Sunday 29 July 2012

கல்வி நரபலிகள்

                               

                                ஒரு வாரத்திற்குள் இரு சிறுமிகள் பள்ளி வாகனங்களால் உயிரை இழந்திருக்கின்றனர்.பள்ளிப் பேருந்தில் ஓட்டை,ஓட்டுனரின் கவனக் குறைவு.
                         தமிழகத்தையே உலுக்கிய இந்த நிகழ்வுகள் ஏற்படுத்திய பின் விழைவுகளாகத்தமிழகமெங்கும் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன.புதிய விதிகளை அமைக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தனியார் பள்ளிகளின் கவனக்குறைவு,எதேச்சதிகாரம் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டு விட்டது.
                    ஒவ்வொரு சட்டத்தையும் நினைவு படுத்தவும்,உருவாக்கவும் அவ்வப்போது குழந்தைகள் தங்கள் உயிரையே பலியாகத் தர வேண்டியுள்ளது.ஏறத்தாழ 100 குழந்தைகள் பலியான பின்பே பள்ளிக்கட்டிடங்களின் அமைப்பு,தீத்தடுப்பு முறைகள் குறித்து பரபரப்பாகப் பேசி மறந்தோம்.ஒவ்வொரு உயிரிழப்பிற்குப் பின்பும் வாய்கிழியப் பேசி,ஆளாளுக்கு அறிவுரைகள் கூறி அப்படியே மறந்து விடுகிறோம். 
                        ஒவ்வொரு நிகழ்வும் பொதுவில் விவாதங்களை எழுப்பாமல் உணர்ச்சிப்பெருக்கில் ஆளுக்கொரு காரணங்கள் சொல்லப்பட்டு நினைவில் இருந்து  மறைந்துவிடுகிறது.சிறிது அளவு அரசின் நஷ்ட ஈட்டுத் தொகையுடன் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர் நோக்கி பாதிக்கப்பட்ட குடும்பம் காத்திருக்கிறது.
                           கும்பகோணம் தீ விபத்து நடந்த பள்ளியின் நிர்வாகி நல்லாசிரியர் விருது பெற்றவர்.பேருந்து துவாரத்திலிருந்து  விழுந்து இறந்த  சிறுமி பயின்ற பள்ளியின் நிர்வாகியும் மாநில,மத்திய அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.ஒவ்வொரு மாவட்டக் கல்வி அதிகாரியும் தங்கள் மாவட்டத்தில் அரசு விருது பெறத் தகுதியான ஆசிரியர்களின் பெயர்களைப் பரிந்துரை செய்ய வேண்டும் என்பது விதி.ஆனால் பண பலமிக்க நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிந்துரைக்கப்படுகிறது.விருதுக் கோமாளிக் கூத்துக்களை இன்னொரு முறை விரிவாகப் பார்ப்போம்.
                                        பள்ளிகளை நடத்துபவர்கள் யார்? மெட்ரிக் பள்ளிகள் பணபலம் மிக்க கல்வித் தந்தைகள்,கல்வி வள்ளல்கள் ஆகியோரின் குடும்ப அறக்கட்டளைகளால் நடத்தப் படுகின்றன.பிள்ளைகளின் எதிர்காலம்  ஒளிமயமாக(பணமயமாக) இருக்க வேண்டும் எனக் கனவு காணும் பெற்றோர்கள் பல்வேறு பகீரதப் பிரயத்தனங்களுக்குப் பின் அவரவர் பணத் தகுதிக்கு ஏற்ற அல்லது மீறிய பள்ளிகளில் தம் குழந்தைகளைச் சேர்க்கின்றனர்.
                              கல்வி முறை பற்றி விரிவான விவாதங்கள் தேவை.சட்டங்களை மதிக்க சிறு வயதிலேயே போதிக்கப்படவேண்டும்.பெயரளவில் நீதி போதனை பாடவேளைகளும் எப்போதாவது விழிப்புணர்வுக்  கூட்டங்களும் மட்டுமே எதிர்காலச் சமுதாயத்தை மாற்றிவிட முடியாது.
      என்னதான் செய்யலாம்?
             எப்போதும் போல காரணங்களை வெளியே தேடாமல் அவரவர் மனதினுள் தேடவேண்டும்.
                    ஆசிரியர்கள், ஒரு முறை  அறிவுரை சொன்னவுடனேயே மாணவன் திருந்திவிட வேண்டும்.கெட்ட பழக்கங்களை விட்டு விட்டுத்  திருந்தி படிக்கத்தொடங்கி விட வேண்டும் என விரும்புகிறோம். ஒரு முறை சிந்தித்ததும் நம்மிடமுள்ள கெட்ட பழக்கங்களை நம்மால் விட்டு விட முடிகிறதா?
                               எதிர்காலத்தில்  நம்பிக்கை வைத்து  மாணவர்களுக்கு
  தேவையானவற்றை மனம் தளராமல் கூறிக்கொண்டே இருக்க வேண்டும்.
                              ஆசிரியர்களிடையே மாணவர்கள்,கல்வி,பெற்றோர் குறித்த விவாதங்கள் விருப்பு வெறுப்பு இன்றி நடத்த வேண்டும்.
                          இது முடியாது.நடைமுறைக்கு ஒத்துவராது என்று கண்மூடிக் கூறிக்கொண்டிராமல் மாற்றங்களை எப்படி ஏற்படுத்தலாம் என ஆசிரியர்கள் கலந்துரையாடவேண்டும்.
                          அரசு, பள்ளி நிர்வாகம்,தேர்வு முடிவுகள் என்று காரணங்கள் இருந்தாலும் நம் வகுப்பறையில் நாமே ராஜா என்பதால் மாணவர்களின் நலனில் பெரும்பகுதி நம்மைச் சார்ந்தே இருக்கிறது என்பதை மறக்காமல் என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்குவதே மாற்றத்தின் முதல் படி.
                        சிந்திப்பது மட்டுமல்ல,செயல்படும் ஆசிரியர்களாலேயே எதிர்காலச் சந்ததியைச் சிறப்பாக உருவாக்க முடியும்.
நம்பிக்கை தானே வாழ்க்கை.
                            

No comments:

Post a Comment