுதியதில்லை.....'
என்று பல செய்திகளைக்கூறி சுயமாக எழுதச்சொல்வேன்.

"கற்க கசடற" என்று ஒரு பக்கம் முழுதும் கையெழுத்துப்பயிற்சி செய்வதை விடுத்து அதிலேயே அன்றாட நிகழ்வுகளை நாட்குறிப்பாக எழுதச்சொல்வேன்.
எழுத்துப்பிழைகளைத்திருத்துவது இல்லை.
தொடர்ந்த வாசிப்பும் எழுதுவதும் எழுத்துப்பிழைகளைத்தாமாகவே சரிசெய்துவிடும்.
நீண்ட நாட்களாகத்தொடர்ந்தால், சற்று கவனி. என்பேன்.

பிழைகளைத்திருத்துவதைவிட
திருந்தச்செய்வதே
ஆசிரியரின் பணி
என நான் தீர்க்கமாக நம்புகிறேன்.

பதில் தேடும் கேள்விகள்.


ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு 'தமிழ்த்தாத்தா உ.வே.சா' முதல் பாடம். சில செய்திகளைச்சொல்லலாமென எண்ணினேன்.
வெறுமனே தமிழ்த்தாத்தா, பழந்தமிழ் இலக்கியங்களைப்பதிப்பிக்க அரும்பாடுபட்டார் என்று சொல்வதைவிட,
இலக்கியம் என்றால் என்ன?
மொழியின் தோற்றம்,அவசியம் குறித்து கதைகளாகச்சொல்லிவிட்டு அதன்பின் பாடத்தில் வந்துள்ள செய்திகளைச்சொல்வது நலமாக இருக்குமென்பது என் எண்ணம்.
மேல் வகுப்புகளுக்கும் பயன்படும். எனவே, மாணவர்களிடம்
"இப்போ நெறைய கதை சொல்லப்போறேன், நம்மைப்பத்தி, நாம பேசுற மொழியப்பத்தி....."
கதைகள் தொடர்ந்தன.

ஒரு செய்தி சொன்னவுடன் சந்தேகமோ,கேள்வியோ இருப்பின் கைகளை உயர்த்தும்படி வருடத்தொடக்கத்திலேயே சொல்லிவிடுவேன்.
பல்வேறு கரங்கள் கேள்விகளால் உயர்ந்தன.
உலகம் எப்படித்தோன்றுச்சு?
மரம் எப்படி.....இதுபோல் பல.
குரங்கிலிருந்து மனிதன் வந்தான்.குரங்கு எங்கிருந்து வந்துச்சு?
இப்படியான கேள்விகளை அறிவியல் ஆசிரியரிடம் கேளுங்கள் என்றேன்.

ஒருவன் கேட்டான்,
சாமி எப்படி வந்துச்சு?
அட,இது நல்ல கேள்வி. சுருக்கமா சொன்னா,
ஆதி மனிதன் எதையெல்லாம் பார்த்துப் பயந்தானோ, வியந்தானோ அதெல்லாம் முதலில் சாமியாயிருக்கும்.
இடி,மின்னல்,மழை,நெருப்பு,...என்று தொடர்ந்தேன்.
அப்ப பேய்?
என்று தொடங்கித்தொடர்ந்தன கேள்விகள்.
சத்தம் அதிகமானவுடன்,
சரி.அவரவர் மனசுல என்னென்ன கேள்வி இருக்கோ,ஒரு தாளில் எழுதி நாளைக்கு கொண்டு வாங்க!
வகுப்பு நிறைவடைந்தது.

சிறிது நேரத்தில் என்னைத்தேடி ஒரு சிறுவன் வந்தான்.
நான்காக மடித்த காகிதத்தை என் கையில் கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்.
அதில் மூன்று கேள்விகள்.
நாளை நான் பதில் சொல்லவேண்டும்.
அவை,

நீர்வழிப்படூவும் புணைபோல.............



