Monday, 4 November 2013

டைட்டானிக்கில் நான்


          மனைவி வழிச் சொந்தமாக அவர் அறிமுகப்படுத்தப்பட்டபோது வழக்கமாகப் புன்னகைத்தேன்."சினிமாவில் இருக்கிறார்" என்ற வார்த்தைகள் என் மனதைப் புன்னகைக்க வைத்தன.வீட்டுக்கு வாருங்கள் என உரிமையுடன் அழைத்தேன்.அவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

எப்போதாவது நல்லபடம் தரும் தமிழ் சினிமா போலத் திடீரென ஒருநாள் வீட்டிற்கு  வந்தார்.

சினிமாவில நீங்க என்ன செய்ரீங்க?

அசிஷ்டன்ட் டைரக்டர்
யாருகிட்ட?

பலபேருகிட்ட.ஒருத்தனும் சரியில்ல.நல்ல படன் எடுக்கவே மாட்டேன்கிரானுக. மனசு ரொம்ப வலிக்குது. உலகம் பூரா எவ்வளவு நல்ல படம் வருது.பாத்தும் திருந்தவே இல்ல.

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.திரைத் துறையில் எத்தனையோ திறமையாளர்கள் கண்டுகொள்ளப்படாமலே இருக்கின்றனர்.
நீங்க ஏதும் எடுக்க முயற்சிக்கலையா?

எவ்வளவோ கதை வச்சிருக்கேன்.தயாரிப்பாளர் பலபேரைப் பாத்துக் கத சொல்லிச்சொல்லி ,கோபம்தான் வருது.எல்லாரும் மாட்டு மூளைக் காரனுங்க.கதைய விடச் சதையதான் விரும்புரானுக .

கவலைப்படாதிங்க.முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க.கண்டிப்பா நல்ல தயாரிப்பாளர் கிடைச்சு சூப்பர் படம் எடுப்பீங்க.சென்னையில எங்க தங்கியிருக்கிங்க?

ரூம் எடுத்து தனியாத்தான் தங்கியிருக்கேன்.அம்மாவோட பென்சன வச்சு ஓட்டிக்கிட்டிருக்கேன்.

உங்கள மாதிரி எண்ணம் உள்ளவங்களோட கூட்டாத் தங்கினா செலவு குறையும்ல ?

ஒருத்தனையும் நம்ப முடியல.ஏதாவது கதையப் பகிர்ந்துக்கிட்டா, அவன் கதை மாதிரி அடுத்தவன்கிட்டச் சொல்லிப் படம் எடுத்துடுறான்.என்னோட எத்தனையோ
 கதை படமா வந்து சூப்பாரா ஓடியிருக்கு.

அடப்பாவமே!கேஸ் போட வேண்டியதுதானே?

அதெல்லாம் முடியாதுங்க.எத்தனை பேரு மேலதான் கேஸ்  போடுறது?கஷ்டம். அப்படியே விட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்கணும்.திறமை இருக்கிறவனுக்கு ஆயிரம் கத.

சூப்பர்ங்க.

அட இத விடுங்க.ரூம்மேட் அல்லது நண்பன் திருடினாக்கூட மன்னிச்சிடலாம்.எனக்குப் புரியாத ஒண்ணு என்னன்னா, ஃபாரின்காரன் கூட என் கதைய அப்படியே காப்பி அடிச்சுப் படம் எடுத்து அதுவும் உலகம் பூரா பயங்கரமா ஓடியிருக்கு.அதத்தான் என்ன செய்யறதுன்னே தெரியல.யார்கிட்ட சொன்னாலும் நம்பாம ஒரு மாதிரியாப் பாக்குறானுங்க.தமிழன் திறமைமேல தமிழனுக்கே நம்பிக்கை இல்ல.

நானும் ஒரு மாதிரியாய்க் கேட்டேன் .அது எப்படி...உங்க கதைய இங்கிலீஷ்ல படமா? யாரு அது?

யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க. நம்ப மாட்டானுக.
எனக்கே படம் பாத்தா ஒடனே தலையச் சுத்திருச்சு.கோபம் கோபமா வந்துச்சு,ஆனா எப்படி என் கதைய அப்படியே வெள்ளைக்காரன் எடுத்தான்னு குழப்பமா இருந்துச்சு.அப்பறம் என் திறமைய நினைச்சு சந்தோஷப்பட்டேன்.
அந்தப் படம்தான் டைட்டனிக்.
..!..@...#...$...&....*********?.....

No comments:

Post a Comment