Sunday, 29 July 2012

முன்னேற்றத்திற்கான தண்டனைகள் ?

          எப்போதாவது என்ற நிலை மாறி அன்றாடம்  வெளிவரும் கொலை,கொள்ளை,கற்பழிப்பு வரிசையில் இணைந்துவிட்டது ஆசிரியர் தரும் தண்டனைகள் பற்றிய செய்திகள்.

அடித்தல்
கடுமையாகத் திட்டுதல்
மறைமுகமாக பழித்தல்
மதிப்பெண்களைக் குறைத்தல்
வெளியே நிற்க வைத்தல்
கைகளை உயர்த்தியபடி நிற்க வைத்தல்
முட்டிக்கால் போடவைத்தல்
பிற மாணவர்கள் மூலம் தலையில் குத்துதல்
அபராதம் விதித்தல்
காதில் கிள்ளுதல்
சிறுநீரை  குடிக்க வைத்தல்.
இவை தவிர பாலியல் அத்து மீறல்கள்.
இப்படித் தனியே ஒரு அகராதி போடுமளவு நீளும் தண்டனைகள் புதிது புதிதாக ஒவ்வொரு நாளும் கண்டுபிடித்து  செயல்படுத்தப்படுகின்றன.

               வகுப்பறையில் அதிக அளவில் மாணவர்கள் , அவர்கள்  செய்யும் சேட்டைகள் ,வன்முறைச் செயல்கள், போதைப் பழக்கம் ஆகியன அதிக அளவில் இருப்பதால் அவர்களை  என்ன தான்  செய்வது எப்படி நெறிப்படுத்துவது  என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர் தண்டனைகள் தர விரும்பாத ஆசிரியர்கள்.
              பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களால் விரும்பப் படாமைக்குக் காரணம் என்ன?
              உங்கள்  மாணவன் தேர்வில் தோல்வி அடையக் காரணம் என்ன?
என்ற ஒரு கேள்விக்கு அவனின் குடும்பச்சூழல்  முதல்  தகாத நண்பர்கள்,ஒழுங்கீனம் எனப்பல்வேறு   காரணங்களை  பதிலாக  அடுக்குகிறோம்.
         ஏன்  படித்து வரவில்லை? என்ற நமது கேள்விக்கு ஒரு பதிலை மாணவன் சொல்லும் முன்பே நமது அடியோ அல்லது திட்டுக்களோ அவனை அடைந்துவிடுகிறது.மீறிப் பதில் சொன்னால் எதிர்த்தா பேசுகிறாய்? என அதிக தண்டனை கிடைக்கிறது.சரி, உங்களால் முடிந்த அளவு அடித்துக்கொள்ளுங்கள்  என மாணவர்கள் விட்டு விடுகிறார்கள்.
      தண்டிக்கும் ஆசிரியரிடம் காட்டும் அதே முரட்டுத்தனத்தை எல்லா ஆசிரியர்களிடமும் வெளிப்படுத்துகிறார்கள்.

       பள்ளிகளுக்குள்ளும் வெளியிலும் ஆசிரியர்களிடையே விருப்பு வெறுப்பற்ற விவாதங்கள் நடைபெற வேண்டும். மன நல மருத்துவர்கள் ,
பெற்றோர்கள்  ஆகியோருடன்  கலந்துரையாடல்கள் நடைபெற வேண்டும்.
       உடனடித் தீர்வுகளை எதிர்பார்க்காமல் படிப்படியான செயல் முறைகளைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.

       மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு பல்வேறு புறச் சூழல் காரணிகள் இருந்தாலும் பள்ளி, ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது.
     ஆசிரியர்- குற்றம் களைபவர்.பிறர் குற்றம் மட்டுமல்ல,
தம் குற்றமும். 

