Sunday 10 August 2014

வேர்களைத்தேடி.



INTACH தமிழ்நாடு மற்றும் FRIENDS OF HERITAGE SITES அமைப்பும் இணைந்து எங்கள் பள்ளி மாணவர்களுக்காக ஒருநாள் கலை,பண்பாட்டுக்கல்விச்கல்விச்சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்தன. கொடைக்கானல் அருகிலுள்ள தாண்டிக்குடி மலைப்பகுதிக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது. சுற்றுலாவுக்கான வேன் மற்றும் உணவு அனைத்துமே அவர்களின் பொறுப்பு.தோழி திருமதி.ஷர்மிளா,கலை வரலாற்றாளர் நண்பர் காந்திராஜன் இருவருமே இதைச்சாத்தியமாக்கியவர்கள்.
8 முதல் 12 ஆம் வகுப்புவரை தேர்ந்தெடுக்கப்பட்ட 19 மாணவர்களை அழைத்துக்கொண்டு நானும் ரமணனும் சென்றோம்.உடன் காந்திராஜனும்.
கல்வி வளர்ச்சி நாளன்று காலை பள்ளியில் தொடங்கிய எங்களின் பயணம் மதிய உணவோடு தாண்டிக்குடி முருகன் கோவிலில் தொடங்கியது.
 3000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்பதுக்கைகள்.
நல்ல நிலையில் ஒன்றுமட்டுமே இருக்கிறது. பல சிதைந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன் நான் குடும்பத்துடன் சென்றபோது நிறைய பார்த்திருந்தேன்.
புதிய கற்காலத்திக்குப்பின் மனிதன் வீடு கட்டத்தொடங்கியதன் முதல் படி.
பல்வேறு செய்திகளை காந்திராஜன் சொல்லிக்கொண்டே இருந்தார். மாணவர்களும் பல்வேறு சந்தேகங்களைக்கேட்டனர்.
8ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் கேட்ட கேள்வி காந்திராஜனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அது, கடைசியில் சொல்கிறேன்.

அங்கிருந்து நடந்து பழங்குடி மக்களான பளியர் குடியிருப்பை அடைந்தோம். புல்லும் கூரையும் வேய்ந்த அழகிய வீடுகள்.
மின்சாரம் இல்லை. சிறிய சூரிய மின் தகடுகளை அரசு வழங்கியுள்ளது. வானொலி இசைக்கிறது.

கற்களை அடுக்கி,கம்புகள்,குச்சிகள் கட்டி இடையே சிறு கற்கள் வைத்துக்களிமண் பூசப்பட்ட சுவர்கள் கொண்ட வீடுகள்.
நீண்ட நேரம் அங்கே இருந்தோம். எளிய இனிமையான மக்கள்.
இங்கே வந்து ஓரிரு நாட்கள் தங்கலாமா? என்று கேட்டோம்.
வசதிகள் எதுவுமில்லை.நீங்கள் விரும்பினால் தாராளமாய் வரலாம்.
விரைவில் நானும் ரமணனும் செல்லலாமென முடிவு செய்தோம்.


அங்கிருந்து உசிலம்பட்டி அருகிலுள்ள ஆனையூரில் உள்ள சிவன் கோவில்.

12 ஆம் நூற்றாண்டைச்சார்ந்தது. தூண்களின் அமைப்பு,கோபுரம்,சிற்பங்கள் எனப்பல்வேறு செய்திகள் மாணவர்களுக்கும் எங்களுக்கும். சொல்லிக்கொண்டே இருந்தார் காந்திராஜன்.

அங்கிருந்த கண்மாயில் அமைக்கப்பட்டிருந்த பாண்டியர்கால மதகையும் பார்த்து வியந்தோம்.

இப்பயணத்தின் தொடர்ச்சியாகப்பல நிகழ்வுகளை முடிவு செய்துகொண்டு திரும்பினோம்.
வழியெங்கும்,
என்னங்க,ஒரு சின்னப்பையன்,இப்படிக்கேக்குறான்,
மீடியா,எப்புடி கெடுத்துருக்கு பாருங்க...
என்று புலம்பிக்கொண்டே வந்தார் காந்திராஜன்.
அந்த 8 ஆம் வகுப்பு மாணவன் கேட்ட கேள்வி,
"சார், இப்படி பழமையான பொருட்களைத் தேடி எடுத்துட்டுப்போனா நெறையக்காசுக்கு விக்கலாமாமே?"

No comments:

Post a Comment