Saturday, 7 March 2015

04.12.2014
நேற்று காலைமுதலே பரபரப்பு.
12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனைத்தேடி காவல்துறையினர்.
காரணம்,
நண்பர்களுடன் சேர்ந்து மற்றொரு மாணவனைத்தாக்கியது.
முந்தியநாள் மாலையில் வெளியே நடந்த நிகழ்வு.
காரணம்,
பள்ளியில் அவர்கள் ஒரு குழுவாக அடித்ததற்கு பழிக்குப்பழி.

அடிக்கடி மாணவர்களின் சண்டைகள் பற்றிய செய்திகள்.
சண்டையிட்டுக்கொள்வது சாதாரணம்.
ஆனால், இப்போது வன்முறை,வெறி அதிகரித்துள்ளன.
மாணவர்களுக்கான கூட்டம் கூட்டப்பட்டது.
ஏறத்தாழ இரண்டுமணிநேரம் அறிவுரைகள்.
ஆசிரியர்கள் கோபமாக இருக்கிறார்கள்.
இயலாமையும் வெறுப்பும் பேச்சில்.
என்ன செய்வது?
மதிப்பெண்களை நோக்கிய ஓட்டத்தில்
மனப்பண்புகளை வளர்க்கத்தவறுகிறோமோ?
03.12.2014
பயிற்சியாசிரியைகளுக்கு பயிற்சிக்காலம் நிறைவடையப்போகின்றது.
முக்கிய சடங்காக அடைவுத்தேர்வு.
எல்லா பயிற்சியாசிரியைகளும் தேர்வுக்கான வினாக்களுடன் விடைகளையும் முன்னரே எழுதிப்போட்டுவிட்டு ஓரிரு நாட்கள் கழித்து தேர்வு வைக்கின்றனர்.
ஒன்பதாம் வகுப்பில், கேள்வியை மட்டும் சொல்லுங்கள், பதிலை மாணவர்களே தேடிப்படிக்கட்டும். என்று சொன்னேன்.
பயிற்சியாசிரியையும் ஒப்புக்கொண்டார். அவரின் முக்கிய பாடமான அறிவியலுக்கும் அப்படியே செய்யப்போவதாகவும் கூறினார்.
நேற்று அறிவியல் தேர்வு.
ஒரு சிலரைத்தவிர யாருமே சரியாக எழுதவில்லை.
அனைத்து கேள்விகளுக்கும் ஒருவர்கூட பதிலளிக்கவில்லை.

மாணவர்கள் எழுதுவதை பெரும் சுமையாக எண்ணுகின்றனர்.
பார்த்து எழுதுவதை தவறாக நினைப்பதில்லை.
இன்று கேள்விகளுடன் பதில்களும் தரப்பட்டு அந்தத்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.
நாளை தமிழ்தேர்வு. விடைகளை அவர்களே தேடிப்படிக்கவேண்டும்.
என்று சொல்லியிருக்கிறேன்.
03.12.2014
9 ஆம் வகுப்பில் பயிற்சியாசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர்.ஆங்கிலப்பாடம்.
ஜன்னல் வழியாக கவனித்தேன்.
ஆங்கில இலக்கணம் நடத்திக்கொண்டிருந்தார்.
கையிலிருந்த பிரெய்லி குறிப்புகளை வாசித்தபடியே வாக்கிய வகைகளுக்கு எடுத்துக்காட்டுகள் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஒரு எளிய வாக்கியம் சொன்னதும் அதன் அர்த்தம் யாருக்குதெரியும்?என்று மாணவர்களிடம் கேட்டார்.
கூட்டத்தில் ஒருவன் பதில் சொன்னான்.
அவர், அவன் பெயரைச்சொல்லி,
சரியா சொன்னே, எழுந்திரிச்சு திரும்ப சொல்லு!
மாணவன் எழவில்லை.
அவர் மீண்டும் சொல்லச்சொன்னார்.
அவன் எழுந்து சொன்னான்,
மறந்திருச்சு!
இப்ப தானப்பா சொன்னே?
மறந்திருச்சு.
ம்.ம்.சரி. உட்காரு.
மாணவர்களில் பலர் மேசையில் கவிழ்ந்தபடியே பாடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.

அதே வகுப்பில் என் பாடவேளை.
சில குறள்களைக்கூறினேன்.
கல்வியில்லாதவரே கண்ணில்லாதவர், ஆங்கில வகுப்பில் கவனித்தேன்.
உங்களில் பலர் கண் இருந்தும் இல்லாதவர்.
ஒரு ஆசிரியர், கண் இல்லாவிட்டாலும் கல்வியால் அதைப்பெற்று உங்களுக்கும் கொடுக்க முயன்றுகொண்டிருக்கிறார்.
' தெரியாது' என்று விளையாட்டாய் பதில் சொன்ன மாணவனிடம்
எப்போதும் வகுப்பில் சொல்லும் வாசகங்களையே அழுத்தமாகச்சொன்னேன்.
"உனது செயல் எனக்கு வருத்தத்தைத்தந்தது,
இன்னமும் உன்னை மனிதனாக மதிக்கிறேன்."
30.11.2014
வெள்ளிக்கிழமை நள்ளிரவிலிருந்தே மழை.
காலையிலும் நசநச.
பையன்கள் இருவருமே பள்ளிக்கு செல்லவில்லை என்றனர்.
மூத்தவன் 12 ஆம் வகுப்பு.
பாடங்கள் நடத்துவார்களே! என்றேன்.
எல்லாம் முடித்துவிட்டார்கள். பரவாயில்லை என்றான்.
சின்னவன் 7 ஆம் வகுப்பு. மகிழ்ச்சி.
எனக்கு ஒரு யோசனை.
சரி,வீட்டில் இருங்கள். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் நான் பள்ளிக்கு கிளம்பிவிடுவேன். எனக்கு ஒரு உதவி செய்துதர முடியுமா?
ஒத்துக்கொண்டனர்.
ஒன்பதாம் வகுப்பில் உணவே மருந்து என்ற பாடம் நடத்த வேண்டும்.
அதற்கு முன்னால் புகையிலையின் கேடுகள் குறித்த Power point காட்டினால் பயனுள்ளதாக இருக்கும்.
மிக விரிவாக வேண்டாம்.
சிகரெட், பாக்குவகைகள், சைனி கைனி போன்றவை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், குறிப்பாக வாய்ப்புற்று நோய் குறித்த படங்கள் வேண்டும். என்றேன்.
இருவரும் சேர்ந்து உருவாக்கித்தந்தனர்.
ஆங்கிலத்தில் நோய் குறித்து இருந்த குறிப்புகளுக்கு தமிழில் விளக்கம், பெரியவன் சொல்லிக்கொடுத்தான்.

பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவர்களிடம் செய்தித்தொகுப்பை காட்டினேன்.
பயனுள்ளதாக இருந்திருக்கும்.
29.11.2014
வகுப்பறைக்குள் ஒரு மாணவன் கொல்லப்பட்டான்.
இதுவரை பள்ளிகளில் நடைபெற்ற அனைத்து வன்முறைகளும் மீண்டும் விவாதத்தில்.
வழக்கம் போல,
கல்வியாளர்கள், பத்திரிக்கைகளில் தொலைக்காட்சிகளில் விவாதிப்பார்கள். ஆசிரியர்கள்...மாணவர்கள்...பெற்றோர்கள்...சினிமா என்று பல்வேறு தரப்பையும் குறைகூறி.....
நீதி போதனை வகுப்புகள் இல்லை என்பது முக்கிய பொருளாக இருக்கும்.
துறைசார்ந்து பல மட்டங்களில் கூட்டங்கள் நடைபெறும்.