கல்வி நரபலிகள்

                               

                                ஒரு வாரத்திற்குள் இரு சிறுமிகள் பள்ளி வாகனங்களால் உயிரை இழந்திருக்கின்றனர்.பள்ளிப் பேருந்தில் ஓட்டை,ஓட்டுனரின் கவனக் குறைவு.
                         தமிழகத்தையே உலுக்கிய இந்த நிகழ்வுகள் ஏற்படுத்திய பின் விழைவுகளாகத்தமிழகமெங்கும் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன.புதிய விதிகளை அமைக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தனியார் பள்ளிகளின் கவனக்குறைவு,எதேச்சதிகாரம் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டு விட்டது.
                    ஒவ்வொரு சட்டத்தையும் நினைவு படுத்தவும்,உருவாக்கவும் அவ்வப்போது குழந்தைகள் தங்கள் உயிரையே பலியாகத் தர வேண்டியுள்ளது.ஏறத்தாழ 100 குழந்தைகள் பலியான பின்பே பள்ளிக்கட்டிடங்களின் அமைப்பு,தீத்தடுப்பு முறைகள் குறித்து பரபரப்பாகப் பேசி மறந்தோம்.ஒவ்வொரு உயிரிழப்பிற்குப் பின்பும் வாய்கிழியப் பேசி,ஆளாளுக்கு அறிவுரைகள் கூறி அப்படியே மறந்து விடுகிறோம். 
                        ஒவ்வொரு நிகழ்வும் பொதுவில் விவாதங்களை எழுப்பாமல் உணர்ச்சிப்பெருக்கில் ஆளுக்கொரு காரணங்கள் சொல்லப்பட்டு நினைவில் இருந்து  மறைந்துவிடுகிறது.சிறிது அளவு அரசின் நஷ்ட ஈட்டுத் தொகையுடன் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர் நோக்கி பாதிக்கப்பட்ட குடும்பம் காத்திருக்கிறது.
                           கும்பகோணம் தீ விபத்து நடந்த பள்ளியின் நிர்வாகி நல்லாசிரியர் விருது பெற்றவர்.பேருந்து துவாரத்திலிருந்து  விழுந்து இறந்த  சிறுமி பயின்ற பள்ளியின் நிர்வாகியும் மாநில,மத்திய அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.ஒவ்வொரு மாவட்டக் கல்வி அதிகாரியும் தங்கள் மாவட்டத்தில் அரசு விருது பெறத் தகுதியான ஆசிரியர்களின் பெயர்களைப் பரிந்துரை செய்ய வேண்டும் என்பது விதி.ஆனால் பண பலமிக்க நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிந்துரைக்கப்படுகிறது.விருதுக் கோமாளிக் கூத்துக்களை இன்னொரு முறை விரிவாகப் பார்ப்போம்.
                                        பள்ளிகளை நடத்துபவர்கள் யார்? மெட்ரிக் பள்ளிகள் பணபலம் மிக்க கல்வித் தந்தைகள்,கல்வி வள்ளல்கள் ஆகியோரின் குடும்ப அறக்கட்டளைகளால் நடத்தப் படுகின்றன.பிள்ளைகளின் எதிர்காலம்  ஒளிமயமாக(பணமயமாக) இருக்க வேண்டும் எனக் கனவு காணும் பெற்றோர்கள் பல்வேறு பகீரதப் பிரயத்தனங்களுக்குப் பின் அவரவர் பணத் தகுதிக்கு ஏற்ற அல்லது மீறிய பள்ளிகளில் தம் குழந்தைகளைச் சேர்க்கின்றனர்.
                              கல்வி முறை பற்றி விரிவான விவாதங்கள் தேவை.சட்டங்களை மதிக்க சிறு வயதிலேயே போதிக்கப்படவேண்டும்.பெயரளவில் நீதி போதனை பாடவேளைகளும் எப்போதாவது விழிப்புணர்வுக்  கூட்டங்களும் மட்டுமே எதிர்காலச் சமுதாயத்தை மாற்றிவிட முடியாது.
      என்னதான் செய்யலாம்?
             எப்போதும் போல காரணங்களை வெளியே தேடாமல் அவரவர் மனதினுள் தேடவேண்டும்.
                    ஆசிரியர்கள், ஒரு முறை  அறிவுரை சொன்னவுடனேயே மாணவன் திருந்திவிட வேண்டும்.கெட்ட பழக்கங்களை விட்டு விட்டுத்  திருந்தி படிக்கத்தொடங்கி விட வேண்டும் என விரும்புகிறோம். ஒரு முறை சிந்தித்ததும் நம்மிடமுள்ள கெட்ட பழக்கங்களை நம்மால் விட்டு விட முடிகிறதா?
                               எதிர்காலத்தில்  நம்பிக்கை வைத்து  மாணவர்களுக்கு
  தேவையானவற்றை மனம் தளராமல் கூறிக்கொண்டே இருக்க வேண்டும்.
                              ஆசிரியர்களிடையே மாணவர்கள்,கல்வி,பெற்றோர் குறித்த விவாதங்கள் விருப்பு வெறுப்பு இன்றி நடத்த வேண்டும்.
                          இது முடியாது.நடைமுறைக்கு ஒத்துவராது என்று கண்மூடிக் கூறிக்கொண்டிராமல் மாற்றங்களை எப்படி ஏற்படுத்தலாம் என ஆசிரியர்கள் கலந்துரையாடவேண்டும்.
                          அரசு, பள்ளி நிர்வாகம்,தேர்வு முடிவுகள் என்று காரணங்கள் இருந்தாலும் நம் வகுப்பறையில் நாமே ராஜா என்பதால் மாணவர்களின் நலனில் பெரும்பகுதி நம்மைச் சார்ந்தே இருக்கிறது என்பதை மறக்காமல் என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்குவதே மாற்றத்தின் முதல் படி.
                        சிந்திப்பது மட்டுமல்ல,செயல்படும் ஆசிரியர்களாலேயே எதிர்காலச் சந்ததியைச் சிறப்பாக உருவாக்க முடியும்.
நம்பிக்கை தானே வாழ்க்கை.
                            