இரண்டு நாட்களுக்கு முந்திய மாலை. வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.தெருவுக்குள் நுழைந்ததும் திடுக்கிட்டேன். வீட்டு வாசலில்,எதிரில் இருக்கைகளில் பலர்.
யாராக இருக்கும்? மனதிற்குள் சுற்று வீடுகளில் இருந்த வயதானவர்கள் வந்துபோனார்கள்.
வீட்டிற்குள் வந்ததும் மனைவியிடம் கேட்டேன்.
யாரு?
எதிர்வீட்டுப்பையன்.
அவனா? கொஞ்ச வயசாச்சே!
ஆமா 23. குடிச்சிட்டு வண்டி ஓட்டிப்போயி லாரில மோதிட்டான்.
தினமும் காலையில் அவன் வண்டி பெரிதாக உறுமும்.திடீரெனச்சீறிக்கிளம்பும்.

அந்த இளைஞனுக்கு 19 வயதிலேயே திருமணம் செய்திருக்கிறார்கள்.
தாய்மாமன் மகள்.காதல்.
3 வயதிலொரு பெண்குழந்தை.
பையனின் அப்பா, கொத்தனார்.
அவர் சம்பாதிக்க செலவு செய்வது மட்டுமே பையனின் வேலை.
எங்கள் பகுதிக்கு வந்து ஒரு வருடமாகிறது.
ஒருமாதம் முன்பு அந்தப்பெண் கோபித்துக்கொண்டு தாய்வீடு சென்றுவிட்டாள்.
அன்று காலைதான் வீடு திரும்பியிருந்தாள்.
சண்டையிடுச்சென்றவன், திரும்பவில்லை.
இரண்டு நாட்களாக வீட்டு வாசலில் சண்டைகள்.
இருவீட்டாரும் மாற்றி மாற்றிக்குறைகள்.

குழந்தை விளையாடிக்கொண்டிருக்கிறது.
அந்தப்பெண்...அவளும் சிறுமிதானே?

இரண்டு நாட்களாக, செய்வதறியாமல் தவிக்கிறேன்.
தூக்கம் வரும்போதும் கொடுங்கனவுகள்.

இப்போது,
வாசலில் வண்டி உறுமும் சத்தம்.
எட்டிப்பார்த்தேன்.
அவன் தம்பி, சீறிக்கொண்டிருக்கிறான்.

நீர்வழிப்படூவும் புணைபோல.............

அக்கினிக்குஞ்சொன்று......




திருமணப்பத்திரிக்கை கொடுப்பதுபோல இனிப்புடன் கொடுத்தான் தங்கப்பாண்டி.
சார், அவசியம் வந்துரணும்,ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யணும்.
தங்கப்பாண்டியனின் கிராமியக்கலை மாணவர்களின் அரங்கேற்ற விழா.
ஆசிரியர்களின் பெயர்கள் அழைப்பிதழிலேயே அச்சிடப்பட்டும் இருந்தன.
என் மணநாளின் மாலையை மாணவனுக்காக ஒதுக்கினேன்.
பாலா, சமூக சேவையில் நாட்டம் கொண்ட ஆசிரியர் பிரின்ஸ் உடன் வந்திருந்தார்.

ஆனையூரில் இறங்கியதுமே பறையின் முழக்கம்.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்,இளைஞர் பட்டாளம் ஊர்வலமாக, பல்வேறு கிராமியக்கலைகளை நிகழ்த்தியவாறே வந்துகொண்டிருந்தனர்.
கிராமத்தின் மத்தியில் பிரமாண்ட மேடை.
ஆயிரக்கணக்கான மக்கள்.
தங்கப்பாண்டியனின் தாயார் மற்றும் விருந்தினர்கள் குத்துவிளக்கேற்ற விழா தொடங்கியது.
பேரா.கே.ஏ.குணசேகரன் சிறப்பு விருந்தினர்.
தங்கப்பாண்டியனுக்குக்கலைகளை கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் மேடையில் அமர வைக்கப்பெற்று மரியாதைகள் செய்யப்பெற்றன.
பல மூத்த கிராமியக்களைஞர்களுடன் நாங்களும்.


ஆசிரியராகப்பெருமிதம் கொண்ட மகத்தான தருணத்தை நானும் பாலாவும் அனுபவித்து நெகிழ்ந்தோம்.