நீதிபோதனை வகுப்புகள் தேவைதான்.
ஒரு பாடவேளை மட்டும் நீதிக்கதைகள் சொல்வதால் பயன் கிடைத்துவிடுமா?
பள்ளி,வீடு,சமூகம் என சுற்றுப்புறம் அத்தனையும் ஒரு குழந்தைக்குப்பாடங்களாக அமைய வேண்டாமா?
பள்ளியில் எல்லா பாடவேளைகளும் வெறும் பாடம் நடத்துவதாக மட்டுமே இல்லாமல் ஆசிரியர் மாணவர் உரையாடல்கள் நடைபெறும் களமாக மாறவேண்டும்.
வீடுகளுக்கிடையே சுவர்களை இடிக்கவேண்டும் என்று பாரதிதாசன் சொன்னதுபோல,
வகுப்பறைச்சுவர்களை இடித்து ஆசிரியர்களும் மாணவர்களும் சுதந்திரமாய் வெளிப்படும்போது மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கலாம்.
28.11.2014
நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் சில மாணவர்கள் பரபரப்பாக பள்ளிக்குத்திரும்பி வந்தார்கள்.
சில ஆசிரியர்கள் என்னவென்று விசாரித்தோம்.
தெரு முனையில் மூன்றுபேர் +2 மாணவர் ஒருவரைப்பற்றி விசாரித்தனர். ஏதோ பிரச்சினை. அவனை அடிப்பதற்காக காத்திருக்கின்றனர். என்றனர்.
மேல்நிலை மாணவர்களிடம் விசாரித்தோம்.
காலையிலேயே சிலமாணவர்களிடையே சண்டை என்று முதுகலையாசிரியர்கள் சொன்னார்கள்.
இரண்டு மாணவர்களுக்கிடையே சில நாட்களாகவே சண்டை.
நண்பர்களும் குழுவாக சேர்ந்துகொண்டனர்.
காலையில் ஒருவனை மற்றவர்கள் அடித்துவிட்டனர்.
அவன் எப்படியோ தனது ஊரில் உள்ள நண்பர்களுக்கு தகவல் சொல்லிவிட்டான்.
அவர்களே காத்திருந்தவர்கள்.
சண்டையிட்டுக்கொண்ட இருவரும் பள்ளிக்குள்ளேயே சிறப்பு வகுப்பில் இருந்தனர்.
முதுகலை ஆசிரியர்கள் இருவரையும் விசாரித்தனர்.
அடிபட்டதால் ஊரிலிருந்து ஆட்களை வரவைத்த மாணவன், ஆசிரியர்கள் பேசியபின் வருத்தப்பட்டான். அப்பாவிடம் சொல்லிவிடாதீர்கள், என் படிப்பை நிறுத்திவிடுவார். என்றான்.

அடித்த மாணவனோ தான் செய்தது சரி என்றே சொன்னான்.
அவன் என்னைப்பார்த்து முறைத்தான்.என்று ஏதேதோ காரணங்கள் சொன்னான். பேச்சில் ஓர் அலட்சியம்.
ஆசிரியர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள்.
அடி வெளுக்கணுங்க!
ஏதாவது காதல் விவகாரமா இருக்கும்!
ட்ரெய்னிங் டீச்சருங்க முன்னாடி ஹீரோ ஆகணும்னு இப்படி!
இதுக்குதான் சொல்றேன், ட்ரெய்னிங்க்கு பொண்ணுகளை அனுமதிக்க வேண்டாம்ன்னு!
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பெண்களே வேண்டாம் என்றவரிடம் கேட்டேன்,
நம் பள்ளியில் ஆசிரியைகளே இல்லையா?
பதிலேதும் சொல்லவில்லை.
மாணவர்கள் விடலைப்பருவத்தில் முன் மாதிரிகள், வழிகாட்டிகள் இல்லாமல் இருக்கிறார்கள்.
பெரும்பாலும் திரைக்கதாநாயகர்களே முன்மாதிரிகள்.
இன்றைய படங்கள் வன்முறையையே காட்டுகின்றன.
பள்ளிகளில் மதிப்பெண்கள், கோர்ஸ்,வேலை, சம்பளம் என்பன பற்றியே அதிகம் பேசுகிறோம்.
மனிதம் பேசவும் வாழ்ந்துகாட்டவும் மாதிரிகள் தேவை.
இல்லையெனில் எதிர்வரும் தலைமுறை மனிதத்தன்மையே இல்லாததாக இருக்கும்.

Wednesday, 4 March 2015

28.11.2014
ஒன்பதாம் வகுப்பில் அந்த மாணவனைப்பார்த்தேன்.
ஏன் நீ ஆடல?
கட்டு அவுந்துருச்சு.
நல்லா கட்டிருக்கலாம்ல.
ஆட ஆரம்பிக்கும்போது....
ஆட்டக்காரனுக்கு அதுகூடத்தெரியல.!
ஒருவாரம் ஹிந்திப்பாட்டு கூட்டத்தோட ஆடுறேன் என்று வகுப்பை கட்டடிச்சாச்சு.
வேணாம்னு சொன்னப்போ பாவம்னு நான் ஆடச்சொன்னேன்.
வாடகை யார் தந்தாங்கன்னு விசாரணை வேறு.
உன்னை ஆரம்பத்திலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொருமுறையும் திருந்திவிடுவாய் என்று பல வாய்ப்புகள் தந்தாகிவிட்டது.
திருந்தவே இல்லை.
ஒரு ஆளுக்கு 50 ரூபாய் வாடகை பேசி கட்டைக்கால் எடுத்திருக்கிறேன்.
பள்ளியில் கொடுத்தது கொஞ்சம்.
உன் அலட்சியப்போக்கால் நீ எத்தனை வாய்ப்புகளை தவறவிட்டிருக்கிறாய் தெரியுமா?
வாசிக்கவும் எழுதவும் தந்த அனைத்து விதமான பயிற்சிகளையும் பட்டியலிட்டேன்.
உன் தந்தையும் அவ்வப்போது இதுவேற,
"சார்,என் பையன் சொல்லிட்டான் அடுத்த வருஷம் வேற ஸ்கூல்ல சேர்த்து விட்டா நல்லா படிச்சிருவானாம்."
எப்படி இதெல்லாம்.
தம்பி, எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருக்கோம்னா ஒரே காரணம்தான்.
வகுப்புல சொல்ற செய்திகள் ஒருநாளாவது அறிவுக்கு எட்டி சிந்திக்க ஆரம்பிப்ப என்கிற நம்பிக்கை.
பார்ப்போம்.
ஆனா,ஆண்டுவிழாவில் நீ ஆடாமல் போனது எனக்கு மிகப்பெரிய அவமானம்.
வழக்கம்போல் அமைதியாக இருந்தான்.
பார்க்கலாம்.
இளம் வயதில் நாட்டிற்காக தூக்குக்கயிற்றில் உயிர்த்தியாகம் செய்த மாவீரனின் பெயரை வைத்திருக்கிறான் என்பதற்காகவே சேட்டைகளை எல்லாம் பொறுத்துக்கொள்கிறேன் என்பது அவனுக்கும் தெரியும்.
28.11.2014
ஆண்டுவிழா...
ஆண்டுவிழா ஒத்திகையில் ஹிந்திப்பாடல் குழுவிலேயே இறுதியில் இரண்டு நிமிடங்கள் கட்டைக்கால் ஆட்டமும் இருந்தது.
கிராமிய நடனங்களை மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதில் நான் மட்டுமே ஆர்வம்காட்டிவருகிறேன். கடந்தஆண்டு கலை பண்பாட்டுத்துறை மூலம் பயிற்சி ஏற்பாடு செய்திருந்தேன்.அதில் கட்டைக்கால் நடனம் சிலகாலம் பயின்றனர் நான்கு மாணவர்கள்.
காலில் கட்டை கட்டி நடக்க மட்டுமே பழகியிருந்தனர்.
தொடக்கத்திலேயே என்னிடம் வந்து கேட்டனர்,
சார், கட்டைக்கால் ஆடணும்,கட்டைகள் வேணும்.
என்ன பாட்டு? ஆடத்தெரியுமா?
மிஸ் கூப்பிட்டாங்க. மியுசிக் போட்டுஆடப்போறோம்.
சரி வாங்கித்தர்றேன்.
கலைநிகழ்ச்சிகளின் முழுப்பொறுப்பாசிரியரிடம் சென்றேன்.
சார், அந்த அம்மையார் கட்டைக்கால் ஆட்டத்தையும் சேர்த்திருக்காங்களாம்.
கட்டைக்கால் வேணும்னா வாடகைக்குத்தான் எடுக்கணும்.
சரி,கொண்டுவரச்சொல்லுங்க.
நானும் சொன்னேன்.
மறுநாள் இரண்டு ஜோடி கட்டைகள் வந்தன.
மாணவர்களிடம் கொடுத்தோம்.
மீதி இரண்டு ஆண்டு விழாவிற்கு முதல்நாள் வரும் என்றோம்.
ஆறாம் வகுப்பில் திருவிழா என்றொரு பாடம்.
மாணவர்களுக்கு ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கிராமிய நடனங்களில் சில கூறுகளை கற்றுக்கொடுத்தேன்.
ஒரு மாணவனுக்கு சுலபமாக கரகச்செம்பு தலையில் நின்றது.
கட்டைக்கால் ஆடும் மாணவனை அழைத்து,
இவனுக்கு கரகம் நன்றாக வருகிறது, இவனையும் உங்களோடு சேர்த்துக்கொள்ளுங்கள். என்றேன்.
இரு நாட்கள் கழித்துக்கேட்டேன்.
கரகம் எப்படி ஆடுகிறான்?
அவன் சரியா ஆடலைன்னு மிஸ் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.
ஒத்திகை.
ஹிந்திப்பாடல்.
இருவர் முன்னாள் ஆட, பத்துபேர் பின்னால்.
தொடர்ந்து ஒரு தமிழ்பாடல்.
இருவர் மட்டுமே ஆட, பின்னால் மற்றவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
அடுத்து செண்டை மேள இசை.
கட்டைகள் கட்டி நான்கு மாணவர்களும் அங்கும் இங்கும் நடந்தனர்.
மற்றவர்கள் சுற்றி நின்று கைகளைத்தட்டிக்கொண்டே இருந்தனர்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
மறுநாள் கட்டைக்காலுக்கு வாடகை பேச கிராமியக்கலைஞர் வந்திருந்தார்.
நானும் மாணவர்களை அழைத்து உங்கள் ஆசிரியையிடம் கூட்டிச்செல்லுங்கள்.அவர்களே பேசட்டும். என்று அனுப்பிவைத்தேன்.
சில நிமிடங்களில் அனைவரும் திரும்பி வந்தனர்.
மாணவர்களின் கண்கள் கலங்கியிருந்தன.
மூத்த கிராமியக்கலைஞர் மோகன் சொன்னார்,
அந்த அம்மாவுக்கு வாடகை பற்றி எதுவும் தெரியாதாம்.
சும்மான்னு நெனைச்சாங்கலாம்!
வாடகைன்னா, வேண்டாம்னு சொல்லிட்டாங்க.
பசங்களுக்கும் செம திட்டு.
மாணவர்களைப்பார்த்தேன்.
ஏண்டா, நீங்க சொல்லலியா?
கண்களில் நீர்.
என்ன செய்வது?
சரி.மோகன், வாடகையை அப்புறம் வாங்கிக்கங்க.
டேய்,நீங்க கட்டையை கால்ல கட்டுங்க.
ஒருசில ஸ்டெப் சொல்லித்தர்றேன்.
அழகர் ஆட்டத்துல நீங்களும் ஆடுறீங்க.
அழகர் வரும்போது காலில் கட்டை கட்டி உயரமாக ஒய்யாரமாக ஆடியபடி அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும் அனைவரையும் மகிழ்வித்தார்கள்.
நான்கு மாணவர்களில் மூன்றுபேர் மட்டுமே ஆடினார்கள். ஒருவனைக்காணவில்லை.

