Tuesday 24 July 2012

பசுமை நடை - சமண மலை

                   மதுரையைச் சுற்றி எண்பெருங் குன்றங்கள் அமைந்துள்ளன.அந்த எட்டு மலைக்குன்றுகளிலும் 2000 ஆண்டுகள்  பழமை வாய்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ளன.1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணச் சிற்பங்களும் உள்ளன.
                  இத்தகு பழமையும் வரலாற்றுச்சிறப்பும்  உடைய மலைகளுக்கு மாதத்திற்கு ஒருமுறை பசுமை நடை என்று  ஆர்வமுள்ளவர்களை
(ஏறத்தாழ 150 பேர்) ஒருங்கிணைத்து காலை உணவும் தந்து வழி நடத்துகிறார் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்.
                  ஜூலை 22 ஆம் நாள் காலை 6.00 மணிக்கு நண்பர் ரவியுடன்  பசுமை நடைக்குச் சென்றேன்.
                  மதுரைக்கு அருகிலுள்ள கீழக்குயில்குடியில் உள்ளது சமண மலை.மலை அடிவாரத்திலுள்ள கருப்பு கோவிலும் அருகிலுள்ள தாமரைத்தடாகமும் இயற்கை எழில் மிகுந்தது.
                  செங்குத்தான படிகள் வழியே மலை மீது ஏறும்போது சிறிது நேரத்தில் ஏற்பட்ட களைப்பு வயதை நினைவு படுத்தியது.

                 
சிறிய சுனையின் மேலே சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் எங்களை வரவேற்றன.
                   தொல்பொருள் அறிஞர் சாத்தலிங்கம் அவர்கள் ,பார்சுவநாதர்,மகாவீரர் மற்றும் பகுபாலி புடைப்புச்சிற்பங்கள் அமைக்கப்பட்டிருப்பதை விளக்கினார்.சிற்பங்களைச் செய்வித்தவர்கள் பற்றிய வட்டெழுத்துக் கல்வெட்டும் இங்கு உள்ளது.
                   சமண துறவிகள் தங்குமிடங்கள் பள்ளி எனப்பட்டது.அங்கு கல்வி கற்பிக்கப்பட்டது.இதனாலேயே  இன்றும்  கல்விக்கூடங்கள் பள்ளிகள் என அழைக்கப்படுகின்றன.

                   இதற்கு மேலே சிறிது தூரம் சென்றவுடன் ஒரு பாறையின் முகப்பில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் பிராமிக் கல்வெட்டைப் பார்த்தோம்.இது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
கருப்பு கோவில் 
                    கீழே இறங்கிய பின் காலைச்சிற்றுண்டியை முடித்துவிட்டு மலையின் பக்கவாட்டில் உள்ள செட்டி புடவு என்றழைக்கப்படும் குகைக்குச் சென்றோம்.
                    சமணச் சிற்பங்களும் ஏறத்தாழ ஆறடி உயரமுள்ள மகாவீரர் புடைப்புச்சிற்பம்  இங்கு உள்ளது.
                   ஒரு பாறையில் அப்படியே படுத்துக் கண்களை மூடினேன்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்று வந்தது போன்ற உணர்வு.மனதிற்குப் புத்துணர்வு.
                  காலங்களை கடந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே எதுவும் பேசாமல் உறைந்திருக்கும் சிற்பங்களிடம் ஒளிந்துள்ளது மானுட ரகசியம்.


                 ஒளிப்படக் கருவி இல்லாததால் இணையத்திலிருந்தே இக்கட்டுரைக்கான படங்களைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தியுள்ளேன்.படங்களை பதிவேற்றம்   செய்துள்ள முகம் தெரியா நண்பர்களுக்கு நன்றி.
                   


      

                 

No comments:

Post a Comment