60 சிறார்கள் ஒயிலாட்டமாட நிகழ்சிகள் தொடங்கின.
அப்போது ஆடத்தொடங்கிய மேடையும் மனங்களும் இரவு நெடுநேரம் வரை ஓயவேயில்லை.

நூற்றுக்கணக்கான சிறார்களின் ஒயிலாட்டம், சிலம்பாட்டம்,கரகம்,காளை,கட்டைக்கால்,காளி,பறை,
புலி என அனைத்துவிதமான கிராமிய நடன நிகழ்வுகள்
மதுரை மண்ணிருக்கும்வரை மக்களின் கலை உயிர்ப்புடன் இருக்கும் என நிரூபித்தன.


இளம் வயதிலேயே உலகநாடுகள் பலவற்றிற்குச்சென்று கிராமியக்கலைகளின் புகழ் பரப்பிவரும் தங்கப்பாண்டியன் என்ற மகத்தான கலைஞன் எங்கள் மாணவன் என்று மார்தாட்டிக்கொள்வதில் எவ்வளவு பெருமிதம்!

....பற்றியெரிந்தது காடு,
தீம்தரிகிட....தீம்தரிகிட...தித்தோம்.......

மனைவிக்கு...2


அவ்வப்போது பேச்சு, விவாதமாகிவிடும்.
நான் சொல்வேன்,
மனதைப்பகிர்தல் முழுமையாக இருக்கமுடியுமா?
அப்படியான தம்பதியரோ, நண்பர்களோ அமைவது அபூர்வம் என்றே
நினைக்கிறேன். சிலரின் பகிர்தல் சதவீதம் அதிகமாக இருக்கலாம்,
முழுமையாக இருக்க முடியாது.
அவள் மறுப்பாள்.
அது எப்படி, நான் எல்லாவற்றையும் சொல்லுகிறேன்.
நீங்கள் எதையாவது மறைக்கிறீர்களா?
சிரிப்பேன்.
காதலித்தது முதல் காமம் வரை பல எண்ணங்களைப்பகிர்ந்திருக்கிறேன்.
இன்னும் சில இருக்கலாம்.
சிறு கோபத்துடன் சொல்லுவாள்.
உனக்குள் நிறைய இருக்கு.
என்கிட்டே சொல்லு!
அமைதியாய் பதிலளிப்பேன் ,
இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம்.
சிலவற்றை வார்த்தைகளால் சொல்ல இயலாது.
கோபத்தோடு முறைப்பாள்.
அது எப்படி?
வார்த்தையால சொல்ல முடியாததும் இருக்கா?
புன்னகைப்பேன்.
கோபம் அதிகமாகும்.
புன்னகையுடன் கரம் பற்றுவேன்.
கண்டதப்படிச்சிட்டு பைத்தியம் மாதிரி உளர்றது!
சண்டையோ சமாதானமோ நிகழும்.
எங்களின் ஆகப்பெரிய கோபங்கள் கூட
மணிக்கணக்கைத்தாண்டியதில்லை.
வார்த்தைகளற்ற மொழிகள் பல உண்டு.

மனைவிக்கு...


தினமும் காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன்.
ஓவியம்,வாசிப்பு,இணையத்தில் எழுத்து என ஏதேனும்
செய்துவிட்டு 5 மணிக்குப்பால் வந்தவுடன் சுடவைத்து,
காப்பி போட்ட பின்பே மனைவியை எழுப்புவேன்.
இட்டலி ஊற்றிவைத்து, குக்கரில் அரிசி வைத்து,
இருக்கும் பாத்திரங்களைக்கழுவி வைத்துவிட்டு என் வேலைகளைக்கவனிப்பேன்.
8 மணிக்கே பள்ளிக்குக்கிளம்பவேண்டுமென்பதால்
காலை உணவுக்குப்பின் இருக்கும் பாத்திரங்களைக்கழுவி வைப்பேன்.
இவற்றிற்கிடையில்
மோட்டார் போட்டு தண்ணீர் ஏற்றுதல்,
தோட்டத்திற்குத்தண்ணீர் ஊற்றுதல்,
தேங்காய் உடைத்துக்கீறித்தருதல்,
சட்னி அரைத்தல்,
பிள்ளைகளின் சீருடைகளைத்தேய்த்தல்.....
மேலும்,
துணிமடித்தல்,
தோசை ஊற்றுதல்,
வீடு துடைத்தல்,
இன்னும்...இன்னும்....