27.11.2014
முந்தாநாள் காலை தலைமையாசிரியர் என்னையும் நண்பர்களையும் அழைத்தார்.
இன்று மாலை ஆண்டுவிழா நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக நடத்தித்தர வேண்டும். கலை நிகழ்ச்சிகள் உங்களின் கைகளில்தான் உள்ளது. மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதீர்கள்.
சிவா, மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதே, பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
சார், எல்லாம் சிறப்பாக நடக்கும்.
பரதம் அந்தப்பையன் நன்றாக ஆடுகிறான்.முதல் நிகழ்ச்சியாக அவனே ஆடுவான். ஓரிரு ஆசிரியர்கள் பக்கவாத்தியங்கள் வாசிப்பதுபோல நடிப்பார்கள். எனவே, பார்க்க நன்றாக இருக்கும். என்றார்கள்,நண்பர்கள்.
நான் சொன்னேன்,
சார், முந்தைய வருடங்களில் அவர்கள் சொல்லித்தந்து பரதம் ஆடிய யாரும் ஆடியது பரதமே இல்லை. எப்போதுமே மாணவர்கள் அவர்களாகவே ஆடுவார்கள்.இவர்கள் சும்மா பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
முதல் நிகழ்ச்சியாக வேண்டாமே!
சார், முதலில் பரதம் தான். நல்லா இருக்கும்.
அனைவரும் வெளியே வந்தோம்.
எனக்கு கடுமையான கோபம்.
என்னசெய்யலாம் என்று யோசித்தேன்.
கிராமிய நடனத்தில் நான் ஆடுவதை நிறுத்திக்கொள்ளலாம் என முடிவு செய்தேன்.
யாரிடமும் சொல்லவில்லை.
சித்திரைத்திருவிழாவில் ஆற்றில் இறங்கும் அழகர்போலவே குதிரையில் அழகரை உருவாக்கிக்கொண்டிருந்தனர் எங்கள் முன்னாள் மாணவர்கள் சையது மற்றும் சேகர்.
ஒப்பனை முடிந்ததும் அப்படியே பெண்போலவே இருந்தான் பரதம் ஆடும் மாணவன்.
ஆசிரியர்களும் பக்கவாத்தியக்காரர்கள் போல அபிநயிக்க பரதம் அற்புதமாக அரங்கேறியது.
அழகர் ஆட்டக்காரர்கள் ஒப்பனை முடிந்ததும் அனைவரிடமும் பேசினேன்.
நண்பர்களே,இது நம் பள்ளியில் உங்களுக்கு இறுதி ஆண்டுவிழா. முழு வேகத்துடன் ஆடுங்கள்.உங்கள் பயிற்சி சிறப்பாக இருந்தது. நன்றாக ரசித்து மகிழ்ந்து ஆடுங்கள்.என்றேன்.
சார்,இன்னும் நீங்க டிரஸ் மாட்டல.
நான் ஆடல.
அனைவரும் உடைகளை களையத்தொடங்கினர்.
பதறித்தடுத்தேன்.
நண்பர்களே, நான் ஆடவில்லை என்பதற்கு காரணம் இருக்கிறது. இதைவைத்துதான் நான் கலை நிகழ்சிகள் தொடர்பாக வருங்காலத்தில் கேள்வி கேட்க முடியும்.நீங்கள் ஆடாவிட்டால் அது என்மீது குற்றமாக மாறிவிடும். நீங்கள் சிறப்பாக ஆடினால் நான் தைரியமாகப்பேசமுடியும்.
மாணவர்கள் ஒத்துக்கொண்டனர்.
அழகர் ஆட்டம் என்பதால் ஆறு மாணவர்களுமே ஆடத்தொடங்கிய நாளிலிருந்தே விரதமிருந்துவருகின்றனர். அன்றையநாளில் காலையில் இருந்தே எதுவுமே சாப்பிடவில்லை.
நிகழ்ச்சிக்கு முன் ஏதேனும் சாப்பிடச்சொல்லியும் மறுத்துவிட்டனர்.
இறுதி நிகழ்ச்சியாக அழகர் ஆட்டம் தொடங்கியது.
ஒருசில ஒளிப்படங்கள் மட்டுமே என்னால் எடுக்க முடிந்தது.
ஆட்டத்தின் வேகத்தில் மெய்மறந்து விழிகளில் நீர்த்திரையுடன் நின்றிருந்தேன்.
அழகர் மேடையில் தோன்றியபின் அனைவரும் எழுந்து ஆர்ப்பரிக்க நானும் வைகைக்குள் நின்றுகொண்டிருந்தேன்.

