Sunday, 20 October 2013

பவா

எல்லா நாளும் கார்த்திகை
வாசிப்பை நேசிப்பவர்கள் அறிந்த பெயர் பவா செல்லதுரை.
அவரைப் பற்றிப் பிறர் எழுதியவற்றை வாசிப்பவர்களுக்கு
திருவண்ணாமலையில் அவர் வீட்டிற்கு நாமும் போக மாட்டோமா? என்ற ஏக்கம்  ஏற்படுவது தவிர்க்க இயலாதது.
அவரைப் போலவே அவரின் எழுத்துக்களும் எளிமையானவை,இனிமையானவை,வலிமையானவை.
வம்சி வெளியீடாக வந்திருக்கும் "எல்லா நாளும் கார்த்திகை"
பவாவின் கட்டுரைத்தொகுப்பு.
கலை,இலக்கியம் மற்றும் திரைத்துறை சார்ந்த ஆளுமைகளைப் பற்றிய பாவாவின் சொற்சித்திரங்கள் நிறைந்தது ,எல்லா நாளும் கார்த்திகை.

ஒவ்வொரு கட்டுரையையும் வாசிக்கும்போது அந்த ஆளுமைக்கு அருகில் நம்மைக் கைபிடித்து அழைத்துச்செல்கிறார் பவா.முடிவில் நாமே அவராக மாறி அந்த ஆளுமையுடன் கலந்து விடுவதே பவாவின் வெற்றி.

பாலு மகேந்திரா பற்றியது முதல் கட்டுரை.
புதிய படத்தின் கதை பற்றிய உரையாடலில் பாலு மகேந்திரா கேட்கிறார், 'மூன்றாம் பிறை' ஸ்ரீதேவியை கமல் எங்கிருந்து அழைச்சிட்டு போவார்னு ஞாபகப்படுத்துங்க பாக்கலாம்"
பவாவைப் போலவே நானும் திணறிப்போனேன்.
விடை ஆச்சரியப்படுத்தியது. மறுநாள் பள்ளியில் ஓய்வு நேரத்தில் நண்பர்களிடம் கேட்டேன்.செல்பேசியில் ஒருவர் தேடித் திரைப்படத்தை ஓடவிட்டார். அனைவருக்கும் அந்தக் காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது."இது ஞாபகமே இல்ல"
என்றனர்.அது பற்றிய பாலு மகேந்திராவின் வார்த்தைகள் ,
"ஒரு விபச்சார விடுதியிலிருந்து.ஆனா அது உங்களுக்கு மட்டுமல்ல,படம் பார்த்த யாருக்கும் ஞாபகம் இருக்காது.ஏன்னா படத்தோட ட்ரீட்மெண்ட்ல அது காணாமல் போயிடுது"
இதைப்போலவே பல்வேறு உணர்வுகளின் கலவையில் அனைத்து ஆளுமைகளையும்  நம்மோடு கலந்துவிடுகிறார் பவா.

ஃபிராய்ட்

ஏதாவது பேசும்போது தம் மேதைத் தனத்தைக் காட்டப் பலர் பயன்படுத்தும் வார்த்தைகள்,"சைக்காலஜி, ஃபிராய்ட் ". 
குறிப்பாகப் பாலுணர்வு குறித்துப் பேசுபவர்கள் தாங்கள் சொல்வதுதான் உண்மை என நிலைநாட்ட, ஃபிராய்ட் பெரிதும் பயன்படுகிறார்.

உண்மையில் யார் இவர்? என்னதான் சொன்னார்? 'பல்லி  விழும் பலன்' போல கனவுகளுக்கு விளக்கம் சொன்னாரா?
மனம்,பாலியல், ஒழுக்கம்,மதம்,நரம்பு நோய்கள்  எனப் பல பொருள்கள் பற்றி ஃபிராய்ட் கூறுவது என்ன?
அவர்தம் கருத்துக்களின் இன்றைய நிலை என்ன?

ஃபிராய்ட் குறித்த சிறந்த அறிமுக நூலான இதை ஆங்கிலத்தில் எழுதியவர்  சிகாகோ பல்கலைப் பேராசிரியர் ஜோனத்தன் லியர். இந்நூலை மிகச்சிறப்பாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் ஆங்கிலப் பேராசிரியர் ச.வின்சென்ட்.
உளவியல் நூலை தக்க  கலைச்சொற்களோடு வாசிப்பவர்  புரிந்துகொள்ளும்படியான சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
இது போன்ற மொழி பெயர்ப்பு நூல்கள் தமிழ்ச் சிந்தனைப் பரப்பிற்கு புதிய வெளிகளைக் காட்டும்.

 கதை, கட்டுரை போலில்லாமல் நிறுத்தி, யோசித்து வாசித்தால் ஃபிராய்ட் வசப்படுவார்.