Tuesday, 24 July 2012

அசடன்

                  தஸ்தாவெஸ்கியின் The Idiot நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான அசடன்  மதுரை பாரதி புத்தக நிலையத்தால் வெளியிடப் பெற்றுள்ளது.
                வாங்கிச் சில மாதங்கள் கழித்து இப்போது படிக்கத்தொடங்கியுள்ளேன்.
               ஏறத்தாழ 660 பக்கங்கள்.சிறிய எழுத்துக்கள் என்ற எல்லாத் தடைகளையும் தாண்டி வாசிக்கத்தொடங்கிவிட்டேன்.
             வாயினுள் நுழையாத ரஷ்யப் பெயர்கள் சில பக்கங்கள் தாண்டியதும் பழகத்தொடங்கியுள்ளன.
              அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் பேராறு ஏற்படுத்திய பயத்தையும் மீறி இறங்கிய என்னை மிஷ்கின்  என்ற சுழல் வாரிச்சுழற்றி இழுத்துச்சென்று கொண்டிருக்கிறது.
                 என்னையறியாமல் அவனாகவே மாறிப்பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
 விரிவாக விரைவில்..........

பசுமை நடை - சமண மலை

                   மதுரையைச் சுற்றி எண்பெருங் குன்றங்கள் அமைந்துள்ளன.அந்த எட்டு மலைக்குன்றுகளிலும் 2000 ஆண்டுகள்  பழமை வாய்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ளன.1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணச் சிற்பங்களும் உள்ளன.
                  இத்தகு பழமையும் வரலாற்றுச்சிறப்பும்  உடைய மலைகளுக்கு மாதத்திற்கு ஒருமுறை பசுமை நடை என்று  ஆர்வமுள்ளவர்களை
(ஏறத்தாழ 150 பேர்) ஒருங்கிணைத்து காலை உணவும் தந்து வழி நடத்துகிறார் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்.
                  ஜூலை 22 ஆம் நாள் காலை 6.00 மணிக்கு நண்பர் ரவியுடன்  பசுமை நடைக்குச் சென்றேன்.
                  மதுரைக்கு அருகிலுள்ள கீழக்குயில்குடியில் உள்ளது சமண மலை.மலை அடிவாரத்திலுள்ள கருப்பு கோவிலும் அருகிலுள்ள தாமரைத்தடாகமும் இயற்கை எழில் மிகுந்தது.
                  செங்குத்தான படிகள் வழியே மலை மீது ஏறும்போது சிறிது நேரத்தில் ஏற்பட்ட களைப்பு வயதை நினைவு படுத்தியது.

                 
சிறிய சுனையின் மேலே சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் எங்களை வரவேற்றன.
                   தொல்பொருள் அறிஞர் சாத்தலிங்கம் அவர்கள் ,பார்சுவநாதர்,மகாவீரர் மற்றும் பகுபாலி புடைப்புச்சிற்பங்கள் அமைக்கப்பட்டிருப்பதை விளக்கினார்.சிற்பங்களைச் செய்வித்தவர்கள் பற்றிய வட்டெழுத்துக் கல்வெட்டும் இங்கு உள்ளது.
                   சமண துறவிகள் தங்குமிடங்கள் பள்ளி எனப்பட்டது.அங்கு கல்வி கற்பிக்கப்பட்டது.இதனாலேயே  இன்றும்  கல்விக்கூடங்கள் பள்ளிகள் என அழைக்கப்படுகின்றன.