25.11.2014
பள்ளியில் விளையாட்டுவிழா மற்றும் ஆண்டு விழா.
வேலைகள் அதிகம்.
வழக்கம்போல கலைக்குழுவிலும் பணி.
ஆடுகிறோம், என்று மாணவர்கள் திரைப்படப்பாடல்களோடு கலைக்குழு பொறுப்பாசிரியர்களை தேடி வருவார்கள். ஆசிரியர்களும் ஆசிரியைகளும் தங்கள் குழுக்களை தயார் செய்வார்கள்.
எங்களுக்குள்ளும் குழுக்கள் உண்டு.
நான் நாட்டுபுற நடனம் ஏதேனும் தயார் செய்வேன்.
இந்த ஆண்டு அழகர் ஆட்டம்.
விழாவுக்கு ஒருசில நாட்களுக்கு முன் முழுமையான ஒத்திகை நடைபெறும்.
இரு தினங்களுக்கு முன்,சனிக்கிழமை ஒத்திகை.
12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பரதம் ஆடினான்.
" மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன......."
எப்போதோ சிறுவயதில் கற்றிருக்கிறான்.ஓரளவு படத்தைப்பார்த்து ஆடுகிறான். தாளம் சரியாக இல்லை.
ஆடி முடிந்ததும் ஒரு ஆசிரியை,
இவன் ஆடுனது பரதமே இல்ல, கூத்தாடுறான். கண்டபடி குதிக்கிறான்.
தாளமே இல்ல. நம்ம ஸ்கூல் தலைவருக்கு நல்லா பரதம் தெரியும்.இப்படி தப்பா ஆடுனா கோபிப்பாரு.
தலைமையாசிரியரும் ஒத்துக்கொண்டார்.
இதை யார் ஏற்பாடு செய்தார்கள்?
அனைவரும் இல்லையென ஒதுங்கிக்கொண்டனர்.
அந்த மாணவனை ஆடச்சொல்லி ஊக்கப்படுத்திய முதுகலையாசிரியர் அப்போது வரவில்லை.
நான் நடப்வற்றை கவனித்துக்கொண்டிருந்தேன்.
ஒரு மாணவன் ஆர்வமுடன் தானாகவே கற்றுக்கொண்டு வந்து ஆடியது பொறுக்கவில்லையே என்று கோபம் வந்தது. சண்டை போடாமல் காத்திருந்தேன்.
அவனை குறைசொல்லிய ஆசிரியைதான் முந்தைய ஆண்டுகளில் பரதம் ஏற்பாடு செய்பவர்.ஓரளவு தெரியும்.
ஆனால்,இதுவரை அவர் சொல்லிக்கொடுத்த மாணவர்களும் முழுமையாக பரதம் ஆடியதில்லை.
பொறுமையாக இருந்தேன்.
அந்த ஆசிரியையும் அவரின் தோழியும் இணைந்தே கலை நிகழ்சிகள் தருவார்கள்.
அவர் தோழி ஒரு குழுவை உருவாக்கியிருந்தார்.
9 ஆம் வகுப்பு மாணவர்கள்,
இன்றைய தொலைக்காட்சி நடனம் போல கடுமையான அசைவுகளுடன் சிறு சிறு திரைப்படப்பாடல்களுக்கு நடனமாடினர். அதில் இந்திப்பாடல்களும் இருந்தன.
மாலை வீட்டிற்கு வந்தபின் ஹிந்திப்பாடலின் அர்த்தம் பார்த்தேன்.
எண்ணியது சரி. மோசமான வார்த்தைகள்.

ஆண்டு விழாக்களில் கலை நிகழ்சிகளில் ஒரு தரம் வேண்டாமா?
பாடல்களில், நடன அசைவுகளில் கவனம் வைக்கவேண்டும்.
திரைப்படப்பாடல்களை பயன்படுத்தலாம்.அர்த்தம் கவனிக்கப்படவேண்டும்.
நம் பகுதியில் உள்ள கிராமியக்கலைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
வெறும் கேலிக்கூத்தா, ஆண்டுவிழா?
மறுநாளும் பள்ளியில் ஒத்திகை.
கலைக்குழு பொறுப்பாசிரியரிடம் சென்றேன்.
பள்ளியில் கலைநிகழ்ச்சி என்றால் அதில் ஒரு பொறுப்பும் அர்த்தமும் இருக்கவேண்டும். இந்திப்பாடல் நல்ல வார்த்தைகள் உள்ளதாக இல்லை. தடை செய்யுங்கள்.
இந்திதானே, என்றார்.
பள்ளி நிர்வாகக்குழு தலைவருக்கு ஹிந்தி நன்றாகத்தெரியும்.இதுபோன்ற பாடல்கள் அவருக்கும் பிடிக்காது என்றேன்.
தலைமையாசிரியரிடமும் சொன்னேன்.
கலைக்குழு பொறுப்பாசிரியர் கேட்டார்,
உனக்கு என்னதான் வேண்டும்?
இரண்டே கோரிக்கைகள்.
ஒன்று,
இதுவரை நன்கு பரதம் தெரிந்து யாரும் ஆடவில்லை.
மாணவனின் ஆர்வத்தை தடை செய்யக்கூடாது.
பரதம் முதல் நிகழ்ச்சியாக இடம்பெறவேண்டும்.
இரண்டு,
அந்த இந்திப்பாடல் கூடவே கூடாது.
பரதம் இருக்கும். இந்தியை எடுக்க முடியாது, H.M இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்.
எனக்கு கோபமாக வந்தது.
எனது மாணவர்களை ஆடவிடாமல் நிறுத்திவிடுவேன் என்று சொல்லிப்பார்த்தேன்.
தோற்றுப்போனேன்.
அழகர் ஆட்டமாடும் மாணவர்கள் இந்த ஆண்டோடு 12 ஆம் வகுப்பு முடித்துச்செல்கிறார்கள். எனவே, ஆடவிடாமல் செய்ய
மனம் ஒப்பவில்லை.
Like ·
·
21.11.2014
அஞ்சு பைசா என்பது அவன் பட்டப்பெயர்.
பட்டப்பெயர்கள் இப்போது அரிதாகிவிட்டன.
குறைபாடுகளை சொல்லிக்கேலி செய்யும் போக்குகள் தென்படுகின்றன.
இதுபோல் ஆச்சரியமான பெயர்கள் அபூர்வம்.
9 ஆம் வகுப்பில் படிக்கிறான் அஞ்சுபைசா.
தமிழ் எழுத்துக்களே தெரியாது.
பள்ளி தொடங்கியதிலிருந்து என்னென்னவோ செய்துபார்த்துவிட்டேன்.
பகத்சிங் சொல்லித்தருவான் என்று நம்பினேன்.அவனும் விட்டுவிட்டான்.ஓரளவு முன்னேற்றம் என்றாலும் வாசிக்க இயலவில்லை.
பார்த்து எழுதுவான்.
கையெழுத்துப்பயிற்சி நல்லது என்று சொன்னபோது எல்லோரையும்போல அவனும் நாளுக்கு ஒருபக்கம் என்று புத்தகத்தில் இருக்கும் மனப்பாடப்பாடல்களை எழுதத்தொடங்கினான். ஓரிரு நாட்களில் நாளுக்கு பத்து இருபது என்று புத்தகத்தின் முன்னட்டை முதல் பின்னட்டை வரை எழுதுவான். பக்கத்திற்கு ஒரு தேதி என்று எதிர்காலத்தில் எழுதிக்கொண்டிருந்தான்.
ஒருபக்கம் எழுது,நிறுத்தி எழுது என்று சொன்னாலும் கேட்பதில்லை.
சொந்தமாக எழுதத்தெரியாது.
சிரித்த முகத்துடன் இருப்பான்.
தமிழ் வகுப்பு தொடங்குவதற்கு முன்பே எனது அறைக்கு அழைக்க வந்துவிடுவான்.
வகுப்பில் நான் ஏதேனும் சொல்லிக்கொண்டிருந்தால் சிறிது கவனிப்பான். பிறகு,விளையாடத்தொடங்கிவிடுவான்.
வேறு யாரேனும் பேசினால் எழுந்துசென்று அடிப்பான்.
அடி வாங்குவான்.
அவனது சேட்டைகள் சிலசமயங்களில் எல்லை மீறும்போது முன்னால் அழைத்து உட்காரச்சொல்வேன்.
என்னசொன்னாலும் வாசிப்பில் ஆர்வம் காட்டவே இல்லை.
பயிற்சி ஆசிரியை சொன்னால் கேட்பான் என்று எண்ணினேன்,சிறிது முயன்றான். எனினும் சேட்டைகள் தொடர்ந்தன.
நேற்று அவன் சேட்டை எல்லை மீறியது. என்ன சொல்லியும் கேட்கவில்லை. முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டேன்.
இனி நீ திருந்த மாட்டாய்,உனக்கு எவ்வளவோ செல்லம் கொடுத்துவிட்டேன்.நீ படிப்பதில்,வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.வா, உனக்கு T.C வாங்கித்தந்துவிடுகிறேன். என்றேன்.
கொஞ்சம் கொஞ்சமாக அவன் முகமும் இருண்டது.
எனக்குப்பாவமாக தோன்றியது.இருந்தாலும் முகத்தை கடுமையாகவே வைத்துக்கொண்டேன்.
அவன் அழுவதுபோல் ஆகிவிட்டான்.
பக்கத்தில் இருந்தவனிடம்,
இவனை என் அறைக்குமுன்பாக உட்கார வை. வீட்டுக்கு ஒரேடியாக அனுப்பிவிடுகிறேன்.திருந்தவே மாட்டான்.
என்றுசொல்லியனுப்பிவிட்டேன்.
அனைவரும் அதிர்ந்துவிட்டனர்.