என்று நான் அடுக்கிச்சொல்வதிலேயே
என் நண்பர்கள் வாய்பிளப்பர்.

எப்படி இவ்வளவு வேலைகள்?
உன் மனைவி கொடுத்துவைத்தவர்.
எங்க வீட்டுல சொல்லீராத....

உண்மையில் என் மனைவி பார்க்கும் வேலைகளில்
10 சதம் கூட நான் பார்ப்பதில்லை.


அவளே என் சக்தி.

நான் வெறும் சிவம்.

29.06.2014- 18 ஆவது மணநாள்.


பணத்தைச்சேர்க்காமல் புத்தகங்களைச்சேர்ப்பவன்.
ஓவியம் எனும் பெயரில் ஏதேதோ செய்பவன்.
ஏதாவதொரு காரணம் சொல்லும் ஊர்சுற்றி.
ஞாபகமறதிக்குச்சரியான எடுத்துக்காட்டு.
விடுதிபோல் வீட்டை நினைப்பவன்.
வாசித்து வாய் கிழியப்பேசுபவன்.
வண்டி ஓட்டத்தெரியாதவன்.
எழுதுகிறேன் என்று இணையத்தில் கிறுக்குபவன்.
இன்னும் ஆட்டம் பாட்டமெனக்கவலையின்றித்திரிபவன்.

எவ்வளவு குறைசொல்ல முடியுமோ அவ்வளவும்,
யார் சொன்னாலும் அப்படியா! எனக்கேட்டு,
அப்படியே என்னிடமும் சொல்லி.....
என்னில் தான் கண்ட
குறைகளையும் நிறைகளாக ஏற்றுக்கொண்டு
17 ஆண்டுகால இல்லறத்தில் என்னை முழுமையாக்கியவள்.

அவளுக்கு நான் மூத்த பையன்.
எனக்கவள் ஒரே பெண்குழந்தை.

வாசி..நேசி...யோசி...!










6,7,8 வகுப்பெடுக்கும் எங்கள் பள்ளித்தமிழாசிரிய நண்பர்கள் சேர்ந்து 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக

வாசி..நேசி...யோசி...! எனும் தலைப்பில் ஒரு கண்காட்சி வைக்கலாமென முடிவுசெய்தோம். தமிழ் எழுத்துக்களையும் மதுரை நகரின் பழைய புகைப்படங்களையும் காட்சியில் வைக்காலாமென முடிவு செய்தோம். பள்ளிச்செயலர் ஆர்வமுடன் அனுமதிக்க அனைவரின் ஒப்புதலுடன் ஏற்பாடுகள் தொடங்கின.
மூன்று நாட்கள் ஆர்வம் நிறைந்த மாணவர்கள்,ஆசிரிய நண்பர்களின் உதவியுடன் கண்காட்சி 27 ஆம் தேதி நடைபெற்றது.
ஒவ்வொரு வகுப்பாக மாணவர்கள் வந்து கண்காட்சியைப்பார்த்தபின் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. எழுத்துக்கள் கற்பதற்கேற்ற விளையாட்டுகள் நடத்தப்பெற்றன.


பிற்பகலில் பள்ளிச்செயாளர் தலைமையில் தலைமையாசிரியர் வரவேற்க, டி.வி.எஸ். பள்ளித்தமிழாசிரியர் திரு. கதிரவன் பல்வேறு பாடல்களுடன் மாணவர்களுடன் உரையாடினார்.



பெற்றோர்கள்,பத்திரிக்கையாளர்கள், முன்னாள் மாணவர்கள் வந்திருந்தனர். சில ஆசிரியர்கள் லேசாக எட்டிப்பார்த்தனர்.
ஏறத்தாழ 300 மாணவர்களின் மனது கொண்டாட்டங்களால் மகிழ்ந்தது