                   இதற்கு மேலே சிறிது தூரம் சென்றவுடன் ஒரு பாறையின் முகப்பில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் பிராமிக் கல்வெட்டைப் பார்த்தோம்.இது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
கருப்பு கோவில் 
                    கீழே இறங்கிய பின் காலைச்சிற்றுண்டியை முடித்துவிட்டு மலையின் பக்கவாட்டில் உள்ள செட்டி புடவு என்றழைக்கப்படும் குகைக்குச் சென்றோம்.
                    சமணச் சிற்பங்களும் ஏறத்தாழ ஆறடி உயரமுள்ள மகாவீரர் புடைப்புச்சிற்பம்  இங்கு உள்ளது.
                   ஒரு பாறையில் அப்படியே படுத்துக் கண்களை மூடினேன்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்று வந்தது போன்ற உணர்வு.மனதிற்குப் புத்துணர்வு.
                  காலங்களை கடந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே எதுவும் பேசாமல் உறைந்திருக்கும் சிற்பங்களிடம் ஒளிந்துள்ளது மானுட ரகசியம்.


                 ஒளிப்படக் கருவி இல்லாததால் இணையத்திலிருந்தே இக்கட்டுரைக்கான படங்களைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தியுள்ளேன்.படங்களை பதிவேற்றம்   செய்துள்ள முகம் தெரியா நண்பர்களுக்கு நன்றி.
                   


      

                 

Tuesday, 17 July 2012

பாலியல் கல்வி- I

பாலியல் கல்வி- என்ற சொல்லே பலத்த எதிர்ப்புகளை ஏற்படுத்துகிறது.
திருமணம் ஆனவர்களே தங்களுக்கிடையே எழும் சந்தேகங்களை டாக்டர் X ,அன்புடன் அந்தரங்கம் போன்று  தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளின் வாயிலாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.
நீலப்படங்களைப் பார்ப்பது சாதாரணமான நிகழ்வாக இருக்கிறது.இதையே பிள்ளைகளுக்கான பாலியல் கல்வி எனத் தவறாக எண்ணியே எதிர்க்கிறோம்.
வீட்டின் வரவேற்பறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆபாசக் குப்பைகளை நிரப்புகின்றன.மொத்தக் குடும்பமும் ஒன்றாக அமர்ந்து நடனப் போட்டிகள்,திரைப் பாடல்களை ரசிக்கிறோம்.
இவையெல்லாம் பிள்ளைகளின் மனதில் என்ன எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றன? என்று என்றாவது எண்ணியிருக்கின்றோமா?
பாலியல் கல்வி என்பது பிள்ளைகளுக்கு உடல் உறவைச் சொல்லித்தருவதல்ல.
உடல் உறுப்புகள்,அவற்றைப் பேணும் முறைகள் இதையெல்லாம் தாண்டி பிற இடங்களில் குழந்தைகள் மீது நிகழும் பாலியல் அத்துமீறல்களை எப்படிச் சமாளிப்பது என்பதே பாலியல் கல்வி.
குழந்தைகள் நெருங்கிய உறவு,குடும்ப நண்பர்களாலேயே அதிக பாலியல் அத்து மீறல்களுக்கு ஆளாகிறார்கள்.
பெண் குழந்தைகளைவிட ஆண்குழந்தைகளே அதிகம் பாதிப்படைகின்றன என்பது போன்ற புள்ளி விபரங்கள்
மனதில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
நம் பிள்ளைகளுக்கு தேடிச் சொல்லாவிட்டாலும் நாம் கடந்து வந்த பாதையைச் சொல்வோம்.அதுவே அவர்களைச் சிறப்பாக வழி நடத்தும்.
பள்ளியும் வீடும் இதுபோன்ற பேச்சைத் தொடங்குவதே எதிர் காலச் சந்ததிக்கு நாம் உருவாக்கித்தரும் ராஜபாட்டை ஆகும்.

மேலும் பேசுவோம்........