வகுப்பு முடிந்த பின் அறைப்பக்கம் செல்லவே இல்லை.
சில பாடவேளைகள் கழிந்தபின் மைதானத்தில் வந்துகொண்டிருந்தபோது,
அஞ்சு பைசா எதிரே வந்தான்.
என்ன?
சாரி,சார்.
கண்களில் நீர்.
தப்புதானே!.
ம்.
வாசிக்கத்தெரியாம இருக்கறது எனக்கு அசிங்கமில்லையா?
ம்.
என் அறையிலேயே இரு. வாசிச்து பழகிட்டு வகுப்புக்கு போகலாம்.
சிரித்தான்.சிரித்தேன்.
20.11.2014
நேற்று,
ஆறாம் வகுப்பில் படைப்பாற்றல் திறன்.
குறிப்புகளை எவ்வாறு விரித்து எழுதுவது?என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.
ஒரு மாணவன் எழுந்தான்.
சார், முஸ்லீம், இந்துவுக்கு அண்ணனா?
எனக்கு விளங்கவில்லை. என்ன கேள்வி இது?
நீங்க தானே சொன்னீங்க, முஸ்லீம் இந்துவுக்கு அண்ணன் அப்படின்னு!
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இது என்ன?இப்படி ஒரு செய்தி நான் சொல்லியிருக்க மாட்டேனே!என்றேன்.
சிலர்,இல்லை, சொல்லவில்லை.என்றனர்.

நான் சுதாரித்துக்கொண்டேன்.
சுதந்திரம் பெற்ற நாளை வைத்துப்பார்த்தால்,
சுதந்திர பாகிஸ்தான் அண்ணன்,
சுதந்திர இந்தியா தம்பி என்று முந்தைய வகுப்பில் கலந்துரையாடியிருந்தோம். அதைத்தான் அவன்,
மதம் சார்ந்து புரிந்துகொண்டிருக்கிறான்.
வகுப்பறையில் உரையாடும் செய்திகளை எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்வதில்லை. வேறு வேறு மட்டங்களில் புரிந்துகொள்கின்றனர்.
கவனிக்கின்றனர். விட்டுவிடுகின்றனர். தவறாகவும் புரிந்துகொள்கின்றனர்.
அவரவர் புரிதலின் படி நமது செய்தி வீட்டிலும் நண்பர்களிடையேயும்
பகிர்ந்துகொள்ளப்படும்.
சாதி,மதம் போன்ற சிக்கலான செய்திகளை வகுப்பில் விவாதிக்கும்போது மிகுந்த கவனமுடன் நடுநிலையுடன் இருக்கவேண்டியது அவசியம்.
கவமுடனும் தெளிவுடனும் இருந்தும் தவறான புரிதல்கள் இருப்பதை எண்ணி வியந்தேன்.கேட்டதை எண்ணி மகிழ்ந்தேன்.
தம்பி,
நாடுகளை இந்து,முஸ்லீம் என்று மதத்தின் பெயரால் அழைக்கக்கூடாது.
சில நாடுகள் மதம் சார்ந்தவை.
நம் நாடு மதம் சார்ந்தது அல்ல.
இந்தியா, மதச்சார்பற்ற நாடு.
பல்வேறு இன,மொழி,மத மக்கள் வாழும் நாடு.
இன்று ஒரு வரி புதுசா படிப்போம்,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி நம்ம ஊர்ல இருந்த ஒரு புலவர் பாடின பாட்டு,
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"
கரும்பலகையின் மேற்பகுதியில் எழுதிவந்தேன்.
18.11.2014
செந்தில் திருமணம்-2
சென்னையில் செந்திலின் திருமண வரவேற்பு.
நான் குடும்பத்துடன் அவசியம் வரவேண்டும் என்பது அன்புக்கட்டளை.
அனைவரும் செல்ல இயலவில்லை.நான் மட்டும்.
கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் எங்கள் பள்ளி மாணவன் கருணாகரன் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது செந்தில் அங்கே படிக்கச்சென்றான். கல்லூரியில் கற்றதைவிட மூத்தவர்களான கருணாகரன் மற்றும் அவரின் அறைத்தோழர்களிடம் கற்றதே அதிகம்.
அனைவருமே இப்போது சிறந்த ஓவியர்களாக உள்ளனர். அவர்களுள்,தமிழகம் அறிந்த இளையராஜாவும் ஒருவர். விகடனில் இவரது தத்ரூபமான ஓவியங்களை ரசிக்காதோர் இல்லை.
அனைவரும் திருமண வரவேற்பிற்கு வந்திருந்தனர்.
எங்கள் பள்ளியிலிருந்து சென்னை ஓவியக்கல்லூரியில் பயின்ற, படித்துக்கொண்டிருக்கிற அனைவரும் வந்திருந்தனர்.

அன்றைய இரவில் இளையராஜாவுக்கு ஓவியர் ரவிவர்மா பற்றிய திரைப்படத்தின் கதையைச்சொன்னேன்.
மறுநாள் அவர் வீடு சென்று ஓவியங்களை பார்த்ததும் உரையாடியதும் இனிய அனுபவம்.
அங்கிருந்து செந்தில் வீட்டிற்கு என்னை அழைத்துச்செல்ல நாசர் வந்திருந்தான். எங்கள் பள்ளியில் பயின்ற மாணவன். இப்போது சென்னை ஓவியக்கல்லூரியில் MFA படித்துக்கொண்டிருக்கிறான்.
மதிய உணவு செந்திலின் வீட்டில்.
அவனே வடிவமைத்த பொருள்களை காட்டினான்.
பள்ளி நினைவுகள் குறித்து மனைவியிடம் பகிர்ந்துகொண்டான்.
அவனே கேள்வி கேட்டு பதிலும்சொல்லிக்கொண்டான்.
சார்,எனக்கு எவ்வளவு நெருக்கம் தெரியுமா?
சார் இல்ல, Friend.
சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே செந்திலின் மனைவி அவன் காதில் ஏதோ கிசுகிசுக்க, சார்!......என்றான்.
என்ன?
உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கணுமாம்.
திருமணத்தன்றே காலில் விழ வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.
காரணம்,எனக்கு கூச்சமாக இருந்தது.
முக்கிய காரணம் அவ்வப்போது நெகிழ்ந்துகொண்டிருந்த நிலையில் கண்டிப்பாக அழுதேவிடுவேன்.
அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு.
இப்போது என்ன செய்வது, சரி என்றேன்.
சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தபின் கிளம்பினேன்.
அவர்கள் விடுவதாக இல்லை.
கையில் குங்குமத்தை கொடுத்துவிட்டு இருவரும் ஆசிபெற, வார்த்தைகள் எல்லாம் என்னைவிட்டுச்சென்றுவிட்டன.
அமைதியாய் அப்படியே நின்றுகொண்டிருந்தேன்.
கண்ணீர் தளும்பி இருந்தது.
சிறிதுநேரத்தில் நினைவுக்கு வந்த வார்த்தைகள் சொல்லின,
ஒரு மகளும் கிடைத்துவிட்டாள்.
தொடர்வண்டியில் தூங்கும் வரை என்னை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டேன்.
படுத்தவுடன் செந்திலை நினைத்தேன்.
அளவற்ற ஆனந்தத்தை தடைசெய்யவில்லை.
இமையணைகள் திறந்தன.
எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை.
அப்படியே தூங்கிப்போனேன்.

18.11.2014
பசும்பொன் முத்துராமலிங்கர் பற்றிய செய்திகள் 6 ஆம் வகுப்பில் இன்றும்.
பிறந்த தேதி அடிப்படையில் அண்ணன், தம்பி யார் என்பதை முடிவுசெய்துகொண்டோம்.
ஆலய நுழைவு போராட்டம், குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஆகிய இரண்டையும் கதையாகச்சொன்னேன்.
மதுரை மீனாட்சி ஆலயத்திற்குள் எல்லோரும் போகமுடியாத காலம் இருந்தது என்பதே மாணவர்களுக்கு ஆச்சரியமான செய்தியாக இருந்தது.
வைத்தியநாதர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கோவிலுக்குள் நுழைய தடைசெய்யப்பட்டிருந்த இனத்தவர்களை உடன் அழைத்துக்கொண்டு சென்றதை எடுத்துக்கூறினேன்.
பசும்பொன் முத்துராமலிங்கரின் உதவி இதற்கு முக்கிய பங்காகும்.
வைத்தியநாதரின் வீடு நம் பள்ளிக்கு சற்று தொலைவில் உள்ளது.தற்போது அங்கு ஒரு உணவுவிடுதி இயங்கிவருகிறது.
என்றும் கூறினேன்.
குற்றப்பரம்பரைச்சட்டம் மூலம் இந்தியா முழுதும் பல்வேறு இனத்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
முத்துராமலிங்கர் இதை எதிர்த்து தொடர்ந்து போராடிவென்றார்.

ஒரு மாணவன் கேட்டான்,
நீங்க சொன்னதெல்லாம் கதையா? நிஜமா?
இப்போ கேட்ட கதையெல்லாம் முன்னாடி நடந்த உண்மை.என்றேன்.
சிறு இடைவேளை மணியடித்தது.
மாணவர்களில் சிலர் வெளியே இருந்த கூடத்தில் வட்டமாக நின்று,
சாட்...பூட்...திரி.....
என்ன விளையாட்டு?
இரும்பு தொட்டு.
அப்படின்னா?
அவுட் ஆனவன் சொல்லும் இரும்புக்கம்பியை எல்லோரும் போயி பிடிச்சுக்கணும்.அதுக்கு முன்னாடி அவன் தொட்டுட்டா நாம அவுட்டு. தொட விரட்டும்போது வேற கம்பிய பிடிச்சுக்கிட்டா அவுட் இல்ல. ஆனா,அவன் சொன்ன கம்பிக்கு எப்படியும் வந்துரணும்.
நிறைய கம்பிகளால் ஆன கூடம் அது.( தோற்பாவைக்கூத்து நடைபெற்ற இடம்).
சார்,விளையாட வர்றீங்களா?
பத்து நிமிடங்கள் போனதே தெரியாமல் விளையாட்டு.
இருமுறைகள் அவுட் ஆனேன்.
17.11.2014
ஆறாம் வகுப்பில் 'தேசியம் காத்த செம்மல்' பாடம்.
பசும்பொன் முத்துராமலிங்கர் குறித்த பாடம்.
வழக்கம்போல மாணவர்களிடையே கதைபோல சொல்லத்தொடங்கினேன்.
பசும்பொன் முத்துராமலிங்கர் குறித்த சுவையான செய்திகளை சொல்லப்போகிறேன். என்று தொடங்கினேன்.
முத்துராமலிங்கத்தேவர்- என்றான் ஒரு மாணவன்.
உண்மைதான், புத்தகத்திற்குள் சாதி இல்லை.
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்த பெரும்பாலான தலைவர்களிடையே சாதி இல்லை. ஒன்றாகச்சேர்ந்து நாட்டு விடுதலைக்காக பாடுபட்டனர். இப்போதுதான் நாம் அவர்களை அவரவர் சாதிக்கு தலைவர்கள் என்று ஆக்கிவிட்டோம். என்றேன்.

சிறுவர்களுக்கு புரியும்படியாக சுதந்திரப்போராட்ட வரலாற்றின் இரு பிரிவுகளை சிறிது விவாதிக்கலாம்,என கரும்பலகையில்
மிதவாதி
தீவிரவாதி
என்று எழுதினேன்.
தீவிரவாதி என்றால் என்ன அர்த்தம்?- கேட்டேன்.
கொள்ளைக்காரன்.
குண்டு வைப்பவன்
கடத்தல்காரன்....இப்படி ஆளுக்கொன்றாக கத்தினர்,
எழுதிக்கொண்டே வந்தேன்.
இறுதியாக ஒருவன் சொன்னான்,
பாகிஸ்தான்காரன்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
தம்பிகளே,
எல்லா நாட்டிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பார்கள். பொத்தாம்பொதுவாக ஒரு நாட்டில் உள்ள அனைவரையும் குறைசொல்லக்கூடாது.
இவ்வளவு அர்த்தம் சொன்னீர்களே,இந்த வார்த்தைக்கு நம் நாட்டு சுதந்திரத்திற்கு முன் மரியாதையான அர்த்தம் இருந்தது.
ஒரு மாணவன் திடீரென,
தீவிரமாக செயல்படுபவர்கள்......என்று கத்தினான்.
சரிதான், என்றேன்.
இந்தியாவும் பாகிஸ்தானும் அண்ணன் தம்பிகள். அவ்வப்போது சண்டைகள் வந்தாலும் சுதந்திரத்திற்கு முன்புவரை ஒன்றாக இருந்தவர்கள்.என்றேன்.
யார் அண்ணன்? யார் தம்பி? என்று ஒரு மாணவன் கேட்க,
இந்தியா அண்ணன் என்று பலரும் கத்தினர்.
சிறு வகுப்புகளில் எப்போதுமே பாடம் என்று உரையாடலைத்தொடக்கினால் எங்காவது சுற்றுகிறதே! என்று எண்ணினேன்.
இருந்தாலும் பல்வேறு செய்திகளை விவாதிக்கலாம் என்பதால் இது எப்போதும் எனக்கு உவப்பாகவே இருக்கும்.
வகுப்பு நேரம் முடிந்துவிட்டது.
அனைவரும் நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள்,
அண்ணன்யார்?, தம்பி யார்? என்பதை நாளை முடிவுசெய்துகொள்வோம். என்று சொல்லிவந்தேன்.
17.11.2014
ஆசிரியர் தினத்தை மாணவர்கள் வெகு சிறப்பாக கொண்டாடினர்.
குழந்தைகள் தினத்தை ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டுமென முடிவு செய்தோம்.
மாணவர்கள் அனைவருக்கும் லட்டு வழங்க முடிவு செய்தோம்.
அன்றைய நாள்முழுதும் மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென பல்வேறு நிகழ்வுகளைத்திட்டமிட்டோம்.
கலைத்திரு. முத்து இலட்சுமண ராவ் குழுவினரின் தோற்பாவைக்கூத்து நிகழ்ச்சியுடன் கொண்டாட்டங்கள் தொடங்கின. தொடர்ந்து தமிழாசிரியர்கள் பாலா,முத்துக்குமார்,சிவா ஆகியோர் சேர்ந்து கோமாளி வேடமிட்டு நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தலாமென முதல்நாள் முடிவு செய்தோம்.
எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் தங்கப்பாண்டி குழுவினரின் ஒயிலாட்டம்,தப்பாட்டம்,மற்றும் கட்டைக்கால் ஆட்டம் ஆகியன பிற்பகல் நிகழ்வுகள்.
அவசரமாக அழைப்பிதழ் தயாரானது.
தோற்பாவைக்கூத்து முடிந்ததும் எங்களின்நகைச்சுவை நிகழ்ச்சி. முதுகலை உயிரியல் ஆசிரியர் திரு.ரமணனின் கைவண்ணத்தில் மூவரும் கோமாளிகள் ஆனோம். அப்போதே என்ன செய்யலாம்? என நண்பர்கள் முத்துக்குமாரும் பாலாவும் முடிவு செய்தனர். மருத்துவர், நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பது போல் காட்சியை முடிவு செய்தனர்.
வசனங்கள் அவ்வப்போது பேசிக்கொள்ளலாமென முடிவும் செய்தோம். நாங்களும் மகிழ்ச்சியாக இருந்ததால் தொடக்கம் முதல் இறுதிவரை அனைவரும் சிரித்தபடியே இருந்தனர்.
மதியம் சிறப்பான உணவுக்குப்பின் கலை நிகழ்வுகள் தொடர்ந்தன. தங்கப்பாண்டி குழுவினருடன் நானும் பறை வாசித்தேன். ஒயிலாட்டம் முடிந்ததும் பறையாட்டம்.
தங்கப்பாண்டியும் அவர் நண்பரும் ஆடும்போதே என்னையும் அழைத்தபடியே இருந்தனர்.காலை முதலே நிகழ்சிகளில் பங்கு பெற்றிருந்ததால் இசைத்தபடியே முழுமையாக ஆட என்னால் இயலவில்லை. அவ்வப்போது சிறிது ஆடினேன். வயதும் ஒரு தடைதான்.
காலைமுதல் மாலைவரை தொடக்கப்பள்ளி முதல் மேனிலைப்பள்ளி வரை அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.