குவஹாத்தி மற்றும் பில்லா


        குவஹத்தியில் நண்பர்களுடன் பாருக்கு சென்ற 11 ஆம் வகுப்பு மாணவி
இருபதுக்கும் மேற்பட்டவர்களால் நெரிசல் மிகுந்த சாலையில் பாலியல்  வன்முறைக்கு ஆளான படக்காட்சி நம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
      போதை எத்தகைய செயல்களை தூண்டுகிறது என்று எண்ணும் போது
எதிகாலத்தைப்பற்றிய கவலை அதிகரிக்கிறது.
    மிகக்குறைவான நபர்களையே காவல்துறை கைது செய்திருக்கிறது.
இதற்கெல்லாம் என்ன காரணம்?
பாலியல் பற்றிய சரியான புரிதல்கள் ஆண்களிடையே இல்லாததுதான் என நான் நம்புகிறேன்.
பெண் ஒரு இன்பச்சுரங்கம் என்றே அனைத்து ஊடகங்களிலும் காட்சிப்படுத்தப்படுகிறாள்.
விளம்பரங்கள்,திரைப்படப் பாடல்கள்.வசனங்கள்,கதைகள், எல்லாவற்றிலும் பெண் உடல் இன்பச்சுரங்கமாகவே காட்டப்படுகிறது.
திரைக்கதாநாயகர்கள் தம் நண்பர்களுடன் சேர்ந்து பெண்களைக் கேலியும் கிண்டலும் செய்வது நியாயப்படுத்தப்படுகிறது.
இணையம் எல்லா ரகசிய வாசல்களையும் திறந்து வைத்திருக்கிறது.
நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்க பெற்றோர்கள் ஓடி ஓடிச் சம்பாதிப்பவர்கள் ஆகியுள்ளனர்.
பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது இல்லாததாகியுள்ளது.
இதற்குப் பதிலியாக பிள்ளைகளுக்கு கேட்டதை வாங்கித்தருவது  செல்வச்செழிப்பின் அடையாளமாகவும்
கருதப்படுகிறது.பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளால் மிரட்டப்படுகின்றனர்.
        திரைக் கதாநாயகர்களே பெரும்பாலான இளைஞர்களின் ஆதர்சம்.
பில்லா 2 ஆப் பாகம் பார்த்தேன்.ஒரு கடத்தல்காரனின் கதை.எந்தவிதமான நம்பகத்தன்மையும் இல்லாமல்
படம் முழுவதும் நமது "கடவுள்" பலரையும் கொன்று குவிக்கிறார்.
'நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்ல' என்பது போன்ற நியாயப்படுத்தல் எதுவுமே இல்லாமல்
பணம் சம்பாதிக்கவேண்டி பில்லா-வைரம்,போதைப் பொடிகள்,ஆயுதக் கடத்தல் என்று சகட்டுமேனியாக கடத்தித்தள்ளி இளைஞர்களின் இதயத்தையும்(?) கடத்துகிறார்.
இது போன்ற திரைப்படங்களே பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன.
கவர்ச்சி நடனங்கள்,இரட்டை-அவ்வப்போது நேரிடையாகவும் ஆபாச வசனங்கள்,பாரில் குத்துப் பாடல்,
இப்படியாக தமிழ்-இதற்கெல்லாம் தமிழ் எதற்கு?-மனித வாழ் நெறிகளே இல்லாத படங்களே வெற்றிபெறுகின்றன.
இப்படியான கருத்துப் பட நாயகக் கடவுள்களை வழிபடும் இளைஞர்கள் வேறு என்னதான் செய்வார்கள்?
வேலையில்லாதவர்கள் - வழிப்பறி, திருட்டு.
சம்பாதிப்பவர்கள் - கார்பரேட் சாமியார்கள்
   என்ற வழிகளில் செல்கின்றனர்.
இப்படியே பேசிக்கொண்டிருந்தால்..?
எப்படி சரிசெய்வது?
 சாலைகளெல்லாம் பள்ளியை நோக்கியே செல்கின்றன.

ஆசிரியர்கள்,பெற்றோர் சேர்ந்து மாணவர்களின் மதிப்பெண்கள்
பற்றிமட்டும் பேசாமல் அவர்களை மனிதர்கள் ஆக்கவும் யோசிக்கத் தொடங்க வேண்டும்.
குறை சொல்வதை  விடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்க  வேண்டும்.