14.11.2014
12 ஆம்தேதி எனது மாணவனுக்கு திருமணம்.
என்னிடம் படித்த மாணவர்கள் பலருக்கு திருமணம் ஆகிவிட்டது. சிலர் தேடிவந்து அழைப்பிதழ் தருவார்கள்.செல்வேன்.
தொடர்ந்து பழகிவரும் மாணவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி திருமணம் செய்துகொள்வது மனதுக்கு அதிக மகிழ்ச்சியை தருவது.
எனது பிள்ளக்குத்திருமணம் போன்றே மகிழ்வேன்.
பெற்றவர்களுக்கு ஓரிரு பிள்ளைகள். ஆசிரியருக்கு ஆயிரமாயிரம் பிள்ளைகள்.
சேதுபதி மேனிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியில் சேர்ந்தபோது செந்தில்குமார் 7 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிந்தான்.
அவன் தம்பியும் அதே வகுப்பு.
செந்தில் தேர்ந்த ஓவியன். படிப்பு மிகவும் சுமார்.
எங்கு போட்டி நடந்தாலும் வெற்றி அவனுக்கே.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற்றால் கும்பகோணம் அரசு நுண்கலைக்கல்லூரியில் படிக்கலாம் என சொல்லியிருந்தோம்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை அவனைவிட அதிக பதட்டத்துடன் இணையத்தில் பார்த்தேன்.
மூன்று பாடங்களில் 35 மதிப்பெண்கள், மற்றதில் சற்றே அதிகம்.
தேறிவிட்டான்.
அனைவருக்கும் மகிழ்ச்சி.
ஓவியக்கல்லூரியில் படித்தால் எதிர்காலம் எப்படி இருக்கும்?
என அவன் தந்தை விசாரித்தார்.
கவலைப்படாதீங்க,உங்க உதவி இல்லாமலேயே அவனே சம்பாதித்து படித்துக்கொள்வான்.என்றேன்.
கும்பகோணம் கல்லூரியில் சிற்பக்கலை பிரிவில் சேர்ந்தான் செந்தில்.
கொஞ்ச காலத்திலேயே அவன் தந்தை காலமானார்.
தாய், பால்மாடு மூலம்தம்பியை வளர்த்தார்.
செந்தில்,அவனேசம்பாதித்து படித்துத்தேறினான்.
அதோடு பத்தாம் வகுப்பை அடிப்படையாகக்கொண்ட 5 ஆண்டு பட்டப்படிப்பு இல்லாமல் ஆனது.
தொடர்ந்து பல்வேறு வேலைகள்.
அம்மாவையும் சென்னைக்கே அழைத்துச்சென்றுவிட்டான்.
வயது 30 ஐதாண்டியபின்னும் தன் மனதுக்கு நம்பிக்கை வந்தபின்பே திருமணம் செய்துகொள்வேன் என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
கடின உழைப்பு.
இப்போது Interior Designer ஆக இருக்கிறான்.
வீட்டிற்கு வரும்போதெல்லாம் என்னிடம் வேலைகள்,அதிலுள்ள பிரச்சினைகள் பற்றிப்பேசுவான்.
குடும்பம், எதிர்காலம் குறித்து என் மனைவிடம் சொல்லிச்செல்வான்.
காதலிக்கிறேன் என்று சென்ற ஆண்டு என் மனைவிடம் சொல்லியிருக்கிறான்.
விடுமுறையில் சென்னை சென்றபோது அவன் வீட்டில் அந்தப்பெண்ணையும் பார்த்தோம்.
செந்திலின் அம்மாவிடமும் பேசினோம்.
அவருக்கும் மகிழ்ச்சி.
நல்ல நிலைக்கு வந்தபின் திருமணம் என்றான். பெண் வீட்டில் அவனே பேசி முடிவு செய்துவிட்டான்.
12 ஆம் தேதி மதுரையில் திருமணம்.
எனக்கு புத்தாடைகள் எடுத்து வந்திருந்தான்.
எங்கள் பிள்ளை திருமணம் போல் மகிழ்ந்தோம்.
வரும் ஞாயிறு சென்னையில் நடைபெறும் வரவேற்பிற்கும் கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்திருக்கிறான்.
செல்லவேண்டும்.
அவன் மண நாளில் சில முன்னாள் மாணவர்களைப்பார்த்தேன்.
மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
குழந்தைகளுடன் பெரியவர்களாக மாணவர்களை பார்ப்பது அற்புத அனுபவம்.
கண்ணும் மனமும் நிறைந்திருந்தது.



ஒளிப்படத்தில்,
செந்தில் தம்பதியர்.
மாணவன் தந்த ஆடைகளுடன் மகிழ்ச்சியில் நான்.
14.11.2014
இரண்டு நாட்களாக மடிக்கணினி தொல்லை தந்துகொண்டிருந்தது.
இப்போதுதான் சரியானது.
முன்தினம் தேர்வறை கண்காணிப்பு பணி. 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் அவ்வப்போது பார்த்து எழுதிக்கொண்டிருந்தனர்.
முன் இருந்தவனின் தாளைப்பார்த்து பின்னால் இருந்தவன் எழுதினான்.அதற்கு வசதியாக தாளை அவனும் வைத்திருந்தான். சிலமுறைகள் எச்சரித்தேன். பலனில்லை.
இரு பாடவேளைகள் மட்டுமே தேர்வு.
ஒரு பாடவேளை முடிந்திருந்தது.நான் சொல்வதை இருவரும் பொருட்படுத்தவே இல்லை. மூன்றாம் மாணவனும் பார்த்து எழுதத்தொடங்கினான்.
எனது கோபம் அதிகமானது.
விடைத்தாளைக்காட்டிய மாணவனிடமிருந்து விடைத்தாளை எடுத்து
பின்னால் கொடுத்தேன்.
நன்றாக பார்த்து எழுதிக்கொள். எட்டிப்பார்த்தால் சரியாகத்தெரியாது.
இடையில் வரும் தேர்வுகள் உனது படிப்பறிவை பரிசோதிக்க மட்டுமே தவிர இதில் அதிக மதிப்பெண் வாங்கினால் பயன் ஏதுமில்லை. மற்றவர்களை ஏமாற்றலாம் என நினைக்காதே,நீதான் ஏமாந்து போவாய்,
சொல்லியபடியே அந்த விடைத்தாளை கிழித்துவிட்டேன்.
பார்த்து எழுதுவதை விட காட்டுவது தவறு.
தாளுக்குரியவன் அழுதுவிட்டான்.
அறையில் இருந்த அனைவரும் திகைத்துவிட்டனர்.
எனக்கு அதிர்ச்சி.
இப்படியான செயலை ஒருபோதும் நான் செய்ததே இல்லை.
திட்டுவேன்.பேசுவேன். எப்படி ஒரு விடைத்தாளை கிழித்தேன்?
அறியாமல் இப்படியொரு செயலை செய்துவிட்டோமே என மனம் பதறியது.
அழாதே, நீ செய்தது தப்புதானே என்றேன்.
ஆமென தலையசைத்தான்.
சரி, மீண்டும் எழுது.
நேரமில்லை.
நான் சொல்லிக்கொள்கிறேன்.
வேறு மாணவனிடம் தாள்கள் வாங்கிக்கொடுத்தேன்.
தேர்வு முடிந்தபின் அதே அறையில் 11 ஆம் வகுப்பிற்கான தேர்வு.
அறைக்கு வந்த ஆசிரிய நண்பரிடம் இவன் ஒரு பாடவேளை எழுதட்டும் இவனது நேரத்தை நான் எடுத்துக்கொண்டேன் என்று சொல்லி இருக்கவைத்தேன்.
அவனது ஆசிரியரிடமும் நடந்ததைக்கூறி விடத்தாளைப்பெற்றுக்கொள்ளுமாறு சொன்னேன்.
நல்லபாடம்.
11.11.2014
நேற்று 10, 12 ஆம் வகுப்புகளுக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு. முதலிரண்டு பாடவேளைகள் தேர்வறைக்கண்காணிப்பு பணி. முடிந்தபின் 9 ஆம் வகுப்பிற்குச்சென்றேன்.
ஏதேனும் ஒரு பத்தியை வாசித்து மாணவர்களைக்கேட்கச்செய்து கேட்டதை எழுதச்சொல்லலாம் என எண்ணினேன்.
வகுப்பில், 15 மாணவர்கள் வரவில்லை. எனக்கோ ஆச்சரியமாக இருந்தது! மாணவர்களிடம் கேட்டேன்.
ஒரேடியா இங்லீஷ், அறிவியல்,சமூகறிவியல் சார் எல்லாரும் டெஸ்ட் சொல்லிட்டாங்க.....
எப்படியும் நாளைக்கு வந்துதானே ஆகணும்!
அதெல்லாம் சமாளிச்சுரலாம்......
வாசிக்கவே தெரியாத இரு மாணவர்களும்
வந்திருந்தனர்.
நீங்க படிச்சாச்சா?
எப்பவும்போல எழுதிருவோம்!

பள்ளியில் நடத்தும் தேர்வுகள் தவிர, வகுப்பறைக்குள் தேர்வுகள் நடத்துவது எனக்கும் பிடிக்காது.
பத்தாம் வகுப்பிலும் எழுதிக்காட்ட விரும்பும் மாணவர்கள் எழுதலாம் என்று சொல்லிவிடுவேன்.
08.11.2014
திரைப்பட ரசனைக்குழு உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றிய பின் மாணவர்களின் ரசனை எந்த அளவு இருக்கிறது? என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது.
ஒன்பதாம் வகுப்பில் உரையாடலைத்தொடங்கினேன்.
இப்போ நாம திரைப்படம் குறித்து பேசப்போறோம்.
மாணவர்கள் ஆர்வமானார்கள்.
ஒரு படத்தை விமர்சனம் செய்யப்போறோம்.
முக்கிய நிபந்தனை,
நடிகர்களின் ரசிகர் என்ற முறையில் தாக்குதல் கூடாது.
படத்தில் நீ பார்த்த நிறைகளை முதலில் சொல்லலாம்.
என்று சொல்லி படத்தின் பெயரை கரும்பலகையில் எழுதினேன்.
கத்தி.
படம் சூப்பர்.
கூட்டமா கத்தக்கூடாது. ஒருத்தர் எழுந்து சொல். பிறகு அடுத்தவர்.
விஜய் நடிப்பு, கதாநாயகி அழகு....
நாம படத்தோட கதை, மற்ற தொழில் நுட்ப செய்திகளை கவனிப்போம்.
கதாநாயகன் யாருக்காக போராடுறான்?
விவசாயிகள்.
வயதானவர்கள்.
விவசாய நிலம்.
திடீரென எனக்கு ஒரு கேள்வி தோன்றியது.
வில்லன் என்ன வேலை செய்கிறான்?
கம்பெனி.
இல்ல,பேக்டரி கட்டுறான்.
என்ன ஃபாக்டரி?
தொழிற்சாலை.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒருவர்கூட கோலா நிறுவனம் என்று சொல்லவில்லை.
பாடல்,நடனம் என்று நிறைகள் எழ, குறைகளைக்கேட்டேன்.

படம் முடியும்போது ஒரு விஜய் தப்பித்து வருகிறார். எப்படி என்று காட்டுப்போது காசை சுண்டுகிறார்,
ஆனா,அந்த சண்டைய காட்டல!
பெரும்பாலும் சண்டை,நடனம் போதவில்ல என்பதே குறைகளாக இருந்தது.
கதைத்திருட்டு குறித்த செய்திகள் யாருக்கும் தெரியவில்லை.
சார், படத்துல ஒரு நல்ல விஷயம் சொல்லவா?
சொல்லு.
நல்லவனால சண்டையெல்லாம் போடா முடியாது. அதுனால கெட்டவன்,அவன ஜெயிலுக்கு அனுப்பிட்டு எல்லாருக்காகவும் போராடுறான்.
அதிர்ந்துபோனேன்.
இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் தமிழ் சினிமா மசாலாவை விட்டு மாறாது என்று எண்ணினேன்.
மனம் ஏன் கதாநாயகனை விரும்புகிறது?
தமிழ் சினிமாவின் சுருக்கமான வரலாறு, சிறந்த இயக்குனர்கள்,போன்ற சில செய்திகளை சொன்னேன்.
நண்பர்களிடம் இவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ளலாம் என்று உயிரியல் ஆய்வகம் சென்றேன்.
12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிக்கொண்டிருந்தனர்.
நண்பரிடம் சுருக்கமாக சித்தியை சொல்லிவிட்டு, அந்த மாணவர்களிடம் ஒரு கேள்வி மட்டும் கேட்கலாமே! என்று கேட்டேன்.
தம்பிகளா, கத்தி படத்துல வில்லன் என்ன வேலை செய்யறார்?
சிறிது நேர யோசனைக்குப்பின்,
பாக்டரி.
கொக்கோ கோலா கம்பெனி.
இல்ல சார், MNC கம்பெனி.
போதும். எழுதுங்க.
06.11.2014
காலை முதலே மனம் எப்போது மாலை வரும் என்று ஏங்கிக்கிடந்தது.
பேராசிரியர் ச.மாடசாமி அவர்களை சந்திக்கப்போகிறேன்,பள்ளிக்கே வரப்போகிறார் என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன்.
பிற்பகல் 3.30மணிக்கு பள்ளி நிறைவடைந்தது.
ஆசிரியர் வந்துவிட்டார். இனிய எளிய மனிதர். நீண்டநாட்கள் பழகியவர்கள்போல இயல்பாக சிரித்துக்கொண்டோம்.
அவரின், சொலவடைகளும் சொன்னவர்களும் புத்தகமும் அமர்த்யா சென் எழுதிய The Argumentative Indian புத்தகமும் இரு பேனாக்களும் பரிசாகத்தந்தார்.மிகவும் மகிழ்ந்தேன்.
நிறைய பேசினோம்.
அவர்தம் எழுத்தைப்போலவே எளிமையும் ஒளிவு மறைவுமில்லா வெள்ளந்தி மனிதர்.
எனது பள்ளி அனுபவங்களையும் கேட்டார்.
நகரில் ஆண்கள் பள்ளி பெண்கள் பள்ளி என்று பிரிந்து இருப்பதே அவருக்கு ஆச்சரியமானதாக இருந்தது.
சமச்சீர் கல்வி புத்தக ஆக்கத்தில் அவரின் பங்கு, இன்றைய மாணவர்களின் நடத்தை மாற்றங்கள் என பல்வேறு செய்திகளை பேசினோம்.

பேராசிரியரிடம் பேசியதிலிருந்து,
பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று பத்தாண்டுகள் ஆகிவிட்டன.
ஓய்வு பெறும்போது மாணவர்களின் வாய்களுக்கு கொடுத்த அளவு கைகளுக்கு வேலை கொடுக்கவில்லையோ? என்றே எண்ணினேன்.
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக பல்வேறு தண்டனைகளை அடிக்கடி பெற்றாலும் எனது கல்லூரி வகுப்பறையில் பரிசோதனை முயற்சிகளில் நிர்வாகம் தலையிட்டதில்லை.
புதிய பரிசோதனைகளை செய்யும் ஆசிரியர்கள் நிறைய பின்விளைவுகளை சந்திக்கத்தயாராக இருக்க வேண்டும்.இல்லையெனில் தனிமைப்பட்டுவிட நேரிடும்.
ஐரோப்பிய வகுப்பறைகள் எளிமையானவை. சுதந்திரமானவை.சமீபத்தில் பிரான்ஸ் நாட்டவரின் கட்டுரை ஒன்றைப்படித்தேன். இப்போது அங்கே பள்ளிகள் 'இந்திய மாதிரியை' பின்பற்றத்தொடங்கிவிட்டன. நம்மைப்பார்த்து கடினமான பாடங்களை சிறு வயதிலிருந்தே கற்பிக்க தொடங்கிவிட்டனர்.
மனதுக்கு மகிழ்ச்சியாகவும் தெம்பாகவும் இருந்தது. தொடர்ந்து ஆசிரியரை அவரது இல்லத்திலேயே சந்திப்பேன்.இன்னும் நிறைய கற்க வேண்டியுள்ளது.